மசுக்குட்டிகள் | தினகரன் வாரமஞ்சரி

மசுக்குட்டிகள்

அரியாலை புங்கன்குளம் வீதியில இருக்குது எங்கிட வீடு.  

எங்கட வீட்டுக்குப் பக்கத்திலயிருக்கிற சனசமூக நிலையத்திலயிருந்து பொடியங்களின்ர சத்தங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறது.  

பெரீசாச் சத்தம் போட்டுக் கொண்டும், ஹாய் ஊய் எண்டு கும்மாளமடிச்சுக் கொண்டும் ஊர்ப் பொடியள் சனசமூக வாசல்ல நிற்கிறாங்கள்.  

‘பின்னேரமெண்டா வந்திருவாங்கள்...! உந்த றோட்டால, பொம்பிளைப்பிள்ளையள் என்னெண்டு போய் வாறது....? உதுகள கட்டாக் காலிகள் போல தாய் தேப்பன்மார் அவுட்டு விட்டிட்டுகள் போல...’ எண்டு என்னையும் மீறி என்ர வாய் முணுமுணுக்க, ஜன்னலை அடிச்சுச் சாத்தினேன்.  

‘கிணுகிணு’வென மணியிலையான்கள் மொய்க்கிற மாதிரிக் கேட்டுக் கொண்டிருந்த சத்தங்கள் கொஞ்சங்குறைவாய்க் கேட்டன.  

அந்தச் சனசமூக நிலையம், எனது வீட்டின் மதிலோடு இணைந்திருந்தது. ஓர் ஆரம்பப் பாடசாலை ஆசிரியனான எனக்கு, பள்ளிக்கூடத்திலயும் பொடியளின்ர குழப்படி, அதுகள ஒருமாதிரிச் சமாளிச்சுப்போட்டு வீட்டுக்கு வந்தா, வம்பர் மகாசபையாய் உந்த சனசமூக நிலையம்.  

சனசமூக நிலையம் என்கிறது, மிகத் திறமானதொரு விஷயம். ஊரின்ரை வளர்ச்சிக்கு அது கட்டாயம் தேவை. ஊராக்கள் எல்லாரும் ஒண்டு கூடுகிற இடமாயும், வாசிகசாலையையும், விளையாட்டு மைதானத்தையும், கலையரங்கையும் அது கொண்டமைஞ்சு இருக்கிறதால அதுகின்ரை முக்கியத்துவம் எனக்கு நல்லா விளங்குது.  

ஆனா, உவங்களின்ரை குழப்படியள் தான் தாங்கேலாமக்கிடக்கு.  

அவங்கள் தங்களின்ரையோ, அல்லது ஆரின்ரையோ மோட்டச் சைக்கிளைக் கொண்டு வந்து, றேஸ் பண்ணிறதும், ஒண்டிலல மூண்டு பேர் ஏறிப்போறதும், நல்ல நாள் பெருநாளில இரவிரவா நிண்டு கொண்டு பாட்டுக்கள் பாடுறதும்... சே, சகிக்கேலாமயிருக்கிறது.  

போதாக்குறைக்கு எனக்கும் மூண்டு ‘கடுவன்கள்’ தான்.  

மூத்தவன் சங்கர் ஏ.எல். படிக்கிறான். அடுத்தவன் ஜெனகன் ஓ.எல். படிக்கிறான். கடைக்குட்டி வேந்தன் மூன்றாம் வகுப்புப் படிக்கிறான். என்ரை மனைவியும் ஓர்ஆசிரியைதான்.  

மூத்தவன் ஓ.எல். முடியும் வரைக்கும் கொஞ்சம் அடக்கமா வீட்டுக்குள்ளயிருந்து படிச்சுக் கொண்டிருந்தவன், பிறகு கொஞ்சங்கொஞ்சமா பக்கத்துச் சனசமூக நிலையத்துக்குப் போகத் தொடங்கினவன், இப்ப பின்னேரெமெண்டா வீட்டயே நிற்கிறானில்ல. அது மட்டுமில்ல, அவங்களும் சங்கரைத் தேடி வீட்டுக்கு வர ஆரம்பிச்சிட்டாங்கள்.  

வீட்டுக்கு வெளியில முன்கேற்றடியில வந்து நிற்கிறது, சத்தம் போட்டுக் கதைக்கிறது, சைக்கிள்ளயிருந்து கொண்டு ஒற்றைக் காலைக் கீழ ஊண்டிக் கொண்டு நிண்டு “டேய்.... சங்கர்...” எண்டு உரக்கக் கூப்பிடுகிறது...., இதையெல்லாம் பார்க்க எனக்குப் பத்திக் கொண்டுவரும்.  

என்ரை மனிசி சொல்லுவா, “உங்களுக்கொருக்காப் பிறஷர் செக் பண்ண வேணும்...! பொடியளெண்டா அப்பிடித்தானிருப்பாங்கள்...!” எண்டு.  

நான் எரிச்சலோட திருப்பிக் கத்துவேன்.  

“ஏன் நானும் உந்த வயசுகளக் கடந்துதானே உந்த அய்ம்பது வயசுக்கு வந்திருக்கிறன். முந்தி நாங்களெல்லாம் உப்பிடித் தறிகெட்டுத் திரியேல்ல கண்டியோ...”  

“அஃது அந்தக் காலம். இப்பத்த ஜெனரேஷனுக்கு டபுள் மடங்கு மூளையப்பா. சுறுசுறுப்பும், துடியாட்டமும் உள்ள வயசு அதுகளுக்கு. நாங்கள் கொஞ்சம் அனுசரிச்சு, ஒத்துப் போய்த்தான் எங்கிட வழிக்குக் கொண்டு வர வேணும்...!”  

சொல்லிவிட்டு நைசாக் கழண்டு குசினியுக்க புகுந்திடுவா அவ.  

ஒருநாள் மூத்தவன் சங்கரையழைச்சு, சனசமூக நிலையத்தில நிண்டு கூத்தடிகிற பொடியங்களின்ரை பெயருகளையும், ஒவ்வொருத்தனும் என்னென்ன செய்து கொண்டிருக்கிறாங்கள் என்டிறதையும் விசாரிச்சுப் பார்த்தன். சங்கர் தான் நல்லாப் பழகிக் கொண்டிருக்கிற நாலைஞ்சு பொடியளின்ரை பேரைப் பற்றிச் சொன்னான். அட, அவங்கிட குடும்பங்கள் நல்ல கண்ணியமான குடும்பங்கள். ஒருக்கால் அவங்கிட தகப்பன்மாரோட அவங்களின்ரை பிள்ளையளின்ரை கும்மாளங்களப் பற்றிக் கதைக்கத்தான் வேணுவேண்டு முடிவெடுத்துக் கொண்டன்.  

ஒரு ஞாயிற்றுக்கிழமை, எங்கயோ வெளியில போன சங்கர், இரவு ஒன்பது மணியாகியும் வீட்டுக்குத் திரும்பவில்லை.  

வாசல்லயே காத்துக் கொண்டு நிண்டு, அவன் உள்ளுக்குள்ள வர, காலுக்குக் கீழ குளறக்குளற நல்லா அடிச்சுப்போட்டன்.  

மணிசி ஓடி வந்தாள்.  

“இஞ்ச வளர்ந்த புள்ளய அடிக்காதேயுங்கப்பா...” எண்டு என்ர கையைப் பிடிச்சுத் தடுத்தாள்.  

“எங்கயடா போனனி...?” எண்டு ஆத்திரம் அடங்காம அவனைக் கேட்டன்.  

“இண்டைக்கு, எனக்குத் தெரிஞ்ச பொடியன் ஒருத்தனின்ரை பேத் டே, அதுக்குத்தான் போட்டு வந்தனான்...”  

சொல்லியபடி அடி வாங்கின கவலை முகத்தில பிரதிபலிக்க, வீட்டுக்குள்ள போனானவன்.  

“என்ன உங்களுக்கு இப்பிடிக் கோபம் வருகுது...?” என்றாள் என் துணைவி.  

“என்ன கதைக்கிறாய் நீ...? உந்தப் பேப்பருகளில வாறதுகளையும் நாட்டு நடப்புக்களையும் அறிஞ்சு கொண்டும் இப்பிடிக் கதைக்கிறாயே....?”  

