பொதுஜன பெரமுன மூன்றாக பிளவு | தினகரன் வாரமஞ்சரி

பொதுஜன பெரமுன மூன்றாக பிளவு

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு செயற்படுவதால், எதிர்க்கட்சிக்கு ஏற்பட்டுள்ள பிளவுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு முடிவுகட்ட எதிர்வரும் 9ஆம் திகதி (நாளை மறுதினம்) எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் தீர்மானமிக்க பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது. இப்பிளவுகள் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளமையானது, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பொதுஜன பெரமுனவில் ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு வருகின்றமையாலாகும்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் சமால் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, குமார வெல்கம உட்பட பலரின் பெயர்கள் பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராக பிரேரிக்கப்பட்டுள்ளன. 

கடந்த வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவுக்கு பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பிரபா கணேசன் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதத்தில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் மாநாட்டுக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்றும், கூட்டணி மற்றும் சின்னம் எவ்வாறு அமைய வேண்டுமென்றும் இறுதி முடிவுகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுதியுள்ளனர். 

அத்துடன், மகிந்த ராஜபக்ஷவை நேரடியாக சந்தித்தும் தமது நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்தியுள்ளனர். தினேஷ் குணவர்தன, பேராசிரியர் திஸ்ஸ விதாரன ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திடவில்லையென்பதுடன், பேச்சுவார்த்தையிலும் கலந்துகொள்ளவில்லை.  

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பொதுஜன பெரமுன முன்னெடுத்துவரும் பேச்சுவார்த்தையில் கூட்டணியின் பெயரை ஸ்ரீலங்கா நிதாஸ் பொதுஜன பெரமுன என சூட்டுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. என்றாலும் சின்னம் மற்றும் பதவிகள் குறித்து எவ்வித இணக்கப்பாடும் இதுவரை எட்டப்படவில்லை.  

எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். சு.கவின் முக்கிய உறுப்பினர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments