நாட்டை ஆள்வோருக்கு அமுது படைக்கும் பாராளுமன்றம் | தினகரன் வாரமஞ்சரி

நாட்டை ஆள்வோருக்கு அமுது படைக்கும் பாராளுமன்றம்

முதலில் ஒரு கோப்பை சூப் அதன் பின்னர் எக்ஸன் டேபிளில் நல்ல சுவையான உணவு. அதன் பின்னர் போதுமான அளவு உண்ண சோறு வகைகள், மரக்கறி, இறைச்சி, மீன், பழங்கள், உணவின் பின்னரான வித விதமான டெஸேர்ட் வகைகள். இவை அனைத்துக்கும் செலவாவது சிறிய தொகையே என்று கூறின் அது எங்கே என்று நீங்கள் எம்மிடம் கேட்கலாம். 

குறைந்த விலைக்கு உணவை உண்ண அனைவருக்கும் விருப்பமே. ஆனால் இது சாதாரணமானவர்கள் சாப்பிடச் செல்லக்கூடிய இலகுவான இடமில்லை. நாம் இங்கு நாட்டை ஆளும் பிரபுக்களின் சுவையான உணவையும்  அதனைத் தயாரிக்கும் விதத்தைப் பற்றியுமே கதைக்கப் போகின்றோம்.

இது அநேகமாக அனைவரினதும் பேசு பொருளாக மாறியதற்கு தற்செயலான ஒரு சம்பவமே காரணமாகும். இலங்கையர்களான நாம் உண்ணக் கொடுத்ததைப் பற்றி பெருமை பேசுபவர்களல்ல என்பது உலகப் பிரசித்தம். அது நாம் இயற்கையாகப் பெற்ற ஒன்றாகும். ஆனால் அண்மையில் மந்த போசனையால் குழந்தை

யொன்று மரணமடைந்த சம்பவம் அரங்கிற்கு வந்த வேளையில் அநேகமானோர் நாட்டை ஆள்பவர்களின் சாப்பாட்டை பற்றி பேசத் தொடங்கினார்கள். நாட்டை ஆள்பவர்களுக்காக சமைக்கப்படும் உணவு வீணாக்கப்படுகின்றது என்று முன்வைக்கப்பட்ட  குற்றச்சாட்டு பற்றி ஆராய முயற்சி செய்தோம். பாராளுமன்ற சமையலறை என்பது பாராளுமன்றத்தைப் போன்றதொரு பாதுகாப்பு வலயமாகும். அதனால் பாராளுமன்ற உணவு நேரங்கள்,  அங்கு என்ன சமைக்கப்படுகின்றது, எவ்வாறு சமைக்கப்படுகின்றது. உணவு வீணாக்கப்படுகின்றதா என்று ஆராய்வதெல்லாம் இலகுவான விடயமல்ல.

இந்தத் தகவல்களைப் பெற முயற்சிக்கும் வேளையிலேயே நாம் அவரை சந்தித்தோம். பாராளுமன்ற ச​ைமயலறையில் 42வருட காலம் பணிபுரிந்து ஓய்வு பெறும் வேளையில் பாராளுமன்ற சமையலறையின் உணவு முகாமையாளராக பணியாற்றிய பந்துல பிரேமசிறி அபேசேகர. அவர் நிறைந்த அனுபமுள்ளவர். அவரிடம் மிகவும் சுவையான கதைகள் பல உள்ளன. அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமல்ல அரச தலைவர்கள் பலருக்கும் தம் கையால் உணவு பரிமாறியவர்.

அலாகார்ட் மற்றும் மெயின் கிச்சன் 

பாராளுமன்றத்தில் உணவு தயாரிக்கும் முறை போன்று அதனை பரிமாறும் விதமும் மிகவும் சுவையானது. அன்று பாராளுமன்றத்தில் ஒரு சிற்றுண்டிச்சாலையே காணப்பட்டது. அதனால் அனைத்தும் எளிமையாக நடைபெற்றது. ஆனால் 1982ஏப்ரல் 29ம் திகதி பாராமன்றம் தியவன்னாவுக்கு கொண்டு செல்லப்பட்டதன்பின் அனைத்தும் சிக்கலானது எனக் கூறினால் மிகையாகாது. உணவு தயாரிப்பு மட்டுமல்ல, தயாரிக்கும் அளவிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. சாதாரண பாராளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் காலங்களில் பிரதான சமையலறையில் 2750பேருக்காக உணவு சமைக்கப்படும். ஆனால் வரவு செலவு திட்டம் போன்ற விசேட நாட்களில் 3750பேருக்கும் அதிகமானோருக்கு சமைக்க வேண்டும். இன்றும் இந்த அளவுகளில் மாற்றம் இல்லை என்றே கூற வேண்டும். முழுப் பாராளுமன்றத்துக்குமே சமைக்கும் இரண்டு சமையலறைகளும் முதல் மாடியிலேயே அமைந்துள்ளன. அதில் மேற்கத்திய முறையிலான உணவுகளை சமைக்கும் சமையலறையை ‘அலாகார்ட்’ என அழைப்பார்கள். 

பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் நான்கு நாட்களிலும் வித்தியாச வித்தியாசமான உணவு வகைகளே சமைக்கப்படும். எல்லாவற்றையும் காலையிலேயே சமைக்க தெரிவு செய்வோம். அன்றன்றைகுத் தேவையான மீன், மரக்கறிகள், மசாலா பொருட்கள் எல்லாவற்றையும் மெயின் கிச்சனுக்கு பாராளுமன்றத்திலுள்ள உணவு களஞ்சியசாலையில் இருந்தே பெற்றுக்கொள்வோம். அந்த களஞ்சியசாலைக்கு மரக்கறி, பழங்கள் என்பவற்றை விநியோகிக்கும் அனுபவம் வாய்ந்த விநியோகஸ்தர்கள் உள்ளார்கள். அவர்கள் இரண்டு நாட்களுக்கொருமுறை பொருட்களைக் கொண்டுவந்து கொடுப்பதை வழமையாகக் கொண்டுள்ளார்கள். பிரதான சமையல்காரரின் முடிவின்படி அன்றைய தினத்துக்கான உணவு பட்டியலை அவர் உட்பட ஒரு சிலரே தயாரிப்பார்கள். நாளொன்றுக்கு எத்தனை பேருக்கு சமைக்க வேண்டும் என்பதை ஏற்கனவே அறிந்து கொள்வார்கள். சிலர் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களை சந்திக்க வரும் விசேட அதிதி பற்றியும் அவர்களுக்கு எவ்வாறு விருந்து பரிமாறப்பட வேண்டும் என்பதையும் ஏற்கனவே அறிவித்து விடுவார்கள். 

அதை அவர் கட்டாயம் செய்ய வேண்டும் அந்த விசேட உணவுவகைகளை விட நாம் எவற்றை சமைக்க வேண்டுமென்பதை நாமும் அறிவோம். அதேபோல் பாராளுமன்றத்தில் தினந்தோறும் உணவு அருந்தும் வழமையான அதிகாரிகளும் பணியாளர்களும் உள்ளார்கள். 

இவை எல்லாவற்றுடனும்தான் நாம் ஒரு நாளைக்கு சமைக்க வேண்டிய உணவின் அளவை தீர்மானிப்போம். எவ்விதத்திலும் உணவு வீணாகாத வகையிலேயே உணவை தயாரிப்போம். சில வேளைகளில் உணவு வீணாகும். சந்தர்ப்பங்களுமுண்டு. ஆனால் அவ்வாறு இடம்பெறுவது மிகக் குறைவு. உணவு வீணாக்கப்படுகின்றது என்பது தவறான கருத்தாகும். 

முதல் நாள் பாராளுமன்ற சமையலறையில் உணவு தேவையானவற்றை வெட்டி தயார் செய்தாலும் நாம் சமைப்பது காலை வேலையில்தான் என அபேசேகர கூறினார். 

மசாலாப் பொருட்கள் பழைய முறையிலேயே தயாரிக்கப்படுகின்றன 

பாராளுமன்றத்தில் மசாலா பொருட்கள்  அம்மியில் அரைத்து, உரலில்  இடித்து பழைய முறையிலாகும். அன்று பழைய பாராளுமன்றத்தின் சமையலறையில் உணவின் சுவையும் வாசனையும் சிறப்பாகக் காணப்பட்டது. அன்று பாராளுமன்றத்தில் பொதுமக்களின் பிரதிநிதிகள் குறைந்தளவிலேயே காணப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் நினைத்த நேரத்தில் உணவருந்த வரமாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்தில் தான் உணவருந்த வருவார்கள். அதனால் நாம் நேரத்துக்குத் தயாராக இருந்தோம். இன்று போலல்ல அன்று பாராளுமன்ற சமையலறையில் தேசிய உணவு வகைகள் பல சமைக்கப்பட்டன. அவை அனைத்தையும் செய்வதற்கு 21பணியாளர்களே உள்ளனர். எந்தவொரு உணவையும் முதல் நாளே சமைத்து வைக்கமாட்டோம். முதல் நாள் அம்மியில் மிளகாய் அரைத்து, மரக்கறி என்பவற்றை வெட்டி வைப்போம். பாராளுமன்ற சமையலறையில் உரல், அடுப்புக்கல், ஆட்டுக்கல் என்பவை கிராமத்திலுள்ள சமையலறையில் உள்ளது போன்று  காணப்பட்டன. தேங்காய் சம்பலை அம்மியிலேயே அரைத்தோம். அன்றும் இன்று போல் இரண்டு மூன்று சோறு வகைகள் சமைக்கப்பட்டன. சிகப்பரிசிச் சோறு, வெள்ளை அரிசி சோறு, மரக்கறிச் சோறு என தினமும் சமைப்போம். இன்றும் அவ்வாறே சமைக்கின்றோம்.  

அன்று சாதாரணமாக தினந்தோறும் சமைக்கும் மரக்கறிகளை விட விசேடமான தேசிய உணவுகளையும் சமைப்போம். பலாக்காய் பால்கறி, கிராமத்து கீரைவகையை கொண்ட சம்பல் என்பன முக்கியமானவை.   பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சாப்பிட்டதன் பின்னர் இளநீர் அருந்துவார்கள். அதனால் நாம் இளநீர்  வைத்திருப்போம். வில்வம்பூப் பானம் மிகவும் பிரபல்யமானது. செயற்குழுக்கூட்டங்கள் நடைபெறும்போது நாம் அநேகமாக வழங்குவது வில்வம்பூ பானம்தான். 

காலை 11.30மணியளவில் பாராளுமன்ற மெயின் கிச்சன் மற்றும் எலகார்ட் பணிகள் முடிவடைந்து விடும். அதன்பின்னர் உணவு பரிமாறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும். பாரளுமன்ற உறுப்பினர் சாப்பிடும் விதம் மட்டுமல்ல, அவர்களின் விருப்பு வெறுப்புகளும் தெரியவரும் இடம் உணவுசாலையாகும்.

அதுபற்றி அநேகர் அறிந்திராத பல உண்மைகளும் அவரது இதயத்தில் மறைந்துள்ளன. 

அன்று ஒரு உணவு கூடம் மாத்திரம் காணப்பட்ட பழைய பாராளுமன்றத்திலிருந்து புதிய பாராளுமன்றத்துக்கு வந்தபின்னர் எமது தினசரி நடவிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. புதிய பாராளுமன்றத்தில் 6உணவுக் கூடங்கள் உள்ளன. அவை ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. அதில் ஒரு உணவு கூடம் அநேகமானோரின் கவனத்தை ஈர்க்கும். அதுதான் முதலாவது மாடியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவுக் கூடம். 

அன்று இருந்த இடத்திலேயே இன்றும் அமைந்துள்ளது. சாதாரணமாக இந்த உணவுக் கூடத்துக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே வருவார்கள். ஆனால் பாராளுமன்றத்தின் விசேட நாளான வரவு செலவுத் திட்ட நாளன்று நடைபெறும் தேனீர் உபசாரத்தின் போது மாத்திரம் அனைவரும் கலந்து கொள்ளலாம். பகல் வேளைகளில் இந்த உணவுகூடத்தில் உணவு புபே முறையிலேயே பரிமாற்றப்படும். 

காலை 11.45அளவில் பிரதான சமையற்காரருடன் இதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்ட சிலர் பாதுகாப்பாக உணவை இந்த உணவுக் கூடத்துக்கு எடுத்து வருவார்கள். இங்குள்ள விசேட அம்சம் ‘எக்சன் டேபிளாகும்’ 

சமைக்காத ஆனால் அரைவாசி சமைக்கப்பட்ட,  பதப்படுத்தப்பட்ட   உணவு வகைகளே இந்த மேசையில் காணப்படும். அறக்குலா மீன் துண்டுகள், இறைச்சித் துண்டுகள் போன்ற உணவுப் பொருட்கள் காணப்படும். அமைச்சர்களின் விருப்பதற்கு ஏற்ப அவை உடனடியாக சமைத்து வழங்கப்படும். இது பாராளுமன்றத்தின் வேறு எந்த உணவு கூடத்திலும் காணப்பட மாட்டாது. 

பாராளுமன்ற உறுப்பினரொருவர் ஏதேனும் பானங்களை கேட்டாலும் உடன்​தயாரித்து வழங்கப்படும். சாதாரணமாக புபேயில்  உணவருந்தச் செல்வதற்கு முன்னர் அருந்துவதற்கான சூப் வகைகள் இரண்டு உண்டு. மிளகுத் தண்ணி சூப், கிரீம் ஓப் பிஸ் சூப் என்பவையே அவையாகும். சாப்பாட்டுக்குப் பின்னர் சாப்பிடுவதற்கு ஐஸ் கிறீம், வெட்டப்பட்ட பழங்கள் என விரும்பியவை பரிமாறப்படும். 

சிறியளவு கட்டணமே வசூலிக்கப்படும். 

இவை அனைத்தையும் அவர் அருந்தினாலும் அவர்களிடமிருந்து சிறிய தொகையே அறிவிடப்படும். எனக்கு ஞாபகத்தில்  உள்ளவாறு 150ரூபாவே அறவிடப்பட்டது. அன்று மேலதிகமாக உணவை அமைச்சரொருவர் பெற்றால் அதற்கு மேலதிக பணம் அறவிடப்படவில்லை. காலம் மாறியிருந்தாலும் அநேகமான நடவடிக்கைகள் அன்று போலவேதான் நடைபெறுகின்றன என அபேசேகர தெரிவித்தார். 

மாலை தேநீர் உபசாரம். பாராளுமன்ற உறுப்பினர்களின் விருந்தோம்பல் உணவு கூடமாகும். இதுவும் அவர்களுடன் வரும் விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வருகின்ற விருந்தினர்களின் எண்ணிக்கையை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும். ஆனால் தங்களுக்கு வேண்டிய அளவில் விருந்தினர்களை அழைத்து வர முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவு விருந்தினர்களையே அழைத்துவர முடியும். குறிப்பிட்ட விருந்தினர்கள் கட்டாயம் பாராளுமன்ற உறுப்பினருடனேயே வர வேண்டும். சாதாரணமாக 120-_125பேருக்கே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வரும் விருந்தினர்களுக்காக குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளத்தில் ஒரு சிறிய தொகை கழிக்கப்படும். இந்த உணவு கூடத்தில் இலங்கையின் பிரஜையொருவரும் உணவு அருந்த முடியும். அவர்தான் அரச கணக்காய்வாளர், இங்கும் உணவு புபே முறையில் பரிமாறப்பட்டாலும் எக்சன் டேபிள் இல்லை. இரண்டு வகையான சூப்கள், புபே முறையில் சோறு, கறிவகைகள் மற்றும் இனிப்பு வகைகள் பரிமாறப்படும். மாலை 2.30மணிவரையும் பகலுணவும் பரிமாறப்பட்டு பினனர் தேநீர் உபசாரத்துக்கு தயாராவோம். 

மாலை 4மணிக்கு ஆரம்பிக்கும் தேநீர் உபசாரம் அந்தந்த உணவு கூடங்களில் நடைபெறும். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  உபசாரம் சிறப்பாக நடைபெறும். சான்விட்ச், பலவிதமான கேக் வகைகள், பற்றீஸ் போன்ற 6-7வகை சிற்றுண்டிகளுடன் தேநீர். அவர்கள் சபை அமர்வின் பின்னர் எந்த வேளையில் வந்தாலும் அவர்களுக்கு வழங்குவதே முறையாகும். இன்றும் அதேபோல் நடைபெறுகின்றது. 

பாராளுமன்ற உறுப்பினருக்கு சூடாக ஏதேனும் தேவைப்பாட்டால் மைக்ரோவேவ் அவனில் சூடுபடுத்தி வழங்குவதற்கு உணவுக்கூட பணியாளர்கள் தயாராக இருப்பார்கள். ஏதேனும் ஒரு விதத்தில் தேநீருக்காகத் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டி தீர்ந்து விட்டால் இல்லை என்று சொல்லாமல் சில கிறீம் கிரேக்கர் பிஸ்கட்களை சீஸுடன் வழங்க நடவடிக்கை எடுப்பார்கள். 

கோசஸ் என்றால் சோறில்லை 

“இந்த உணவுக்கூடம் இரண்டையும் தவிர பாராளுமன்ற உறுப்பினரின் மேலதிக விருந்தினர்களுக்காகவும் கமிட்டி சபைகளின் அல்லது பாராளுமன்ற விவாதத்துக்கு வருகைதரும் அதிகாரிகளுக்கு உணவருந்த விசேடமான உணவுக்கூடம் முதல் மாடியில் உள்ளது.  

இதில் உணவு அருந்தினாலும் கட்டணத்தை குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரே செலுத்த வேண்டும். முதலாவது மாடியில் உள்ள உணவுக்கூடம் பாராளுமன்ற நிறைவேற்றுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இங்கும் உணவு புபே முறையிலேயே பரிமாறப்படுகின்றது. 2சோறு வகைகள், மீன், இறைச்சி, நான்கு வகையான மரக்கறிகள், நான்கு வகையான டெசற்றுக்கள் தயாரிக்கப்படும். சோறு சாப்பிட விருப்பமில்லையென்றால் அதற்குப் பதிலாக கோசஸ் ஆடர் செய்து பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் கோசஸ் பெற்றவருக்கு சோறு சாப்பிட முடியாது.   அன்று யாராவது அவ்வாறு மாற்றிக்கொண்டால் நாம் எதனையும் கூறாது காணாதது போல் போய்விடுவோம். பசிக்காக அவர்கள் எடுக்கும் போது எம்மால் வேண்டாம் என்று கூற முடியாது. இதைத் தவிர பாராளுமன்ற செயலணியினருக்கு வேறான உணவுக்கூடமும் பாராளுமன்றத்தைக் காண வரும் பொதுமக்களுக்கான உணவுக்கூடமும் உள்ளது. வெளியாருக்கு இங்கு உணவு பெற வேண்டுமென்றால் முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும்.  

பாராளுமன்ற உணவுக்கூடத்தில் அன்றும் இன்றும் உணவு தயாரிப்பது நேரத்தோடு பெற்ற அளவின்படியே அதனால் ஒருபோதும் உணவு வீணாக்கப்படுவதில்லை. என அபேசேகர தெரிவித்தார். எவ்வாறாயினும் ஏதேனும் ஒருவகையில் உணவு மீதமடைந்தால் அவ்வுணவை பாராளுமன்ற சேவகர்கள் கூட வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. 

அன்று ஒரு உணவுக்கூடமாக இருந்து இன்று ஆறாக அதிகரித்தமையினால் அதன் நடவடிக்கைகள் நினைக்கும் அளவுக்கு இலகுவாக இருக்கவில்லை. இன்று புபே முறையில் உணவு பரிமாறினாலும் அன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களுக்கு உணவு பரிமாறும் போது புபே முறை இருக்கவில்லை. நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதிக்கு கூட பழைய பாராளுமன்ற உணவுக்கூடத்தில் உணவு மேசையில் பாத்திரங்களில் பரிமாறப்பட்டது. அன்று பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் புபே முறை இருக்கவில்லை. யாரேனும் உறுப்பினர் ஒருவரோ, அமைச்சரொருவரோ வருவதைக் கண்டால் ஓடிச்சென்று பாத்திரங்களில் உணவை பரிமாறி மேசையில் வைப்போம். அதனால் உணவு வீணாக்கப்படுவதில்லை. இதை அனைத்தையும் செய்வதற்கு நான்கு பணியாளர்களே இருந்தார்கள். அவர்கள் பாத்திரங்களை தட்டில் வைத்து எடுத்துச் செல்வார்கள். அன்றைய தினம் சமைக்கப்பட்ட விசேட உணவாக பலாக்காய் பால்கறி, வல்லாரைச் சம்பல், பொலஸ்காய் கறி இருந்தால் அதையும் நாங்கள் அவர்களுக்குப் பரிமாறுவோம்.  

அவ்வாறு உணவைப் பரிமாறிய பின் நாம் மேசையிலிருந்து சற்றுத் தொலைவிலேயே நிற்போம். அதேவேளை இளநீர், வில்வப்பூ பானம் என்பவற்றையும் கேட்பார்கள். அன்று இன்று போல் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரும் பழங்களை கொடுக்கவில்லை. அன்று மாம்பழம், பப்பாசிப்பழம் போன்றவை தேவையான அளவு காணப்பட்டன. நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படும் ‘ரூபாப்’ என்னும் பழத்தைச் சாப்பிட அனைவரும் விரும்புவார்கள். நாம் ஏதும் தவறு செய்தாலும் எம்மை கண்டிக்க மாட்டார்கள். அன்று நாம் சமைத்த உணவினை பரிசோதிக்க ‘தரக் கட்டுப்பாட்டாளர்’ ஒருவர் இருக்கவில்லை என அபேசேகர பெருமையுடன் கூறினார். அன்று பாராளுமன்ற சமையலறை மிகவும் கௌரவமான இடமாக கருதப்பட்டது. அன்று உணவு தயாரிக்கும் பொறுப்பைவிட கடமையுணர்வே முக்கியமாகக் கருதப்பட்டது. நான் உட்பட பணியாளர்கள் அதனையே சிறப்பாக எண்ணினோம்.  என்ற அவர், தனது வாழ்க்கையில் சிக்கனத்தைக் கற்றுக்கொண்டது பாராளுமன்ற உணவுக்கூடத்தில் தானாம்.

சுபாஷினி ஜயரத்ன (சிலுமின)
தமிழில்: வி.ஆர்.வயலட்

Comments