தண்ணீர் யுத்தம் | தினகரன் வாரமஞ்சரி

தண்ணீர் யுத்தம்

'நீர் இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு' என்ற வள்ளுவனின் இரு வரிகளும் நீரின் முக்கியத்துவத்தை மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது.எனது பாட்டனார் சொல்லுவார் தன்னுடைய காலத்தில் சுமார் பத்து அல்லது பதினைந்து அடி கிணறு கிண்டினால் போதும் நீர்ப்பிரச்சினையே இருக்காது என்று.  

இதனையே எனது அப்பா சொல்லும் போது ஒரு ஐம்பது அடிவரை கிணறு ஒன்றை அமைத்தால் போதும் நீர்ப் பஞ்சம் ஏற்படாது என்று கூறுவார்.  

ஆனால் இன்று நான் சொல்வதாக இருந்தால் சுமார் நூறு அடி வரை ஆழமான ஒரு கிணறு அமைத்தால் மட்டுமே தண்ணீருக்கு பிரச்சினை இருக்காது என்பேன்.  

இந்த மூன்று தலைமுறை கருத்துக்களும் எமக்கு மிகப்பெரும் ஒரு எச்சரிக்கை செய்தியை சொல்லி நிற்கின்றன. அதாவது நிலத்தடி நீர் மிக வேகமாக இல்லாது போகிறது என்ற அபாயகரமான செய்தியே அது. இதனையே வருங்காலத்தில் எனது பிள்ளை,பேரப்பிள்ளைகள் எப்படிச் சொல்லப் போகின்றார்கள் என்ற அச்சம் இப்பொழுது எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. அவர்களது காலத்தில் நிலத்தடி நீர் நிலைமை?!  

இந்த நிலைமைக்கு யார் காரணம், நிலத்தடி நீர் ஏன் இவ்வளவு வேகமாக அருகிச் செல்கிறது என்றால் சந்தேகமே இன்றி மனிதனே என்று கண்ணை மூடிக்கொண்டு கூற முடியும். மனித நடவடிக்கைகளின் விளைவே இந்த நிலைமைக்கு காரணம். பூமராங் போன்று மனித குலம் மேற்கொள்கின்ற சூழலுக்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையும் எம்மையே திருப்பித் தாக்குகிறது.  

உலகின் நீர் நிலைமைகள்  

உலகில் உள்ள மொத்த நீரில் சுமார் மூன்று வீதம் மட்டுமே நன்னீராக உள்ளது. அதிலும் இரண்டு வீதம்; பனிக்கட்டியாக காணப்படுகிறது. மிகுதி ஒரு வீத நீரை மாத்திரமே உலகில் உள்ள மக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மிக சொற்பமான நன்னீரும் உலகின் சுற்றுச் சூழல் மாற்றத்தினால் பாதிப்படைந்து வருகிறது.  

1995இற்குப் பின்னர் புவியின் வெப்பம் பெருமளவுக்கு அதிகரித்து வருகிறது. புவியின் சாதாரண வெப்ப அளவின் விகிதம் பெருமளவுக்கு கூடியிருக்கிறது. கரியமிலவாயு, ஓசோன் மண்டலத்தாக்கம், மீதேன், நைதரசன் ஒக்சைட் என்பவற்றோடு காடுகளை அழிப்பதும் எரிபொருட்களின் வெப்பநிலை என்பன புவியின் வெப்பம் அதிகரிப்பதற்கு காரணங்களாக அமைகின்றன. நான்கு இலட்சம் ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு புவியில் காபனீரொட்சைட் அதிகரித்திருக்கிறது என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்குக் காரணம், தொழிற்சாலைகள் என ஆய்வுகள் கூறுகின்றன. இந்தக் கரியமில வாயுவினால் புவிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள மிலன்கோவிட்ச் வலயம் பாதிப்படையும். அதன் விளைவு துருவப் பனி வேகமாக உருகும். இதனால் துருவ நன்னீர் வளம் குறைவடையும்.  

