சகலருக்கும் நன்மை பயக்கும் ஜிஹாத் பற்றி வீண்புரளி! | தினகரன் வாரமஞ்சரி

சகலருக்கும் நன்மை பயக்கும் ஜிஹாத் பற்றி வீண்புரளி!

தேசபந்து ஜெசீமா இஸ்மாயில் இந்த நாட்டின் மூத்த கல்விமான்களில் முக்கியமானதொரு ஆளுமையாகும். கிழக்கு மண்ணில் சாய்ந்தமருதில் புகழ்பூத்த குடும்பமொன்றில் பிறந்த இப்பெண்மணி ஆழ்ந்த அறிவைக்கொண்டவராவார். இன, மத பேதங்களுக்கப்பால் நாட்டின் மேன்மைக்காக 60 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். தற்போது 85 வயதை கடந்த நிலையிலும், பெண்கள் முன்னேற்றத்துக்கான பணிகளில் ஈடுபட்டுவருகின்றார். கொழும்பு பல்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபராக நீண்டகாலம் பணியாற்றி முஸ்லிம் பெண்கல்வியை மேம்படுத்த பாடுபட்டவர். அத்துடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உயர்பணியாற்றியுள்ளார். தற்போது பவ்ரல் அமைப்பின் ஸ்தாபகராகவும் இருந்து செயற்பட்டு வருகின்ற ஜெசீமா இஸ்மாயில் அம்மையாருடன் தினகரன் வாரமஞ்சரி நேர்காணலொன்றைக் கண்டது முஸ்லிம் சமூகத்தின் இன்றைய நிலை, எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து அவருடன் உரையாடியபோது தெரிவித்த கருத்துக்களை தினகரன் வாரமஞ்சரி பகிர்ந்து கொள்கின்றது. 

கேள்வி – கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி உயிர்த்தெழுந்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்களை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள். அதனால் ஏற்பட்ட தேசத்தின் பின்னடைவுகள் பற்றியும் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்படுவதற்கான காரணங்களை தெளிவுப்படுத்துவீர்களா? 

பதில் – ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவத்தினால் ஏற்பட்ட கவலை என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. என்ன செய்வது என்ன பேசுவது என்ற உணர்வை நான் இழந்துவிட்டேன். எனது மனதில் பல நினைவுகள் ஓடின. இந்த மிலேச்சத்தனமான செயலை செய்தவர்கள் குர்ஆனில் கருணை, மன்னித்தல் என்ற செய்தியை மறந்துவிட்ட கோழைகளாவர். ஒருவனைக் கொலை செய்தாலும் ஒன்றுதான் மொத்தமாக மனித குலத்தை நிர்மூலமாக்குவதும் ஒன்றுதான். 

இது ஒரு உலகளாவிய சம்பவம் அல்ல. இது தேசிய விவகாரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்தகைய சம்பவங்களை எதிர்கொள்ள நாம் முதலில் ஒன்றிணைய வேண்டும். முஸ்லிம்களுக்கு அவர்களது சமூகத்துக்குள்ளே சென்று பார்க்கக் கூடிய விசேட பொறுப்பு உண்டு. இஸ்லாம் கூறுவதுபோல அவர்கள் அனைவருடனும் உண்மையான புரிந்துணர்வுடன் வாழ முடியும். மொத்தமாக மனித குலத்துக்கு எதிராக சென்று மிலேச்சத்தனமான குற்ற உணர்வுடன் செயற்படும் அந்த அமைப்பு தேசிய தௌஹீத் ஜமாத் என்று தன்னை கூறிக்கொள்கிறது.  

கேள்வி – தௌஹீத் அமைப்புகள் குறித்து உங்களது பார்வை எவ்வாறானது. அதிலும் தௌஹீத் இயக்கங்கள், மட்டுமல்ல ஜிஹாத் பற்றிய சொல்லாடலும் கூட இன்று பெரும்பான்மை மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. அது பற்றி என்ன கூறுகிறீர்கள்? 

பதில் – அப்பாவிகள் மீது மரணத்தை கொண்டு வருபவர்கள் தம்மை எப்படி தௌஹீத் ஜமாத் என்று கூறிக்கொள்ள முடியும். அவர்களது பாவமான செயற்பாடுகளில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட எதுவும் இல்லாத நிலையில் அவர்களை எப்படி இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று கூற முடியும். இது பிழையானதாகும். அவர்களை ஜிஹாதிகள் என்றும் கூறுகின்றனர்.  

