கற்றலுக்கும் காவல் வைத்த ஏப்ரல் 21 | தினகரன் வாரமஞ்சரி

கற்றலுக்கும் காவல் வைத்த ஏப்ரல் 21

தாம் வெயிலிலும், மழையிலும். பனியிலும், இரவு, பகல் பாராது துவண்டு துவண்டு உழைத்தாலும், தமது பிள்ளைகள் தாம் அனுபவித்த வேதனைகளை அனுபவிக்கக்கூடாது என்ற நோக்குடன் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி பலத்த கனவுடனும், தமது பிள்ளைகளுக்குக் கல்வியூட்டி வருகின்றனர் பெற்றோர். பாடசாலையில் பிள்ளைகள் கற்றாலும் அதற்கு மேலதிகமாக  பகுதிநேரமாகவும் அவர்களுக்கு கல்வி ஊட்டி வருகின்றனர். பெற்றோர்களின் கனவுகள் இவ்வாறு அமைகின்ற போதிலும், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளிலும், தளம்பல் ஏற்பட்டது. 

இலங்கையில் என்றும் இல்லாத அளவிற்கு திடீரென இராணுவத்தினரின் சோதனைக்குட்படுத்தப்பட்டு, புத்தகப் பைகளுடன் பாடசாலைச் சூழலைச் சுற்றிவர பலத்த இராணுவப் பாதுகாப்புக்கு மத்தியில் மாணவர்களின் கற்றலைக் கொண்டு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். 

பாடசாலைக்குச் சென்றதும் வாயிற் கதவில் நின்று அன்புடன் வரவேற்கும் ஆசிரியர்களைக் காண்பதற்குப் பதிலாக இரண்டாம் தவணை ஆரம்ப முதல் நாளிலே (மே 06) ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரைக் கடந்தே மாணவர்கள் தமது கலைக் கோயிலுக்கு நுழைய வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது. 

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற கோரச் சம்பவத்தைப் போன்று இன்னுமொரு அசம்பாவிதம் இடம்பெறக்கூடாது, குறிப்பாக நாட்டின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பாடசாலைகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கி மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு தடங்கல் ஏற்படக்கூடாது என்பதற்கிணங்கவே ஏப்ரல் 21தற்கொலைக்கு குண்டுத்தாக்குதலின் பின்னர் பாடசாலைகளுக்கு அரசாங்கத்தினால் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. 

முதலாம் தவணைக்கான அனைத்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளும் கடந்த 2019ஏப்ரல் 05ஆம் திகதியுடன் நிறைவு பெற்று அன்​ைறயதினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. மீள இரண்டாம் தவணைக் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு கடந்த ஏப்ரல் 22ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படவிருந்தது. 

இந்நிலையில் ஏப்ரல் 21ஆம் திகதி மட்டக்களப்பு உள்ளிட்ட பல இடங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் ஒருவித அச்ச சூழல் நிலைமை நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த  ஏப்ரல் 22ஆரம்பிக்கப்படவிருந்த இரண்டாம் தவணைக்கான பாடசாலை கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை அரசாங்கம் பீதி நி​ைலமை காரணமாக, மே மாதம் 06ஆம் திகதி வரை ஒத்தி வைத்திருந்தது.  

 பாடசாலைகள் பலத்த பொலிஸ், மற்றும் இராணுவப் பாதுகாப்புக்கு மத்தியில் கடந்த  மே மாதம் 06ஆம் திகதியன்று  ஆறாம் ஆம் தரத்திலிருந்து உயர்தரம் வரையிலான மாணவர்களுக்கும், மே மாதம் 13அன்றுவரை  முதலாம் தரத்திலிருந்து 5ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கும், கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதன்போது என்றுமில்லாத வகையில் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களினதும் புத்தகப் பைகள், மற்றும் கைப் பைகள், போன்றன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பாடசாலைகளுக்குள் உள்நுழைய அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் பாடசாலைகளில் ஆரம்ப நாட்களில் மாணவர்களின் வரவு மிக மிகக் குறைந்தளவே காணப்பட்டிருந்த போதிலும் தற்போது மெல்ல மெல்ல அச்ச நி​ைலமை நீங்கி மாணவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக பாடசாலைக்குச் செல்கின்றனர். 

எது எவ்வாறு அமைந்தாலும், நாட்டின் எதிர்கால கல்விச் சமூதாயத்தை சிறந்த முறையில் வளர்த்தெடுக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பு வாய்ந்த கடமையாகும். இதற்கு கற்றல் கற்பித்தல் சூழல் ஒருங்கே அமையப் பெறவேண்டும். அச்ச சூழலுக்கு மத்தியில், ஆசிரியர்களும். மாணவர்களும், தினமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயந்து, பயந்து வந்து பாடங்களைக் கற்றால் அவ்வாறு கற்கின்றவற்றை மாணவர்கள் எவ்வாறு கிரகித்துக் கொள்வார்கள், ஆசிரியர்கள் எவ்வாறு அச்ச சூழலில் மாணவர்களுக்கு கல்வியூட்டுவது. இவையனைத்திற்கும் பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்க வேண்டும். அதன் பின்னர்தான் கல்வியிலும் எழுச்சிபெறலாம் என்பதையே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 