எனவே இருக்கின்ற நன்னீர் வளமும் இவ்வாறு குறைவடைந்து செல்வது எதிர்காலத்தில் மனித குலம் மாத்திரமன்றி உலகில் வாழ்கின்ற அனைத்து உயிரினங்களும் ஆபத்தை எதிர்நோக்கும் நிலையை நோக்கிச் செல்லும் என சூழலியலாளர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இதனை தவிர பெருமளவான காடுகளும் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

 உலகில் வாழ்கின்ற மக்கள் தொகையில் 40வீதத்திற்கு மேற்பட்ட மக்கள் குடிநீர்ப் பிரச்சினைக்கு முகம்கொடுகின்ற மக்களாக காணப்படுகின்றனர். மேலும் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு காரணமாக முன்னைய காலங்களைப் போலன்றி அமில மழை அடிக்கடி பெய்து வருகிறது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இந்த அமில மழை காரணமாக நன்னீர் ஏரிகள் பாதிப்படைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமில மழை அடிக்கடி பெய்து வந்தால் காலப் போக்கில் நன்னீர் ஏரிகள் அதன் நன்னீர் தன்மையை இழந்து விடலாம் என்ற அச்சம் தற்போது தலைதூக்கியுள்ளது. ஜேர்மனி, ஸ்கன்டினேவிய நாடுகளில் பெய்த அமில மழை காரணமாக காடுகளிலுள்ள மரங்களின் இலைகள் ஏன் வேர்கள் கூட அழிந்திருக்கின்றன. இதன் விளைவுகள் கூட நிலத்தடி நீரைப் பாதிக்கின்றன.  

இன்று பூமியில் நிலவுகின்ற நிலையற்ற வானிலை காரணமாக சில இடங்களில் அதிக மழையும், வேறு சில இடங்களில் வறட்சியும் நிலவி வருகிறது.மேலும் புவி வாழ் மக்களின் மூன்றில் ஒரு பகுதியினர் கரையோரப் பிரதேசத்தில் வாழ்கின்றனர். ஆனால் இக்கரையோரப் பிரதேசங்களில்தான் நிலத்தடி நீர் பெருமளவுக்கு வெளியேறி வருகிறது. அத்தோடு கரையோர நன்னீர் வளம் உவர்நீராகவும் மாறி வருகிறது. இந்நிலையில் அதிகளவு நீர்ப்பயன்பாடு உள்ள கரையோரப் பிரதேசங்களின் நன்னீர் வளம் அருகி வருகின்றமையால் எதிர்காலத்தில் இப்பிரதேச மக்கள் தங்களது நீர்த்தேவையினை முற்றுமுழுதாக இறக்குமதி செய்வதன் மூலமே நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை தோன்றலாம்  

உலகில் கிடைக்கக்கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவு நீரால் மாசடைந்து விடுகிறது. ஆண்டுதோறும் 40ஆயிரம் தொன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் குறைவடைந்துனு வருகிறது. உலகில் மூன்றில் ஒருவருக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஐந்தில் ஒருவருக்கு சுகாதாரமான நல்ல குடிநீர் கிடைப்பதில்லை. உலகம் முழுக்க சுமார் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உலகில் 663மில்லியன் மக்கள் பருகும் குடிநீர் சுத்தமானதாக இல்லையென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.  

இலங்கையில் நீர் வளம்  

இலங்கை 445கிலோமீற்றர் நீளமும், 225கிலோமீற்றர் அகலமும் கொண்ட ஒரு சிறிய தீவு. இங்கு 103பிரதான ஆறுகள் காணப்படுகின்றன. இதில் 20ஆறுகளே வருடம் முழுவதும் நீர் பாய்ந்தோடும் ஆறுகளாக உள்ளன. இதனை தவிர சில ஆயிரக்கணக்கான நீர்நிலைகள் (குளங்கள்) உண்டு. ஆனால் இலங்கையை பொறுத்தவரை மத்திய மாகாணத்தை தவிர ஏனைய மாகணங்களில் பெரும்பாலும் வருடந்தோறும் வறட்சி ஏற்பட்டு பொது மக்கள் குடிநீர் உள்ளிட்ட நீர்த் தேவையினை பூர்த்தி செய்துகொள்ள சிரமப்படுவதனை செய்திகள் வாயிலாக அறிந்து வருகின்றோம். தற்போது வடக்கு மாகாணத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. எமது நாட்டைப்பொறுத்தவரை நீர் முகாமைத்துவத்தை முறையாக பின்பற்றவில்லை என்ற விமர்சனம் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது. மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தும் பழக்கத்திற்கு வரவில்லை. நீர் இயற்கையில் இருந்து இலவசமாக கிடைக்கின்ற பொருள் என்ற மனப்பாங்கு மக்களிடம் காணப்படுகிறது. நீர் அருகிவரும் வளம் அதனை திட்டமிட்டு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இன்னும் எம்மிடையே காணப்படவில்லை. நாட்டில் மன்னர்கள் கட்டிய பெரிய குளங்களை தவிர புதிய புதிய குளங்கள் உருவாக்கப்படவில்லை மாறாக ஆயிரக்கணக்கான சிறிய குளங்கள் காணாமல் போய்விட்டன. புதிய நீர் நிலைகளை உருவாக்காத நாம் ஏற்கனவே உருவாக்கிய நீர் நிலைகளை மூடி கட்டடங்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றோம். வடக்கில் பல கிராமங்ளின் பெயர்களில் மாத்திரமே குளங்கள் காணப்படுகிறது. ஆனால் அந்த ஊர்களில் குளங்களை காணவில்லை. முன்னர் இந்த இடத்தில் ஒரு குளம் இருந்தது என கதைகள் சொல்வது போல் சொல்லி கடந்து செல்கின்றோம்.  