ஜிஹாத் என்பது ஒரு பொருள் பதிந்த கோட்பாடு இது என்ன சொல்கிறது என்பதை கவனமாக பார்க்க வேண்டும். வாழ்க்கையில் நடக்கும் நல்லவற்றை அழிக்க அல்லது நாட்டின் அமைதியை குழப்ப முயல்வோருக்கு எதிராக ஆயுதங்களைக் கொண்டு நடத்தும் போராட்டமானது சிறிய ஜிஹாத் ஆகும். 

எவ்வாறெனினும் பெரிய ஜிஹாத் என்பது தீமையை எதிர்த்து அமைதியை உருவாக்குவதாகும். அதேநேரம் உலகளாவிய அக்கறையுடன் சேர்ந்து தனது அக்கறையையும் நீடித்துக்கொள்வதும் ஜிஹாத் ஆகும். அவ்வாறான செயற்பாடு நல்லிணக்கம், நீதி, ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும்.  

கேள்வி – எமது சமுதாயம் இன்று கலாசார பாரம்பரியம், பண்பாடுகளில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அன்றைய நிலைக்கும் இன்றைய போக்குக்குமிடையில் பல்வேறுபட்ட முரண்பாடுகளை காணக்கூடியதாக உள்ளது. அதனால் ஏனைய சமூகங்கள் முஸ்லிம் சமுதாயத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறது. இதற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 

பதில் – எங்கள் நாட்டின் தற்போதைய நிலையை பார்க்குமிடத்து இலங்கையர்களான நாம் அனைவரும் ஒரு தரப்பாக செயற்பட வேண்டியது அவசியமாகிறது. 

முஸ்லிம் பெண்களின் உடைகளில் மாற்றம் செய்யப்படவேண்டும் என்று தற்போது பேசப்பட்டு வருகிறது. இந்த விடயத்தை பொறுத்தவரை இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுவதே சிறந்ததாகும். மதம் என்பது ஒவ்வொருவருக்கும் மன அமைதியை ஏற்படுத்தும் அதே நேரம் வெளி உலகத்துடனும் அமைதியை பேணச் செய்வதாகும்.  

ஆடைக்கலாசாரம் தொடர்பில் நாம் எமது மதவிழுமியங்களை பேணுவதில் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள முடியாது. அதேசமயம் எமக்கான கலாசார, பாரம்பரியங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். நாட்டுச் சட்டங்களை மதித்து பாதுகாப்புக்குக் குந்தகமில்லாத வகையில் கலாசாரங்களை பேணிக்கொள்ள வேண்டும். எமது பெற்றோர்கள், மூதாதையர்கள் பேணிக்காத்த கலாசாரப்பண்பாடுகளை தொடர்ந்து பேணிக்கொள்ள வேண்டும். 

இன்னொரு நாட்டின் கலாசாரத்தைப் பின்பற்றுவதை விட இஸ்லாமிய மதவிழுமியங்களுக்கமைய பொருத்தமான ஆடைகளை அணியும் போதும் எம்மோடு வாழும் பிறமத சமுகத்தவருடனான நட்புறவுகளை பேணிக்கொள்ள முடியும் என நான் நம்பு கின்றேன். 

கேள்வி – தீவிரவாதப் போக்குகள் குறித்து உங்களது பார்வை எவ்வாறானது. அது மாத்திரமன்றி முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த உங்களது அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளமுடியுமா? 

பதில் – மேற்கூறிய தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பில் ஒருசிலர் மட்டுமே உள்ளனர் என்று தெரிய வருகிறது எனவே அவர்களுக்கு எதிராக அதிகமாக உள்ளவர்கள் இலங்கையர்களாவர். அவர்கள் இந்த நாட்டின் குடிமக்களாக உள்ளனர். எந்தவொரு அமைப்பிலும் தீவிரவாத கொள்கையுடையவர்கள் சிலர் இருக்கத்தான் செய்வார்கள் அவர்களால் சமூகங்களுக்கு தீமை ஏற்பட்ட சம்பவங்கள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளன. ஆனால் ஒரு நாடு என்ற ரீதியில் இலங்கை இவை அனைத்துக்கும் அப்பாற்பட்டது. 

