பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமா? | தினகரன் வாரமஞ்சரி

பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமா?

ஊழ்வினையோ, கர்ம வினையோ! எஃது எப்பிடியானாலும் நமக்கு முன் வாழ்ந்தவர்களின் வாழ்க்கைப் பாடம் நம்மில் பிரதிபலிக்கும் என்பதை மறுக்க முடியாது. பெற்றவர்களின் செயல்பாடுகள், அவர்களின் கொள்கைகள் பெரும்பாலும் சந்ததிகளைச் சார்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றன.

அதுதான், வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி, பெற்றவர்கள் பட்டகடன் பிள்ளைகளைச் சேருமடி, சேர்த்து வைத்த புண்ணியந்தான் சந்ததியைக் காக்குமடி! என்று எழுதியிருக்கிறார் கவிஞர் காமக்கோடியன்.

கடந்த வாரம் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் தனது இரு பிள்ளைகளுடன் ரயிலில் மோதுண்டு தாயொருவர் உயிரிழந்த சம்பவத்தைக் கேள்வியுற்றபோது இந்த வரிகள்தான் நினைவிற்கு வந்தன.

ஒரு பிள்ளையின் வளர்ச்சிக்குப் பெற்றோருடைய பங்களிப்பு இன்றியமையாதது என்பதை வரலாற்றுக் காலம் முதல் நம் முன்னோர்கள் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். இருந்தும் இப்போதெல்லாம் சிறுவர்கள் தமது சிறுவர் பராயத்தை அனுபவிக்க முடியாத சூழல்தான் வளர்ந்து வருகிறது. பெற்றோர் வளர்ந்த சூழல் நிச்சயமாகப் பிள்ளைகளையும் பாதிக்கின்றது. பெற்றோரின் கடும்போக்கான கண்டிப்புடன் வளர்ந்து வரும் பிள்ளைகள், படிப்படியாகத் தமது வாழ்க்கையில் பிரச்சினைகளையும் உள்ளீர்த்துக்கொள்கிறார்கள்.

சிறு பராயத்தில் பிள்ளைகளின் குறும்புத்தனத்தை வெறுத்தொதுக்கும் பெற்றோர் அந்தப் பிள்ளை வளர்ந்து பெரியவனாகி அல்லது பெரியவளாகியதும் அவர்களை ரசிக்கிறார்கள். அஃதுதான் இயற்கையின் நியதி.

எனினும், நம் பெற்றோர்களில் பலர் இதனைப் புரிந்துகொண்டிருக்கவில்லை. அப்படி புரிந்துகொண்டிருந்தால், பிள்ளைகளுடன் சென்று ரயிலில் மோதுவார்களா? ஆறு வயது பன்னிரண்டு வயது பிள்ளைகளை வளர்த்தெடுப்பதென்பது இலகுவான விடயமல்ல. என்னதான் பிரச்சினையாக இருந்தாலும் தற்கொலை அல்லது உயிரிழப்பு எந்த விதத்திலும் தீர்வாக அமையாது.

பிள்ளைகளை ஆங்கிலப் பாடசாலையில் சேர்ப்பதற்குப் பணம் இல்லை என்பதுதான் இந்தத் தாயின் மனக்குறை என்று சொல்லப்படுகிறது. இஃது என்ன கொடுமைடா?!

பிள்ளைகளின் தந்தை வெளிநாட்டுக்குச் சென்று வந்தவரென்றும், குடும்பத்தைக் காப்பாற்றும் அளவிற்கு அவரிடம் பொருளாதாரம் வளம்பெற்றிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டில் உழைத்துக்கொண்டு வரமுடியவில்லையே என்று அவர் விலகியிருந்திருக்கிறார். ஆனால், பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று கடும் பிரயத்தனப்பட்டு முயற்சித்திருக்கிறார் பிள்ளைகளின் தாய். தன்னுடைய தாயாரிடமும் பணம் கேட்டிருக்கிறார். அவர்கள் பெற்றுக்கொடுப்பதற்கு முன்னரேயே இந்தப் பரிதாப முடிவை அந்தத் தாய் எடுத்திருக்கிறார்.

யாரைப் பார்த்தாலும், பாவம்..பாவம்..என்று வாயூறிப்போகிறார்கள்.

ஒரு பாவமும் அறியாத அந்தப் பிள்ளைகள் என்ன செய்யும்? அவர்களோடு ரயிலில் பாய்வதற்கு எந்தளவு தைரியம் வேண்டும் அந்தத் தாய்க்கு? என்று கேட்கிறார்கள்.

உண்மையில் தற்கொலைசெய்துகொள்வதற்கு ரயிலில், ஆற்றில் பாய்வதற்கும் விஷம் அருந்துவதற்கும் எந்தத் தைரிமும் அவசியமில்லை. ஒரு விதமான முட்டாள்தனம் இருந்தாலே போதுமானது என்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ்!

பிள்ளைகளின் வளர்ச்சிக்குப் ​பெற்றோரின் பங்களிப்பு இன்று சமூகத்தில் குறைந்து வருவதாகச் சொல்கிறது யுனிசெப்! குறிப்பாக இலங்கையை வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில், சிறுவர்களுக்காக இலங்கைப்பெற்றோர் செலவிடும் நேரம் போதுமானதாக இல்லை என்கிறது சிறுவர்களுக்கான ஐ.நா நிதியம்.

இதுபற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐ.நா சிறுவர் நிதியம் தனது 70ஆண்டுகால இலச்சினையை தற்காலிகமாக நீக்கியிருக்கிறது. அந்த இலச்சினையில் இடம்பெற்றிருந்த பெற்றோரின் படத்தை தற்காலிகமாக நீக்கி, அதுபற்றிய ஒரு கருத்தாடலை ஏற்படுத்தியிருக்கிறது யுனிசெப். அது வித்தியாசமான ஓர் உத்தி. இலச்சினையைப் பார்க்கிறவர்கள், அந்த இலச்சினை பற்றித்தான் பேசுகிறார்கள். பெற்றோருடைய பங்களிப்பினைக் கட்டாயப்படுத்தும் நோக்கத்திற்காக நிறுவனம் செய்திருக்கும் முயற்சி நிச்சயம் வெற்றியளித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

அஃது ஒருபுறமிருக்க, கொட்டாஞ்சேனைத் தாயார் பிள்ளைகளைப் பலிகொடுத்தது, தனக்கு அவர்களை ஆங்கிலப் பள்ளியில் சேர்க்க முடியவில்லையே என்ற கவலையில். இஃது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. ஆங்கிலப் பாடசாலையின் கல்வித்தரம் பற்றி அடிக்கடி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை யாரும் அறியாமல் இல்லை. பணத்தை மட்டுமே நோக்காகக்கொண்ட இந்தப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பது தொடர்பில் பெற்றோர் இரண்டுதடவை சிந்திக்க வேண்டும் என்றுதான் அனைத்துத் தரப்பினரும் சொல்கிறார்கள். அப்படியிருக்கும்போது வெறும் படாடோபத்திற்காகப் பிள்ளைகளை ஆங்கிலத்திற்குப் பலியிட்டது ஏன் என்று கேட்கிறார்கள்!

உலகமயமாக்கல் நிலவும் இந்தக் காலத்தில், தாய் மொழியில் கல்வி தங்கள் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்குமா என்ற கேள்வி பெற்றோர்களிடத்தில் எழுகிறது. இதனால், தாய் மொழியில் கல்வி என்பதை வேறொரு கண்ணோட்டத்தில் பார்ப்பது அவசியமாகிறது.

தாய் மொழியில் கல்வி கற்பதன் மூலம் குழந்தைகள் கற்பதை தாங்கள் பேசுவதுடன் அல்லது சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அதனால், அவர்கள் எளிதில் கற்கின்றனர். அவர்கள் ஒருவிஷயத்தை நோக்கும் விதம், வேறுமொழியில் கற்பவர்களை விட மாறுபடுகிறது. இவை அனைத்தும் கற்கும் திறனை நாளடைவில் அதிகரிக்கச் செய்கிறது. இது கற்கின்ற குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் அதனைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களும் தாங்கள் சொல்ல வருவதை கற்பவருக்குச் சரியாக போதிக்க முடிகிறது. தாய் மொழியில் குழந்தைகளால் எளிமையாக உரையாட முடிவதால், ஆசிரியர்கள் போதிக்கும் பொழுது அவர்களால் எளிதில் கலந்துரையாடலில் ஈடுபட முடிகிறது. இதனால், மாணவர்களின் பங்களிப்புள்ள ஒரு கல்வி முறையை கொடுக்கமுடிகிறது. இதனால், மாணவர்கள் தன்னம்பிக்கை கூடுகிறது, பேச்சாற்றல் வளர்கிறது மற்றும் ஆக்கத்திறன் கூடுகிறது. இதை உணர்ந்து தான் தாய்மொழியில் அறிவியல் கல்வியை கொடுப்பதன் மூலம் ஆக்கப்பூர்வ சிந்தனையை குழந்தைகள் மத்தியில் கொண்டுவர முடியுமென்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியிருக்கிறார்.

எனவே, ஆங்கிலக் கல்வியில் மோகம் கொண்டிருக்கும் பெற்றோர், சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்! 

Comments