அந்தமான் நிகோபார் தீவுகள் | தினகரன் வாரமஞ்சரி

அந்தமான் நிகோபார் தீவுகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் தென்கோடியில் வங்காள  விரிகுடாவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய இந்திய யூனியன் (தீவு)  பிரதேசமாகும். சுமார் 8000ச.கி.மீ க்கும் மேற்பட்ட பரப்பளவைக்  கொண்டிருக்கும் இந்த தீவுகளில் இயற்கை வளம் நிறைந்திருக்கிறது. 

அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகரமான போர்ட் பிளேர்  நகரம் முக்கிய போக்குவரத்து இணைப்பான விமான நிலையத்தை கொண்டுள்ளதுடன் அதிகமான மக்கள் வசிக்கும் இடமாகவும் விளங்குகிறது.  போர்ட் பிளேர் நகரத்திலிருந்து சிறு தீவுகளுக்கு பயணம் செய்வதற்கு  பலவிதமான போக்குவரத்து வசதிகள் உள்ளன. கடலுக்கடியில் வீற்றிருக்கும் ஒரு  பெரிய மலைத்தொடரின் வெளிநீட்சிகளே இந்த தீவுகள் என்பது ஒரு வியப்பூட்டும்  புவியியல் உண்மையாகும்.

இந்த கடலடி மலைத்தொடர் அமைப்பு தெற்கு வடக்காக 800  கி.மீ நீளத்துக்கு நீண்டு அமைந்துள்ளது. விமான மார்க்கம் தவிர, சென்னை  மற்றும் கல்கத்தா துறைமுகங்களிலிருந்து ஃபெர்ரி எனப்படும் சொகுசு  பயணக்கப்பல் மூலமாகவும் போர்ட் பிளேர் நகரத்துக்கு பயணம் செய்யலாம். 

அந்தமான் நிகோபார் தீவுகளின் விசேஷ அம்சங்கள் முடிவடையாது நீண்டு  செல்லும் தூய்மையான வெண் மணற்கடற்கரைகள் அலட்டல்கள் அற்ற அமைதியோடு  அந்தமான் நிகோபார் தீவுகளில் படர்ந்து காணப்படுகின்றன.

கடல் ஆழத்தில் மூழ்கி  அற்புதக்காட்சிகளை தரிசிக்க உதவும் ஸ்கூபா டைவிங் எனப்படும் அற்புதமான  கடலடி காட்சிப்பயணம், விதவிதமான தாவரங்கள் மற்றும் வித்தியாசமான  உயிரினங்கள், எந்தவித செயற்கை அழகூட்டலும் செய்யப்படாமல் இயற்கையாகவே  உருவாக்கப்பட்டிருக்கும் அழகு ஸ்தலங்கள் போன்றவை இந்த தீவுப்பகுதிகளில்  காணப்படுகின்றன.   கன்னிமை குறையாத கடற்கரைகள் மற்றும் ஸ்கூபா டைவிங் மட்டுமல்லாமல்  அந்தமான் நிகோபார் தீவுகள் அடர்ந்த வனப்பகுதிகளையும் கொண்டுள்ளன. இயற்கை  வளம் நிரம்பிய இந்த காடுகளில் பல அரியவகை பறவைகளையும் வேறெங்கும் பார்க்க  முடியாத மலர்த்தாவரங்களையும் காணக்கூடியதாக இருக்கும்.

அந்தமான் நிகோபார் தீவுகளில் 2200வகையான தாவர இனங்கள்  காணப்படுகின்றன.  அலங்கார சங்குச்சிப்பிகள்,  முத்துச்சிப்பிகள், கடல் பொருட்கள் போன்றவற்றுக்கான வியாபாரக்  கேந்திரமாகவும் அந்தமான் நிகோபார் தீவுகள் விளங்குகின்றன.  ஸ்படிகம் போன்று ஜொலிக்கும் நீலநிற கடல்நீருடன் பலவிதமான கடல்  உயிரினங்கள் நீருக்கடியில் கூட்டம் கூட்டமாக காட்சி தரும் ஹெவ்லொக் கடற்கரையின் அழகு இந்திய நிலப்பகுதிகளில் வேறு எங்குமே காணக்கிடைக்காததொரு அம்சமாகும்.

மேலும், ஹேவ்லொக் தீவு, சின்கூ தீவு மற்றும் ஜாலிபாய் தீவு ஆகிய  மூன்றையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டங்கள் மஹாத்மா காந்தி மரைன் நேஷனல்  பார்க் (தேசிய கடற்பூங்கா) அல்லது வாண்டூர் நேஷனல் பார்க் என்று  அழைக்கப்படுகிறது. சுற்றுப்புற மாசுப்படுத்தல், ஆக்கிரமிப்பு போன்றவை  கடுமையாக தடைசெய்யப்பட்டு, சூழலியல் சுற்றுலாத்தலமாக பரமாரிக்கப்படும்  இந்த தீவுப்பகுதிகளில் அப்பழுக்கற்ற தீவுக்கடற்கரையின் சொர்க்கம் போன்ற சூழலை பயணிகள் அனுபவிக்கலாம். உயிர்த்துடிப்பின் பிரதிபலிப்பாக பல்வேறு  வடிவங்களிலும் வண்ணங்களிலும் நீந்தித்திரியும் கடலுயிர்கள், படிகம் போன்ற  நீலப்பச்சை நீருக்கடியில் தரிசனம் அளிக்கும் பவழப்பாறை  திட்டுகள்/வளர்ச்சிகள், விதவிதமான மலர்த்தாவரங்கள் மற்றும் காட்டுயிர்கள்  என்று இயற்கையின் அதிசயங்களை   அந்தமான் நிகோபார் தீவுகளில் கண்டுகளிக்கலாம்.

சுஜானி திருஆலன்,
தரம் 10,
வ/இறம்பைக்குளம் ம.மகா. வித்தியாலயம்,
வவுனியா.

 

Comments