மரண தண்டனை தேவைதானா? | தினகரன் வாரமஞ்சரி

மரண தண்டனை தேவைதானா?

பிரிடோ அமை ப்பின் திட்ட இயக்குனர் எஸ்.ஜே. சந்திரசேகரம் 

கடவுள் படைத்த  மனித உயிரை இல்லாமல் செய்ய மனிதனுக்கு உரிமை கிடையாது.   சமூகத்தில் மனிதர்கள்  பல்வேறு குற்றங்களுக்கு ஆளாகிறார்கள். அவர்களை அந்த குற்றங்களிலிருந்து மீட்டெடுத்து அவர்கள் நன்றாக வாழ வழியேற்படுத்த வேண்டும்.  அவன் உயிர்வாழும் உரிமையை எவரும் பறிக்க முடியாது. குற்றமிழைப்பவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைந்து வாழ்கின்ற உரிமையை கொடுக்க வேண்டும்.  

இலங்கையை ஆண்ட  அரசர்கள் பாரிய குற்றங்களைச் செய்திருக்கிறார்கள். அவர்களுக்குகூட தண்டனை வழங்கப்பட்டதாக வரலாறு இல்லை. குற்றங்கள் என்று சொல்லும்போது நாட்டை சூறையாடுபவர்களும்,  அந்நிய நாட்டுக்கு நமது நாட்டை பணயம் வைப்பவர்களும் நாட்டின் பிரஜைகளை சந்தோஷமாக வாழவைக்க முடியாதவர்களும் குற்றவாளிகளே. அவர்களை நாம் என்ன செய்வது? நாட்டின் பாதுகாப்புக்கும் மனித உயிருக்கும் வாழ்க்கைக்கும் உத்தரவாதமில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் அதற்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு தண்டனை வழங்குவதன் மூலம் நாடும் மனிதர்களும் நிம்மதியடைவார்கள். 

குற்றம் புரிபவர்களை தண்டிப்பது இயல்பானது. ஆனால் உயிரைப் பறிப்பது நியதியற்றது.   மரண தண்டனை   மனிதகுலத்திலிருந்து நீக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 

பலாங்கொடை பிரதேச சபை த.மு.கூட்டணி உறுப்பினர்  எஸ். விஜயகுமார்

குற்றவாளிகளைத் தண்டிப்பதை விட குற்றங்களுக்கான பின்னணியைக் கண்டறிந்து அதை முற்றுமாக தடுப்பதே புத்திசாலித்தனம். சமூக விரோதச் செயல்கள் பரவலாக இடம்பெறும் நிலையில் ஒரு சிலரை மட்டும் பொறுக்கியெடுத்து மரணதண்டவனை வழங்குவதன் மூலம் முழுமையான  தீர்வுகிட்டும் என்று எதிர்பார்ப்பது எங்ஙனம்? மனித நாகரிகம்,  பண்பாட்டு விழுமியங்கள் பேணப்படும் நாட்டில் மரண தண்டனை என்பது பொருத்தமானதல்ல.  இஸ்லாமிய நாடுகளிலேயே மரண தண்டனைக்கு எதிரான கருத்தியல் எழுந்துள்ளது.   பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் இவ்வாறான தண்டனைகள் சர்வதேச ரீதியில் இழிவான பார்வைக்கே இடம் தரும். 

ஆசிர்வாதம் பெனடிக் _ இராசக்கல தமிழ் வித்தியாலய முன்னாள் அதிபர், பலாங்கொடை.

ஒரு உயிரைப் பறிப்பது இன்னொருவரின் உரிமை அல்ல.    மரண தண்டனை வழங்குவதால் மட்டும் குற்றங்களைக் குறைக்க முடியாது. அதைவிட சம்பந்தப் பட்டவர்களுக்கு வேறு தண்டனைகளை வழங்கலாம்.  கடத்தல்கார்களின் உடைமைகளை பறிமுதல் செய்வது பொருத்தமான தண்டனையாக  அமையலாம்.  தண்டைனைகள் மட்டுமே சரியான தீர்வாக இருக்குமானால் குற்றங்கள் என்றோ குறைந்து போயிருக்க வேண்டுமே!  போதை வர்த்தகம் இன்று அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் ஓங்கி நிற்கின்றது. சமூக ரீதியிலான சீர்கேடுகளை ஏற்படுத்துகின்றது. வள்ளுவர் வாக்கு சொல்கிறது.  

நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் சொல் அவ்வளவுதான்.  

 

 

பா.சிவநேசன் _  தொழிலாளர் தேசிய சங்க இளைஞர் அணித் தலைவர்.

மரண தண்டனை என்பது ஒரு உயிரையே பறிக்கும் ஆணை. ஒரு மனிதன் பிழை செய்தால் அவன் மீண்டும் பிழை செய்யாமல் திருந்தி வாழ வேண்டும் என்பதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அந்த சட்டத்தினூடாக ஒரு உயிரை எடுக்கும் செயலை ஏற்க முடியாது.  ஒருவன் தவறு செய்தால் அவனுக்கு திருந்திவாழ  சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும். 

இன்று எத்தனையோ உலக நாடுகளில் மரண தண்டனை இல்லை. குற்றம் செய்பவனுக்கு பலவிதமான தண்டனைகளை வழங்குகின்றார்கள்.  அவர்கள்   திருந்தி வாழ வேண்டும் என்பதற்காகவே. ஆனால் ஒரு மனிதனுடைய உயிரை எடுக்க இன்னொரு   மனிதனுக்கு கிடையாது.   அவர்களுக்கு வேறு தண்டனைகளை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்யாமல் அவர்களின் உயிரை பறிக்க நினைத்தால் அவர்கள் திருந்துவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்படுகின்றது என்பதே அர்த்தம்.   எனவே இங்கு மரண தண்டனை பொருத்தமில்லை.

 

 

 நாதன்  – ஆசிரியர் நுவரெலியா சரிவேரியார் பாடசாலை

மரண தண்டனை வழங்குவதற்கு முன்னர்  சரியான குற்றவாளியை இனங்கண்டே வழங்க வேண்டும். அவ்வாறு சரியான குற்றவாளிகளை இனங் கண்டுக்கொள்ள முடியுமா? என்பதே ஒரு கேள்விக் குறியாகவுள்ளது. மரணதண்டனை என்பது இந்த உலகுக்கே பொறுந்தாதபோதும் எப்படி இலங்கைக்கு மாத்திரம் பொருந்தும்?  பிழை செய்வது  மனித இயல்பு. அவன் திருத்தப்பட வேண்டியவன் ஒருவனை நல்வழிப்படுத்தும் வழிவகைகளை கண்டுப்பிடித்து அவனை நல்வழிப்படுத்தி ஒரு சமுதாயத்தில் நற்பிரஜையாக வாழ வைக்க வேண்டிய கடமை ஒரு நாட்டின் தலைமைகளுக்கு உண்டு அதைவிடுத்து அவர்களின் உயிரை எடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.   

 

 

எம்.அஷ்ரஃப் (யாழ்ப்பாண ஒஸ்மானியா பாடசாலையின் முன்னாள் அதிபர்)  

மரண தண்டனை கொடுக்கக் கூடாது என்பது தான் எனது கருத்து. இறைவன் அளித்த உயிரை அந்த இறைவனே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதை மனிதன் செய்யக் கூடாது. கொலை செய்வது மனிதனுக்கு உகந்தது அல்ல. பிறக்கும் போது அனைவரும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றன. பின்னர் வாழ்க்கைப் பாதை சூழல்கள், சந்தர்ப்பங்கள் காரணமாக மாறிப்போய் விடுகிறது. இன்று உலக அளவிலும் மரண தண்டனைக்கு எதிரான போக்கு வலுவடைந்து வருகிறது. இந்த விடயத்தில் சவூதி அரோபியாவை நாம் உதாரணமாகக் கொள்ளக் கூடாது. அந் நாட்டு சூழல்களும் சட்ட திட்டங்களும் வேறு. இலங்கை ஒரு பௌத்தநாடு. எனவே இங்கே தூக்கு தண்டனை வழங்குவது சரியாக இருக்காது என்பது என் கருத்து. மரண தண்டனை கைதிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும்.  

