மைத்திரியை களமிறக்கினால் வெற்றிக்கு பூரண ஒத்துழைப்பு | தினகரன் வாரமஞ்சரி

மைத்திரியை களமிறக்கினால் வெற்றிக்கு பூரண ஒத்துழைப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ வேட்பாளராக நியமித்தால், அவரின் வெற்றிக்காகப் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்று கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கூட்டு எதிரணிக்குள் நிலவி வரும் சர்ச்சைகள் தொடர்பில் “தினகரன் வாரமஞ்சரி” அவரிடம் வினவிய போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாங்கள் அனைவரும் ஒரு கூட்டணியாக உள்ளோம். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ எடுக்கும் முடிவுதான் இறுதி முடிவாகும்.  

ஜனாதிபதி வேட்பாளர் பெயர் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர்தான் முதலில் உள்ளது. இரண்டாவதாக சமல் ராஜபக்ஷவின் பெயர் உள்ளது. அதன் பின்னர்தான் குமார வெல்கம உட்பட பலரின் பெயர்கள் உள்ளன.  

ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு சந்திப்பதெனத் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி வருகின்றோம்.கடந்த வாரம் எமது கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் நடைபெறவில்லை. எதிர்வரும் 9ஆம் திகதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். 

எவ்வாறெனினும் எதிர்க்கட்சித் தலைவர் எடுக்கும் முடிவுதான் இறுதி முடிவாகும். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக தெரிவுசெய்தாலும் அவருக்கு ஆதரவாக நாம் செயற்படுவோம். இதுவரை எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லை என்றார். 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments