மலையகத்தில் "கணித, விஞ்ஞான பாடங்களை உயர்தரத்தில் கற்பதற்கு இருபது பாடசாலைகளே உள்ளன" | தினகரன் வாரமஞ்சரி

மலையகத்தில் "கணித, விஞ்ஞான பாடங்களை உயர்தரத்தில் கற்பதற்கு இருபது பாடசாலைகளே உள்ளன"

(கடந்த வாரத் தொடர்)

கேள்வி : கடந்த 2015 முதல் இன்றுவரையிலான தமிழ் முற்போக்கு  முன்னணியின் செயற்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? திருப்தியாக  இருக்கிறதா? முன்னுதாரணமாகக் கொள்ளலாமா? 

மலையகத்தில் தேர்தல் காலங்களில் கூட்டணிகளை உருவாக்குவது  இயல்பு. இதனை எல்லா சமூகத்திலும் கட்சிகளிலும் பார்க்கலாம். இது தேர்தல்  அரசியலின் பண்பு. குறிப்பாக, 1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார  தேர்தல் முறை இதற்கு பெரிதும் வழியமைத்துள்ளது. மலையகத்தைப் பொறுத்தவரை  தேர்தல் நலனுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணியொன்று சுமார் மூன்று  வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக செயற்படுவது இதுவே முதல் தடவையாகும்.  கூட்டணிகளில் ஒரு சில முரண்பாடுகள் இருந்தாலும் பொதுவில் அவர்கள் தமது  ஒற்றுமையைப் பேணி வருகின்றார்கள். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசை  எதிர்ப்பதற்கு அத்தகைய கூட்டணி ஒன்றின் அவசியத்தை அவர்கள் நன்கு உணர்ந்து  செயற்படுகின்றார்கள். இக்காரணியும் இதன் தொடர்ச்சித் தன்மையில் செல்வாக்கு  செலுத்துகின்றது எனலாம். மறுபுறமாக, இக்கூட்டணி உருவாக்கப்பட்டதன் பின்னர்  மலையக மக்களின் வாக்கு வங்கி இரு துருவமாக்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவினர்  இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் பிறிதொரு பிரிவினர் தமிழ் முற்போக்கு  கூட்டணிக்கும் வாக்களிக்கும் நிலை உருவாகியுள்ளது. இது சாதகமான  மாற்றமாகும். இதன் காரணமாக மலையக மக்களின் வாக்கு சிதைவு இன்று பெரியளவில்  குறைந்துள்ளதுடன், இரு துருவங்களாக அணிதிரட்டப்பட்டுள்ளது. அத்துடன்,  முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மலையக மக்கள் மத்தியிலும் இனத்துவ தேசியவாத  சிந்தனைகள் வளர்ந்து வருகின்றது. இதனை தேர்தல் காலங்களில் அவதானிக்க  முடிகின்றது. 

எவ்வாறாயினும், தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாக்கப்பட்டதன்  பின்னர் மலையக மக்களின் உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை  நோக்கியப் பயணம் ஆரம்பித்துள்ளது. கொள்கை, சட்ட மறுசீரமைப்புகள், நிறுவன  மறுசீரமைப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் அவசியத்தை நாம் தொடர்ந்து  வலியுறுத்தி வருகின்றோம். 2003ஆம் ஆண்டு பிரஜாவுரிமைப் பிரச்சினை முற்றாக  தீர்க்கப்பட்டாலும் அதன் முழுமையான பயன்களை அனுபவிப்பதற்கான சட்ட, கொள்கை  சீர்திருத்தங்கள், நிறுவன மாற்றங்கள் இந்நாட்டில் இடம்பெறவில்லை. அத்தகைய  மாற்றங்கள் 2015ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற ஆரம்பித்துள்ளன. இதில் தமிழ்  முற்போக்கு கூட்டணிக்கு முக்கிய பங்குண்டு. அதேபோல் இக்கூட்டணியை  வழிநடத்தும் சிவில் அமைப்புகளுக்கும் மலையக புத்திஜீவிகளுக்கும் பங்குண்டு.  2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் வீடமைப்பு, காணி உறுதி, புதிய பிரதேச சபை  உருவாக்கம், புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை உருவாக்கப்பட்டமை,  புதிய பிரதேச செயலகங்களுக்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளமை  என்பவற்றை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மாற்றங்களாகவே நான் பார்க்கின்றேன்.  ஆயினும், பிரதேச செயலகத்தின் அமைவிடம், தமிழ் அரச அதிகாரிகளை நியமித்தல்,  அதிகார சபையில் தமிழ் அதிகாரிகளை உள்வாங்குதல் போன்ற விடயங்களில் வெற்றி  பெறுவதற்கு தொடர்ந்தும் கூட்டணி போராட வேண்டியிருக்கும். அத்துடன், மலையகப்  பல்கலைக்கழகம் அமைத்தல், கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குதல் போன்ற  விடயங்களிலும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். மலையக மக்களுக்கான  கொள்கை, சட்டம் மற்றும் நிறுவன ரீதியான மாற்றங்களை கொண்டு வருவதற்கு இந்த  அரசாங்கம் ஒப்பீட்டளவில் சாதகமாக காணப்படுகின்றது.