எரிஞ்சு விழுந்தேன் நான்.  

என்னை ஒரு மாதிரிப் பார்த்திற்று, வீட்டுக்குள்ள போயிற்றாள் அவள்.  

இரவுணவின் போது மனைவி மெதுவா என்ரை முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு சொன்னாள்., “என்னயிருந்தாலும்..., நீங்கள் இப்பிடியடிச்சிருக்கக் கூடாது. அவன் சரியாக் கவலைப்படுகிறான்....” எண்டு.  

“எனக்குங் கவலைதான். என்ன செய்ய, தெள்ளு மாதிரித் தெறிஞ்சுக் கொண்டு திரியுது, உந்தக் குழப்படித்தனத்தையடக்கிறது வேறையெப்படியாம்....?’ எண்டு நினைச்சுக் கொண்டு நித்திரைக்குப் போயிற்றன்.  

பின்பு, ஒரு போயா தினம். பின்னேரப் பொழுது. கொஞ்சம் ஓய்வாக நேரம் கிடைத்தமையினால், பூக்கன்றுகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தேன்.  

அந்த நேரம் பின் வளவுக்கு விளையாடப்போயிருந்த சின்ன மகன் வேந்தன் இளைக்க இளைக்க ஓடிவந்தான்.  

“அப்பா... அப்பா... என்னோட ஒருக்கா வாங்கோ...” எண்டு என்ரை கையைப் பிடிச்சிழுத்தான்.  

“என்னய்யா... என்ன...?”  

பதற்றத்துடன் கேட்டேன்.  

“பின்னுக்கு முருங்க மரத்த வந்து பாருங்கோ.... என்ரை கடவுளே...!” என்று செல்லக் குரலில் கத்திச் சொல்லிக் கொண்டு என்னை முந்தியவாறு ஓடினான். நானும் என்னயேதன்று அறியாமல் அவனைப் பின்தொடர்ந்தேன்.  

அங்கே, அவன் காட்டிய இடத்தில் முருங்கை மரத்தின் நான்கைந்து இடங்களில் திட்டுத்திட்டாக, கம்பளித்துணியால் சுற்றிக் கட்டின மாதிரி மயிர்க் கொட்டிகள் மொச்சுக் கிடந்தன.  

“பாத்தீங்களேயப்பா..., எவ்வளவு மசுக்குட்டிகளெண்டு...?” எண்டு தன் கண்டு பிடிப்பை வியப்புணர்ச்சி தொனிக்க வெளிப்படுத்தினான் வேந்தன்.  

“பொறு வாறன்..., இதுகளுக்குச் செய்யுறன் வேலை...!” எண்டு சொல்லிவிட்டு, அடி வளவினுள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காய்ந்த தென்னோலைகளில் ஒன்றையெடுத்து, அப்பிடியே முழுதாய் மடிச்சு, கயிற்றினால் ஒரு கட்டுப்போட்டேன்.  

“ஓடிப்போய் அம்மாவிட்ட நெருப்புப் பெட்டியையும், மண்ணெண்ணைப் போத்திலையும் வாங்கிக் கொண்டு வா...” எண்டு அவனுக்குக் கட்டளையிட்டேன்.  

அவனும் வேகமாகப் போய் வாங்கிக் கொண்டு வந்தான். மடிச்சுக் கட்டின ஓலையில மண்ணெண்ணையையூற்றி, நெருப்புப் பெட்டியால நெருப்பைப் பற்ற வைத்தேன்.  

‘பகபக’ வெனப் பற்றிக் கொண்டது நெருப்பு.  

அதை முருங்கை மரத்தில் மயிர்க்கொட்டிகள் மொய்ச்சுக் கிடந்த இடங்களில் பிடித்தேன். நெருப்பு வெக்கை பட்டதும் மயிர்க்கொட்டிகள் சுருண்டு சுருண்டு விழுந்தன. மாற்றி மாற்றி எரியும் ஓலைத்திரளைப் பிடித்து மயிர்க்கொட்டிகள் அனைத்தையும் கொன்று விட்டேன்.  

