பொருளாதார அபிவிருத்திக்கு மத்தியிலும் அரசியல் வங்குரோத்து நிலையை எட்டிய ஜே.ஆர் ஆட்சி! | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதார அபிவிருத்திக்கு மத்தியிலும் அரசியல் வங்குரோத்து நிலையை எட்டிய ஜே.ஆர் ஆட்சி!

1997ல் கொண்டுவரப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை இலங்கை பொருளாதார வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. வெளிநாட்டு வர்த்தகம் மீதான தடைகள் பெருமளவுக்கு நீக்கப்பட்டன. நிர்வாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. உலகமயமாக்கல் செயல் முறையில் இலங்கைப் பொருளாதாரம் இறுக்கமாக இணைக்கப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்டன. வெளிநாட்டு மூலதனப் பொருள் இறக்குமதிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன. இலங்கையர்கள் வெளிநாடுகளில் தமது தொழில் வாய்ப்புகளை பெற ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டது. முன்னைய ஏழாண்டு கால ஆட்சியுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பொருளாதாரம் சென்று கொண்டிருந்த திசைக்கு நேரெதிரான திசையில் பயணிக்கத் தொடங்கியது. அடுத்துவந்த நான்கு ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் துரிதமாக அதிகரித்தது. 

மோட்டரோலா போன்ற கம்பனிகள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்தன. லேமன் பிரதர்ஸ் போன்ற நிதி நிறுவனங்களும் இலங்கையை முதலீட்டு வாய்ப்புக்கான ஒரு சிறந்த தலமாக அடையாளம் கண்டன. எவ்வாறாயினும் 1982ல் அரசாங்கம் பொதுத்தேர்தலை பின்போட்டமையால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி 1983ல் ஏற்பட்ட இனக்கலவரம் என்பன ஒன்றிணைந்து வன்முறைச் சூழலை உருவாக்கவே மேலே சொன்ன முதலீட்டு வாய்ப்புகள் முற்றாக அற்றுப் போயின. அபிவிருத்திக்கான இரண்டாவது பொன்னான வாய்ப்பையும் இலங்கை இழந்தது. 

அரசியல் ரீதியான தூர நோக்கற்ற சிந்தனையும் சுயநலப்போக்குமே இவ்வாய்ப்புகள் அற்றுப்போகக் காரணமாகியது. 1977ல் அடுத்த ஆண்டுக்கான பாதீடு கடும் பிரயத்தனத்தின் பின்னரே நிறைவேற்றப்பட்டதையும் அதனைத் தொடர்ந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தோற்று விக்கப்பட்டதையும், நாட்டில் அரசியல் உறுதிப்பாட்டை பேணும் நோக்கில் ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளாக அமைந்திருந்தன. 

தேச விரோத குற்றச் சாட்டில் பிரதான எதிர்க்கட்சியாகிய சுதந்திரக் கட்சியின் தலைவரினதும் அதன் முக்கிய உறுப்பினர்களினதும் குடியுரிமை அரசியலில் ஈடுபட முடியாதவாறு பறிக்கப்பட்டது. 

1982ல் நடத்தப்படவேண்டியிருந்த பொதுத் தேர்தலுக்கு பதிலாக மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு ஆட்சிக்காலம் நீடிக்கப்பட்டது. இந்தியாவின் நக்சலைட் தீவிரவாத குழுவின் அச்சுறுத்தல் இருப்பதால் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது அரசியல்வாதிகளுக்கு ஆபத்து என்பதால் அதற்கு பதிலாக கருத்துக்கணிப்பு நடத்தப்படுவதாக காரணம் சொல்லப்பட்டது. ஆனால் 5/6 பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் தக்க வைத்துக் கொள்வதே இதன் பிரதான நோக்கமாக இருந்தது. புதிய அரசியல் யாப்பின் கீழ் தேர்தல் நடத்தப்பட்டால் அப்படி ஒரு பெரும்பான்மையை பெறமுடியாது என்பது வெளிப்படையான ஒன்றாகும். எனவே தனது இரண்டாவது ஆட்சிக்காலம் முடிவடையும் வரை அந்தப் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்வதற்காக ஜே.ஆர். நரித்தனத்துடன் மேற்படி நடவடிக்கையை மேற்கொண்டார். 

