இலங்கை பேராளர்களை புறக்கணித்த சிக்காக்கோ தமிழாராய்ச்சி மாநாடு | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை பேராளர்களை புறக்கணித்த சிக்காக்கோ தமிழாராய்ச்சி மாநாடு

 

உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association of Tamil Research) என்ற அமைப்பு தனிநாயகம் அடிகளாரின் எண்ணக் கருவில் உருவானது. 1964இல் புதுடில்லியில் அகில உலக கீழ்த்திசை ஆய்வு மாநாடு (Word Congress of Orientalists) நடைபெற்றது. அதில் உலகெங்குமிருந்து இரண்டாயிரம் பேராளர்கள் வருகை தந்திருந்தனர். அது டில்லி விஞ்ஞான பவனில் நடைபெற்றது. ஏற்கனவே தனிநாயகம் அடிகளாரின் பங்களிப்புடன் சென்னையில் தொடக்கப்பட்டிருந்த தமிழ்ப் பண்பாட்டுக் கழகமும் தமிழ் கல்ச்சர் என்ற இதழும் நலிவடைந்துபோனதையடுத்து அவர் அச் சமயத்தில் கவலை கொண்டிருந்தார்.

தமிழுக்கென ஒரு உலக மாநாடு நடத்தப்பட வேண்டும் என்ற தனது எண்ணக்கருவை திட்டமொன்றாக செயல்படுத்தும் வகையில் அம் மாநாட்டுக்கு வந்திருந்த அறிஞர்களை ஒரு அறையில் அமரச் செய்து உலகளாவிய தமிழ் ஆயுவு மன்றத்தை ஆரம்பிக்க வேண்டிய அவசியத்தை அடிகளார் எடுத்துச் சொல்ல பலர் அதை ஏற்றுக் கொண்டனர். அவர்ளில் பலர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அக் கூட்டத்தில் பிரெஞ்சு தமிழ் அறிஞர் ஜீன்பிலியோஸா தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். தனிநாயகம் செயலாளாராகவும் கமில் ஸ்வலபில் துணை செயலாளாராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இப்படித்தான் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் உதயமானது

முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர் நகரில் மலேயா பல்கலைக்கழக மண்டபத்தில் 1966ஏப்ரல் 17முதல் 23ம் திகதிவரை நடைபெற்றது. அப்போது தமிழக முதல்வராக விளங்கிய பக்தவத்சலம், எதிர்க்கட்சித் தலைவரான நாவலர் நெடுஞ்செழியன், தமிழறிஞர்களான ம.பொ.சி, ஜி.வா. ஜகந்நாதன் (கலைமகள் ஆசிரியர்), கல்வி இயக்குநர் நெ.து. சுந்தரவடிவேல் உட்பட பலர் அம் மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டை அன்றைய மலேசிய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் தொடக்கி வைத்து உரையாற்றியபோது, தமிழ் மொழியின் தொன்மையை வியந்து பாராட்டினார்.

அதன் பின்னர் 1968ம் ஆண்டு அறிஞர் அண்ணாதுரை தமிழ முதல்வராக வீற்றிருந்தபோது மிகப்பெரும் விழாவாக சென்னையில் இரண்டாவது தமிழராய்ச்சி மாநாடு கோலாகலமாக நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சியை அறிஞர் மத்தியில் இருந்து கடைகோடித் தமிழரிடம் எடுத்துச் சென்ற மாநாடாக இம் மாநாடு கருதப்பட்டபோதும் ஒரு ஆய்வுமாநாடை ஆட்டம், பாட்டம், கோலாகலம், அரசியல் என தமிழக அரசு கொச்சைப்படுத்தி முக்கிய விஷயமான ஆய்வை ஓரங்கட்டி விட்டது எனத் தமிழ அறிஞர்களில் சிலர் குறையும் சொன்னார்கள். எனினும் இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாடு ஏற்படுத்திய ஈர்ப்பை அதன் பின்னர் எந்தவொரு தமிழ் ஆய்வு மாநாடும் ஏற்படுத்தவில்லை என்பதும் உண்மையே. அதற்கு, மிகப் பெரும் தமிழ்த் தலைவர்களும், அறிஞர்களும், அறிஞர் அண்ணாவின் தலைமையில் கலந்து கொண்டது காரணமாக இருக்கலாம். அக் கோலாகலத்துக்கும் பிரமாண்டத்துக்கும் ஈடாக கலைஞர் கருணாநிதி நடத்திய கோவை செம்மொழி மாநாட்டைக் குறிப்பிடலாம்.

