ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வைக்க மூன்று தலைவர்களும் அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒரே வட்டமேசையில் ஒன்றிணைய வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.  

தேசிய மொழிகள் வாரத்தின் இறுதிநாள் நிகழ்வு அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.  

அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், 71 வருடங்களாக தொடரும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் திரும்பி பார்த்தால், சரியான தீர்மானங்கள் எடுத்த சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. ஆனால், தவறான முடிவுகள் எடுத்த சந்தர்ப்பங்கள் மிக அதிகமாக உள்ளன. அதனால்தான் இன்றும் நாம் வறுமையான ஒரு நாடாகவும் சமூகமாகவும் உள்ளோம்.  

நாட்டில் அனைவரும் சிங்களம், தமிழ் மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியுமென்றால் அதிகமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும். இன்னும் நான்கு ஐந்து மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் எனப் பலத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.  

ஆகவே, இந்தக் காலப்பகுதியில் மூன்று தலைவர்களும் ஒன்றிணைந்து வட்ட மேசை மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியுமென்றால், எமது எதிர்கால சந்ததிக்கு சிறந்த நாட்டைக் கையளிக்க முடியும்.  

மிகவும் அறிவுசார்ந்த அரசியல்வாதிகள் வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் உள்ளனர்.

அடுத்த தேர்தலின் பின்னராவது இவர்கள் அனைவரும் வெளியில் வந்து நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்வதற்குக் கைகோர்க்கும் பாதையை உருவாக்க வேண்டும் என்றார். 

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

Comments