பிள்ளையின் பிறப்புக்கு தகவல் கொடுப்பது யார்? | தினகரன் வாரமஞ்சரி

பிள்ளையின் பிறப்புக்கு தகவல் கொடுப்பது யார்?

பெயர் மாற்றம் பற்றிய அறிவிப்புகளைப் பத்திரிகைகளில் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். சிலர் மதம் மாறித் தங்களின் பெயரை மாற்றிக்ெகாள்கிறார்கள். இன்னும் சிலர், தமக்கு வைக்கப்பட்ட பெயரில் விருப்பமில்லாதபட்சத்தில், வேறு பெயர் வைத்துக்ெகாள்வார்கள். மேலும் சிலர், தமக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் சில எழுத்துப் பிழைகளுடன் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் பதிவாகியிருந்தால், திருத்தம் செய்து அறிவிப்புச் செய்வார்கள். 

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமாகவிருந்தால், பத்திரிகை விளம்பரம் மூலமாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். இன்னாராகிய நான், இந்தத் திகதியிலிருந்து எனது பெயரை இப்பிடி மாற்றுக்ெகாண்டுவிட்டேன் என்று விளம்பரம் செய்ய வேண்டும். 

பெரும்பாலும் இந்தப் பெயர் மாற்றத்தைச் செய்பவர்கள் வளர்ந்து பெரியவரானவரா கத்தான் இருப்பார்கள். வளரும் வரை அவர்களின் பெயர் பிழையாக பதிந்திருப்பது தெரியாது. உதாரணமாக வேலுப்பிள்ளை என்றால், வாலுப்பிள்ளை என்று எழுதியிருப்பார்கள். வாலுப்பிள்ளை என்று பெயர் இருப்பது வேறு விசயம். ஆனால், வேலுப்பிள்ளையை அவ்வாறு மாற்றி எழுத முடியாது அல்லவா. இவை பொதுவாகத் தமிழில் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தை எழுதுகின்ற பிரதேசங்களில் நடக்கின்ற தவறுகள். 

ஆனால், முற்றிலும் சிங்கள அதிகாரிகள் பணியாற்றுகின்ற பிரதேசங்களில், குறிப்பாக மலையத்தில் உள்ள வைத்தியசாலைகளில் வழங்கப்படும் பிறப்புச்சான்றிதழ்களில் பெயர்களைத் தாறுமாறாக எழுதிக்ெகாடுத்திருப்பதாகப் பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

என்றாலும், அந்தத் தவறுகளைத் திருத்துவதற்கான அறிவோ, முயற்சியோ இல்லாததன் காரணமாகப் பல பிள்ளைகள் தங்களின் பிழையான பெயருடனேயே வாழ்ந்து வருகிறார்கள். உதாரணத்திற்கு மருத்துவர் என்ன பிள்ளை? என்று சிங்களத்தில் கேட்க, சிங்களம் தெரியாத பெற்றோர், ஆம்பளப்பிள்ளை என்று சொல்ல, அவர் பெயருக்கான கூட்டில், ஆம்பளபிள்ளை என்று பெயர் எழுதிய சம்பவங்களும் நிறைய இருப்பதாகச் சொல்கிறார்கள். மருத்துவர் என்ன பெயர் என்று கேட்டதைப் புரிந்துகொள்ளாமல், என்ன பிள்ளை என்று கேட்கிறார் என நினைத்து அப்படி பதிந்துவிடுகிறார்கள். அவ்வாறு தவறுகள் நேரும் பட்சத்தில், பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் 13ஆவது பிரிவில், புதிதாகப் பெயரைச் சேர்ப்பதற்கும் ஓர் ஏற்பாடு இருக்கிறது. என்றாலும், அதற்குத் தகவல் கொடுப்பது யார் என்ற சிக்கலை அவிழ்த்துக்ெகாள்வதில் இன்னமும் பலருக்குத் தெளிவு இல்லை. 

பொதுவாகப் பிள்ளை பிறந்தால், அந்தப் பிள்ளையின் பெற்றார்தான் தகவலைக் கொடுக்க வேண்டும். சிலவேளை, பெற்றார் இறந்திருந்தால், பாதுகாவலர் தகவலை வழங்கலாம். தகவல் வழங்காதது தண்டனைக்குரிய குற்றமாகும். 

