அரச அதிகாரிகள், ஊழியர்களை அண்டி பிழைப்பு நடத்துவோருக்கே இழப்பீடுகள் | தினகரன் வாரமஞ்சரி

அரச அதிகாரிகள், ஊழியர்களை அண்டி பிழைப்பு நடத்துவோருக்கே இழப்பீடுகள்

யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகிவிட்டன. மீள் குடியேற்றங்கள் தொடங்கி எட்டுவருடங்களாகி விட்டன. இன்றுவரை மக்கள் தமது பழைய நிலையை அடையவில்லை. ஏதாவது வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களிடம் உதவி பெற முடிந்தோர் மட்டும் கொஞ்சம் தலை நிமிர முடிந்திருக்கிறது.  

 புதிதாக வீடமைப்பதிலும் வீட்டுக்கடன் வழங்குவதிலும் முன்நிற்கும் இந்த உதவி வழங்குநர்கள் சிதைவடைந்த தமது பழைய வீடுகளை மீளமைப்பதற்கோ அல்லது மலசலகூடங்களை செப்பனிடவோ எந்த வசதியும் இழப்பீடும் வழங்க முன்வந்திருக்கிறதா என்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் தமது சொத்திழப்பிற்கான நட்டஈட்டைப்பெற்றிருப்பது தெரிகிறது.  

ஒரு சாதாரண பிரசைக்கு அரசாங்கத்தால் வழங்கப்படக் கூடிய நிவாரணங்கள் என்னென்ன என்பது தெரிவதில்லை. ஆக அரச அதிகாரிகள் ஊழியர்களை அண்டிப்பிழைப்பு நடத்துவோருக்கே தாம் என்ன இழப்பீடுகளை பெறலாம் என்பது தெரிந்திருக்கிறது.  

உதாரணமாக ஒன்று சொல்கிறேன் விவசாயக்கிணறுகளின் திருத்த வேலைகளுக்காக மானியம் வழங்கப்படுவதாகவும் அதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித்தினம் இன்றுதான் எனவும் ஒரு அறிவித்தல் கிடைத்தது. அதை தந்தவர் கச்சேரி ஊழியர் ஒருவரின் உறவினர்தான். அதனை அதை கேள்விப்பட்டவர், ஒரு கிராமிய அமைப்பு மூலமாக அவசர அவசரமாக படிவம் தயாரித்து சமர்ப்பித்து உடனடியாகவே ஒப்பந்தமும் ஒப்பமிட்டு விட்டார். ஒரு மாதத்திற்குள் தனிநபர் ஒருவருடைய பெயரில் அதற்கான காசோலையும் வழங்கப்பட்டுவிட்டது. அதே கையோடு அதே பிரிவில் வேலை பார்க்கும் ஒரு அதிகாரியின் உறவினருடைய வளவிலும் ஒரு கிணற்றுக்கான வேலை ஒப்பந்தமாகியிருந்தது. அந்த வேலையையும் செய்வதற்கான காசோலையை மேற்குறித்த சமூக அமைப்பின் கைக்கே வழங்கினாலும் அந்த அமைப்புக்கு குறித்த காணியோ, அதன் அமைவிடமோ தெரியாது. அதைப்பற்றிய உண்மையை மக்கள் கிளறியபோதுதான் அதுஒரு ஊழல் நடவடிக்கை என தெரிய வந்தது.  

இப்படி எத்தனை திட்டங்கள் அது முடிவடையும் திகதியை அண்மிக்கும் போதுகூட மக்கள் அறிவதில்லை. அதன்பிறகு கேட்டால் அதற்குப் பொறுப்பான அதிகாாிகள் மழுப்பலான பதில்களையே தருகிறாா்கள். எப்பவும் ஒரு ஆசிரியரின் குடும்பம் சந்ததி ஆசிாியா்களாகவே வருவதும், அரச ஊழியா்களின் சந்ததி அரச ஊழியராக வருவதும், வைத்தியசாலை ஊழியர்களின் உறவுகளே அங்கும் வேலைவாய்ப்பை பெறுவதும். இந்த வாய்ப்புகள்பற்றி வெளியுலகம் அறிவதன் முன்பே அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படுவதால்தான்.  

இதேமாதிரித்தான் முன்னாள் போராளிகளுக்கான வேலைத்திட்டங்களும் அதிகமாக செயற்படுத்தப்பட்டு வருவதும். நான் உண்மையாகத்தான் சொல்கிறேன். புனர்வாழ்வுப்பிரிவால் விடுவிக்கப்பட்டவர்களில் இன்னும் எந்த உதவியும் கிடைக்காதவர்கள் இருக்கிறார்கள். மிக முயன்று அவர்களாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு. ஆனால் இராணுவத்தினர் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வேலை வாய்ப்பளித்துள்ளனர். அது வாழ்க்கைக்கு ஆதாரம்தான். வாழ்க்கையை மீட்டுத் தந்தவர்கள் வாழ்வாதாரத்தை தொலைத்தவர்களுக்கு அதை மீட்டுத்தராதபோது அவர்களின் நிலை என்ன?அவர்களில் சிலரது கருத்து இப்படியிருந்தது.  

நாம் எமது வளவுக்குள் வந்தபோது எனது வீடு கூரை இல்லாமல் இருந்தது. இரண்டு கதவுகள் நிலையோடு பெயர்க்கப்பட்டிருந்தன. அருகிலேயே எறிகணை வீழ்ந்து வெடித்திருந்த படியால், சுவர்களில் பல இடங்களய் வெடித்திருந்தன.  

எனது பயன்தரு மரங்கள் எனது வாழைத்தோப்பு என ஏராளமாக அழிந்தோ அழித்தோ போடப்பட்டுள்ளது. வளவுக்குள் குப்பைகள் கொட்டப்பட்டும் கூரைத் தகடுகள் உடைத்தும் போடப்பட்டிருந்தன. வெகுநாட்கள் பராமரிப்பின்றி இருந்ததால் வேலியும் அதன் அருகும் பெரும் காடாகியிருந்தது.  

எனது அடுக்களையுள் தரையில் பெரும் அண்டாக்களை வைத்து சிலிப்பர் கட்டைகளை கொள்ளியாக வைத்து சமைத்திருந்தார்கள். அதனால் அடுக்களை   மிக மோசமாக அழிவடைந்திருந்தது. எங்களுக்கு அந்த காணியையே தர முடியாது. என அரச அதிபர் மறுத்தார்.  

ஆனால் அதை நாம் எமது ஆதாரங்களை காட்டி மீளப்பெற்றோம் அதற்கான அலைச்சலே மிக அதிகம் ஈற்றில் ரெஜினோல்ட்கூரே (வடமாகாண ஆளுநர்) அதை பெற்றுத்தந்தார்.  

அதனால்தானோ என்னவோ எமக்கு எந்த இழப்பீட்டையும் வாழ்வாதாரத்தையும், சமுர்த்தியைக்கூட பெற முடியவில்லை. நாம் குடியேறியாக வேண்டும் என்பதால் பலரிடம் பல்லைக்காட்டி கெஞ்சி கடன்வாங்கி அதை கட்டவும் வகையற்று நிற்கிறோம்.  

ஒளவையார் ஒரு பணக்காரனை பார்த்து பாடல் பாடினார். அவன் பரிசாக ஒரு யானை தருகிறேன் நாளை வா என்றான்ஃ. ஒளவையார் மறுநாள் போனார், அவனோ நீயோ வயது போனவள் யானையை வைத்து என்ன செய்வாய் ஒரு குதிரை தருகிறேன் நாளை வா என்றான். அவள் மறுநாளும் போனாள். அவனும் சளைக்காமல் பாட்டி, நீ குதிரையில் ஏறமாட்டாய் எனவே ஒரு எருமை தருகிறேன் நீ பாலாவது குடிக்கலாம்தானே நாளை வா என்றான்.அவள் மறுநாளும் போனாள்,  அவன் அன்று, பாட்டி, நன்றாக யோசித்துப் பார்த்தேன். காட்டெருமையும் உனக்கு தோதுப்படாது ஒரு நான்கு முழம் புடவை தருகிறேன். அதற்கும் நீ நாளைக்கு வா என்றான். ஒளவை சிரித்தவாறே ஒரு பாடலை பாடினாள்  

கரியாகி, பரியாகி

காட்டெருமைதானுமாகி  

எருதாய், முழப்புடவையாய் -

திரிதிரியாய்  

தேரைக்கால் பெற்று மிக

தேய்ந்து கால் ஓய்ந்ததே  

கோரைக்கால் ஆழ்வான் கொடை.  

 என்று. இந்தப்பாடலை எப்படியாவது மாற்றி எமது அரசாங்க அதிகாரிகளை நோக்கி பாடலாமா என்றிருக்கிறது. மக்களுக்கு தகவல் அறியும் உரிமை இருக்கிறதாம், அதே சமயம் அவற்றை சொல்ல மறுக்கும் உரிமை அரச அதிகாரிகளுக்கும் இருக்கிறதோ தெரியவில்லை. எமது ஊரில் ஒருபெண் இதுபற்றி பேசும்போது சொன்னாள் தான் தனது பிரதேச நடவடிக்கை சில பற்றி தனது கிராம சேவையாளரிடம் எழுத்து மூலம் கேட்டிருந்தளாம் பல மாதங்களாகியும் இதுவரை பதிலில்லையாம் நேரில் போய் கேட்டால் நாங்களென்ன சும்மாவா இருக்கிறம் என்றாராம்.  

இல்லப்பா தப்பு நாங்கதான சும்மா இருக்கிறம் என்றுவிட்டு வந்தாளாம். மக்களின் நிலை ரொம்ப பரிதாபம். 

தமிழ்க் கவி பேசுகின்றார்

Comments