மிக நுட்பமாக ஒடுக்கப்படும் சிறுபான்மைக் கட்சிகள் | தினகரன் வாரமஞ்சரி

மிக நுட்பமாக ஒடுக்கப்படும் சிறுபான்மைக் கட்சிகள்

இலங்கையில் முன்னெப்போதுமில்லாத அளவுக்குச் சிக்கலடைந்திருக்கிறது சிறுபான்மையினச் சமூகங்களின் இருப்பும் அவற்றின் அரசியலும். 

தமது நிகழ்கால, எதிர்கால அரசியலை எப்படித் தீர்மானிப்பது, எப்படி மேற்கொள்வது என்று தெரியாத அவல நிலைக்குள்ளாகியுள்ளன தமிழ், முஸ்லிம் சமூகங்கள். இதற்கு இந்தச் சமூகங்களின் இன்றைய நிலை ஒன்றே போதும் சான்றாக. இதை மறுக்க முயற்சிப்போருக்கு எளிமையான சில உதாரணங்களைச் சொல்லலாம். 

ஒன்று, இந்த அரசாங்கத்தை ஆதரித்ததன் மூலம் இந்தச் சமூகங்களின் அரசியல் தலைமைகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது மக்களிடம் கடுமையான அதிருப்தியைச் சந்தித்திருக்கின்றன. இதற்குக் காரணம், ஏராளம் வாக்குறுதிகளையும் நம்பிக்கையையும் அளித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. இந்த நிலையிலும் எந்தக் கேள்விகளுமில்லாமல், எத்தகைய அழுத்தத்தையும் கொடுக்காமல் அரசாங்கத்தைக் கண்மூடித்தனமாக இவை ஆதரிக்கின்றன என்பதேயாகும். 

மேலும் விளக்கமாகக் கூறுவதானால், 2015 இல் கொண்டு வரப்பட்ட “நல்லாட்சி” அரசாங்கத்தின் மூலம் நிகழ்காலத்திலும் சரி, எதிர்காலத்துக்காயினும் சரி தமிழ், முஸ்லிம் மக்கள் பெற்றுக்கொண்ட நன்மைகள் என்ன? ஏற்றுக்கொள்ளப்பட்டவாறு அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதா? இனப்பிரச்சினைக்கான தீர்வைக்குறித்துப் பேசப்பட்டுள்ளதா? போரினால் பாதிக்கப்பட்டோருக்கான முறையான இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளவா? குறிப்பாக உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கான இழப்பீடுகள் கொடுக்கப்பட்டுள்ளனவா? அதைப்போல காணாமலாக்கப்பட்டோரின் விவாரத்துக்குத் தீர்வைக்காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா? நில விடுவிப்புச் செய்யப்பட்டதா? குறிப்பிட்டளவு நிலங்கள் விடுவிக்கப்பட்டனவே என்று யாராவது சப்பை நியாயங்களைச் சொல்ல முற்படலாம். அவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்தலாம். கேப்பாப்பிலவிலும் இரணைதீவிலும் வலிவடக்கிலும் மக்கள் போராடித்தான் தங்களுடைய நிலங்களை மீட்டனரே அன்றி அரசாங்கம் விடுவித்ததாக இல்லை. மற்றும்படி இவ்வாறான நில விடுவிப்புக்கள் கட்டம் கட்டமாக ராஜபக்ஸக்களின் காலத்திலும் இழுபறிகளோடு நடந்தது. தவிர, அரசியல் கைதிகள் என்ற சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களின் விடுதலைக்குப் பதிலென்ன? முஸ்லிம்களின் மீதான சிங்களத் தரப்பின் அச்சுறுத்தலும் எதிர்ப்புணர்வும் தணிக்கப்பட்டதா? இப்படியே பலவற்றையும் சொல்லிக்கொண்டு போகலாம். 

இதேவேளை மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்துக்கு நிகரான அல்லது அதையும் விடக் கூடுதலான நெருக்கடியை முஸ்லிம்கள் இன்று சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். தனியே ஒரு சஹ்ரானின் தாக்குதலால் மட்டும்தான் முஸ்லிம்களின் நிலை நெருக்கடிக்குள்ளாகியதென்றில்லை. நல்லாட்சியின்போதும் இந்த நெருக்கடிகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. சஹ்ரானின் தாக்குதல்கள் இதை மேலும் உச்சத்துக்குக் கொண்டு போயுள்ளன. முஸ்லிம் சமூகத்தின் மீதான நெருக்கடிக்கு அரசியல் நியாயம் கற்பிப்பதற்கு இந்தத் தாக்குதல் (சஹ்ரான் வாய்ப்பளித்திருக்கிறார்) வாய்ப்பளித்துள்ளது. அவ்வளவுதான். 