படைப்பாளர் நி.பி. அருளானந்தம்  

ஒருவருக்கு மரண தண்டனை வழங்கி கொலை செய்து பழி தீர்த்துக் கொள்வது தர்மம் ஆகாது. கிறிஸ்தவ ரீதியாகப் பார்ப்போமானால் கருக்கலைப்பும் கொலையாகவே பார்க்கப்படுகிறது. மேரி மக்தெலன் என்ற பெண்ணைக் கல்லால் அடித்து கொலை செய்ய முயலும் கூட்டத்தினரிடமிருந்து அவளை இயேசு காப்பாற்றுகிறார். எனவே மரண தண்டனை அளிக்கப்படக்கூடாது மரண தண்டனை அச்ச உணர்வை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் கிடையாது. பலவீனமான நிலையிலும் சுய பாதுகாப்புக்காகவும் நிகழ்த்தப்படும் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும். மன்னித்தல் மாற்றங்களைக் கொண்டுவரும்.  

சாமிநாதன் விமல் மொழியியல்துறை விரிவுரையாளர் – யாழ். பல்கலைக்கழகம்  

மரண தண்டனை என்பது நாகரிகமடைந்த சமூகத்தை அடையாளப்படுத்தாது. மரண தண்டனைக்குப் பதிலாக வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கலாம். வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவது என்பது மரண தண்டனையை விடக் கொடுமையானது. போதைப் பொருள் குற்றவாளிகளை எடுத்துக் கொண்டால் அவர்களில் மிகப் பெரும்பாலானோர் கடை நிலையில் கிராம் கணக்கில் வைத்திருந்த குற்றங்களைச் செய்தவர்கள். போதை கடத்தலின் சூத்திரதாரிகள் வெளியில் சுதந்திரமாகத் திரிகிறார்கள். தண்டனை வலயத்துக்குள் இவர்கள் சிக்குவதில்லை. மேலும் அனைத்துமே அரசியல் மயமாகி வருவதால் விசாரணைகள் நீதியாக நடைபெற்று தண்டனை வழங்கப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் மரண தண்டனை பெற்றவர் உண்மையாகவே மரண தண்டனைக்கு உரியவர்தானா? என்ற கேள்வியும் எழுகிறது. இந்தப் பாடசாலை கொலையை எடுத்துக் கொள்ளுங்கள். அது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லவா?   

பெருமாள் பத்மநாதன், வர்த்தகர்

 மரண தண்டனை கொடுப்பதை வரவேற்கிறேன். இதனால் நாடு முன்னுக்கு வரும். நாடு களவானிகள் அதிகரித்துள்ளனர். இத்தண்டனை மூலம் மற்றவர்கள் திருந்துவதற்கு வாய்ப்புள்ளது. சவூதி அரேபியாவில் கொடுக்கும் தண்டனையே இங்கு கொடுக்க வேண்டும். இதற்கான காரணம் சிறைக்குச் செல்கின்றனர். மீண்டும் வந்து   இதனையே மீண்டும் மீண்டுமாக செய்கின்றனர். பிரதான காரணம் போதைவியாபாரிகளாலேயே இந்த நாட்டுக்கு கெடுதல் உருவாகியுள்ளது. இதனாலேயே நாடு சீரழிந்துள்ளது. தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதிக்கு நன்றி கூறுவேன். 

 

  

 

கிராண்ட்பாஸ் முடிதிருத்துனர் குமார்

போதையினாலேயே இளைஞர்கள் அழிந்து கொண்டு போகின்றனர். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டால் சமூகம் சீர்திருந்துவதற்கு வாய்ப்பு ஏற்படும். தூக்குத்தண்டனையை முழுமையாக ஆதரிக்கிறேன். ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு உடன்படுகிறேன்.  

Comments