தண்டனை ஒருவரை மாற்றவா, மாய்க்கவா? | தினகரன் வாரமஞ்சரி

தண்டனை ஒருவரை மாற்றவா, மாய்க்கவா?

மரண தண்டனை   எதிரும், புதிரும்!  

தண்டனையால் உலகம் மாறியுள்ளதா?  

குற்றங்கள் தண்டனைக்கு அஞ்சுவதில்லை!  

மரண தண்டனை பற்றிய பரபரப்புப் பேச்சு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்துத் தணிந்திருக்கிறது. எதிர்வரும் ஒக்ேடாபர் 30ஆம் திகதி வரை மரண தண்டனையை அமுல்படுத்துவதை இடைநிறுத்தி, உச்ச நீதிமன்றம் கடந்த 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.  

இலங்கையில் கடந்த 43ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருக்கிறார்; தண்டனையை நிறைவேற்ற திகதியையும் குறித்திருக்கிறார். இதனை அவரே அறிவித்ததிலிருந்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கண்டனக் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன. பன்னிரண்டுபேர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவையும் தாக்கல் செய்திருக்கிறார்கள். அதன் பிரகாரமே நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.  

1976ஆம் ஆண்டிலிருந்து மரண தண்டனை நிறைவேற்றப்படாதிருந்தபோதிலும், நீதிமன்றங்களால் மரண தண்டனை வழங்கப்பட்டே வந்துள்ளன. அத்தோடு, அண்மைய காலமாக இந்தத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியிலிருந்து வலியுறுத்தல்கள் வரத்தொடங்கியுள்ளன. சேயா சௌதமி என்ற குழந்தையும் அதன் பின்னர் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையும் இடம்பெற்றபோது மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.  

ஒவ்வொரு முறை மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்படும்போதும் மரண தண்டனை சரியே என்றும் தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்றும் அபத்தமான ஒரு கருத்தியல் முன் வைக்கப்படுகிறது.  

நாட்டைச் சீரழிக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் பெருமளவு குற்றச்செயல்களுக்குக் காரணமாக இருந்தார்கள் என்ற விடயம் தெரிய வந்தபோது, பொதுமக்கள் மத்தியில் குற்றவாளிகள் மீதான வெறுப்புணர்வு கொந்தளிக்கின்றது.  

குற்றச்செயல்களின் தோற்றுவாய் எது?

ஏழை, பணக்காரன்என்ற வர்க்கங்கள் உருவானபோதே அரசுகள் தோன்றியதாகக் கூறுவார் லெனின். அந்த அரசுகளின் இரட்டைக் குழந்தைகள்தாம் குற்றச்செயல்கள்.  

ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளே குற்றங்கள் பல்கிப் பெருக காரணமாக அமைந்தன.சக மனிதனின் உழைப்பை உறிஞ்சி,செல்வம் சேர்க்கத் தொடங்கிய முதல் மனிதனிலிருந்து “குற்றம்” மனித வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது.  

உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி, அபரிமிதமான செல்வம் ஓரிடத்தில் குவியக் காரணமாக அமைந்தது. செல்வம் அதிகரிக்க அதிகரிக்க‌, அபகரிப்புகளும் அதிகரித்தன. அதிகமாக அபகரித்த ஒருவனிடமே செல்வம் மீண்டும் மீண்டும் சென்று சேர்ந்தது. அதிகமாக குவிந்த செல்வத்தைப் பாதுகாக்க, அவன் படைகளை வைத்துக் கொண்டான். அவனே சட்டங்களை எழுதினான். எல்லாவற்றையும் அவனே தீர்மானித்தான். அதிகாரம் தனக்கு மட்டுமே உரியது என்று உரக்கக் கூவினான். அவனே எல்லா உடமைகளையும் அபகரித்ததால், மற்ற மக்கள் ஏதும‌ற்ற‌ ஏழைக‌ளாய், கொடூரமாக‌ ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர், என்பது லெனினின் கருத்து.  

த‌ம்மைப் போன்ற‌வ‌ர்க‌ளின் துய‌ருக்கு அதிகார வர்க்கத்தின் சுர‌ண்ட‌ல் தான் கார‌ண‌ம் என்ற‌றியாத‌ ம‌க்க‌ளில் ஒவ்வொருவ‌ரும், த‌ன்னைச் சுற்றிய‌ அனைத்து ம‌னித‌னையும் போட்டியாளனாக‌ பாவிக்க‌த் தொட‌ங்குகின்ற‌ன‌ர். வறிய நிலைக்கு வலிந்து தள்ளப்பட்ட ம‌க்க‌ளின் எதிர்வினை, இருவேறு வித‌மாக‌ ந‌ட‌க்கிற‌து. ஒரு பிரிவு த‌ற்கொலை, பிச்சையெடுத்த‌ல், ம‌னப்பிற‌ழ்வுக்குள்ளாத‌ல் என்று தன்னைத் தானே வ‌ருத்தி அழிகிற‌து. இன்னொரு பிரிவு திருட்டு, கொள்ளை என்ற‌ சிறு குற்ற‌ங்க‌ளாக‌த் தொட‌ங்கி, ஒரு க‌ட்ட‌த்தில் தொழில்முறை குற்ற‌வாளிக‌ளாக‌ உருமாறுகின்ற‌து. இதனை ஒருவ‌கையில் அமைப்பாக்க‌ப்ப‌டாத‌, திசை வ‌ழி தெரியாத‌, இல‌ட்சிய‌மில்லாத ஒரு வ‌ர்க்க‌ப்போராட்ட‌ம் என‌லாம். அத‌னால் தான் திருட்டை “மூல‌த‌ன‌த்திற்கெதிரான‌ முத‌ல் தாக்குத‌ல்” என்றார் கார்ல் மார்க்ஸ்.  

தனது சுரண்டலை மறைக்க ஆளும் வர்க்கம் எப்போதுமே குற்றங்களுக்குத் தனி நபரையே பொறுப்பாளியாக்குகிறது. எமது ஆட்சி எப்போதுமே சரியானது தான். கெட்டவர்களான குற்றவாளிகள் அதில் முளைக்கிறார்கள். அவர்களைக் களையெடுப்பதன் மூலமே இந்த உன்னதமான சமூகத்தை நாங்கள் காக்கிறோம் என்பது தான் ஆளும் வர்க்கங்கள் நமக்கு சொல்ல வரும் செய்தி என்கிறார்கள் அறிஞர்கள்.  

மரண தண்டனைக்கு உள்ளாகும் நபரைத் தவிர,இந்தச் சமுதாயம் மேன்மையாக இருக்கிறது என்று அனைவரும் நம்ப வேண்டும். அதாவது அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஏற்றத்தாழ்வான சுரண்டல், சமூக அமைப்பை யாரும் குறைகூறக் கூடாது என்பது ஆட்சியாளர்களின் நோக்கம்! பணக்காரர்கள் சட்டத்தை ஆள்கின்றார்கள். சட்டம் ஏழையை ஆள்கின்றது! என்ற கருத்தை இலங்கையின் அண்மைய நிலவரங்கள் மாற்றியமைத்துள்ளதையும் இங்குக் குறிப்பிட வேண்டும்.  

மரண தண்டனை வழங்கி குற்றத்தைக் குறைக்கலாமா?

மர‌ண‌ த‌ண்ட‌னைக‌ள் அச்ச‌ உண‌ர்வைத் தோற்றுவிக்க‌க் கூடிய‌வை என்ற‌ க‌ருத்து நம் எல்லோரையும் ஆட்டிப்படைத்துக்ெகாண்டிருக்கிறது. மரண தண்டனை குற்றங்களைக் குறைத்துவிடும் என்பது மக்களின் எண்ணம். அதுதான் சவூதியிலும், மத்திய கிழக்கிலும் கொடுக்கும் தண்டனையைப்போன்று இங்கும் வழங்க வேண்டும் என்றுகூடச் சொல்கிறார்கள்.  

அந்த நாடுகளில் குற்றங்கள் குறைந்துள்ளனவா? இல்லை.  

மாறாக வருடாந்தம் மரண தண்டனை வழங்கும் வீதம் அதிகரித்துக்ெகாண்டுதான் இருக்கிறது. எந்த‌ வ‌கைக் குற்ற‌மும் ம‌ர‌ண‌ த‌ண்ட‌னை குறித்து அஞ்சுவதில்லை. ஆக‌வே, ம‌ர‌ண‌ த‌ண்ட‌னைக‌ளால் சமுதாயத்தை ஒன்றும் செய்ய‌ முடிவ‌தில்லை. வரலாறும் அதன் அடிப்படையிலான புள்ளி விவரங்களும் முற்று முழுதான ஆதாரங்களுடன் ஒன்றை நிரூபித்துள்ளன; அதாவது, தண்டனையால் உலகம் அச்சுறுத்தப்படவோ குற்றங்கள் குறைக்கப்படவோ இல்லை.  

த‌ண்ட‌னை முறைக‌ள் க‌டுமையாக‌ இல்லாத‌ நாட்டில், குற்ற‌ங்க‌ள் ஊற்றெடுப்ப‌தில்லை. ச‌மூக‌ பொருளாதார‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ள் கொண்ட‌ சுர‌ண்ட‌ல் அமைப்பே, குற்ற‌ங்க‌ள் பெருக‌க் கார‌ண‌மாக‌ அமைகின்ற‌ன‌. நோர்வே உள்ளிட்ட நாடுகளை உற்று நோக்கினால் இந்த உண்மையை நாம் புரிந்துகொள்ள முடியும்.  

