கைமாறு | தினகரன் வாரமஞ்சரி

கைமாறு

நண்பர்கள் என்று கூறும்போது எல்லோருமே நண்பர்கள் அல்ல. ஒன்றாக வளர்ந்து ஒன்றாக விளையாடி ஒன்றாக தினமும் உறவாடி ஒற்றுமையாகவே கூடி வாழ்ந்தவர்கள் கூட. பலவிதமான காரணங்களால் பகைவர்களாகி விடுவதுமுண்டு. அத்தோடு பொறாமை காரணத்தால் கூடவிருந்து குழி பறிக்கும் நண்பர்களும் இல்லாமலில்லை. 

இங்கே நான் கூறப்போவது, இப்படிப்பட்ட நண்பர்களில் ஒருவனை அல்ல. நான் மேற்கூறிய காரணங்களுக்கு முற்றிலுமே வேறுபட்ட என் நண்பன் ஒருவனை பற்றித்தான் கூறப் போகிறேன். அவன் பெயர்தான் ஜோசப். ஜோசா என்றுதான் இல்லோரும் அவனை செல்லமாக அழைப்பதுண்டு. அவன் தொழிலாளர் வர்க்கத்திலும் முதலாளி வர்க்கத்திலுமல்லாமல் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்திலே பிறந்தவன். 

அவனுக்கு ஒரு அக்காவும் ஒரு அண்ணனும் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு இவனை பிடிக்காது! இவனது குணத்திற்கும் அவர்களது குணங்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது! இவனது அப்பா மிகவும் நல்லவர். அம்மா கொஞ்சம் ஒரு விதம். எல்லா குடும்பங்களிலும் எல்லோருமே ஒற்றுமையாக வாழ்வதில்லையே; ஜோசாவின் குடும்பத்திலும் ஏற்றத்தாழ்வுகள் கருத்து வேறுபாடுகள் இருந்தன. எது எப்படியிருந்தாலும் நானும் அவனும் நெடுநாளைய நண்பர்கள். ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில்; ஒன்றாகவே படித்து உயர் கல்வியும் பெற்றோம். அவன் எனக்கு உதவினான் நானும் அவனுக்கு உதவினேன். அவனது தயாள குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்து. 

மனிதர்கள் வாழ பணம் வேண்டும். பொருள் வேண்டும்; வீடு வாசல்கள் வேண்டும். எப்படித்தான் சிறுவயதில் கூடிக்குலவி கும்மாளமடித்து ஓடியாடி திரிந்து வாழ்ந்தாலும், வயது வரவர இளைஞர்களாகும் போது கடமையுணர்வுகள் வந்து கூடி விடுகின்றன. அந்த அடிப்படையிலே பார்க்கும் போது இளைஞனான ஜோசாவுக்கும் ஒரு தொழில் தேவைப்பட்டது. என்னைப் பற்றி நினைக்க ஒரு பிரச்சினையுமில்லை.

என் அப்பா ஒரு வர்த்தகர். அவருக்கு இரண்டு கடைகள் இருக்கின்றன. அப்பாவும் நானும் வியாபாரத்தை கவனித்துக் கொள்கிறோம். ஜோசா ஒரு நாள் என்னைத் தேடி வந்தான். அவனுக்கு கொழும்பில் ஒரு நிறுவனத்தில் மனேஜராக கடமையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் கொஞ்சம் பணம் தேவைப்படுவதாகவும் கூறினான். 

எவ்வளவு பணம் வேண்டுமென்று நான் அவனிடம் கேட்டேன். அவன் ஐம்பதாயிரம் என்று கூறினான். நான் விடயத்தை அப்பாவிடம் கூறினேன். சிரித்தபடி ஐம்பதாயிரம் ரூபா பணத்தை அள்ளித் தந்தார் அப்பா! மகிழ்ச்சியோடு எங்களிடம் விடை பெற்றுச் சென்றான் ஜோசா. காலமும் வேகமாக ஓடியது அடிக்கடி தொலைபேசி மூலமாக என்னோடு தொடர்பு கொண்டான், நானும் அவனைக்கான கொழும்பு செல்வதுமுண்டு. 