எனவே இதன் விளைவு நாம் எமது வருங்கால சந்ததியினருக்கு வறண்ட பூமியை விட்டுச்செல்பவர்களாக இருக்கப்போகின்றோம்.  

தண்ணீருக்கான யுத்தம் சாத்தியமா?  

நீரை ஆக்கிரமிக்கும் உலகின் திட்டத்தின் வடிவமாக காட்ஸ் என்ற ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது. இவ் ஒப்பந்தம் ஒரு நாடு தமது துறைகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடுவது பற்றிக் கூறுகிறது. அதில் முக்கியமாகத் தண்ணீரை தனியார் மயமாக்குவதில் தீவிர கவனம் செலுத்துகிறது.  

தண்ணீரை விழுங்கும் காட்ஸ் ஒப்பந்தத்தில் தண்ணீர் தொடர்பான பல சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் சில தண்ணீர் இயற்கையின் கொடை என்பதனையோ, மனிதனின் அடிப்படை உரிமை என்பதனையோ காட்ஸ் ஏற்கவில்லை. இதன்படி தண்ணீர் ஒரு விற்பனைச் சரக்கு.  

குடிநீர் விநியோகம் காசு கொடுப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் சேவை எனவும் பன்னாட்டு முதலாளிகள் இதில் முதலீடு செய்தால் அவர்களுக்கு இலாபம் ஈட்டும் உரிமையுண்டு. தண்ணீரின் விலையை நிர்ணயிப்பதில் ஒரு நாட்டு அரசு எந்த விதத் திலும் குறுக்கிடமுடியாது.  

தன்னுடைய வர்த்தகத்தை வளர்க்கும் நோக்கில் ஒரு பன்னாட்டு நிறுவனம் நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தண்ணீரைக் கொண்டு செல்லலாம். அத்தோடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யலாம். இதற்கு அரசுகள் தடைவிதிக்க முடியாது.  

நிலத்தடி நீர் வற்றுவது, சுற்றுச்சூழல், உயிரியல் சூழல், கலாச்சாரம் என எந்தவிதக் காரணத்திற்காகவும் தண்ணீர் விற்பனையின் மீது அரசு தடைவிதிக்கக் கூடாது. அவ்வாறு தடைவிதிப்பது சுதந்திர வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கையாகவே கொள்ளப்படும்.  

குடிநீரின் தரம் குறித்து எந்த அரசும் தன்னிச்சையாகச் சட்டம் இயற்றவோ, அதன் அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கவோ கூடாது.  

(தேசிய சட்டங்கள் உள்நாட்டு கம்பனிகளை மட்டுமே கட்டுப்படுத்தும் உலக வர்த்தக கழகத்தின் விதிமுறைகள் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் உள்நாட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பன்னாட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்தாது.  

இவ்வாறு தண்ணீர் தொடர்பாக காட்ஸ் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் காணப்படுகின்றது. இவற்றோடு மேலும் பல விதிமுறைகளை இவ்வொப்பந்தம் கொண்டுள்ளது. நம்பமுடியாததாகவும்இ நடக்க முடியாததாகவும் தோன்றலாம். ஆனால் உண்மை.  

