வரலாற்று தவறை தமிழரசுக்கட்சி இழைக்கவில்லை | தினகரன் வாரமஞ்சரி

வரலாற்று தவறை தமிழரசுக்கட்சி இழைக்கவில்லை

தமிழரசுக் கட்சி மட்டும் அல்ல, அனைவரையும் அழைத்து தேசிய பேரவை  அமைத்து  அடுத்த கட்ட நடவடிக்கைகளை  முன்னெடுக்கவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் 16ஆவது மாநாட்டில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது.  ஆனால் அதுவொரு அறிவித்தல் மட்டுமே அதற்கு  வடிவம் கொடுக்க வேண்டும்  என்கிறார் தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினருமான  மாவை சேனாதிராசா.

எல்​லோரும்  ஒன்றிணைந்தால் அதற்கு ஒரு புதிய வடிவம்  கிடைக்கும் என்றும் அவர் தினகரன் வாரமஞ்சரிக்கான நேர்காணலில் நம்பிக்கை தெரிவித்தார். 

நேர்காணல் வருமாறு.....

கேள்வி: ஐனாதிபதியும் அரசாங்கமும் தவறுவிடுவதாக அல்லது ஏமாற்றுவதாக கூட்டமைப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் ஐனாதிபதி மீதே அதிகமான குற்றச்சாட்டுக்களை நீங்கள் சுமத்துவதாகச் சொல்லப்படுவதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?  

பதில்: -  இந்த நாட்டினுடைய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமென்பது எங்களது முக்கியமான நோக்கமாக இருந்தது. 2015 ஐனாதிபதித் தேர்தலில் சிறிசேனவை நாங்கள் ஆதரித்தோம். அதே போல பொதுத் தேர்தலின் பின்னர் வந்த புதிய அரசையும் ஆதரித்து இணங்கிச் செயற்பட்டோம்.  

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், இந்த நாட்டிலே தேர்தல் நடைமுறைகளை மாற்றியமைப்பதற்கும் என பல கோரிக்கைகளின் அடிப்படையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது அதற்கு தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் என அனைவரும்  முழு ஆதரவையும் வழங்கினோம். அதனூடாக மைத்திரி வெற்றி பெற்றார். அதன் பின்னர் ஐனாதிபதி தலைமையில் இருந்த சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும்  இணைந்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி புதிய ஆட்சியை அமைத்தனர்.  

அதன் அடிப்படையில் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வேண்டுமென்பது மிக முக்கியமானதாக  கூட்டமைப்பு கருதியது. அரசியல் தீர்வை காண புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையையும் முன்வைக்கப்பட்டது.

ஆனால் 2018 ஆம் ஆண்டு செப்டம்பருக்கு பின்னர் ஐனாதிபதியின் நடவடிக்கைகள் நாங்கள் கொண்ட நம்பிக்கைகள் எல்லாவற்றுக்கும் விரோதமாகவே அமைந்தன. முதலாவதாக ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டார். அதனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லாமல் போனது. அதைச் சிதைத்தவர் மைத்திரிபால சிறிசேனதான். அதனால் பெரும்பான்மையை இழந்தோம். அது தான் ஐனாதிபதி செய்த தவறானதும் நம்பிக்கைக்கு விரோதமானதுமான செயற்பாடாகும்.  

இரண்டாவதாக, நாட்டின் அரசியலமைப்பு உருவாக்கம், நிலம் விடுவிப்பு, கைதிகள் விடுவிப்பு, காணாமல் போனோர் விடயம் உட்பட பல விடயங்களில் ஐனாதிபதி மற்றும் பிரதமருடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதனடிப்படையில் உடன்பாடுகளும் எங்களுக்குள் இருந்தன. ஆனால் எங்களோடு எந்தவகையான பேச்சும் இல்லாமல் திடீரென பிரதமர் ரணிலை நீக்கி மகிந்தவை பிரதமராக்கினார். அதன் பின்னர் ஐனாதிபதி பாராளுமன்றத்தையும் கலைத்தார்.  