ஆகவே பொதுவாக நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கும்போது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு, அவர்களுடைய பிரச்சினைகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் ஆட்சியின் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இந்தக் கேள்விகளை எழுப்பியே தீர வேண்டும். இவற்றுக்குரிய பதிலைக் கண்டே தீர வேண்டும். இந்தக் கேள்விகள்தான் அடுத்த கட்டத்தில் நாம் எத்தகைய தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்ற புரிதலையும் தெளிவையும் தரும். 

யுத்தம் முடிந்து பத்தாண்டுகள் நிறைவடைந்த நிலையில் மக்களின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த தற்போதைய ஆட்சி. பாதுகாப்பு நெருக்கடிகளும் அவசரகாலச் சட்டமும் தலைக்குமேலே சுமத்தப்பட்டுள்ளன. இந்த நிலையிலும் அரசாங்கத்தை எதிர்க்கவும் முடியாமல் அதனுள்ளிருக்கவும் முடியாதவாறு தத்தளித்துக் கொண்டிருக்கின்றன தமிழ், முஸ்லிம் தலைமைகள். இதே வேளை அரசாங்கத்திற்குள்ளிருக்க முடியாததைப்போலவே, மக்களிடமும் நெருங்க முடியாதிருக்கின்றன இவை. 

இன்னொரு உதாரணம், அடுத்து வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை அல்லது எந்தத் தரப்பை ஆதரிப்பது என முடிவெடுக்க முடியாத நிலைக்குள்ளாகியுள்ளன இந்தத் தரப்புகள். எந்தக் காரணத்தை, எவ்வாறான நியாயத்தைச் சொல்லி மக்களிடம் ஆதரவைக் கோருவது என்று தெரியாததொரு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது இவற்றுக்கு. மக்களுக்கும் இந்தக் குழப்பமுண்டு. 

ஆகவே இதெல்லாம் மிகப் பலவீனமான நிலையிலேயே தமிழ் முஸ்லிம் மக்களும் அவற்றின் தலைமைகளும் இருப்பதைக் காட்டுகின்றன. அந்தளவுக்கு சிறுபான்மையினச் சமூகங்களை அல்லது சிறுபான்மைத் தேசிய இனங்களை மிக நுட்பமாக ஒடுக்கக் கற்றுக்கொண்டுள்ளது சிங்களப் பௌத்தப் பெருந்தேசியவாதம். 

முஸ்லிம்களின் அரசியலும் முஸ்லிம்களும் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அரசாங்கத்தினாலும் சிங்கள பௌத்த பேரினவாதத்தினாலும் “அணைத்துக் கெடுத்தல்” என்ற அணுகுமுறை மூலம் ஒடுக்குதலுக்குள்ளாகியுள்ளதைக் காண்கிறோம். 

அரசாங்கத்துடன் சேர்ந்திருக்கவும் முடியாமல், அரசாங்கத்தை எதிர்க்கவும் முடியாத பெரும் பொறிக்குள் சிக்கியுள்ளனர் முஸ்லிம் அரசியல் தரப்பினர். ஆட்சியதிகாரத்தில் பங்கேற்கக் கூடிய அமைச்சுப் பதவிகளை இழந்த பிறகும் அரசாங்கத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று தீர்மானமெடுக்க முடியாத நிலையிலேயே உள்ளன முஸ்லிம் தலைமைகள். இப்படியொரு நுட்பமான பொறியை வைத்திருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க. 

இதற்கெல்லாம் ராஜபக்ஸக்களின் கடின அரசியல் ஒரு காரணமாக இருப்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. ராஜபக்ஸக்களின் தரப்பில் நியாயமான அடிப்படைகள் இருந்திருக்குமானால், (சிங்கள இனவாதத்திலேயே முழுமையாகத் தன்னைக்கட்டமைத்திருக்கிறது பொதுஜன பெரமுன) உத்தரவாதமிருந்திருந்தால் முஸ்லிம்களின் நிலைப்பாடுகளில் மாற்றம் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு. 

எனவே தாம் சார்ந்த சமூகத்தின் நெருக்கடியை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாத இக்கட்டான நிலை உருவாகியிருக்கிறது முஸ்லிம் தலைமைகளுக்கு. யுத்த காலத்தில் கூட இப்படியொரு நிலையை முஸ்லிம்கள் எதிர்கொண்டதில்லை. 

இதே அணைத்துக் கெடுத்தல் அரசியலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் சிக்கியிருக்கிறது. கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சிப் பொறுப்புகளை – அமைச்சுப் பொறுப்புகளை ஏற்காது விட்டாலும் அரசாங்கத்துக்கு முழுமையான ஆதரவை அளித்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அரசாங்கத்தை ஆதரிக்கும் அளவுக்கு, அரசாங்கத்துக்கு நெருக்கடிகள் வந்த போதெல்லாம் அதை முறியடிப்பதற்கு முன்னின்ற அளவுக்கு கூட்டமைப்புக்கு உதவ அரசாங்கம் முன்வரவில்லை. 

எனவே முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இது மோசமான காலமாகும். வழங்கப்பட்ட பேராதரவுக்கும் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட கடிமான பணிகளுக்கும் பதிலாக – நன்றிக்கடனாகக் கூட எதையும் செய்வதற்கு இந்த அரசாங்கம் முன்வரவில்லை. பதிலாக சிறுபான்மைத் தேசிய இனங்களை மிக நுட்பமாக ஒடுக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறது. 

இதனால் இன்றைய அரசியல் அரங்கிலே உள்ள முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆகியவை கடந்த காலத்தில் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளும் அவற்றின் உபாயங்களும் இன்று கையறு நிலைக்குக் காரணமாகியுள்ளன. ஆனால், இதை விட இவற்றினால் வேறு எவ்வாறான அரசியலை மேற்கொண்டிருக்க முடியும் என்று கேட்போரும் உண்டு. 

அவர்களுடைய வாதம், பேரினவாதத்தின் உச்ச ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்ற வேளை நாட்டின் அதிகார மேலெழுகையைக் கட்டுப்படுத்தி, ஜனநாயக மீளெழுச்சியை வலுப்படுத்தும் பணியை இந்தத் தரப்புகள் மிகச் சிறப்பாகச் செய்துள்ளன. சர்வதேசத்தின் இன்றைய மதிப்பும் இவற்றுக்கு இதனால்தான் கிடைத்துள்ளது என்பதாக உள்ளது. “எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அரசாங்கத்தை ஆதரித்ததால்தான் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சிமுறையைப் பலவீனப்படுத்த முடிந்தது. பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தைக் கூட்டக் கூடியதாக இருந்தது. நீதிச் சேவையைச் சுயாதீனப்படுத்துவதற்கு இயலுமாக இருந்தது. தேர்தல்களுக்கான ஆணைக்குழுவை நியமிக்க முடிந்தது. ஜனநாயகத்தை வலுப்படுத்தக் கூடியதாக இருந்தது. முக்கியமாக ராஜபக்ஸக்களின் குடும்ப ஆட்சிக்கும் அதிகார வெறிக்கும் ஊழலுக்கும் முடிவுரை எழுத முடிந்தது” என்றவாறாகத் தமது நியாயமாக முன்வைக்கக் கூடும். இதில் உண்மையுண்டு. 

ஆனால், இதெல்லாம் ஆட்சியாளர்களின் நலனுக்கும் பாதுகாப்புக்குமாக வரையறுக்கப்பட்டிருக்கிறதே தவிர, மக்களுக்கானதாக ஜனநாயகமயப்படுத்தப்படவில்லை. இதற்கும் எளிய உதாரணங்கள் இரண்டைக்கூற முடியும். நீதிச்சேவை சுயாதீனமாக்கப்பட்டிருக்கிறது என்றால் யுத்தக்குற்றங்களைப் பற்றியும் அரசியல் கைதிகள் என்ற சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களின் விடுதலையைப்பற்றியும் நீதிச்சேவை உரிய நடவடிக்கை எடுக்க முடியாதிருப்பது ஏன்? இதைப்போல மாகாணசபைகளுக்கான தேர்தற் காலம் வந்துள்ளபோதும் தேர்தலை நடத்தால் தேர்தல்கள் ஆணைக்குழு இழுபறிப்பட்டுக்கொண்டிருப்பது எதற்காக? ஆனால், ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க முற்பட்டபோதும் பிரதமரின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தபோதும் நீதிச் சேவை மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறது. ஆக மக்களுடைய பிரச்சினைகளுக்கானதல்ல இதெல்லாம் என்பது தெளிவாகிறதல்லவா! 

