பிரித்தாளும் தந்திரத்துக்கு சிறுபான்மை கட்சிகள் பலியாகி விடக்கூடாது | தினகரன் வாரமஞ்சரி

பிரித்தாளும் தந்திரத்துக்கு சிறுபான்மை கட்சிகள் பலியாகி விடக்கூடாது

கல்முனை பிரதேசத்தின் எல்லையை  நிர்ணயம் செய்ய வேண்டும். இதிலிருந்து அரசு  தவறுமாயின் தமிழ்மக்கள் அரசின் மேல் நம்பிக்கை வைக்க முடியாத நிலையொன்று  தோன்றும் என்கின்றார் மட்டு. மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.ஸ்ரீநேசன்.  அவ்வாறு செய்யாவிட்டால் தமிழ்த் தலைமைகளும் அரசை நம்ப முடியாமல் போகும் என்றும் அவர் எச்சரிக்கின்றார். தினகரன் வாரமஞ்சரிக்கான அவரது நேர்காணலின் முழு விபரம் வருமாறு.....

கேள்வி: கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முன்வைத்து நடாத்திய போராடம் பற்றிய மதிப்பீட்டை கூறுங்கள் ?

பதில்; கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை உண்மையில் நியாயமானது. இந்த உண்ணாவிரதப் போராட்டம், அந்த விடயத்தை விளங்கிக்கொண்டுதான் செய்யப்பட்டதாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. தரமுயர்த்துகின்ற செயற்பாடானது கருத்து ரீதியாக எடுக்கப்பட்டதே ஒழிய அதற்குரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை என்பது மறுக்க மடியாத உண்மை. உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவோடு பல சந்தர்ப்பங்களில், பல மட்டங்களில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதென்பது உண்மை. அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது உண்மை. இதனை வலியுறுத்தித்தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்திருக்கிறது. ஆனால், இந்தப்போராட்டம் நடத்தப்படுவதற்கு முன்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு முன்னறிவித்தலும் வழங்கப்படவில்லை. அதே போன்று இந்த உண்ணாவிரதப் போராட்டம்பற்றி அரசாங்கத்திற்கும் அறிவிக்கப்படவில்லை. போராட்டத்தின் நியாயத்தன்மை சரியாக இருந்த போதிலும் அதனை நகர்த்துகின்ற தன்மைபற்றி நாம் இன்னும் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். எனவே இதனை ஒட்டு மொத்தமாக பார்க்கப் போனால் இந்த அரசுக்கு போராட்டத்தின் மூலமாக இதனை கூடிய விரைவில் செய்து தரவேண்டும் என்றவொரு அழுத்தம் விடுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இவ் விடயத்தில் விரைந்து செயற்படும் வண்ணம் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே நேரத்தில் முஸ்லிம்களுக்கும் ஓர் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள் தங்களுக்கென ஒரு நிர்வாக அலகைக் கேட்டு அபிவிருத்தியடையும்போது, அவ் அபிவிருத்திக்கு குறுக்கே நிற்கக் கூடாதென்பதாகும். கடந்த முப்பது வருட காலத்தில் பாதிப்பின் வேகத்தை உய்த்து உணர்ந்த தமிழ்ச் சமூகம் அதனை சுதாகரித்துக் கொண்டு முன்னேற விழையும் போது தமிழ்ப் பேசுகின்ற முஸ்லிம் சமூகம் அதற்கு குறுக்கே நிற்கக் கூடாது. அது மேலும் தொடருமாயின் இவ்விரு சமூகங்களுக்கிடையேயும், முரண்பாடுகளும், கருத்து வேறுபாடுகளும் தோற்றம் பெறும்.  

கேள்வி: தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தமது கட்சியியைச் சேர்ந்த கல்முனை மாநகரசபையின் இரு உறுப்பினர்களை இச்சந்தர்ப்பத்தில் பதவி விலக்கியுள்ளார். அதனை எப்படிப் பார்க்கிறீர்கள் ?

பதில்: இது அவரது கட்சியோடு சம்பந்தப்பட்டவிடயம் இதில் கருத்துக் கூற நான் விரும்பவில்லை. இருந்தாலும், இந்த இக்கட்டான நேரத்தில் இதில் கை வைக்காமல் விட்டிருக்கலாம். 

கேள்வி: கல்முனையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆலோசனையின்றி ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடந்து முடிந்திருக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள் இதுபற்றி..? 