தமிழக மாநாட்டின் பின்னர் மூன்றாவது மாநாடு பாரிஸ் நகரில் இடம்பெற்றது. அதில் தமிழக முதல்வரான கலைஞர் கருணாநிதி கலந்து கொண்டார். நான்காவது மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்று இனவாத குழப்பம், உயிரிழப்புகளுடன் நிறைவு பெற்றதோடு இளைஞர்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனையை உசுப்பிவிடுவதற்கும் காரணமானது.

இந்த வரிசையில் பத்தாவது மாநாடாக அமெரிக்கா சிக்காக்கோ நகரில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றுள்ளது. அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் 32ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டும் சிக்காக்கோ தமிழ்ச் சங்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடு முகமாகவும் உலகத் தமிழராய்ச்சி மன்றத்தின் ஆதரவுடன் இம்மாநாடு நடைபெறுகிறது. பல நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் இம் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். கடந்த மூன்றாம் திகதி ஆரம்பமான இம்மாநாடு இன்று நிறைவு பெறும். ‘தமிழ்மொழி, பண்பாடு, நாகரிகம், தமிழினம் என்பனவற்றின் தொன்மையை புதிய வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும் ஒப்பியல் முறையில் ஆய்வு செய்தல்’ என்பதே இம்மாநாட்டின் தொனிப் பொருளாகும்.

இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து மூவர் மாத்திரமே சிக்காக்கோ பயணித்திருப்பதாகத் தெரிகிறது. சிக்காக்கோ இரண்டு காரணங்களின் ஊடாக நமக்கு மிகவும் பரிச்சயமான பெயர். படு துணிகரமான கொள்ளை நடந்தால் அதை சிக்காக்கோ பாணி கொள்ளை என்று அழைப்போம். சிக்காக்கோ கொள்ளையர்கள் அவ்வளவு துணிச்சலாகவும் நேர்த்தியாகவும் கொள்ளையடிப்பார்களாம். அடுத்த காரணம், நேர் எதிரானது எனினும் கொள்கையுடன் சம்பந்தப்பட்டதுதான். சிக்காக்கோவில் அகில உலக சர்வ சமய மாநாடு நடைபெற்ற போது அம் மாநாட்டில் இலங்கையில் இருந்து அநகாரிக தர்மபால பௌத்த மதம் சார்ந்தும், சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் இருந்து இந்துமதப் பிரதிநிதியாகவும் கலந்து கொண்டனர். அங்கே விவேகானந்தர் ஆற்றிய இந்து மத மேன்மை தொடர்பான ஆற்றொழுக்கான ஆங்கில உரை வெகு பிரசித்தம் பெற்றது. இந்து மதம் என்பது காட்டுமிராண்டிகளின் மதம் என ஏற்கனவே கிறிஸ்தவ போதகர்களினால் மேற்குலகில் செய்யப்பட்டு வந்த பிரசாரங்களுக்கு பதிலடியாக அமைந்ததோடு, இந்து மதம் பயிலவென பல ஐரோப்பியர் முன்வருவதற்கு அவ்வுரை வழி சமைக்கவும் செய்தது. பல மனித உள்ளங்களை விவேகான்நதர் கொள்ளையிட்டார் என்பது உண்மைதானே!

தற்போது அங்கே தமிழுக்கு ஆய்வு மாநாடு அங்கே நடைபெறுகிறது. ஆனால் நாம் அறிந்த வரையில் மூன்று பேராளர்கள் மாத்திரமே அம் மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதிகளாகக் கலந்து கொள்கின்றனர். ஒருவர் பேராசிரியர் சண்முகதாஸ். இரண்டாவது பேராளர் யாழ். பல்கலைக்கழக வரலாறு தொல்லியல்துறைத் தலைவர் பேராசிரியர் புஷ்பரட்ணம். மூன்றாமவர் மன்னார் தமிழ்நேசன் அடிகளார். பேராசிரியர் மார்களான நுஹ்மான், மௌனகுரு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் தனிப்பட்ட காரணங்களின் பேரில் அவர்கள் மாநாட்டுக்கு செல்லவில்லை.