1978ஆம் ஆண்டின் புதிய அரசியல் யாப்பும் அதன்கீழ் உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் நாட்டில் ஒரு “அரக்கத்தனமான” ஆட்சியை கட்டவிழ்த்து விட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் மட்டுமன்றி அப்பதவியை அலங்கரித்தவர்களும் கூட கூறுகின்றனர். உதாரணமாக சந்திரிக்கா குமாரதுங்க அம்மையார் அப்பதவியை மிகக் கடுமையாக தூற்றியவர் அதை ஒழிப்பதாக சபதம் பூண்டே ஆட்சிக்கு வந்தார். ஆனால் அந்தக் கதிரையில் அமர்ந்ததும் எல்லாம் தலைகீழாக மாறிப்போனது. அதேபோலத்தான் ஏனையவர்களும் அது மோசமானது என்றனர். ஆனால் அதிலேயே தொடர்ந்தும் அமர்ந்து ஆட்சி செய்ய ஆசைப்பட்டனர். எவ்வாறாயினும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மூலம் நாட்டுக்கு உகந்த நல்ல தீர்மானங்களை எடுக்க முடியும் என்பதையும் மறைப்பதற்கில்லை. 

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, தென்கொரியா போன்ற கிழக்காசிய நாடுகளிலும் இத்தகைய நிறைவேற்று அதிகாரமிக்க பதவிகள் காணப்பட்டன. அப்பதவிகளிலும் இருந்தவர்கள் ஜனநாயக விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். என்றாலும் அவற்றின் பொருளாதாரங்கள் வளர்ச்சியடைந்தன. அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது சமூக ரீதியிலான முன்னேற்றங்களும் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்டன. அதற்கு காரணம் ஆட்சியாளர்களின் தூரநோக்கு சிந்தனையும் இலக்குகளை அடிப்படையாக வைத்து திட்டங்களை வகுத்ததையும் அவற்றை நோக்கி விடாமல் முன்னோக்கிச் சென்றமையும் ஆகும். இந்நடவடிக்கையின் போது ஜனநாயக விரோத நடவடிக்கைகள் தாராளமாக இடம்பெற்றன. இந்தோனேஷியா, மலேஷியா போன்ற நாடுகளில் ஊழல்களும் தாராளமாக இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆயினும் அந்நாடுகள் முன்னேறிச் சென்றன. அம் முன்னேற்றங்களின் பின்னர் அந்நாடுகளில் சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக பாரம்பரியங்களும் படிப்படியாக முன்னேற்றமடைந்து வருவதையும் காண முடிகிறது. 

இலங்கையைப் பொறுத்தமட்டில் ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யலாம் என்ற போக்கு அரசியல் வாதிகள் மத்தியில் நிலவுவதோடு நாட்டின் பொருளாதாரமும் மக்களும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற சிந்தனையும் காணப்படுகிறது. நாட்டுக்கு அத்தியாவசியமாகத் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் அவற்றுக்குப் பொறுப்புக் கூறவும் வல்லதோர் தலைமைத்துவமும் கூட்டுப் முக்கியமானதோர் குறைபாடாகும். 

1977- – 1988 வரையிலான ஜே.ஆர். ஜயவர்த னவின் ஆட்சிக்காலப் பொருளாதார ரீதியில் சில முன்னேற்றங்களைக் கண்ட போதிலும் அரசியல் ரீதியாக வங்குரோந்து நிலைக்குத்  தள்ளப்பட்டிருந்தது. பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் மக்களில் பெரும்பான்மையானோரைச் சென்றடையவில்லை. 

1983ல் இனக்கலவரம் இலங்கையின் இன்னொரு கோரமுகத்தினை உலகுக்குக் காட்டியது. சர்வதேச ரீதியில் இலங்கையின் சாந்த சொரூபி என்ற வடிவத்தை கிழித்துத் தொங்கவிட்டது. இனப்பிரச்சினை. ஒரு உள்நாட்டு யுத்தமாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. “யுத்தமென்றால் யுத்தம் சமாதானமென்றால் சமாதானம்” என்ற ஜே.ஆரின் அறைகூவல், நிலையை மோசமாக்கி முழு அளவிலான சிவில் யுத்தமாக அதனை மாற்றியது.  மறுபுறம் தெற்கில் படித்த இளைஞர்கள் மத்தியில் அதிகரித்த வேலையின்னையும் திறந்த பொருளாதாரத்தால் ஏற்பட்ட வெளியுலக காட்சிப்படுத்தல்களும் இணைந்து வன்முறை கலாசாரத்தை உருவாக்கியது. அரசுக்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது ஆயுதப் போராட்டம் 1987 – -88 காலப்பகுதியில் முனைப்படைந்து சென்றது. மக்கள் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ‘பிரபலத்தன்மை’ நொந்து நூலாகிப்போனது. 