மரண தண்டனை முறை ஏன் வெறுக்கப்படுகிறது?

ஐக்கிய நாடுகள் சபையிலுள்ள நாடுகளில் 102நாடுகள் மரண தண்டனையை நிறைவேற்றுவதில்லை. 39நாடுகளில் மரண தண்டனை இல்லை. 48நாடுகளில் அமுல்படுத்தப்படுகிறது. இதில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அடக்கம். ஐக்கிய நாடுகள் சபையில் ஆறு தடவை நடந்த வாக்ெகடுப்பில், தண்டனையை நிறைவேற்றுவதில்லை என்ற முடிவுக்கு மாறாகவே இந்தியா வாக்களித்திருக்கிறது.  

2018டிசம்பரில், மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதில்லை என்று நடத்தப்பட்ட வாக்ெகடுப்பில் 120நாடுகளுடன் இலங்கையும் வாக்களித்திருக்கிறது, ஆனால், இல்லையென்று மற்றொரு தரப்பு சொல்கின்றது. என்றாலும், இலங்கையில் அதிகரித்துச்செல்லும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு மரண தண்டனை அவசியம் என்கிறது இன்னும் ஒரு தரப்பு. ஜனாதிபதி தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இந்த நிலைப்பாட்டில் இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி மாற்றுக்கருத்தைக் கொண்டிருக்கிறது.  

மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் சிலவேளை, நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிடலாம் என்பதால்தான், அதனை வேண்டாம் என்றோம், என்கிறார்கள் ஒரு தரப்பினர். அதற்கு மட்டக்களப்பு வவுணதீவு சம்பவத்தை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்கள் செய்த கொலைக்குற்றத்துக்காக, அஜந்தன் என்ற ஓர் அப்பாவி கைதுசெய்யப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். ஏப்ரல் குண்டுத்தாக்குதலின் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் உண்மையான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார். தற்செயலாக குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருக்காவிட்டால், அஜந்தனே குற்றவாளி! ஒன்றில் சிறைவாசம், அல்லது மரண தண்டனை என்ற நிலைக்கு ஆளாக்கப்பட்டிருப்பார்.  

மற்றையது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நேரடியாகச் சம்பந்தப்படாதவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை. இதில் ராஜீவ் காந்தியை கொல்லப் பயன்படுத்தப்பட்ட பெல்ற் குண்டை இயக்க 9வோல்ட் பற்றரி வாங்கிக் கொடுத்தார் என்பது மட்டுமே பேரறிவாளன் மீது சுமத்தப்பட்ட குற்றம். அதனை அவர் வாங்கிக் கொடுத்ததாக அவர் வாயாலேயே அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு அவர் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார். அஃது உண்மையென்றே ஏற்று நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. கொலைக்கு உதவியவருக்கே மரண தண்டனை என்றால், கொலை செய்தவருக்கு என்ன தண்டனை? என்ற கேள்வி எழுகிறதல்லவா!  

27வயதான மூதூர் பெண் ரிசானா நஃபிக், தான் வேலை செய்யும் வீட்டில் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது மூச்சுத் திணறி இறந்து விட்டது என்ற காரணத்திற்காக, கொலை வழக்கு தொடுக்கப்பட்டு (பத்து ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பின்) சிரச்சேதம் செய்து சவூதி அரசால் கொல்லப்பட்டார். அடுத்த வாரமே, ஒரு இமாம், 5வயது குழந்தையை வல்லுறவு செய்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டார். காரணம் அவர் சவூதி நாட்டின் ஷேக்குகளில் ஒருவர்.  

இன்னும், போதைப்பொருள் வழக்கில் இந்தோனேசியாவில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கையர் மயூரனின் இறுதித் தருணம்; சிறுமி சேயா சௌதமி கொலைச் சம்பவத்துடன் தொடர்பு எனக் கைது செய்யப்பட்ட 17வயது மாணவனை, பொலிஸாரும் ஊடகங்களும் அவசர அவசரமாகக் கொலையாளியாக்கி, அவரது பெயரை நாசமாக்கிய சம்பவம் உள்ளிட்டவை மரண தண்டனையை வெறுக்கும் காரணிகளாக இருக்கின்றன. இதில் அரசியல் சதுரங்க விளையாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், உண்மையான காரணங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  

இலங்கையில் தற்போதைய சட்டத்தின்படி இரண்டு கிராம் ஹெரோயின் வைத்திருந்தாலும் மரண தண்டனை. ஆனால், மரண தண்டனை வழக்ைக விஞ்ஞான ரீதியில் மீளாய்வு செய்யும் வசதிகள் இன்னும் இலங்கையில் இல்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதேநேரம், தண்டனைகள் அதிகரிப்பட்டால் குற்றங்கள் குறையுமென்பது நிரூபிக்கப்படாத ஒரு கருத்தாகவே இருந்து வருகிறது.  

"தண்டனைகள், குற்றம் புரிந்தவர்கள் திருந்த அளிக்கும் ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டுமே தவிர, குற்றம் புரிந்தவர்களை அழித்தொழிக்கும் ஒரு கொள்கையாக இருக்கக் கூடாது. ஒரு சிறைக்கைதியை எப்படி நடத்துகிறோம் என்பதைப் பொறுத்து தான் ஒரு நாகரிகமான சமுதாயத்தை அடையாளம் காண முடியும்" என்கிறார் இந்திய நீதியரசர் கிருஷ்ணய்யர். மரண தண்டனைக்கு எதிராகக் குரல் எழுப்பியதுடன், பல தீர்ப்புகளையும் வழங்கியவர் அவர்.  

என்னதான் மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தாலும், இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற நீதிக்குப் புறம்பான பல்வேறு கொலைச்சம்பவங்களையும் மீட்டிப்பார்ப்பது பொருத்தமானதாகவிருக்கும். ஏனெனில், தற்போது நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படப்போவதாகக் கூறப்பட்டுள்ளதைப் பல அரச சார்பற்ற நிறுவனங்களுடன் அரசியல் கட்சிகளும் இணைந்து எதிர்த்து வருகின்றன.  

1971ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜேவிபி கிளர்ச்சியின்போது  நூற்றுக்கணக்கான சடலங்கள் ஆற்றில் மிதந்ததுடன் மேலும் பல நூற்றுக்கணக்கானவை டயர்கள் ​போட்டு வீதிகளில் எரியூட்டப்பட்டன. சுமார் 20 ஆயிரம் சந்தேக நபர்கள் அவ்வாறு கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அப்போதைய அரசாங்கம் அதனை மறுக்கவும் இல்லை; கொல்லப்பட்டமைக்கான காரணத்தைச் சொல்லவும் இல்லை. அதே நிலைமை 1988, 89காலப்பகுதியிலும் இடம்பெற்றது. 1995/1996 காலப்பகுதியில் வடக்கில் நிலவிய போர்ச்சூழலில், சுமார் 600 இளைஞர்கள் காணாமல்போனதாகச் சொல்லப்பட்டது. அதற்குப் பின்னரும் பலர் கடத்திக் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவைகளும் ஒரு விதத்தில் மரண தண்டனையே என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

வரலாறுகளைப் பின்னோக்கிப் பார்க்கும் அதேநேரம், சில தினங்களுக்கு முன்னர் காலி, அக்மீமனையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இதற்குச் சான்று பகர்வதாகவே அமைகிறது. சுகவீனமடைந்த தனது பிள்ளையைப் பார்க்கச் சென்ற தந்தையொருவர், பலவந்தமாகப் பாடசாலைக்குச் செல்ல முனைந்தார் என்று சுட்டுக்ெகால்லப்பட்டார். இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் இன்னமும் தென்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், 'ஒருவரைக் கொலை செய்வதன் மூலம் அவருக்குத் தண்டனை வழங்குவது' என்பதிலிருந்த தவறை தற்போதைய நாகரிக உலகம் உணர்ந்திருக்கிறது. ஒருவரைக் கொலை செய்வதன் மூலம் அவருக்குத் தண்டனை வழங்க முடியாது. ஏனெனில், ஒருவர் இறந்த பின்னர் அது அவருக்கான தண்டனையல்ல. மாறாக, அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் உறவுகளுக்குமான தண்டனையே அது என்பதை உணர்ந்துகொள்ளும் பக்குவம் இலங்கையர்களுக்ேக அதிகம் இருக்கிறது என்றால் மிகையில்லை.  

ஆகவே, தண்டனை என்பது ஒருவனை மாற்றுவதற்காக இருக்க வேண்டுமேயொழிய, மாய்ப்பதற்காக இருக்கக்கூடாது என்ற கருத்தை நாம் ஏற்றுக்ெகாள்வோமாக இருந்தால், நாட்டின் சட்ட கட்டமைப்பில் எவ்வகையான மாற்றங்களைச் செய்தால், நாட்டில் சுரண்டல் இல்லாத; அனைவருக்கும் சமமான, சுபீட்சமான ஆட்சியை ஏற்படுத்த முடியும் என்பதைச் சகல தரப்பினரும் இணைந்து ஆராய வேண்டும்!   

விசு கருணாநிதி

Comments