இத்தகைய மாநாடுகளில் வழமையாகக் கலந்து கொள்ளும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் எவருமே இம் மாநாட்டில் கலந்து கொள்ளாததது எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர்களில் சிலரிடம் வினவியபோது, எங்களுக்குத் தெரியாது என்றும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கூறினார்கள்.

இது தொடர்பாக பல்கலைக்ககைம் சார்ந்த ஆனால் பேராசிரியர் அல்லாத ஒருவரிடம் பேசினோம். அவர் இத்தகைய மாநாடுகளுக்கு கைபணத்தை செலவழித்தும் போய் வருபவர்.

“அகில உலக தமிழாராய்ச்சி மாநாடு என்ற அமைப்பே கடந்த ஒன்பது மாநாடுகளை நடத்தி வந்திருக்கிறது. இந்த மன்றம் தனது கிளைகளை பல நாடுகளில் நிறுவியிருக்கிறது. இலங்கைக் கிளையின் தலைவராக பேராசிரியர் பத்மநாதனும் செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளராக குமரன் பதிப்பகத்தின் குமரனும் செயல்பட்டு வருகின்றனர். உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒரு மாநாட்டை எங்கேனும் நடத்துவதாக இருந்தால் அது தனது முடிவையும் ஏனைய மாநாட்டு ஏற்பாடுகள் பற்றியும் தன் கிளை மன்றங்களுக்கு அறிவிக்கும். அக் கிளை மன்றங்கள் அத் தகவல்களை ஊடகச் செய்திகளாகவும், பத்திரிகை விளம்பரமாகவும் அறிவிப்பதோடு தனது பட்டியலில் உள்ள இலக்கிய ஆர்வலர்கள், இலக்கிய மன்றங்கள், பல்கலைக்கழகங்களுக்கு முறைப்படி அறிவிக்கும். இதுதான் நடைமுறை.

2010ம் ஆண்டு கோவையில் கலைஞர் கருணாநிதி ஏற்பாட்டில் நடைபெற்ற செம்மொழி மாநாடு தமிழாராய்ச்சி மாநாட்டு மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது அல்ல. கலைஞர் விடுத்த வேண்டுகோளை மன்றம் மறுதளித்ததால் வேறு வழியின்றி கலைஞர் செம்மொழி அமைப்பு ஒன்றை ஆரம்பித்து தன் வழியாக அரசு நிதியில் வெகு விரிவாகவும் விமரிசையாகவும் அம் மாநாட்டை நடத்தினார். எனவே செம்மொழி அமைப்புக்கு கிளைக் காரியாலயங்கள் இருக்க வாய்ப்பிருக்கவில்லை. ஆனாலும் கூட அந்தந்த நாடுகளில் தமக்கு பரிச்சயமானவர்களை பிரதிநிதிகளாக நியமித்தும் பல்கலைக்கழகங்களுக்கு அறிவித்தும் இணையத்தின் வழியாக தகவல்களைத் தந்தும் ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் மற்றும் பொருத்தமான பேராளர்களை செம்மொழி மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் சென்றடைந்தார்கள். செயல்பட வேண்டுமென்றால் எவ்வகையிலும் செயல்படலாம் என்பதற்கு செம்மொழி ஏற்பாட்டாளர்கள் ஓர் உதாரணம். ஆனால் சிக்காக்கோ தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பாக இலங்கை கிளை மன்றம் எதையுமே அறிவிக்கவில்லை. பல்கலைக்கழகங்களை உத்தியோகப் பூர்வமாகத் தொடர்பு கொள்ளவில்லை. எனவே கேள்விப்பட்ட அளவிலேயே நாங்கள் கட்டுரைகளை அனுப்பி வைத்தோம். கட்டுரை படிப்பதற்காக அவை ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்பதும் தெரியாது. எனவே பல்கலைக்கழக மட்டத்தில் எவரும் இம் மாநாட்டில் கலந்துகொண்ட மாதிரித் தெரியவில்லை அந்த மூவரைத் தவிர” என்று அவர் கூறிமுடித்தார்.

இன்னொருவரிடம் விசாரித்தோம்.