இவ்வாறு ஐனாதிபதி செயற்பட்டதால் புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் செயற்பாடுகளும் தடைப்பட்டிருக்கின்றன. மேலும் ஐனாதிபதி மைத்திரியின் நடவடிக்கைகள் மூலம் இனப்பிரச்சினைத் தீர்விற்கான  விடயங்கள் கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டன. இதை மாற்றி அமைக்கும் அதிகாரம் வேறு யாருக்கும் இல்லை. இந்த விடயங்கள் கேள்விக்குறியாக்கப்பட்டதற்கு முழுக்க முழுக்க ஐனாதிபதி தான் காரணம். ஆக அரசியல் தவறை அல்லது அரசியல் குற்றத்தை ஐனாதிபதி இழைத்துள்ளார். இதனால் தமிழ்த் தேசம் தான் தமிழ் மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த உண்மைகளையே நாங்கள் சொல்கிறோம்.  

கேள்வி: - இவ்வாறான நிலைமைகளில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டுமென கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கின்றதே?  

பதில்: - அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் இங்கு வந்த இந்தியப் பிரதமர் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டதுடன் தாம் உதவி செய்வதாகவும் கூறியிருந்தார். ஆகவே இலங்கைத் தாக்குதல் இந்தியாவிற்கும் சவால் என்ற நிலையில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களாக பூகோள ரீதியாக உள்ளன.  

ஆகவே வடக்கு கிழக்கின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி இங்குள்ள மக்களையும் பாதுகாப்பது தான் இந்தியாவுக்கும் பாதுகாப்பு. அதற்கு இங்குள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியது மிக அவசியம். ஆகையினால் தான் இந்தியா உதவ வேண்டுமென்று தொடர்ந்தும் பல காரணங்களுக்காக கோரி வருகின்றோம். அவ்வாறு இந்தியா எங்களுக்கு உதவுவதுடன் இராஐதந்திர ரீதியாக சர்வதேச ஆதரவையும் இந்தியா எங்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்.  

கேள்வி: ஐனாதிபதியையும், அரசாங்கத்தையும் அண்மைக்காலமாக விமர்சித்து வருவதானது தேர்தல்களை நோக்காகக் கொண்டே என உங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றனவே?  

பதில்: - தேர்தலுக்கு முன்னரே நாம் இந்தக் குற்றச்சாட்டுக்களை உண்மையினடிப்படையில் முன்வைத்திருக்கின்றோம். இருந்தும் எந்தத் தேர்தல் வரப் போகின்றது என்று எங்களுக்குத் தெரியாது. முக்கியமாக ஐனாதிபதித் தேர்தல் வரலாம் எனக் கருதுகின்றோம். அந்தத் தேர்தலை அறிவித்த பின்னர் நாங்கள் யாருக்கும் ஆதரவளிப்பதா இல்லையா என்று அல்லது அந்தத் தேர்தலில் எப்படி நடந்து கொள்வதென்றும் தீர்மானிப்போம்.  

அது மாத்திரமல்லாமல் இப்போது நாங்கள் முன்வைத்து வருகின்ற இந்தக் குற்றச்சாட்டுக்களுடன் இன்னும் பாரதூரமான குற்றச்சாட்டுக்களையும் முன்வைப்பதற்கு ஆயத்தமாக உள்ளோம். அவ்வாறு தேர்தல் வந்தால் மக்கள் மத்தியிலும் சர்வதேசத்தின் முன்னிலையிலும் இவற்றை நாங்கள் வெளிப்படுத்துவோம். மேலும் வேட்பாளர்களாக நிற்பவர்கள் தங்களுக்கு எங்கள் ஆதரவைக் கோரினால் அந்தச் சந்தர்ப்பத்தில் அதற்குப் பதிலளிக்க ஆயத்தமாக உள்ளோம். அத்தோடு அந்த நேர கால சூழ்நிலையைப் பொறுத்தது அவர்களுடன் பேசுவதா இல்லையா என்பதையும் யாருக்கும் ஆதரவு என்பதையும் தீர்மானித்துக் கொள்ளுவோம்.  

கேள்வி: - கூட்டமைப்பின் மீது பலரும் பல்வேறு விதமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். எதனடிப்படையில் அந்தக் குற்றச்சாட்டக்கள் முன்வைக்கப்படுவதாக நீங்கள் கருதுகின்றீர்கள்?  

பதில்: - அவர்களுடைய அரசியல் எதிர்காலத்திற்காக எங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அதற்காக அதிகமான பொய்களைச் சொல்லி அதை ஆதாரப்படுத்தி தேர்தலில் வாக்குகளைப் பெற்று விடலாமென்று நினைக்கின்றார்கள். ஆனாலும் அவர்களது அந்த முயற்சி வெற்றி பெறாதென்று நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் நாங்கள் உண்மையைப் பேசுகின்றோம்

நாங்கள் அரசியல் தீர்வைக் காணவில்லை, கைதிகளை விடுவிக்கவில்லை. நிலங்களை விடுவிக்கவில்லை என்று சொன்னால் எந்தவொரு கட்சி அவ்வாறு எங்கள் மீது குற்றம் சுமத்துகின்றதோ அது அதில் ஏதாவது ஒன்றை நிகழ்த்தியிருக்க வேண்டும். அல்லது தேர்தல்களில் வந்து தாம் நிறைவேற்றுவோம் என்று சொல்கின்ற நிலைமையையும் காணவில்லை. அப்படி அவர்களுக்கு அந்த வாய்ப்புக்கள் சந்தர்ப்பங்கள் வருமென்றும் எதிர்பார்க்கவில்லை.  

ஆனால் அவர்கள் வெறுமனே தேர்தலுக்காக புதிய புதிய கட்சிகளை ஆரம்பித்து ஒவ்வொரு குற்றங்களையும் முன்வைக்கின்றார்கள். உதாரணமாக மாகாண சபைக் காலத்தில் கூட அதில் முதலமைச்சராக  நீதியரசர் இருந்தார்.  இப்போது அவர் ஒரு புதிய கட்சிக்கு சென்றிருக்கின்றார். அவர் எவ்வாறு இனப் பிரச்சினையைத்  தீர்ப்பார் என்று சொல்ல முடிந்தாலாவது பிரயோசனமாக இருக்கும். அவர் தான் முதலமைச்சராக இருந்த காலத்திலோ அல்லது அவர் ஒரு நீதியரசர் என்ற இலட்சணத்திலோ இந்த ஐந்து வருட காலத்தில் அல்லது இப்பொழுது அல்லது எதிர்காலத்தில் எப்படி அதனை நிறைவேற்றப் போகின்றார் என்பதற்கு எந்தவிதமான அடிப்படையையும் அவர் கூறவில்லை.  

ஆக எங்கள் மீது வெறுமனே விமர்சனம் மட்டும் செய்து கொண்டிருக்கின்றார். ஆனால் அந்த விமர்சனம் கூட உண்மையில்லை. அவ்வாறு உண்மைக்கு மாறாகவே பல விமர்சனங்களைச் செய்து கொண்டிருக்கின்றார். நாங்கள் அவற்றுக்கு முழுமையாகன பதில்களைச் சொல்லியிருக்கின்றோம். அவருடைய விமர்சனங்களுக்கு உரிய வேளையில் நிச்சயமாக நாங்கள் பதிலளிப்போம். மக்கள் நம்பவில்லையானால், எங்களுக்கு எதிராக மக்கள் தீர்ப்பு வழங்க வேண்டுமானால், அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட முடியாது. ஐனநாயகத்தில் எதுவும் நடக்கலாம்.  

கேள்வி: - கூட்டமைப்பின் முதலமைச்சராக இருந்து தற்போது புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ள விக்கினேஸ்வரன் புதியதோர் கூட்டு ஒன்றை உருவாக்க போவதாகவும் கூட்டமைப்பு தவறான பாதையில் செல்வதாகவும் பலவிதமான குற்றச்சாட்டுக்களை உங்கள் மீது முன்வைத்து வருகின்றாரே?  