கேள்வி : மலையக சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளாக எவற்றை அடையாளம் காண்கிறீர்கள்? 

கல்வித்துறையை சார்ந்தவன் என்ற வகையில் அதுபற்றி ஒரு சில  விடயங்களை கூற விரும்புகின்றேன். பாடசாலைக் கல்வியில் குறிப்பிடத்தக்க  முன்னேற்றங்கள் இருந்தாலும், இன்னும் சில குறைபாடுகள் தொடர்ந்த வண்ணம்  உள்ளன. குறிப்பாக, உயர்தர கணித விஞ்ஞானப் பிரிவுகள் மிக மோசமான நிலையிலேயே  காணப்படுகின்றன. போதிய தகுதியுடைய ஆசிரியர்கள், வளங்கள் இல்லாமையால் அவை  இன்னும் விருத்தியடையாத நிலை காணப்படுகின்றது. ஹட்டன் தவிர்ந்த ஏனைய  பிரதேசங்களில் இதனை வெளிப்படையாகவே காணமுடியும். இதனால் விஞ்ஞான, கணித  பிரிவுகளில் படிக்க தகுதியுள்ள மாணவர்கள் கூட கலை, வர்த்தகத்துறையில் கற்க  வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். 15 லட்சம் மலையக மக்கள்  இந்நாட்டில் வாழ்கின்றனர். இவர்கள் ஒன்பது மாவட்டங்களில் பரந்தும்  செறிந்தும் வாழ்கின்றனர். ஆயினும் சுமார் 20 பாடசாலைகளில் மாத்திரமே கணித,  விஞ்ஞான பாடங்களை உயர்தரத்தில் கற்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. இது  ஒரு தீவிரமானப் பிரச்சினையாக மாறியுள்ளது. ஆயினும், மலையக அரசியல்வாதிகள்  எவரும் இவ்விடயத்தில் ஆர்வம் காட்ட முன்வரவில்லை. நோர்வேயில் கலாநிதிப்  பட்டப்படிப்பை நான் மேற்கொண்டபோது அங்குள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு  இதுபற்றி தொடர்ந்து எடுத்துக்கூறினேன். முன்மொழிவுகளை சமர்ப்பித்தேன். அதன்  விளைவாக எமக்கு பதுளை மாவட்டத்தில் ஒரு மூன்றாண்டு செயற்றிட்டத்தை  மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இன்று பண்டாரவளை மத்தியக் கல்லூரியில்  கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு விசேட பயிற்சி வகுப்புக்களை தகுதியான  ஆசிரியர்களைக் கொண்டு மேற்கொண்டு வருகின்றோம். நாம் இதில் சாதகமான  மாற்றங்களை அவதானிக்கின்றோம். 