எனது பழைய நாட்கள், நான் எதிர்நோக்கிய சவால்கள், சமூகத்தில் எனக்கு கிடைத்த பாதக விளைவுகள், எனது மகளின் மரணம் மற்றும் பிரச்சினைக்குரிய தீவிரவாத அமைப்புகள் ஆகியவை எனது நினைவில் வந்து போகின்றன. 

கத்தோலிக்க கொன்வன்டில் படித்து, 19 வருடங்கள் பௌத்த பின்னணியில் வாழ்ந்து இந்து கலாசாரத்துடன் வளர்ந்த எனது வாழ்க்கையில் நான் சந்தித்த பயங்கரவாத அமைப்புகளில் செயற்பாட்டு நடைமுறையை முறியடிக்க முடியாமற் போனமை ஒரு துர்ப்பாக்கியமாகும். 

கேள்வி – இறுதியாக முஸ்லிம் சமூகத்திற்கு குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் மூத்த பெண் கல்விமான் என்ற அடிப்படையில் எத்தகைய அறிவுரைகளை வழங்குவீர்கள்? 

பதில் – இஸ்லாம் எமக்கு விதியாக்கியுள்ள ஐந்து கடமைகளையும் நாம் நிறைவேற்றினால் எம்மீதான பொறுப்புகள் நினைவு பெற்றதாக நாம் கருதுவோமானால் அது பிழையான முடிவாகவே பார்க்கவேண்டியுள்ளது. அதற்கு அப்பால் இன்னும் நிறையவே காரியங்கள் எம்மீதுள்ளது. விழுமியங்கள் நிறையவுள்ளன. பல்லின கலாசாரத்தோடு இந்த நாட்டில் நாம் எவ்வாறு இணைத்து வாழ வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

இலங்கையில் பிறந்த முஸ்லிம்களான நாம் வேறு நாடுகளைப் பின்பற்றமுடியாது. நாம் இங்கு தான் பிறந்தோம். இங்குதான் வாழ்கின்றோம். இது எமது சொந்தமண் நாம் சகல உரிமைகளுடனும் இங்குதான் தலைநிமிர்ந்து வாழவேண்டும். இதனை சகல தரப்புகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

இங்கு வாழும் ஏனைய இனச் சமூகங்களோடு நாம் இணைந்து வாழ வேண்டும். இணங்கி வாழ வேண்டும். இதற்கு விட்டுக்கொடுப்பும் புரிந்துணர்வும் மிக அவசியமானவையாகும். ஏனைய சமூகத்தினருக்கு தொந்தரவு ஏற்படுத்தக் கூடிய வகையில் எமது செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது. நாம் எனது கலாசாரம், பண்பாடுகள் பற்றிப் பேசுகின்றோம். இன்று பெண்களின் உடைக்கலாசாரம் குறித்து உரத்துப்பேசப்படுகின்றது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இது பொருத்தம். பிற சமூகங்களோடு இணைத்து வாழும்போது எமது கலாசார பண்புகள், விழுமியங்களைப் பேணி அவர்களுடன் இணைந்து வாழ முயற்சிக்கவேண்டும். 

எம்மிடம் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை திருத்திக் கொண்டு வாழ முற்பட வேண்டும். ஏனைய சமுகத்தவரது பார்வைக்கு நாம் முரண்பட்டவர்களாக இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சட்டம் காரணமாக சில விடயங்களில் விட்டுக்கொடுப்பு அவசியமானது. அவை எமது பண்பாட்டுக்கு முரண்பாடாகாத வகையில் மாற்றிக்கொள்ள முடியும். அனாவசியமான பிடிவாதங்களிலிருந்து நாம் விடுபடவேண்டும். 

கடந்த காலத்தில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை மனதில் கொண்டு இன்னுமொரு தடவை சமூகம் பலிக்கடாவாகாத வகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும் முஸ்லிம் சமூகம் இது விடயத்தில் சிந்திக்கச் செயற்பட முன்வர வேண்டும் என்பதே நான் கூறும் அறிவுரையாகும். 

எம்.ஏ.எம். நிலாம்

Comments