இந்நிலையிலேயே 1988ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் வந்தது யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற பிரச்சினை ஆளுங்கட்சிக்கு எழுந்தது. ஐக்கிய தேசிய கட்சி ஜாம்பவான்களான காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி போன்றவர்கள் ஓடி ஒளிந்தனர். மக்கள் மத்தியில் சென்று வெட்கமில்லாமல் எவ்வாறு வாக்கு கேட்பது என்ற ‘லட்ஜை’ யின் காரணமாக அவர்கள் வெளியேவர விரும்பவில்லை. அத்தோடு மக்கள் விடுதலை முன்னணி எப்போது உயிருக்கு வேட்டு வைக்குமோ என்ற பயம் இன்னொரு காரணம். இறுதியில் ஜனாதிபதி வேட்பாளர் என்ற தெரிவு ஆர். பிரேமதாஸவிடம் சென்றது.

சிறந்த பேச்சாளரும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார பீரங்கியும் சாதாரண மக்களின் வாழ்க்கை முறை மற்றும் மனப்போக்குகள் பற்றி நன்கு அறிந்தவரும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவருமாகிய பிரேமதாஸ இந்தச் சவாலை ஏற்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

தேர்தல்கள் முறையாக இடம்பெறவில்லை. ஜே.வி.பியின் பயமுறுத்தல்களுக்கு பயந்து மக்கள் வாக்களிப்பு செய்ய முன்வரவில்லை என்று குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோதிலும் தேர்தல் முடிவுகள் ரத்துச் செய்யப்படவில்லை.மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அவர் பதவியேற்றார்.  

‘இருபுறமும் பற்றி எரியும் பந்தம்’ ஒன்று தன்கையில் தரப்பட்டதாக” பிரேமதாஸ ஒரு தடவை கூறினார். ஒருபுறம் தெற்கின் ஜே.வி.பியின் வன்முறை மறுபுறம் வடக்கில் விடுதலைப் புலிகளின் போர். இடையில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் பொருளாதாரம் அவர் கையில் தரப்பட்டது.  

இவ்வாறான ஒரு சூழலில் பதவிக்கு வந்த பிரேமதாஸ, தெற்கின் வன்முறையை இரும்புக் கரம் கொண்டு அடக்க முனைந்தார். வடக்கில் புலிகளோடு பேச்சுவார்த்தைகளுக்கு முன்வந்தார். தெற்கில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அரசாங்கத்தின் ‘இரும்புக் கரங்களில் சிக்கு நசுங்கி உயிர்விட்டனர். டயர்களில் போட்டு வீதியோரங்களில் எரிக்கப்பட்டனர். அரசாங்கம் ஜே.வி.யின் வன்முறையைவிட கடுமையான எதிர்வினை காட்டிய அரசாங்கத்தின் வன்முறை கொடூரமானதாகவும் பலமடங்கு கோரமானதாகவும் இருந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். தெற்கின் கிளர்ச்சி இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டாலும் வடக்கின் பேச்சுவார்த்தைகளும் வெற்றியளிக்கவில்லை. மறுபுறம் பதவியிலிருக்கும் ஜனாதிபதிக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு தோல்வியடைந்தது. இரு பெரும் ஐக்கிய தேசியகட்சித் தூண்களாகிய லலித் அத்துலத்முதலியும், காமினி திசாநாயக்கவும் இதன் பின்னணியில் இருந்தனர். உடனடியாக சுதாகரித்துக் கொண்ட பிரேமதாஸ இருவரையும் கட்சியிலிருந்து நீக்கி விட்டார். அவ்விருவருமே பின்வந்த காலத்தில் அரசியல் மேடைகளிலே கொல்லப்பட்டனர். அக்கொலைப் பழி பிரேமதாஸ மீது போடப்பட்டது. “என்னை வேண்டுமானால் கொல்லுங்கள் ஆனால் சிறுவயதிலிருந்து நான் கட்டிக்காத்த எனது நன்னடத்தையை கொல்லாதீர்கள்” என்று ஆவேசப்பட்ட பிரேமதாச 1993 மே மாதம் முதலாம் திகதி மே தின ஊர்வலத்தின் போது கொல்லப்பட்டார்.      

கலாநிதி எம். கணேசமூர்த்தி, 
பொருளியல்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்.

Comments