இது ஒரு உளவியல் பிரச்சினை,  சமூக ரீதியில் மாபெரும் ஒரு தாக்கத்தைச் செலுத்துவது போன்றுதான் உள்ளது. மறுபக்கம் நாட்டில் ஒரு பொருளாதாரப் பிரச்சினையைக் கொணர்ந்தது போலவும் காணப்படுகின்றது. கடந்த 30வருட காலம் யுத்தத்தின் உச்சக் கட்டம்வரை சென்று தற்போது நிம்மதிப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் தறுவாயில் ஏப்ரல் 21தாக்குதல் இடம்பெற்றிருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

என தற்போதைய நெருக்கடியான சூழலில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் குறித்து கல்முனை பிரந்தியத்திற்கான பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் கு.சுகுனன் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த 30வருட யுத்த சூழலை அனுபவித்த தற்போதிருக்கின்ற பெரியவர்கள், அதனை மெல்ல மெல்ல மறந்து கொண்டு செல்லும் நிலையில், மீண்டும் தற்போதிருக்கின்ற நமது புதிய சந்ததியினருக்கு அதேயுத்த சூலைக் காண்பிப்பது போன்றுதான் உள்ளது. உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது இலங்கையில் இருக்கின்ற பிள்ளைகளின் உளநலம் அதல பாதாளத்தில் கொண்டுபோய் விடும் அளவுக்குத்தான் இந்த சம்பவமும் இடம்பெற்றிருக்கின்றது. இதேநிலையை எதிர்காலத்திலும் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  

கடந்த ஏப்ரல் 21தாக்குதலில் பல மாணவர்களும் இறந்துள்ளார்கள்.  பாடசாலையில் கற்ற சக மாணவன் உயிரோடு இல்லை, அந்த வெற்றிடம் அங்குள்ள மாணவர்களுக்கு மிகப் பெரியதொரு உளப்பாதிப்பைத்தான் கொண்டுவரும். இதனை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருதற்கு மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழலுக்கு நமது சமூகம் தற்போது தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் உளஆற்றுப்படுத்தல் செய்ய  வேண்டிய பொறுப்பில் அனைவரும் பங்கெடுக்க வேண்டியுள்ளது. மீண்டும் ஒரு யுத்த சூழல் அமைவதென்பது ஏற்கனவே பட்ட காயத்தை ஆற்றுவதங்கு ஒரு பரிகாரமாய் அமைந்துவிடாது. இதற்கு இனம், மதம், அரசியல் வேறுபாடு, மொழி, இனக்குழுக்கள் என வேறுபாடுகள் இல்லாமல் ஒரு முழுமையான செயற்பாட்டு வடிவம் வேண்டும். இது பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், அதனால் ஏற்பட்ட பாதிப்பை உயிழப்புக்களைத் தவிர ஏனையவற்றை ஈடு செய்வதற்கும் வழிவகுக்கும். 

ஏனைய வளர்முக நாடுகளில் எவ்வளவுதான் மிகப்பெரிய யுத்தம் நடைபெற்றாலும் அந்த சந்தர்ப்பத்தில்தான் அனைவரும் இராணுவத் தரப்பினை நேரடியாக பார்ப்பார்கள். யுத்தம் முடிவுற்றதும், எந்த இராணுவ வீரர்களையும், வீதிகளிலோ, அல்லது வேறு இடங்களிலோ எவரும் காணமுடியாது. அந்த நாடுகளில் புலனாய்வுத்துறை மிகவும் பலமான முறையில் தகவல்தொழில் நுட்ப ரீதியில் இயங்குகின்றது. அதுவும்  தந்திரோபாயமான முறையில்தான் இயங்கி வருகின்றது. அந்த வகையிலும் எமது நாட்டு இராணுவ செயற்பாடுகளைப் பலப்படுத்தி, மாணவர்கள் நேரடியாக இராணுவத்தினரை எதிர்கொள்வதைக் குறைக்கலாம். 

எனவே உள ஆற்றுப்படுத்தல் செயற்பட்டை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், பிள்ளைகளை மனதளவில் பலப்படுத்த வேண்டும், உளவளத்துறை சார்ந்தவர்கள் அசாங்கம், அரச சார்பற்ற அமைப்புக்கள், தான்னார்வ தொண்டர்கள், உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தேசிய செயற்றிட்டத்தினை வரைந்து அதனுாடாக செயற்பட வேண்டும். என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் கு.சுகுணன் குறிப்பிட்டார். 

எவ்வாறு அமைந்தாலும், நாட்டின் எதிர்கால சந்ததியினராக உள்ள மாணவர்களை எதுவித தடைகள் வந்தலும் அவற்றைச் சாதுரியமாகத் தகர்த்தெறிந்து ஏனைய நாடுகளுக்குச் சவால் விடுக்கக் கூடிய அளவிற்கு முன்கொண்டு செல்ல வேண்டியது அனைவரினதும் தலையாய பொறுப்பும், கடமையுமாகும். அதனையே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 

 

வ.சக்திவேல்

 

Comments