பதில்: - கூட்டமைப்பை மற்றவர்கள் விமர்சிப்பதை விடவும் அவர் அதிகமாக விமர்சிக்கின்றார். கதை எழுதுகின்றார். அவ்வாறு அவர் சொல்கின்ற பல விடயங்கள் உண்மைக்கு மாறானவை. அவர் ஏதோ இப்போது தான் தான் தமிழர்களின் வரலாற்றைக் கண்டுபிடித்தவர் போல பலவித புதுப் புது கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார். ஆதனால் தான் நாங்கள் எங்களுடைய மாநாட்டில் வெளியிடப்பட்ட பத்திரிகையில் தந்தை செல்வா 49 ஆம் ஆண்டில் என்ன பேசியிருக்கின்றார் என்பதையும் எப்படி இனப்பிரச்சினைக்கான தீர்வைக்காணலாமென்று முயற்சித்திருக்கின்றார் என்பதைப் பற்றியும், அவருடைய அரசியல் அனுபவங்களைப் பார்த்து தான் எங்கள் கட்சிக்கு பெரும்பான்மையாக மக்கள் வாக்களிக்கின்றார்கள் என்பதைப் பற்றியெல்லாம் சொல்லியுள்ளோம்.  

விக்கினேஸ்வரன் முதலமைச்சராக இருந்தும் எமக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். ஆனால் மக்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை.

ஆனபடியால் விமர்சனங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆக்கபூர்வமானதாக இருந்தால் அதனை ஏற்று நாங்கள் வேலை செய்வோம். இப்பொழுது இலங்கை அரசியலில் ஏற்பட்ட குழப்பத்தால்  ஐனாதிபதி மீதும் அரசின் மீதும் நம்பிக்ைக இழந்திருக்கிறோம். இந்த நேரத்தில் நாங்கள் அடுத்த ஒரு கட்டத்தை நோக்கிச் செல்வதற்கான அழைப்பை எமது கட்சியின் தேசிய மாநாட்டில் விடுத்திருக்கின்றோம்.  

அதாவது நாங்கள் சகலருமாக இணைந்து பொதுவான வேலைத்திட்டத்தில் எங்கள் இனத்தின் விடுதலையை நோக்கமாகக் கொண்டு இணங்கி வேலை செய்ய நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். ஏனெனில்  பலர் ஏற்கனவே எங்களிடம் இருந்து விலகிச் சென்றிருக்கின்றார்கள். அவர்களுடைய விமர்சனங்களின் அடிப்படையில் ஒன்றுபட்டு ஒரு பொது வேலைத் திட்டத்தினடிப்படையில் செயற்பட ஆர்வமாக இருக்கிறோம். அதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.  

கேள்வி: - கூட்டமைப்பின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்படுவது தாக்கத்தை ஏற்படுத்துமெனக் கூறியிருக்கின்றீர்கள். இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றீர்கள்?

பதில்: - தேர்தலின் போது பார்க்க வேண்டிய விடயம். நாங்கள் வீழ்ச்சி கண்டுவிட்டோம் என்று சொல்ல முடியாது. நடைமுறையில் நாங்கள் தென்னிலங்கை தலைமைகளால் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் எனக் கூறலாமே தவிர நாங்கள் மிக உறுதியோடு இருக்கின்றோம். எங்கள் மக்களுக்கு மாற்றுத் திட்டங்களைத் தயாரித்து உலக சந்தர்ப்பங்களோடு கொண்டு சென்று சர்வதேசத்தில் இருக்கின்ற பல நாடுகளுக்கும் புலம் பெயர் மக்கள் மத்தியிலும் ஒன்றுபட்டு .செயற்படவுள்ளோம்.  

குறிப்பாக புலம் பெயர் மக்களில் கூட அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ஆரம்பத்தில் ஒரு இயக்கமாக அமைப்பாக இருந்தவர்கள் கூட இன்றைக்கு பிளவுபட்டு பலதாக இருக்கின்றனர். ஆக நீங்கள் இங்கே ஒற்றுமையாக இருப்பீர்களானால் இலங்கையிலும் அந்த ஒற்றுமைய வருமென்று நாங்கள் அவர்களுக்கு சொல்லியிருக்கிறோம். இல்லையேல் தொடர்ந்தும் பிளவுகள் ஏற்படுமென்றும் சொல்லியிருந்தோம். அதன் பின்னணியை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அது தான் பல கட்சிகளை இன்றைக்கு உருவாகின்றன.  

அடுத்தது முழுமையான அரசியல் தீர்வையோ அல்லது அவர்களது பிரச்சனைகளுக்கான தீர்வையோ நாங்கள் கண்டு விட்டோம் என்று நாங்கள் பேரம் பேசவில்லை. அதை நாங்கள் உணர்ந்து தான் செயற்படுகின்றோம்.

கேள்வி: கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கின்ற கட்சிகளை இணைத்துக் கொண்டு பயணிக்க தயாராக இருக்கிறீர்களா?  

பதில்: - ஆம். அவர்கள் எங்களை விமர்சிப்பதைப் பற்றி நாங்கள் கவலை கொள்ளவில்லை. ஏனென்றால் அவற்றில் சில உண்மைகளும் இருக்கலாம். அதே நேரம் பல உண்மைக்கு மாறானதாகவும் இருக்கலாம். ஆனால் இன்றைக்கு அடைந்திருக்கும் நிலைமையில் தந்தை செல்வா காலத்திலேயே பல கட்சிகள் இருந்தன.

ஆனாலும் வருங்காலத் தேர்தல்களில் மிக மோசமான அடக்குமுறை எங்களுக்கு எதிராக பாவிக்கப்படலாம். விடுவிக்கப்பட்ட நிலங்களைக் கூட மீண்டும் கைப்பற்றக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். அரசியல் தீர்விற்கு பெரும் சவால்கள் ஏற்படலாம்.  

ஆக இப்பொழுதும் சவால்கள் இருக்கின்றன. ஆனால் அது இன்னும் அதிகமாக ஏற்படலாம். அந்த நிலைமையை எதிர்நோக்கித் தான் இந்த அரசியல் போக்கிலிருந்து எங்களுடைய எதிர்கால நடவடிக்கைகயும் அடுத்த கட்ட நடவடிக்கையையும் தீர்மானிக்க வேண்டுமென்பதற்காக எல்லாரையும் அணிதிரட்ட நாங்கள் விரும்புகிறோம். அது தான் அரசியல் தலைமையினுடைய கடமையாகவும் இருக்கும். அதையே நாங்கள் செய்யவுள்ளோம்.

கேள்வி: எல்லாரையும் ஒன்றாக அணிதிரட்டுவதென்ற உங்களது நிலைப்பாடு சாத்தியமாகுமா?  

பதில்: - சாத்தியமாகக்கூடும். அது தான் தமிழ் மக்களின் வெற்றியாக இருக்கும். தேசத்திற்காக விசுவாசம் இருந்தால் பொது வேலைத்திட்டத்தில் எல்லாரும் ஒன்றுபட்டு வேலை செய்ய வேண்டுமாக இருந்தால் அதை நாங்கள் ஏற்போம். அதைவிடுத்து மேலும் எங்களைப் பலவீனப்படுத்துபவர்களாக இருந்தால் அவர்களை மக்கள் நிச்சயமாக புறகக்கணிப்பார்கள். தேர்தல்கள் மட்டும் எங்கள் பலத்தை தீர்மானிக்க முடியாது.   

பிரபாகரன் தேர்தல்களில் ஈடுபட்டு வெற்றிபெற்று பலத்தைப் பெறவில்லை. அவர் 2003 ஆம் ஆண்டு நாங்கள் தேர்தலில் பெருமளவு வெற்றி பெற்றிருந்த அந்தக் காலத்தில் விடுதலைப் புலிகள் உச்சமான ஆயுதப்பலத்தோடு இருந்தார்கள். அந்த நேரத்தில் உலக சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நோர்வே நாட்டின் அனுசரணையுட்ன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி ஒஸ்லோவில் அதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நேரத்தில் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு போக வேண்டுமென எதிர்பார்க்கவில்லை. புலிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தைக்கு சென்று பேசுமாறு நாங்கள் அரசிற்கு அறிவித்திருந்தோம். அதன்படி தான் நாங்கள் நடந்தோம். ஆக வரலாற்றுத் தவறை நாங்கள் இழைக்கவில்லை.  

இப்பொழுது நிலைமைகளைப் பார்த்தால் அன்றைக்கு அவ்வாறு அறிவித்த பொழுது உச்சமான பலம் இருந்ததனை நாங்கள் எடுத்துக் காட்டியதுடன் அதற்கு உதவியாகவும் இருந்திருக்கிறோம். இப்பொழுது அந்த பெரும் பேராட்ட சக்தியை நாங்கள் இழந்திருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகளுடன் பேசி தீர்மானத்தை எடுங்கள் என்று நாங்கள் சொன்னது போல இன்றைக்கு நாங்கள் எடுக்கின்ற முயற்சிகளுக்கு ஏதாவது கட்சிகள் எங்களுக்கு ஆதரவை தருகின்றார்களா என்று பார்க்க வேண்டும்.  

அதிலும் எங்களுடன் நிற்கின்றவர்களைத் தவிர வேறு யாரும் எமக்கு ஆதரவாக இல்லை. அதிலும் இடைக்கால அறிக்கை வந்த போது கூட அதனை நிராகரியுங்கள் என்று தமிழ் மக்களிடம் சொன்னார்கள். அதே நேரத்தில் ராஐபக்‌ஷவும் சிங்கள பெளத்த குருமார்களும். சிங்கள தீவிரவாதிகளும் இது சமஷ்டி தான் என்று கூறினார்கள். அதனால் தான் பாராளுமன்றத்தையும் கலைத்தோம் என்று கூறினார்கள். அவர்களும் ஆபத்து நிராகரியுங்கள் என்றது போல இவர்களும் நிராகரியுங்கள் என்று சொன்னார்கள்.  

ஆனால் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு போன போது அப்படி நாங்கள் சொல்லவில்லை. அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று தான் சொன்னோம்.

அதே மாதிரி ஏதாவது ஒரு கட்சி இப்ப இருக்கிறதா என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன். அல்லது நாங்கள் இவ்வாறு தான் செல்ல வேண்டுமென்று ஒரு அழைப்பை விடுத்தால் எதிர்காலத்தை நோக்கி பொது வேலைத் திட்ட நோக்கில் எடுத்தால் அவர்கள்  மறுப்புத் தெரிவித்து தாங்கள் தேர்தல்களில் தனியாக நிற்கப் போகின்றோம் என்றால் அதனை மக்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய விடயம். அதை எதிர்கொள்ள நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்.  

கேள்வி: அண்மையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதில் குறிப்பாக 3 மாத காலத்தின் பின்னர் முடிவு என்றும் கூறப்பட்டுள்ளது. இது தேர்தலுக்கான நிலைப்பாடு என்று கூறப்படுகிறதே.  

பதில்: - அந்த மாநாட்டில் தலைவர் தெரிவு செய்யப்பட்ட போது தயாரிக்கப்பட்ட அறிக்கையில் நாங்கள் ஒரு மூன்று மாதத்தைக் கொண்டு தீர்மானத்தை எடுக்க வேண்டும். அதனை அரசிற்கு அறிவிக்க வேண்டும். அப்படி ஐனநாயக ரீதியாக போராட்டங்களை நடாத்த வேண்டுமென்று கூறியிருக்கிறோம். அங்கு தலைவர் என்ற முறையில் அந்த அறிவிப்புக்களை நான் தான் விடுத்திருந்தேன். அத்தோடு மாநாடு அதைப்பற்றி தீர்மானிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறேன்.  

அதை மையமாகக் கொண்டு தான் எல்லோரையும் நாங்கள் அழைத்திருக்கிறோம். ஆக தனிய தமிழரசுக் கட்சி மட்டும் அல்ல. அனைவரையும் அழைத்து தேசிய பேரவை அமைத்து எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம் என்று சொல்லியுள்ளோம். அதுவொரு அறிவித்தல் அதற்கு வடிவம் கொடுக்க வேண்டும். எல்லாருமாகச் சேர்ந்தால் இன்னொரு சிறந்த வடிவம் அதற்கு வரும்.  