நிலைமை இப்படி இருக்கும்போது வைத்தியசாலையில் குழந்தையொன்று பிறந்தால், இன்னமும் மலையகத்தின் சில வைத்தியசாலைகளில் தோட்ட அதிகாரி, மருத்துவர் தகவல் வழங்குவதாகப் பதியப்பட்டு வருவதாகக் கூறுகிறார்கள். 

விசேடமாக மலையகத்தின் நகரப் புறங்களில் வசிப்போரின் குழந்தைகளுக்கும் அவர்களது பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் தகவல் வழங்கியவர் தோட்ட அதிகாரி எனக் குறிபிடப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டுள்ள பெற்றார்கள் தெரிவித்ததாக ஓர் இணையத்தளம் செய்தியொன்றைக்கூட வௌியிட்டிருக்கிறது. 

ஹற்றன் நகரத்தில் குடியிருப்பைக் கொண்டுள்ள நிலையிலும் தங்களின் பிள்ளை, டிக்கோயா வைத்தியசாலையில் பிரசவமாகியபோது அந்தப் பிள்ளையின் பிறப்பு பற்றிய தகவலை மருத்துவரே தகவல் கொடுத்தார் என்று பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு பதிவுசெய்வதன் காரணம் என்னவென்று அறிய முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

பொதுவாகப் பிள்ளையின் பிறப்பை, அந்தப் பிள்ளையின் தாயோ அல்லது தந்தையோ தகவல் வழங்கினார்கள் என்று அவர்களின் முகவரியுடன் குறிப்பிடப்படும். அவ்வாறுதான் நாட்டில் ஏனைய இடங்களில் இடம்பெறுகிறது.

அவ்வாறான சந்தர்ப்பத்தில், பிள்ளையைப் பாடசாலையில் சேர்க்கும்போது வதிவிடத்தை உறுதிசெய்துகொள்வதற்கான ஒரு சான்றாகப் பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க முடியும். 

இந்நிலையில், பிள்ளையின் பெற்றோரையும் அவர்களின் முகவரியையும் குறிப்பிடாமல், தோட்ட அதிகாரியின்,  மருத்துவரின் பெயரைக் குறிப்பிடுவதால், பெற்றார் பெரும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்து வருகின்றனர். 

ஒரு காலத்தில் தோட்டங்களில் உள்ள வைத்தியசாலைகள் தோட்ட நிர்வாகத்தின் கீழ் நிருவகிக்கப்பட்டு வந்தன. அதனால், தகவல் வழங்குபவர், குறித்த தோட்டத்தின் அதிகாரி அல்லது மருத்துவர் என்று பதியப்படும்.

ஆனால், தற்போது அனைத்துத் தோட்ட வைத்தி யசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்று நிர்வகித்து வருகிறது. தற்போது தோட்ட வைத்தியசாலைகளில், ஈஎம்ஏ மருத்துவர்கள் இல்லை. மாறாக தகுதியான மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

நிலைமை இவ்வாறிருக்க வெள்ளைக்காரர் ஆட்சிக்காலத்தைப்போன்று இன்னமும் தோட்ட நிர்வாகத்திற்குப் பெருந்தோட்டம் வாழ் தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்கிறார் பாதிக்கப்பட்ட ஒருவர். 

எவ்வாறெனினும், பிரதான நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தோட்ட அதிகாரி வந்து எவ்வாறு பிள்ளை பிறப்பு பற்றித் தகவல் வழங்குவார்கள் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் என்ன தீர்வினைப் பெற்றுத் தரப்போகிறார்கள் என்பதே பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

மலையகத்தின் வைத்தியசாலைகளிலும் பிரதேச செயலகங்களிலும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களில் இப்படி பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்வாறான பிழைகளைத் திருத்துவதற்கு அதிகாரமுள்ளவர்கள் உதவிபுரியமாட்டார்களா? கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்திக்ெகாள்வதற்கும் புதிதாகப் பிறக்கும் பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தைச் சரியாகப் பதிந்துகொள்வதற்கும் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா? 

Comments