எனவேதான் “அபாயகரமான ராஜபக்ஸக்களின் மீள் வருகை” என்ற பூச்சாண்டியைக் காட்டி எல்லாத் தவறுகளையும் பிழைகளையும் மறைத்து விடவோ சரிப்படுத்தி விடவோ முடியாது என்று சொல்ல வேண்டியுள்ளது. மக்கள் அதையெல்லாம் பொருட்படுத்துவதற்கும் ஏற்பதற்கும் தயாரில்லை என்பதே சனங்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளும் வெளிப்படுத்தப்படும் அதிருப்திகளுமாகும். மக்களுக்கும் யதார்த்தம் என்ன என்று தெரியும். உண்மை என்ன என்று புரியும். அரசியல் போக்குகளைப் பற்றி விளங்கும். ஆகவேதான் அவர்கள் தங்களின் எதிர்ப்பை அங்கங்கே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

இதேவேளை இந்தச் சர்வதேச மதிப்பீடும் மதிப்பளித்தலும் அவற்றின் நலன் நோக்கிலானது என்பதை யாருக்கும் விளக்க வேண்டியதில்லை. இன்று இலங்கையில் அதிகரித்திருக்கும் சர்வதேசத் தலையீடுகள் அத்தனையும் அனைவரும் அறிந்ததே. ஆகவே அவை அந்த அடிப்படையில்தான் – தமக்கிசைவான வகையில் இந்த மதிப்பிடலைச் செய்கின்றன.  

நாம் நோக்க வேண்டியது, சிறுபான்மைத் தேசிய இனங்களின் பாதுகாப்பும் நலனும் எதிர்காலமும் எந்தளவுக்கு முன்னேற்றமாக உள்ளன என்பதையே. இதற்கு இந்தத் தலைமைகள் என்ன செய்திருக்கின்றன? என்பதையும். இந்தத் தலைமைகளைக் கடந்து புதிய நற்சக்திகள் இந்தச் சமூகத்தில் உள்ளனவா? எனவும். புதிய நற்சக்திகள் உயிர்ப்புடன் உள்ளனவா என்றால் நிச்சயமாக உண்டு. ஆனால் அவ்வாறான சக்திகளை அடையாளம் கண்டு, ஒரு மாற்றாக அவற்றை வளர்த்தெடுப்பதற்கு இந்தச் சமூகங்கள் முன்வரவில்லை என்பது பெரும் சோகமே. இதனால் உடனடியாக புதிய – மாற்றுச் சக்திகள் வலுவானதாக இல்லாமலுள்ளன. புலிகள் தோற்கடிக்கப்பட்டபோது எவ்வாறு தமிழ்ச்சமூகத்தின் அரசியல் நெருக்கடிக்குள்ளாகியதோ அதை ஒத்த நிலையே இப்போது தமிழ், முஸ்லிம் சமூகங்களிடம் உள்ளது. இதற்கு பெரிய அரசியற் அரசியற் சக்திகள் மட்டும் காரணமல்ல, ஊடகங்களும் அரசியல் அபிப்பிராய உருவாக்கிகளும் கூடக் காரணமே. இவையெல்லாம் இணைந்தே இன்று இந்தச் சமூகங்களை நிர்க்கதிக்குள்ளாக்கியுள்ளன. 

இதைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர் ஒருவர் சொன்னார், “சனங்கள் இப்ப இப்படிக் கொந்தளித்துக் கொண்டிருக்கலாம். தேர்தல் எண்டு வந்தால் அவர்கள் எங்கள் காலடியில்தான் வந்து நிற்பார்கள்” என்று. 

அவர் அப்படித் துணிச்சலாகச் சொல்வதற்குக் காரணமுண்டு. தமக்கு - தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு - மாற்றான அல்லது அதற்குச் சவாலான மறு தரப்பு இன்னும் வலுவானதாக உருவாகவில்லை என்ற நம்பிக்கையே ஆகும். இதையே ஊடகங்களும் குறிப்பிட்டு வருகின்றன. கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றுக்கும் சவாலாக மாற்று அரசியல் சக்திகள் வலுவானதாக உருவாகவில்லை என.  தமக்குச் சவாலான அல்லது மாற்றான தரப்புகள் உருவாகவில்லை என்பதற்காகத் தாம் பலமாக இருப்பதாக தமிழ் முஸ்லிம் தலைமைகள் கருதுவது பொருத்தமானதாக இல்லை. சமூகம் பலவீனப்பட்டிருக்கும்போது அவற்றின் தலைமைகள் எப்படிப் பலமாக இருக்க முடியும்? அப்படியிருந்தால் அது அந்தச் சமூகத்துக்கு எதிரான ஒன்றாகவே இருக்க முடியும். அதாவது அந்தச் சமூகத்தை விற்றுப் பிழைப்பதாக. 

கருணாகரன்

Comments