மலையக சமூகம் கட்டமைப்பு ரீதியாக மாற்றம் பெற்று வருகிறது | தினகரன் வாரமஞ்சரி

மலையக சமூகம் கட்டமைப்பு ரீதியாக மாற்றம் பெற்று வருகிறது

மலையகத்தின் பல மாவட்டங்களிலும் (நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை) பெருந்தோட்டத் தொழிலாளார்களாக வாழ்ந்து வருகின்ற இம் மக்களின் வாழ்க்கை வரலாறு 200வருடங்களைத் தாண்டிவிட்டது. எனினும்  இன்னும்  பல விடயங்களில்  மாற்றங்கள் நிகழ்ந்துள்ள போதும் இன்னும் பல விடயங்களில் மாற்றங்கள் எதுவுமன்றி அதே நிலையில் இருப்பதை அவதானிக்கலாம்.  

குறிப்பாக லயத்து வாழ்க்கை முறை, தொழிலாளர்களின் தொழில் அந்தஸ்து, தொழில் உரிமை, தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதார செளக்கிய நிலைமைகள், உணவு முறை, சிறுவர்களின் போசாக்கு, கட்சி அரசியல் நிலை, சமூக பொருளாதார குறிகாட்டிகள், அரசாங்க தொழில் வாய்ப்புகள், உயர் கல்வி அடைவுகள் போன்றன தேசிய சராசரியுடன் இன்னும் வளர்ச்சிடைய வேண்டிய நிலையிலேயே உள்ளன. 

எது எப்படியிருப்பினும் யார் எதைச் சொன்னாலும்  மலையகப் பெருந்தோட்டச் சமூகத்தின் வளர்ச்சி, முன்னேற்றம், அபிவிருத்தி, மேம்பாடு என்பவற்றில் பல பொதுவான மாற்றங்கள் மிகமெதுவாக நடைபெறுவதை  எவராலும் மறைக்கவும் மறக்கவும் முடியாது.  

குறிப்பாக 30வருடங்களின் பின் மலையக மக்களுக்கு இலவசக் கல்வி வாய்ப்பு கிடைத்தாலும் கூட இன்று ஏனைய சமூகங்களோடு போட்டி போடும் அளவிற்கு எமது சமூகத்தின் கல்வி அடைவு மட்டங்கள் ஓரளவு உயர்ந்து வருவதை காணலாம்.  

2018ஆம் ஆண்டு தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி அடிப்படையில் நுவரெலியா மாவட்டம் தமிழ் மொழி மூலமாக சித்திபெறுவதற்கு 162புள்ளியை வெட்டுப்புள்ளியாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வெட்டுப் புள்ளியையும் தாண்டி ராகலை சென்லெனாட்ஸ் த.ம.வித்தியாலய மாணவி 196புள்ளிகளையும் அட்டன்,  தமிழ் மகா வித்தியாலயத்தில் 195புள்ளிகளையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவ்வாறான மாணவர்களை பாராட்டி கெளரவிப்பதோடு அவர்களின் கல்வியை பல்கலைகக்கழகம் வரை செல்வதற்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்ய வேண்டும்.  

இன்று ஆரம்பக் கல்வியில் ( 1 - 5) மலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகள் ஓரளவு முன்னேற்றம் கண்டு வருகின்றது. ஆனால் மாவட்ட ரீதியாக நுவரெலியா மாவட்டம்   தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் 22வது இடத்திலும், மாகாண மட்டத்தில் 9ஆவது இடத்திலும் காணப்படுகின்றது.  

கடந்த வருடங்களில் க.பொ.த சாதாரண தரத்தில் 9ஏ சித்திகளை பெரும்பாலான மாணவர்கள் பெற்றுள்ளனர்.   இதன் மூலம் அதிகமான மாணவர்கள் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்பதற்கு தகுதி பெறுவது விசேட அம்சமாகும். குறிப்பாக கணித, விஞ்ஞான துறைக்கு அதிகமான மாணவர்கள் செல்வது வரவேற்கத்தக்கது ஆகும்.  