இந்த செயற்றிட்டத்தினை “மலையக சமூக அபிவிருத்திப் பேரவை“  என்ற அமைப்பு எனது மேற்பார்வையின் கீழ் அமுல்படுத்தி வருகின்றது. இது  இப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வல்ல. அரசாங்கக் கொள்கையின் ஊடாக  இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். அதன் மூலமாக பெருந்தோட்ட சமூகத்தில்  இருந்து வைத்தியர்கள் பொறியியலாளர்களை உருவாக்க முடியும். 2018ஆம் ஆண்டு  உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி சுமார் 500 மாணவர்களுக்கு  பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளதாக அறிகிறோம். இது கல்வித்  திணைக்களங்களின் மூலம் கிடைத்த தகவலாகும். இது பெரும் சாதனையாகும்.  ஆண்டிற்கு 150 மாணவர்கள் சென்ற சமூகத்தில் இருந்து 500 பேர் செல்வது ஒரு  பாய்ச்சல்தான். ஆயினும், இதில் 300க்கு மேற்பட்ட மாணவர்கள் கலைத்துறைக்கே  செல்வர். சுமார் 150க்கு மேற்பட்டவர்கள் வர்த்தகத்துறைக்கு செல்வர். மிக  குறைந்த மாணவர்களே மருத்துவம் மற்றும் பொறியியல் பீடங்களுக்கு செல்வர்.  இதற்கு அடிப்படைக் காரணம் கணித விஞ்ஞானப் பிரிவுகள் விருத்தி  செய்யப்படாமையேயாகும். இது விடயத்தில் அரசியல் தலைமைகள் உடனடி  அக்கறைக்காட்ட வேண்டும். இந்தப் பிரச்சினையை நான் ஒரு தீவிரமான  பிரச்சினையாகப் பார்க்கிறேன். மலையக மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய மருத்துவ  மற்றும் பொறியியல் படிப்புக்கான இடங்களை வேறு இனத்தவர்கள்  அனுபவிக்கின்றார்கள். இது பெரிதும் வருந்தத்தக்க விடயமாகும்.  இந்தப்பட்டியலில் ஆங்கிலக் கல்வியை விருத்திச் செய்தல், விஞ்ஞான  தொழிநுட்பம், மலையகப் பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக கல்லூரியொன்றை  அமைத்தல் என்பவற்றையும் சேர்த்துக்கொள்ள முடியும். அத்துடன், பெருந்தோட்டக்  கைத்தொழில் பெரும் வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது. அதனை பாதுகாக்க அரசாங்க  மட்டத்தில் வேலைத்திட்டம் ஒன்றும் தேவையாக உள்ளது. 

கேள்வி : மலையக அரசியல் கட்சிகள் தமது வாக்கு வங்கிகளைப்  பாதுகாக்க மட்டுமே செயல்படுவதாகவும் இச்சமூகத்தின் கலை இலக்கிய, சுயதொழில்,  மாற்று சிந்தனை, மூடநம்பிக்கைக்கு எதிரான சிந்தனை போன்ற ஏனைய சமூக  மறுமலர்ச்சி பற்றி எந்தவொரு அக்கறையும் கொள்வதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு  உள்ளது. அச்சமூகத்தை எடுத்துக்கொண்டாலும் கோவில், திருவிழா என்பதோடு  நின்றுவிடுகிறது. இதுபற்றி பேசுவோமா? 

மலையக மக்களின் மாறிவரும் அடையாளம் மற்றும் கலாசார நடைமுறைகள்  குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டியுள்ளது. இந்நாட்டின் பன்மைத்துவக்  கட்டமைப்பில் தனித்துவமான தமிழ் சமூகமாக மலையக மக்கள் வாழ்ந்து  வருகின்றார்கள். இதற்கு இவர்களின் மொழி, அடையாளம், கலாசார நடைமுறைகள்,  வரலாறு என்பன பெரிதும் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆயினும்,  அண்மைக்காலங்களில் இவை மாற்றத்துக்குள்ளாகி வருவதைக் காண முடிகின்றது.  தெற்கில் வாழும் மலையக மக்கள் தமது அடையாளங்களை இழந்து வருகின்றனர்.  இவர்களின் பெயர்கள், கல்விமுறைகள், கற்கும் மொழி, உடை, உணவு, பழக்க  வழங்கங்கள், கலாசாரம் என்பன பெரியளவில் மாறியுள்ளன. இவர்கள் அதிகளவில்  சிங்கள கிராமங்களை அண்டியே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சிதறி,  பாதுகாப்பற்று வாழ்ந்து வருகின்றார்கள். 30 ஆண்டுகால யுத்தமானது இவர்களின்  பாதுகாப்பு, அடையாளம் மற்றும் கலாசாரத்தை நிலைக்குலையச் செய்துள்ளது.  வன்முறை, அச்சம் காரணமாக தமது அடையாளத்தை மாற்றவேண்டிய நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளார்கள். இது பெரிதும் பேசப்படாத, கவனத்தில் எடுக்கப்படாத  விடயமாக காணப்படுகின்றது. இம்மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம்  இன்மையும் இதற்கானதொரு முக்கிய காரணமாகும். இந்நிலை காலி, மாத்தறை,  களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தீவிரமாகவே காணப்படுகின்றது. இம்மக்களின்  அடையாளத்தை கலாசார நடைமுறைகளை பாதுகாக்க மலையக அரசியல் தலைமைகள் ஒரு பொது  வேலைத்திட்டத்தினை அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ள வேண்டும். அன்றில்  மலையக மக்களது இனத்துவ இருப்பில், சனத்தொகையில் இது எதிர்மறையான தாக்கத்தை  ஏற்படுத்தும். இந்நிலை இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை ஆகிய  மாவட்டங்களிலும் காணப்படுகின்றது. 

