மாகாண சபைத் தேர்தலுக்கு சட்டச்சிக்கல்; ஜனாதிபதி தேர்தலே முதலில் சாத்தியம் | தினகரன் வாரமஞ்சரி

மாகாண சபைத் தேர்தலுக்கு சட்டச்சிக்கல்; ஜனாதிபதி தேர்தலே முதலில் சாத்தியம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் பெரும் சட்டச் சிக்கல்கள் நிலவுவதால், அந்தத் தேர்தலை நடத்துவது தற்போதைக்குச் சாத்தியம் இல்லை என்றும் ஜனாதிபதி தேர்தலே உடனடியாகச் சாத்தியமானதென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். 

எனினும், நாட்டில் அரசியல் செல்நெறியில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்துச் சிலவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான சூழலும் ஏற்படக்கூடுமென்றும் அவர் எதிர்வு கூறினார். 

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாயிருந்தால், ஒன்றில் பழைய முறைக்ேகா அல்லது புதிய முறைக்ேகா செல்ல வேண்டும். ஆனால், இந்த இரண்டில் ஏதாவதொரு முறைமையில் தேர்தலை நடத்துவதென்றாலும், சட்டச்சிக்கல்கள் நிறைந்து காணப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். 

ஏனெனில், புதிய முறையில் தேர்தலை நடத்த வேண்டும் எனச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளபோதிலும், எல்லை மீள்நிர்ணயம் இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை. எனவே, புதிய முறைக்குச் செல்வதற்குத் தற்போதைக்குச் சாத்தியம் இல்லை. 

அதேநேரம், பழைய முறையில் தேர்தலை நடத்துவதென்றால், மீண்டும் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றாக வேண்டும்.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்தாமல், துரிதமாக நடத்துமாறு உத்தரவிடுமாறு கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதுவரை மாகாண சபைத் தேர்தல் பற்றிச் சிந்திக்க முடியாது.

இவ்வாறான சட்டச்சிக்கல்களுக்கு மத்தியில், சில அரசியல் கட்சிகள் கூறுவதைப்போன்று மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கான சூழல் கிடையாதென்று தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, வேண்டுமானால், எந்தச் சிக்கலும் இல்லாமல் ஜனாதிபதி தேர்தலை இயல்பாக நடத்த முடியுமென்று குறிப்பிட்டார். 

இருந்தபோதிலும், நாட்டின் அரசியல் சூழ்நிலையைப் பார்க்கும்போது இந்தத் தேர்தல்களுக்கு முன்பதாகப் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  

இஃது இவ்விதமிருக்க, பாராளுமன்றத்திற்குத் தற்போது நான்கரை ஆண்டு நிறைவடைந்திருப்பதும்; அரசாங்கத்தின் மீதான நம்பிக்ைகயில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டிருப்பதும் ஓர் ஸ்திரமற்ற அரசியல் சூழலைத் தோற்றுவித்திருப்பதாக அரசியல் கட்சிகளின் தலைவர்களே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

எனவே, அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளும் தீர்மானத்திற்கு அமைய நாட்டில் முதலில் நடைபெறுவது பாராளுமன்றத் தேர்தலாகக்கூட இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

எம்.ஏ.எம்.நிலாம் 

Comments