நாளடைவில் நீர்கொழும்பில் ஒரு வீட்டை வாங்கி ஸ்டெலா என்ற ஒரு யுவதியை திருமணம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவிட்டான். காலப்போக்கில் அவனுக்கு மூன்று குழந்தைகள் எட்டு வயதில் கிறிஸ்டி என்ற பெயரில் ஒரு   மகனும், ஆறு வயதில் ஸ்டாலின் என்ற பெயரில் ஒரு மகனும், மூன்று வயதில் ஹேமி என்ற பெயரில் ஒரு மகளும் இருந்தனர். 

ஜோசப் ஒரு கிறிஸ்தவன். அவளவுக்கதிகமான கடவுள் பக்தி உள்ளவன். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பது அவனது பரிபூரணமான நம்பிக்கையாகும். அவனுக்கேற்ற மனைவிதான் ஸ்டெலா! எந்த நேரமும் கையிலும் கழுத்திலுமாக ​ெஜபமாலை தொங்கும். மிகவும் உன்னமான உத்தமமான ஒற்றுமையான பாசத்தால் பிணைக்கப்பட்ட உறவை அந்த குடும்பத்திலே என்னால் காணமுடிந்தது!

அண்மையில் நான் அங்கே சென்ற போது ஜோசாவும் அவனது மனைவி ஸ்டெலாவும் குழந்தைகள் மூவரும் என் மீது காட்டிய அன்பும் ஆதரவும் பாசமும் என்னை பூரிக்க வைத்துவிட்டது. நான் தடுமாறிப் போனேன்! இவர்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! கொடுத்து வைத்தவர்கள் என்பது நான் பெருமளவில் சந்தோஷமடைந்தேன். 

கடந்த ஏப்ரல் மாதம் இருபதாம் திகதி வியாபார விடயமாக நான் கொழும்பு சென்றபோது, அப்படியே ஜோசாவின் வீட்டிற்கும் செல்லத் தவறவில்லை. நல்ல முறையில் என்னை வரவேற்றான் ஜோசா. உள்ளே சென்றபோது நான் திகைத்து, அதிர்ந்து நின்றேன்! என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை! ஜோசாவின் அப்பாவும், அம்மாவும், அக்காவும், அண்ணனும், அவர்களது செல்வங்களும் நிறைந்து ஒரு பெரிய கல்யாண வீடு போல் காணப்பட்டது அங்கு! 

எவ்விதமான காரணமுமில்லாமலேயே ஜோசாவிடமிருந்து ஒதுங்கிக் கொண்ட அவனது அண்ணனும் அக்காவும் கூட ஜோசாவை தேடி வந்திருப்பது கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். எது எப்படியானாலும் கூடப் பிறந்தவர்கள் என்றாவது ஒருநாள் கூடி மகிழ்வார்கள் என்பது எப்போது தெளிவாக எனக்கு தெரிந்தது. அவர்களது ஈஸ்டர் ஞாயிறு தினத்தை கொண்டாட தயாரிக்கப்பட்ட பலகார பட்ஷணங்களையெல்லாம் கொண்டு வந்து மேசை மீது குவித்து சாப்பிடும்படி என்னை மூச்சு திணற வைத்து விட்டார்கள்! 

எனக்கு அதிகமான வேலைப்பளு இருந்ததாலும் ஜோசாவின் சொந்தபந்த உறவுகள் இருந்தமையாலும் அன்று நான் அங்கே தங்காமல் அவர்கள் எல்லோரிடமிருந்தும் சுமார் மாலை மூன்று மணியளவில் விடைபெற்று பண்டாரவளைக்கு வந்தேன். மறுநாள் அதாவது இருபத்து ஒன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுமார் ஒன்பது மணியளவில் தான் அந்த சம்பவம் பற்றிய செய்தி என் காதுக்கு கிட்டியது! 

நான்   அதிர்ந்து போனேன்! தடுமாறி தவித்துப் போனேன்! ஆம். அன்றைய தினம் தான் கொச்சிக்கிடை சாந்த அந்தோனியார் தேவாலயத்தில் குண்டு வெடித்திருந்தது! என் நண்பன் ஜோசா நிச்சயமாக அன்றைய தினம் தன் குடும்பத்தாரோடு தேவாலயத்திற்கு சென்றிருப்பான். என்னால இதனை  உறுதியாக நம்ப முடியும். என் நண்பனும் அவனது குடும்பத்தினரும் என்ன ஆனார்களோ! உடனடியாக அங்கே சென்று நி​ைலமைகளை அறிய என் மனம் துடித்தது! அப்பா, அம்மாவும் என் மனைவியும் தடுத்து விட்டார்கள்.

சற்று தாமதித்து நிலைமை சுமுகமான நிலைக்கு வந்த பின் சென்று பார்க்கும்படி அவர்கள்   உறுதியாக கூறி விட்டார்கள். பல்லைக்கடித்துக் கொண்டு பத்து நாட்களை ஓட்டிவிட்டது.  இப்போது நண்பனைத் தேடி அவனது வீட்டருகே வந்துவிட்டேன்! நெஞ்சு படபடவென துடித்தது! கைகால்கள் நடுங்கின.

எங்கே போகிறேன், என்ன செய்கிறேன் என்ற சுயஉணர்வு கூட இப்போது என்னிடம் இல்லை! எப்படியாவது நண்பன் ஜோசா​ைவ கண்டுவிட வேண்டும், அவனது குடும்பத்தினரை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் மூடியிருந்த அந்த பெரிய கேட்டைத் திறந்து உள்ளே சென்றேன். வீடு பூட்டிக் கிடந்தது மரங்களிலிருந்து உதிர்ந்து சருகான இலைகள் முற்றம் முழுவதும் கிடந்தன. சில நாட்களாக வாசல் முற்றம் கூட்டப்படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது!

ஜோசாவின் சிவப்பு நிற கார் கராஜில் இருந்தது. அவனது மோட்டார் சைக்கிளும் ஓர் ஓரத்தில் இருந்தது. வீட்டின் பின்பக்கமாக சென்று பார்த்தேன். ஒருவரையும் காணவில்லை! ஜோசாவின் மனைவியினதும் அவனது பிள்ளைகளதும் சில ஆடைகள்    காயவிடப்பட்டிருந்தன.

அவற்றில் சில தரையில் விழுந்து அங்குமிங்குமாகக் கிடந்தன! சமையற் பாத்திரங்கள் நீர் குழாயருகில் ஒரு சிறிய மேசைமீது அடுக்கி வைக்கப்படிருந்தன!

என் தலை சுற்றியது! நான் நினைத்தது சரி என்றே எனக்குப்பட்டது. இனி என்ன செய்வது எத்தனையோ தடவைகள் அவனோடு தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை! அவனது தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்படிருந்தது. ஒன்றும் விளக்காமல் ஒரு சில விநாடிகள் நின்று நான் ஒரு முடிவிற்கு வந்தவனாக வாசலையடைந்து கேட்டை மூடிவிட்டு வெளியே வந்தேன். 

பக்கத்து வீட்டு முற்றத்தில் ஒரு சிங்கள அம்மையார் நின்று கொண்டிருந்தார். மெதுவாக அவரை அணுகி ஜோசாவைப் பற்றிக் கேட்டேன். அந்த அம்மையார் ஓ...வென கத்தி அழுதார்.

அவரது கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது! இப்போது என் நிலையும் மோசமாகியது. கண்களில் துளிர்த்த கண்ணீரை கைகுட்டையால் துடைத்தபடி, அந்த அம்மையாரை ஏறெடுத்துப் பார்த்தேன்.