பதில்: கட்சி உறுப்பினர்கள் யாரேனும் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுவதற்கு முன்பதாக கட்சியின் முக்கியஸ்தரகளோடு கலந்துபேசியிருக்க வேண்டும் அதுதான் முறையும் கூட. இருந்தாலும் இப்பிரதேச செயலகம் முழுமை பெறும் என்று எதிர்பார்த்திருந்த மக்கள் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும் என்ற போக்கில் இந்தச் செயலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எந்தவொரு விடயத்திலும் தந்திரோபாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தத் தந்திரோபாயத்தில் வெளிப்படையாக, அல்லது இரகசியமாக, இத் தகவலை தெரிவித்திருக்கலாம். 

கேள்வி: கல்முனையின் வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த பேச்சுவார்த்தை நடாத்த வேண்டுமென முஸ்லிம் தரப்பு கூறுகிறது. அவர்களுக்கு சார்பான விடயங்கள் வரும்போது பேச்சவார்தையின்றியும், தமிழ்த்தரப்பு கோரிக்கைகளை முன்வைக்கும் போது பேச்சவார்ததை வேண்டும் என்று கூறுவதும் நியாயமாகுமா? 

பதில்; இது முஸ்லிம் தரப்பினரின் ஒருதலைப்பட்சமான போக்கு என நான் பார்க்கிறேன். தங்களது தேவைக்கு ஏற்ற மாதிரி கதையை புரட்டிப்போடக்கூடாது.  கல்முனை வைத்தியசாலை ஒன்றிருக்கும்போது அதனை அபிவிருத்தி செய்யாது அதற்கு மூன்று கிலோமிற்றர் தூரத்தில் ஒரு வைத்தியசாலையை ஆரம்பித்தது யார்?  வாழைச்சேனை மத்திய பிரதேச செயலகத்தை பிரித்தெடுத்தது முன்னாள் அமைச்சர் அப்துல் காதர். நிலத் தொடர்பற்ற முஸ்லிம் கல்வி வலயங்களை உருவாக்கியது யார்?   வாழைச்சேனையில் தமிழ்க்கோயிலை உடைத்ததும், தமிழர்களுக்கான சவக்காலையில் பிரதேச செயலகத்தை கட்டியதும் யார்? அக்கரைப்பற்றில் தமிழர்களின் இரு வட்டாரங்களை அக்கரைப்பற்று மாநகரசபைக்கு அப்பகுதி மக்களின் அனுமதியில்லாது சேர்த்துக் கொண்டது யார்? இவர்கள் அரசாங்கத்தோடு சேரும்போது ஒரு இலக்கை வைத்தே சேர்ந்தார்கள் என்பது உண்மை. அந்த இலக்கை அடைவதற்கு தமிழர்களை புலிகளாக அரசாங்கத்திற்கு காட்டிக் கொண்டார்கள். இது அவர்களுக்கு கிடைத்த பாரிய வாய்ப்பு  இவைகளையெல்லாம் பிரித்தெடுத்தார்களே யாரோடும் இதுபற்றி கலந்துரையாடினார்களா? சம்மதம் பெற்றார்களா? ஒவ்வொரு விடயமும் இரவோடு இரவாக நடந்தேறும். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அமைத்து அதனூடாக தமிழ் மக்கள் அபிவித்தியடைய முயற்சிப்பதற்கு முஸ்லிம் மக்கள் குறுக்கே நிற்பது தமிழ் மக்களின் அபிவிருத்தியை முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை என தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கருத்து பதிவேற்றம் பெற்றுவிடக் கூடும். இது அவ்வளவு ஆரோக்கியமாகாது. 

 கேள்வி: சிறு பான்மையினர் ஒருவருக்ெகாருவர் எதிரெதிராக இருப்பதுபற்றிய உங்கள் கருத்து?  

பதில்; சிறு பான்மையினர் ஒன்று திரண்டு தங்களது உரிமை களை ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து பெற வேண்டும். அதைவிட்டவிட்டு ”கீரியும், பாம்பும்” மாதிரி இருப்பது நல்லதல்ல. அது நாட்டை ஆளும் அரசுக்கு சாதகமாக இருக்கும். அதனை பிரித்தாளும் தந்திரமாக பேரினவாத அரசு பாவிப்பதற்கு இரண்டு சிறுபான்மைச் சமூகங்களும் இடமளிக்கக் கூடாது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு என்பதை இரண்டு சிறபான்மைச் சமூகங்களும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டளையாகும்.

கேள்வி: உண்ணாவிரதம் தொடர்பாக வழங்கப்பட்டிருக்கும் அரசின் முடிவு பற்றிய உங்கள் கருத்து? 