கேள்வி: - இது காலம் பிந்திய அறிவிப்பு என்று தான் சொல்லப்படுகிறதே .  

பதில்: -  ஒவ்வொரு காலமும் அப்படித் தான் சொல்லப்படும். தந்தை செல்வா தமிழர் விடுதலைக் கூட்டணியை ஏற்படுத்திய போது 49 ஆம் ஆண்டு அதனைச் செய்யவில்லை. 72 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பின்னர் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆக  76 ஆம் ஆண்டு எடுத்த தீர்மானமும் பிந்தித் தான் எடுத்தது என்று சொல்லக் கூடும்.  

அது மாத்திரமல்லாமல் அதற்குப் பிந்தியும் எத்தனையோ நடவடிக்கைகள் ஒற்றுமையாக இடம்பெற்று வந்திருக்கின்றன. இன்றைக்கு நடைமுறையில் இப்படித் தான் உலகத்தில் நடக்கிறது. ஆக நாங்கள் அதிசயத்தை ஏற்படுத்துபவர்கள் அல்ல. நடைமுறைக்கு ஏற்றவகையில் தான் செயற்படலாம். அதற்கு தலைமைத்துவத்தை வழங்கலாம். அதனைவிட மாற்றுத் தலைமைத்துவத்தை வழங்க தலைமைத்துவத்தில் யாரும் இருந்தால் காலம் பிந்தாமல் அந்த விடுதலையை பெற்றுத் தர வேண்டும்.  

இப்ப அடுத்த மாற்றுத் தலைவர் யார் என்ற போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அது கட்சிகளுக்குள் மட்டுமல்லாமல் அதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். அப்படித் தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். கடந்த தேர்தலிலும் நாங்கள் இந்த வழியில் இன்ன இன்ன கட்டமைப்பில் எங்கள் அரசியில் தீர்வை நாங்கள் அடைவோம் என்று சொல்லியிருக்கிறோேம். நாங்கள் அதிலிருந்தும் இன்னமும் விலகிவிடவில்லை.  

எதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக இடைக்கால அறிக்கை வந்த போதும் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டதாக நாங்கள் ஒருத்தரும் அறிவிக்கவில்லை. அது இன்னமும் மேம்படுத்தப்பட வேண்டுமென்று தான் நாங்கள் சொல்லியிருக்கிறோம்.  

அப்படியிருக்கையில் கம்பரெலிய பற்றி பேசுகின்றனர். நாங்கள் கம்பரெலியா கேட்கவில்லை. அது அரசாங்கம் கொண்டு வந்த திட்டம். வடக்கு கிழக்கில் 11 பில்லியன் ஒதுக்கியதாக பிரதமரே சொல்லியுள்ளார். இன்றைக்கு காங்கேசன்துறைமுகம் மீன்படித்துறைமுகம் அதே போல விமானத் தளம் ஆகியன ஆரம்பிக்கப்படுகின்ற போது வேலை வாய்ப்பு கிடைக்கும். இதைப்போல பல வேலைத் திட்டங்களையும் நாங்கள் பிரேரித்துள்ளளோம்.  

யாழ் குடாநாட்டை நாங்கள் எடுத்தக் கொண்டால் 14,15 இலட்சம் மக்கள் இருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு 6 இலட்சம் கூட இல்லை.

ஏனெனில் எல்லாரும் வெளிநாடு சென்று கொண்டிருக்கின்றனர். ஆக அவர்களை திருப்பி வரச் செய்ய வேண்டும். இங்கு மீளக்குடியமர்த்த வேண்டும். இருக்கின்றவர்களும்  வெளியில் போகாமல் இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் பொருளாதார ரீதியாகவும் நாங்கள் எங்களைக் கட்டியெழுப்ப வேண்டும்.  

எஸ்.நிதர்ஷன்- பருத்தித்துறை விசேட நிருபர்-  

Comments