காட்ஸ் ஒப்பந்தம் பெருமளவுக்கு வளமிக்க ஏழை நாடுகளை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்படி இவ் வளமிக்க ஏழை நாடுகள் தங்களது துறைகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிட மறுக்கும் சந்தர்ப்பங்களில் அவை வல்லரசுகளின் மிரட்டல்களையும், பொருளாதாரத் தடைகளையும் எதிர்கொள்ள வேண்டிவரும். இவ்வாறான நிலைமைகள் நாடுகளிடையே பரஸ்பர நல்லுறவைச் சீர்குலைக்கும். இதனால் வளமுள்ள வலுவற்ற நாடுகள் வல்லரசுகளின் அழுத்தங்களை எதிர் கொள்ள அணிசேர முற்படும் இந்நிலைமை உலக அமைதிக்கு மேலும் கேடு விளைவிப் பதாக அமையும்  

 அவ்வாறே அமெரிக்கா, கனடா,மெக்சிகோ நாடுகளில் 'நோப்தா' என்கிற ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் உண்டு. இவ்வொப்பந்தமும் தண்ணீரை ஒரு விற்பனைச் சரக்காக கருதுகிறது. இந்த ஓப்பந்தம் மூலம் நாடுகளுக்கிடையே தண்ணீர்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு கட்டத்தில் இதில் ஏற்படுகின்ற முரண்பாடுகளும் அந்த நாடுகளுக்கிடையேயான உறவு நிலைகளில் பாதிப்பினை ஏற்படுத்தும்  

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டிக் பிராந்திய மலை முகடுகளுக்கு ரஷ்யா உரிமை கோரியதும் அதனால் ரஷ்ய எதிர்ப்பு நாடுகள் சீற்றமடைந்தமையையும் கவனத்தில் கொள்ளலாம். அதாவது ஆட்டிக் சமுத்திரத்திலுள்ள மலைப் பகுதிகள் ரஷ்யாவின் ஒரு பகுதி என அந்நாட்டு ஆய்வுக்குழு தெரிவித்த கருத்திற்கு அமெரிக்கா, கனடா, டென்மார்க் போன்ற நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமையோடு ரஷ்யாவின் செயற்பாட்டினை அமெரிக்கா ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக சித்தரித்துள்ள மையும் இரண்டு நாடுகளிடையே பரஸ்பர கருத்து முரண்பாட்டிற்கும் கொண்டு சென்றிருக்கின்றன.இப்பிரதேசக் கடலில் 1,0000பில்லியன் தொன் எரிபொருள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அத்தோடு அதன் மலைப் பகுதிகளிலிருந்து தூய்மையான குடிநீரையும் பெற்றுக்கொள்ளலாம். ஒரு காலத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் இப்பிராந்தியத்திலிருந்து குழாய் வழி மூலம் ரஷ்யாவுக்கு தூய குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியும். இதன்காரணமாகவே குறித்த ஆட்டிக் பிராந்தியத்திற்கு நாடுகள் போட்டிபோடுகின்றன. இவ்வாறு பல உதாரணங்களை கூறலாம்.

எனவே, இதனடிப்படையில் விடயங்களை ஆராய்ந்தால் வலுவுள்ள நாடுகள் இப்போதே தண்ணீரையும் இலக்கு வைத்து ஒப்பந்தங்களை மேற்கொள்வதும், அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதும் கண் முன்னே இடம்பெற்று வருகிறது.நீர் வளம் வேகமாக குறைவடைந்து செல்கிறது என்ற ஆய்வுகளின் விளைவுகளாக இவை இடம்பெறுகின்றன. உள்ளுர்களில் இப்போதே தண்ணீருக்கான போரட்டங்கள் இடம்பெற்று வருகிறது. இது நாளடைவில் நாடுகளுக்கிடையே இடம்பெறாது என்ற எந்த உத்தரவாதமும் இல்லை. ஒரு காலத்தில் எரிபொருளுக்காக போரிட்ட நாடுகள் வரும் காலத்தில் தண்ணீருக்காக போரிடுவார்கள் என்ற அச்சமும் எதிர்வு கூறல்களும் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றேன். எது எப்படியோ தண்ணீருக்கான பனிப்போர் இப்போது இடம்பெற ஆரம்பித்துவிட்டது.   

-மு.தமிழ்ச்செல்வன்  

 

Comments