தனது சேலைத் தலைப்பால் கண்களை துடைத்தபடி, அந்த அம்மையர் என்னை நிமிர்ந்து பார்த்தார். “மஹத்தயா கவுத?” என்று கேட்டார். “அம்மே மம எயாகே யாலுவெக்” என்று நான் சிங்களத்தில் கூறினேன். கையசைத்து என்னை வீட்டிற்குள்ளே அழைத்துச் சென்று, சோபாவில் அமரச் செய்தார். அவரே பேச ஆரம்பித்தார்.

“மஹத்தயா ஜோசப் மஹத்தயாலா ரத்தரங் மினுஸ்ஸு. அப்பேவத் எஹெம அய நே” என்றார். “அம்மே உயாலட்ட மொக்கத வுனே?” நான் கேட்டேன். “மஹத்தயா ஏகொல்லோ கட்டுவாபிட்டிய கியாத கொச்சிகடே கியாத தன்னே நே, கோவிலே உதே கியா; கியாமய் தவம நே” என்றார் அந்த அம்மையார். அந்த அம்மையாரிடம் விடைபெற்ற வெளியே வந்த நான், இனி என்ன செய்வது என்று யோசித்தேன். 

திடீரென்று ஒரு யோசனை வரவே நேரடியாக குண்டுவெடிப்பில் காயப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளை தேடிச் சென்றேன். என் நண்பன் உயிருடன் இருப்பான் என்றே என் மனம் கூறியது. இறுதியாக, களுபோவில வைத்தியசாலையில் நோயாளர்களை பதிவு செய்யும் புத்தகத்தில் “ஹேமி” என்ற பெயர் மாத்திரம் இருந்தது. நான் துடித்துப் பதறிப் போனேன். ஆவல் என்னை உந்தித் தள்ளியது நோயாளர்களை பார்க்கும் நேரம் வரும் வரை காத்திருந்தேன். 

குறிப்பிட்ட நேரம் வந்ததும் ஹேமி சிகிச்சை பெறும் அந்த இருபதாம் வார்ட்டை நோக்கி நடந்தேன். முப்பதாம் நம்பர் கட்டிலில் அந்த சின்னஞ்சிறிய குழந்தையான ஹேமி மல்லாந்து படுத்துக்கிடந்தாள். எனக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. ஓடிச் சென்று, அவளை தொட்டு தழுவி தலையை தடவி ஆறுதலாக முத்தமிட்டேன்!

“எப்படிம்மா அதிகம் வருத்தமா மாடா கண்ணு?” என்றேன். “இல்ல மாமா கால் கொஞ்சம் வெந்திரிச்சி” என்றாள். தனது இடது காலை காட்டினாள் ஹேமி. அவளது இடது காலில் முழங்காலுக்குக் கீழ் பலத்த கட்டு போடப்பட்டிருந்தது. அம்மா, அப்பா, அண்ணன் இருவர் இவர்களைப் பற்றி இவளிடம் எப்படிக் கேட்பது? அம்மா எங்கே? அப்பா எங்கே? என்று அவள் என்னையே திருப்பிக் கேட்டாள்? 

ஒரு யோசனை வரவே, எதிரே மேசையருகில் அமர்ந்திருக்கும் நர்சு நோனாவை அணுகி ஜோசாவையும் அவனது மனைவி மகன்மார் இருவரையும் பற்றி வினவினேன். அந்த நர்ஸ் கூறிய செய்தி என்னை திடுக்கிட வைத்தது. “மே தருவா வித்தராய் மஹத்தயா பேரு னே! அணித் அய இவரய்” என்று அந்த நர்ஸ் கூறினார். இனி என்ன செய்வது? பலவாறு யோசித்தேன். என்னால் எந்த ஒரு முடிவிற்குமே வரமுடியவில்லை. என் தடுமாற்றை அவதானித்த அந்த நர்ஸ், “மஹத்தயா கெமத்தினம் ஏ தருவா நீத்தி மார்கயென் மஹத்தயாட்ட ஹதாகன்ன புலுவன்” என்றார். இப்பேது என் மூளை பழிச்சென்று வேலை செய்தது!