பதில்; உண்ணாவிரதம் பற்றிய அரசின் இப்போதைய முடிவோடு கடந்த காலத்தைய முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அதில் எந்தளவுக்கு நம்பிக்கை கொள்ளலாம் என்று மக்கள் மத்தியில் ஒரு கருத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே வழங்கப்படுகின்ற உத்தரவாதமென்பது வழுவழுத்துப் போகின்றதாக இருக்கக் கூடாது. அவை உறுதியானதாகவும், உண்மையானதாகவும் அமைந்திருக்க வேண்டும். இந்த விடயத்தில் உள்நாட்டு அமைச்சர் வஜிர அபேவர்தன ஒரு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கிறார் என்றே கருத வேண்டும். அவர் இந்த விடயத்தை பல தடவைகள் கூறி, பல தடவைகள் தானே மீறி செயற்பட்டிருக்கின்றார். எனவே இந்த விடயத்தில் எந்தவகையான முடிவு இருப்பதோ அல்லது முடிவு இல்லையோ என்பதில் எங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படுகிறது. எனவே சிறிய, சிறிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய திராணி இல்லாதிருந்தால், புரையோடிப்போயிருக்கக் கூடிய தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காணப்போகிறார்கள் என்ற கருத்தோட்டம் எங்கள் மத்தியில் இருக்கிறது. 

கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடக்குப்பிரதேச செயலகம் தொடர்பான உண்ணாவிரதம் தொடர்பாக முதலில் பிரதமர் ரணிலோடு பேசியது நீங்களும், தலைவர் மாவையும்தான் அந்த நேரத்தில் பிரதமரின் மனோநிலை எப்படி இருந்தது?

பதில்; பிரதம மந்திரி இந்தப் பிரச்சினையை இலகுவாக தீர்க்க வேண்டும் என்ற முனைப்பில் இருப்பது தெரியவருகிறது. ஆயினும் முட்டுக்கட்டைகள் வரும்போது ஒரு நாட்டின் பிரதமர் மிகவும் சாதுரியமாகச செயல்பட வேண்டும். கடந்த காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கின்ற விடயத்தில் எந்தவொரு அரசுத் தலைவரும் இதய சுத்தியோடு செயற்படவில்லை என்பதை என்னால் கூறிக் கொள்ள முடியும். ஒப்பந்தங்கள் செய்வதும் அதனை கிழித்தெறிவதும். உத்தரவாதம் அளிப்பதும், அதனை மீறிச் செயற்படுவதும் அதே போன்று பேச்சுவார்த்தை என்று அழைப்பதும். அதனை இழுத்தடிப்பதும் கைவந்த கலையாக இருந்து வருகிறது. நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் இந்த நாட்டின் பிரதமரும், ஜனாதிபதியும் சின்னச்சின்ன பிரச்சினைகளுக்க முதலில் தீர்வுகளைக்கண்டு இறுதியாக பெரும் பிரச்சினைகளக்கு தீர்வுகாணும் பழக்கத்திற்கு வரவேண்டும் என்பதாகும். 

கேள்வி: இறுதியாக இவ்விடயத்தில் என்ன செய்வதென   உத்தேசித்துள்ளீர்கள் 

பதில்; நான் இறுதியாக சொல்வது என்னவென்றால் இச்சந்தர்ப்பத்தில் சிங்கள,  தமிழ், முஸ்லிம் தலைமைகள் சரியாக சிந்திக்க வேண்டும் நியாயமாக, நிதானமான முடிவுகளை எடுக்க வேண்டும் இந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் நீண்டகாலம் இதனை அறிந்து வைத்திருக்கிறார்கள். இதை இழுத்தடிப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். கணக்காளர் ஒருவரைப் நியமிப்பதென்பது ஓர் இலகுவான விடயம் இதனை அமைச்சர் ஏன் இழுத்தடிக்கிறார்? ஏமாற்றுவது, ஏமாறுவது என்பன இரண்டுமே தவறான விடயம். ஆகவே உள்நாட்டு அமைச்சர் வழுவழுத்த போக்கை விட்டுவிட்டு இப்பிரதேச செயலகத்தக்கு கணக்காளரையும் உத்தியோகஸ்தரகளையும் நியமிக்க வேண்டும் அதே போன்று எல்லை நிர்ணயத்தையும் செய்ய வேண்டும். இதிலிருந்து அரசு தவறுமாயின் தமிழ்மக்கள் அரசின் மேல் நம்பிக்கை வைக்க முடியாத நிலையொன்று தோன்றும். அதே போன்று தமிழ்த் தலைமைகளும் அரசை நம்ப முடியாமல் போகும். தமிழ் மக்கள், அரசியலில் வேறு முடிவெடுக்க தள்ளப்படுவார்கள் இது உண்மை.   

எஸ்.தவபாலன்

Comments