க.பொ.த உயர்தரத்தில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர் தொகையும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதை அவதானிக்கலாம். கணிதம்,  விஞ்ஞானம், வர்த்தகம், கலை, நுண்கலை, உயிரியல் தொழில் நுட்பம், பொறியியல் தொழில் நுட்பம் போன்ற பிரிவுகளில் இருந்து மலையகப் பெருந்தோட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவது காலத்தின் தேவையாக உள்ளது.  

இன்று மலையகப் பெருந்தோட்ட மாணவர்கள் வைத்திய, பொறியியல், வர்த்தக, கலைப் பீடங்களுக்கு அதிகளவான மாணவர்கள் பெருந்தோட்டப் பாடசாலைகளிலிருந்து வருடாந்தம் செல்வதை அவதானிக்கலாம். இதன் வளர்ச்சியை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை பல்வேறு மட்டங்களிலும் ஊக்குவிக்க வேண்டும்.   கல்வி வளர்ச்சிக்கும் சமூக கட்டமைப்பு மாற்றங்களுக்கும் இடையில் ஒரு நேரடித் தொடர்பு இருப்பதை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. கல்வித் துறையில் ஒரு சமூகம் வளர்ச்சியடையும் போது அச்சமூகத்தில் கட்டமைப்பு மாற்றங்களிலும் பல்வேறு துறைகளிலும் மாற்றங்கள் (கல்வி, வீடமைப்பு, அரச, தனியார் தொழில் வாய்ப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கள், சமூக இடப்பெயர்வுகள்) ஏற்பட்டு வருகின்றன.  

எனவே மலையகப் பெருந்தோட்ட சமூகக் கட்டமைப்பில் தொடர்ச்சியான சாதகமான மாற்றங்கள் ஏற்படுவதற்கு அடிப்படையாக அமைவது கல்வித்துறையில் ஏற்படும் மாற்றமேயாகும். கல்வித் துறையில் அடைவு மட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதே சிறந்த முயற்சியாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக மலையகப் பெருந்தோட்ட மாணவர்கள் உயர்கல்வித் துறையில் அதிகமாக பிரவேசிக்க முயற்சிக்க வேண்டும்.  

உயர் கல்வி வாய்ப்புக்களை ஓர் சமூகம் தொடர்ச்சியாக பல துறைகளிலும், பல வழிகளிலும் பெறுகின்ற போதே அச்சமூகத்தில் உள்ளவர்கள் பல்வேறு துறைகளிலும் பிரகாசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்விதான் மலையகச் சமூகத்தின் முதலீடாகும்.  

இன்று மலையகப் பெருந்தோட்டப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்புத் திட்டத்தின் மூலம், லயத்து வாழ்க்கை முறையானது படிப்படியாக இல்லாமல் செய்வதற்கான வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக தனி வீட்டுத் திட்டத்துடன் கூடிய தோட்டங்களை கிராமங்களாக உருவாக்கும் வேலைத்திட்டங்களும் உருவாக்கப்பட்டு வருவதை அவதானிக்கலாம். இது மலையகச் சமூகத்தின் சமூக கட்டமைப்பில் ஏற்பட்ட பாரிய சமூக மாற்றத்திற்கான அடிப்படை அம்சமாக கருதப்படுகின்றது.  

இன்று மலையகப் பெருந்தோட்டப் பிரதேசங்கள் தோறும் தனி வீட்டுத் திட்டம் இந்திய அரசின் உதவியுடனும், இலங்கை அரசாங்கத்தின் உதவியோடும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இம் மக்களுக்கு 7பேர்ச் காணியில் வீட்டு உரிமையுடன், தனி வீடும் அமைத்து கொடுத்திருப்பதானது மலையகப் பெருந்தோட்ட மக்களின் நிலமற்ற, கானி உரிமையற்ற, வீடற்ற நிலை மாறி இன்று சொந்த வீட்டில், தனக்கு சொந்தமான காணியில் ஏனைய சமூகங்களைப் போல் கெளரமாகவும், சுதந்திரமாகவும் வாழக்கூடிய ஓர் சூழ்நிலை ஏற்பட்டிருப்பது இம்மக்களின் வாழ்க்கையில் பல அடிப்படை மாற்றங்களும், கலாசார மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பேற்பட்டுள்ளது.  

இரா. சிவலிங்கம் (அதிபர்)

கொட்டகலை த.ம.வி.

Comments