வேந்தன் மரத்தைச் சுத்திச் சுத்தியோடி வந்து “அப்பா... இஞ்ச கொஞ்சமிருக்கு... அங்க கொஞ்சமிருக்கு...” எண்டு எனக்குக் காட்டிக்கொண்டிருந்தான். எல்லாம் செத்து விழுந்ததும், “அப்பா மசுக்குட்டியள் பாவமெல்லே...” என்றான்.  

“பாவமோ....? பட்டாத்தான் தெரியும் அதுகளின்ரை சுணை. தாங்கேலாது...!”  

அவன் முகத்தில் திருப்தியில்லை  

இந்தச் செயற்பாடு தொடர்ந்தது.

இந்தச் செயற்பாடு தொடர்ந்தது.

நான் வேலை முடிந்து வீட்டுக்கு வர முன்னமே பள்ளிக்கூடத் தாலை வீட்டுக்கு வந்து விடும் வேந்தன், உடுப்பைக் கூட மாத்தாமல் பின் வளவுக்குப் போய் முருங்கை மரத்தைப் பார்க்கிறதும், புதுசா மயிர்க்கொட்டிகள் மொய்ச்சிருந்தால் எனது வரவைக் காத்திருந்து, நான் வந்ததும் ரெண்டு பேருமாகச் சேர்ந்து மயிர்க்கொட்டிகளை வதம் செய்வதும் வழமையாயிற்று.  

ஒருநாளிரவு, நான் பாடசாலையிலிருந்து எடுத்து வந்த மாணவர்களின் மாதப் பரீட்சைக் கொப்பிகளைத் திருத்திக் கொண்டிருந்தேன். பிள்ளைகள் முன் விறாந்தையிலிருந்து படிச்சும் கொண்டிருந்தனர்.  

வேந்தன் ஒரு புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு எனக்குக் கிட்ட வந்தான்.  

“அப்பா...! இஞ்ச பாருங்கோ, எவ்வளவு வடிவான வண்ணாத்திப் பூச்சிகளெண்டு...!” எண்டு அந்தப் புத்தகத்தைக் காட்டினான். அது, பூச்சிகள், பறவைகள் பற்றின ஒரு வண்ணப்படப் புத்தகம்.  

உண்மையில் அந்தப் புத்தகத்திலிருந்து அழகான வண்ணத்துப் பூச்சிகளைப் பார்க்க மனசுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்திச்சுது.  

“உந்த வண்ணத்துப் பூச்சியள் எங்கயிருந்து உருவாகி வருகுதுகள் அப்பா..?” எண்டு என்னைத் துளைச் செடுத்தான்.  

எனது மனைவியும் ஓர் ஆசிரியை என்கிறதால, இண்டைக்கு இரவுக்குள் நான் கொப்பிகளைத் திருத்தி முடிக்க வேண்டியதன் அவசியம் தெரிஞ்சுதானோ என்னவோ, குசினியுக்குள்ளிருந்து மகனைக் கூப்பிட்டாள்.  

“தம்பி.... இஞ்ச வாங்கோ...., அப்பாவக் குழப்பாதீங்கோ.... பேந்து அடி வாங்குவீங்கள்...” எண்டு அவள் சொன்னதும் மகன் குசினியுக்குள் சென்றான்.  

“எப்படியம்மா வண்ணத்திப் பூச்சிகள் உருவாகுதுகள்...?”  

“அது தம்பி, உந்த வண்ணத்துப் பூச்சிகளின்ரை குழந்தைப் பருவம் கொடுமையானது. சனங்கள் அதுகளக் கண்டா வெறுப்பினம். சாக்காட்டிப் போடுவினம். ஆனா, அதுகள் தப்பிப் பிழைச்சு வடிவான வண்ணாத்துப் பூச்சிகளாமாறினாப் பிறகு அதுகளைப் பார்த்து நல்லா ரசிப்பினம். பார்த்துப் பார்த்துச் சந்தோஷப் படுவினம்...!” என்று பீடிகை போட்டாள் மனைவி.  

வேந்தனுக்கு ஆர்வம் மேலிட்டைமை அவனது உரத்த குரலிலான “ம்... ம்...” என்பதிலிருந்து விளங்கியது.  

கொப்பிகளைத் திருத்தியவாறு நானும் எனது செவிகளைக் குசினியை நோக்கிக் கூர்மைப்படுத்தினேன். அறிந்த விடயங்களைக் கூட இன்னொருவர் வாயால் அழகான முறையில் சொல்லப்பட்டுக் கேட்கும் பொழுது, அவை சுலபமாகச் சிந்தனைப் பரப்புக்கள் புகுந்து விடுகின்றன.  

“வண்ணத்துப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக வந்து மரங்களில உள்ள கிளைகள், தண்டுகளில முட்டைகளை இட்டு விட்டுப் போகும். அந்த முட்டைகளிலயிருந்து வண்ணத்துப் பூச்சிகளின்ரை ஆரம்பப்பருவமான புழுக்கள் வெளியில வரும். அதுகள் தான், ‘மசுக்குட்டியள்’ எண்டு நீங்கள் சொல்லுகிற மயிர்க்கொட்டிகள்...!”  

“என்ன...!” மசுக்குட்டிகளோ...?”  

வியந்தான் வேந்தன்.  

“சின்னச் சின்னக் கூட்டுப் புழுக்களாக உருவாகி, குறிச்ச காலப்பகுதியில தமக்குமேலவுள்ள ரோமங்களையே தமக்குரிய பாதுகாப்புக் கவசமாகக் கொண்டிருந்து விட்டு, பிறகு சிறகு முளைச்ச அழகான வண்ணத்துப் பூச்சிகளா வெளியில வரும்...”  

“மசுக்குட்டிகளுக்கு ஏன் சுணைக்கிற ரோமம் இருக்கு...?”  

“அது, இயற்கை ஒவ்வோர் உயிருக்கும் அவை வாழிறதுக்காக, எதிரிகளிடமிருந்து தப்பிப்பிழைக்கிறதுக்காக சில பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வைச்சிருக்குது. அதுதான் அப்படி! பார்க்க அருவருப்பாய், எங்களுக்குப் பிடிக்காத மாதிரியிருக்கிற மசுக்குட்டிகள், பின்னடியில எங்களுக்குச் சந்தோஷம் தாற வடிவான வண்ணத்துப் பூச்சிகளா மாறுதுகள், பார்த்தீங்களே...?” எண்டு விட்டு “சரி..., நீங்க போய்ப் படியுங்கோ...” எண்டு அவனை அனுப்பி வைத்தாள்.  

நான் என்பாட்டில் கொப்பிகளைத் திருத்தியவாறிருந்து விட்டேன்.  

அடுத்த நாள்,  

மாலை, வேலை முடிந்து வீடு வந்து சேர்ந்த பொழுது, எனது வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான் வேந்தன். என்னுடன் பொழுதைக் கழிக்குமொரு வழியை அவன் கண்டுபிடித்திருந்தான்.  

“அப்பா... கெதியா உடுப்பை மாத்தீற்று வாங்கோ...!” உடையை மாத்தி விட்டு, அவன் இழுத்த இழுப்புக்கு அவனைப் பின் தொடர்ந்தேன்.  

முருங்கை மரத்தின் தண்டுப் பகுதியொண்டில மயிர்க் கொட்டிகள் மொய்ச்சுக் கிடந்தன.  

“அப்பா..., மண்ணெண்ணைப் போத்திலையும், நெருப்புப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு வாறன்...” எண்டு சொல்லிக் கொண்டு குசினியை நோக்கி ஓட வெளிக்கிட்டான்.  

“பொறு... வேண்டாம்...!”  

அவனது கையைப் பிடித்து நிறுத்தினேன்.  

என்னை அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான்.  

வேந்தனைத் தூக்கிக் கொஞ்சிக்ெகாண்டு வீட்டினுள் நுழைந்தேன். பக்கத்துச் சனசமூக நிலையத்திலிருந்து வந்து கொண்டிருந்த பொடியங்களின்ரை கும்மாளக் கூச்சல்களும், சிரிப்புச் சத்தங்களும் என்னைக் குழப்பவில்லை.

நல்லை. ஜி. கண்ணதாஸ்

Comments