ஆம். எனக்கு என் குழந்தையை போல ஹேமியை வளர்ததுக் கொள்ளலாம். என் மனைவி ஒரு நாளும் இதற்கு மறுப்புக் கூற மாட்டாள். ஏனென்றால் எங்களுக்கு பெண் குழந்தைகள்   கிடையாது. இங்கே நடக்கும் விடயங்களை தெளிவாக என் அப்பா, அம்மா, மனைவி ஆகியோருக்கு தொலைபேசியில் கூறினேன். அவர்களதும் சம்மதித்தார்கள்.

சில நாட்கள் கொழும்பிலேயே தங்கினேன். ஹேமிக்கு நன்றாக குணமானதும் அவளுக்கான எல்லா விதமான பொறுப்புகளையும், நானே ஏற்றுக் கொண்டு, அவளையும் ஏற்றுக் கொண்டு வைத்தியசாலையிலிருந்து வெளியே வந்து ஒரு பக்ெகட் மெழுகுவர்த்தியோடு குண்டுவெடிப்பில் மரணித்தவர்களை அடக்கும் செய்திருக்கும் தேவாலயத்தின் அருகாமையுள்ள மயானத்ததையடைந்தேன். ஹேமியிடம் தன் அண்ணன் பெற்றோரை நினைத்து, இந்த மெழுகுவர்த்திகளை பற்ற வைத்து கும்பிடு அம்மா” என்றேன்.

ஒன்றும் விளங்காமல் என்னை ஏறெடுத்துப் பார்த்த ஹேமி தடுமாறினாள். நான் அந்த சின்னஞ் சிறுசுக்கு விளக்கமாக கூறி, அவற்றைக் கூறி செய்ய வைத்தேன். அந்த கைங்காரியத்தை செய்யும் போது கைகால்கள் நடுங்கி கண்ணீர் மலமலவெனக் கொட்டியது. அவளைப் தேற்றும் அளவில் கூட அப்போது நான் இருக்கவில்லை.

மீதியிருந்த எல்லா மெழுகுவர்த்தியும் ஒன்றாக பற்ற வைத்து, எல்லாம் வல்ல இறைவனையும் வேண்டி நான் ஓர் இந்து மதத்தவனாக இருந்தாலும் இயேசுவை நினைத்து, "கிறிஸ்துவே அநியாயமாக உயிர்நீத்த இந்த ஆன்மாக்களை ஆசீர்வதிப்பீராக" என்று கேட்டு வேண்டிக் கொண்டு, தன் அண்ணன் இருவரையும் பாசமாக பெற்று வளர்த்த அம்மாவையும் அப்பாவையும் இழந்து தனித்து அனாதரவாக; அநாதையாக நிற்கும் ஹேமியையும் அழைத்துக் கொண்டு மௌனமாக அங்கிருந்து நடந்தேன். 

காலம் காலமாக கூடிப் பழகி சந்தோஷமாக வாழ்ந்த என் அருமை நண்பன் ஜோசாவிற்கு செய்யும் கைமாறாக அவனது குழந்தையை ஏற்று வளர்ப்பதில் என் மனம் ஆறுதலடையும் என்பது என் நப்பாசையே! இதைவிட அவனுக்காக நான் என்ன செய்வது? அவனது ஆயுள் அவ்வளவு தான் என்று நினைப்பதா? அப்படியானால் மற்றவர்கள்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை! எலலாம் வல்ல சக்தி மிக்க தெய்வமே இந்த உலக மக்களை ஒற்றுமையாக்கு என்று தலைமீது இருகரங்களையும் தூக்கி வணங்கினேன்.

இரா.மோசஸ்

Comments