மலையக மக்கள் வாழும் ஏனைய பிரதேசங்களைப் பொருத்தவரை கலாசார  அடையாளங்கள் மிக வேகமாகவே அழிந்து வருகின்றன. ஒரு சமூகத்தின் இருப்பிற்கு  கலாசார அடையாளங்கள் பெரிதும் அவசியமாகும். இன்று சில பாரம்பரிய  கூத்துக்கள், கலைகள், பண்பாடு என்பன முற்றாக அழிந்துள்ளன. இவை மீள்  உருவாக்கம் செய்யப்பட வேண்டும். இதற்கான வேலைத்திட்டம் ஒன்று அவசியமாகும்.  கோவில் அமைத்தல், திருவிழா என்பவற்றை தாண்டி இம்மக்களின் வரலாற்றை கூறும்  கலாசார அடையாளங்கள் பல உண்டு. அவற்றை ஆவணப்படுத்த வேண்டும், பாதுகாக்க  வேண்டும். அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல ஒரு பொதுவேலைத்திட்டத்தை மலையக  அரசியல் தலைமைகள், சிவில் சமூகம், புத்திஜீவிகள் பொதுமக்களை இணைத்துக்  கொண்டு மேற்கொள்ள வேண்டும். இந்த காரியத்தினை புதிய கிராமங்கள் அபிவிருத்தி  அதிகார சபை மேற்கொள்ள முடியும். 

கேள்வி : முதலாளிமார் சம்மேளனம், பாரம்பரிய 8 மணித்தியால  வேலை, அதற்கான சம்பளம் என்ற முறையில் இருந்து மீண்டு Block System  எனப்படும் நிரை முறைமைக்கு அல்லது வெளிவாரி (Out sourcing) முறைகளுக்குச்  செல்ல வேண்டும் என்று கூறிவருகிறது. மாற்றம் ஒன்று அவசியம் என்று  கருதுகிறீர்களா? அது எவ்வாறானதாக இருக்க வேண்டும்? 

வெளிவாரி உற்பத்தி முறை பெருந்தோட்டங்களின் மிக வேகமாகவே பரவி  வருகின்றது. தொழிலாளர்கள் கம்பனிகளுக்கு வருமானம் ஈட்டித் தரும் நிலையில்  இருந்து விடுப்பட்டு வருமானத்தை பங்கீடு செய்கின்றவர்களாக மாறவேண்டும் என  சில கம்பனிகள் குறிப்பிடுகின்றன. இந்த வெளிவாரி உற்பத்தி முறையில்  காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக பேராசிரியர் எஸ். விஜேசந்திரன் மற்றும்  கலாநிதி ஏ.எஸ் சந்திரபோஸ் என்போர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்கள். இதன்படி,  இதில் சாதகப் பாதக அம்சங்கள் காணப்படுவது அடையாளம் காணப்பட்டுள்ளது.  இம்முறையினை ஒவ்வொரு கம்பனிகளும் வேறுபட்ட வடிவத்தில் நடைமுறைப்  படுத்துகின்றார்கள். உதாரணமாக, சில கம்பனிகள் தோட்டப்  பதிவுப்புத்தகத்தில்இருந்து தொழிலாளர்களின் பெயர்களை நீக்கிவிட்டு  அவர்களுக்கு எந்த ஒரு சட்டபூர்வமான ஒப்பந்தமும் இன்றி காணிகளை தற்காலிகமாக  பிரித்துக்கொடுத்துள்ளார்கள். இது மிகவும் ஆபத்தான முறை. இங்கு  தொழிலாளர்களின் உரிமை, சேமநலன் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சில  கம்பனிகள் வழமையான தோட்ட வேலைக்கு அப்பால் வருமானம் ஈட்டுவதற்காக காணிகளைப்  பிரித்து வழங்கியுள்ளார்கள்.

அருள் சத்தியநாதன்

Comments