“பேராசிரியர் சண்முகதாஸ் இந்த மாநாடு தொடர்பான இலங்கை பொறுப்பாளராக செயற்பட்டிருக்கிறார். இதை தனிப்பட்ட தொடர்பாகவே நான் பார்க்கிறேன். இதனால் தான் உத்தியோகபூர்வமான அறிவித்தல்கள் வெளியிடப்படவில்லை. அவருக்கு வேண்டியவர்களை மாத்திரம் அழைத்துச் சென்றிருப்பதாகவே நான் கருதுகிறேன். மேலும் சிக்காக்கோ தமிழ்ச் சங்கம் மற்றும் அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை என்பன தமது விழாக்களை உலகறியும் விழாவாகக் கொண்டாடுவதற்கான தளமாகவே உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. எனவே அந்தத் தமிழ்ச் சங்கங்களே விழா ஏற்பாட்டாளர்களாகவும் அனுசரணையாளர்களாகவும் இருக்கையில் தமிழாராய்ச்சி மன்றம் அங்கே இரண்டாம் பட்சம் தான். இதனால் தான் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் செயல்படாமல் இருந்து விட்டதாக நான் கருதுகிறேன்” என்று அவர் ஒரே போடாகப் போட்டார்.

குமரன் பதிப்பக குமரனைத் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் வேதனையுடன் பேசினார். தாம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டதாகச் சொன்னார்.

இலங்கை தமிழாராய்ச்சி மன்றத்துக்கு சிக்காக்கோ தமிழ் ஆய்வு மாநாடு பற்றி எதுவுமே உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இலங்கையில் பேராசிரியர் சண்முகதாஸ் தான் இதை தனக்கு வேண்டியமாதிரி கையாண்டிருக்கிறார். ஏன் எமக்கு எதுவுமே அறிவிக்கப்படவில்லை என்பது பற்றி எனக்கு எதுவுமே தெரியவில்லை. எனவே இது பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்று அழைக்கப்படுவதற்கான தகுதியை கொண்டிருக்கிறதா என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்துக்கும் சிக்காக்கோ மாநாட்டுக்கும் இடையே என்ன தொடர்பு என்பதிலும் குழப்பம் உள்ளது என்பது குமரனின் கருத்து.

எனினும் இந்த சிக்காக்கோ மாநாடு வெகு சிறப்பாக நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை. பணம் இருந்தால் ஏற்பாடுகளை விரிவாகவும், கோலாகலமாகவும் செய்யலாம் தான். இதற்கு ஜேம்ஸ் பொண்ட் படங்களை உதாரணமாக சொல்லலாம். ஆரம்பகால ஜேம்ஸ் பொண்ட் படங்கள் கதையம்சத்துடனான ஓட்டத்தைக் கொண்டதாக இருந்தன. பின்னர் கெஜட்டுகளும் தொழில்நுட்பங்களும் படத்தை ஆக்கிரமித்துக் கொள்ள ஜேம்ஸ் பொண்ட் என்ற வசீகரமான கதாநாயகன் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டார். தமிழாராய்ச்சி மாநாடும் அப்படித்தான். கோலாகலம், கொண்டாட்டம், வி.ஐ.பி. மாரின் ஆக்கிரமிப்பு எனப் பல்வகையான ‘ஷோ’க்கள் இந்த ஆய்வு மாநாடுகளை ஆக்கிரமித்துக் கொள்ள, தமிழாய்வு எங்கோ ஒரு மூலைக்குள் குந்தியிருக்கிறது!

சிங்களம் என்ன ஆய்வு மாநாடுகளை வைத்துக் கொண்டா வளர்ந்தது? எல்லா ஒலிகளையும் சிங்கள எழுத்துகளில் கொண்டு வர முடிகிறது. தமிழில் எல்லா ஓசைகளையும் எழுத்தில் கொண்டுவர முடியாததால்தான் ஆங்கிலத்தை இடைநடுவில் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. இந்த ஆடம்பர மாநாடுகளினால் தமிழுக்குக் கிடைத்த இலாபம் என்ன? பழம் பெருமை பேசுவதற்காக மாநாடுகள் அவசியமா? என்று ஒருவர் குரல் கொடுக்கிறார். அதில் உள்ள நியாயத்தையும் புரிந்து கொள்ளவேண்டும்.

அருள் சத்தியநாதன்
[email protected]

Comments