தோட்டங்களை வசிப்பிடமாக கொண்டிருப்போருக்கும் வீடுகள் அமைக்கப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

தோட்டங்களை வசிப்பிடமாக கொண்டிருப்போருக்கும் வீடுகள் அமைக்கப்பட வேண்டும்

பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசாங்கம் இரண்டு கட்டங்களில் மொத்தமாக 14ஆயிரம் வீடுகளை வழங்கியிருந்தது. இதில் 4ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான பணி பூர்த்தியடையும் நிலையில் எஞ்சிய 10ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இம்மாதம் இடம்பெறுமென மலைநாட்டுப் புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்திருக்கிறார். அத்துடன் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 8000வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவற்றுள் 5000வீடுகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  

இந்த வீடமைப்புத் திட்டத்தின் மூலம் இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புக்குள்ளானோர் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்போர் மற்றும் தீ விபத்தினால் நிர்க்கதியானோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன. இதேவேளை இத்தனி வீடு திட்டம் தொடர்பில் சில விமர்சனங்களும் எழுப்பப்படுகின்றன. அரசியல் தொழிற்சங்க இலாபங்களை முன்னிலைப்படுத்தி தோட்டத்திற்கு 25, 50வீடுகள் என்ற அடிப்படையிலும் தொழிற்சங்க ரீதியாக தமது அங்கத்தவர்களை மையப்படுத்தியுமே வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. தோட்டங்களில் வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான அடிப்படைத் தகுதி குறிப்பிட்ட தொழிற்சங்கத்தில் அங்கத்தவராக இருக்க வேண்டும் என்பதேயாகும் என்றும் குறைகாணல்கள் இருக்கின்றன. இருந்தும் இவற்றையெல்லாமம் அமைச்சர் தரப்பு மறுத்தே வந்துள்ளன. அரசியல் சங்க பேதங்களுக்கு அப்பால் நின்று  பயனாளிகள் உள்வாங்கப்படுவதாக அது உறுதிசெய்கின்றது. மற்றபடி குற்றச்சாட்டுக்கள் எல்லாம் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடேயன்றி உண்மையேதும் இல்லை என்பதே தமிழ் முற்போக்குக் கூட்டணியின்   நிலைப்பாடு.  

கட்டப்படுகின்ற வீடுகளின் தரம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பதை ஊடகங்கள் ஆதாரத்தோடு வெளியிடவே செய்கின்றன.

அரசாங்கத்தின் நிதி மூலம் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த வீடமைப்புத் திட்டத்தின் தரம் பற்றிய உத்தரவாதத்தை அரசாங்கமே தமது பொறியியலாளர்கள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே பலரதும் அபிப்பிராயமாக இருக்கின்றது. இதேநேரம் பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டத்தின் மூலம் பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த சகல தரப்பினரும் உள்வாங்கப்படுகிறார்களா? என்ற கேள்வி எழவே செய்கின்றது. 1.8மில்லியன் பேர் பெருந்தோட்டத் துறையைச் சார்ந்தவர்களாக இருக்கின்றார்கள். இதில் 0.2மில்லியன் பேர் மட்டுமே பெருந்தோட்டத்துறை தொழிலை மேற்கொள்பவர்களாக காணப்படுகின்றார்கள்.  

இதன் மூலம் கணிசமானோர் காலத்தின் கட்டாயத்தின் பேரில் இத்துறைக்கு வெளியே தொழிலின் நிமித்தம் வெளியேறியிருக்கின்றனர். அப்படியிருந்தபோதும் அவர்களின் வாழ்விடமாக மலையகமே விளங்குகின்றது. ஆனால் மலையக வீடமைப்புத் திட்டம் பெரும்பாலும் பெருந்தோட்டங்களில் தற்போது வேலை செய்து கொண்டிருப்பவர்களை மட்டுமே மையப்படுத்துகின்றது. இதனால் தோட்டங்களில் வேலை செய்யாதவர்கள், ஓய்வு பெற்றவர்கள், வெளியிடங்களில் வேலை செய்வோர், தோட்ட சேவையாளர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். இதனால் தோட்டங்களையே நிரந்தர வதிவிடமாக வரித்துக் கொண்டோர் இதனால் பெரிதும் மனக்கிலேசம் அடைந்துள்ளார்கள்.  

இன்று பெருந்தோட்டத்துறையில் போதிய வேலை வாய்ப்பு இல்லை. அதே நேரம் உழைப்புக் கேற்ற ஊதிய உயர்வும் கிடைப்பதில்லை. இதனால் விரக்தியடைந்து போய் பெருந்தொகையான தொழிலாளர்கள் வேறு வேலைகளைத் தேடி நகர்ப்புறங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். லயக் காம்பிராக்களை மூடிவிட்டு குடும்பத்தோடு இப்படி வெளி வேலைக்காகச் சென்றோரும் உள்ளார்கள். இவ்வாறு வெளியேறி செல்வோர் அனைவரும் சுகபோக வாழ்வை அனுபவிக்கவில்லை. மாறாக அன்றாடம் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. சுரண்டல்களுக்கு ஆளாகும் பரிதாப நிலை. தொழில் சார்ந்த பாதுகாப்பு இல்லை. தொழில் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இருந்தும் இவர்கள் வெளியிடங்களிலேயே தங்கி நிற்பதற்கு காரணம் வேறு வழியேதும் இல்லாததே!  

இதே போல மலையக சமூகத்திடமிருந்து பெருமளவிலான ஆசிரியர்கள் உள்வாங்கப்படும் நிலைமை காணப்படுகின்றது. இவர்கள் அனைவரும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளே.  ஆசிரியர்களைத் தவிர அரச உத்தியோகத்தர்களாகவும் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களாகவும் இருக்கின்றார்கள்.

இவர்கள் வெளியிடங்களில் தங்கி நிற்கக்கூடிய சூழலே காணப்படுகின்றது. எனினும் இவை நிரந்தரமான வாழ்விடங்கள் அல்ல. இவர்களின் நிரந்தரமான வதிவிடம் என்பது பெருந்தோட்டப் பிரதேசமாக இருக்கின்றது. இவ்வாறானோரில் சிலர் தமது தோட்டக் குடியிருப்புகளை தமது பொருளாதார நிலைமைக் கேற்ப திருத்தியும் பெருப்பித்தும் கொண்டுள்ளார்கள்.  

இந்த வாய்ப்புக் கிடைக்காதவர்கள் தொடர்ந்தும் லயக்காம்பிராக்களிலேயே வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது வீடமைப்புத்திட்டத்தை மேற்கொள்ளும் மலைநாட்டுப் புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் தவிர வேறு வழிகளிலான எந்தவொரு வீடமைப்புத் திட்டமும் நிவாரணம் தரப்போவது இல்லை.  

ஏனெனில் இச்சமூகத்துக்கான காணி உரிமை இன்னும் கிடைத்தபாடில்லை. சுயமுயற்சி, கடனுதவி, இலவசம் என்ற எந்த முறையிலும் காணி உரிமம் இன்றி வீடமைத்துக் கொள்ள முடியாது. தனித்தனி வீட்டுக்கான காணியைப் பெறுவதில் அரச அமைப்புகளே சிரமப்படுகின்றன. தோட்டக் கம்பனிகள் அவ்வளவு இலகுவில் காணிகளை விடுப்பதாக இல்லை.  

இவர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். இதற்கான தார்மீக உரிமை இவர்களுக்கு இருக்கின்றது. இதற்கென காணித்துண்டுகளைப் பெற்றுத்தருவது முக்கியம். காணித் துண்டுகள் உரிமையாக்கப்படுமாயின் இவர்கள் சுய வீடமைப்புத் திட்டங்கள் மூலமாவது கடனுதவி பெற்று வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வசதியாகவிருக்கும். உண்மையில் தோட்டங்களுக்கு வெளியே வேலை செய்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே உருப்பட்டிருக்கிறார்கள். அநேகர்  பின்னடைவை எதிர்நோக்கியே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள். வாடகை வீடுகளில் தொடர்ந்து காலந்தள்ள முடியாது. நகர்ப்புறங்களில் சொந்தமாக காணித்துண்டுகளை வாங்க பொருளாதாரம் இடம் தராது. இதனால் சகல நிலைகளிலும் இவர்கள் பரிதாபத்துகுரியவர்களே!

தேர்தல் காலங்களில் மட்டும் இவர்களது தேவை குறித்துப் பேசும் மலையக அரசியல்வாதிகள் அதன் பின்னர் வெகு சீக்கிரமே மறந்து விடுகின்றார்கள். தோட்ட ஆசிரியர்களுக்கான வீடமைப்புத்திட்டம் தொடங்கப்படும் என்றார்கள். அது தொடர்பில் இதுவரை பேச்சே இல்லை. தோட்ட சேவையாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் வரும் என்றார்கள். எதுவும் வந்தபாடில்லை. இனி ஓய்வு பெற்றவர்களையும் ஒதுக்கிவிட மாட்டோம் என்றார்கள். நாட்கள் தான் தேய்கின்றனவே தவிர நடந்தது எதுவுமே இல்லை. சமூக ரீதியில் இவர்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டியவர்கள். இலங்கையில் வீடமைப்பு முறைமையானது இரு பிரிவுகளைக் கொண்டிருக்கின்றது. ஒன்று கிராமப்புற வீடமைப்பு. மற்றையது தோட்டப்புற வீடமைப்பு. கிராமப்புற வீடமைப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு வீடமைப்பு முறைமைகள் (உப திட்டங்கள்) காணப்படுகின்றன.  

சுய வீடமைப்புகள், விசேட வீடமைப்புத் திட்டம், இலவச வீடமைப்புத் திட்டம் என்பன கிராம வீடமைப்பில்  அடங்கும். தோட்டப்புற வீடமைப்புப் பிரச்சினை என்பது ஆரம்ப காலம் முதல் அதற்கே உரித்தான விசேட அம்சங்களைக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இதனாலேயே 1977ஆம் ஆண்டு முதல் 1993வரை பிரதமராகவும் உள்ளூராட்சி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராகவும் இறுதியாக ஜனாதிபதியாகவும் பதவி வகித்த ஆர். பிரேமதாசவின் தேசிய ரீதியிலான வீடமைப்புத் திட்டத்தால் பெருந்தோட்டத்துறைக்கு எவ்வித நன்மையும் கிட்டவில்லை. இதேபோல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அட்சிக்காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50000வீடுகள் அமைக்கப்படுமென வழங்கப்பட்ட வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.  

பொதுவாக மலையக வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைக்கு வருவதில் அரசியல் தலையீடு அதிகம் இடம் பெறுவது வழக்கமாகிவிட்டது. இதனால் உரிய காலத்தில் எந்தவொரு திட்டமும் முழுமையடையாமலே போய்க் கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் இந்த அரசாங்கத்தின் கீழ்தான் மெதுவான நகர்வு என்ற போதிலும் நம்பிக்கையை ஊட்டும் வகையில் வீடமைப்புத் திட்டங்கள் இடம் பெற்றுவருகின்றன. எனவே தோட்டப்புறங்களை வசிப்பிடமாகக் கொண்ட வீடற்றவர்களுக்கு வீடுகளை அமைத்தும் கொடுக்கும் பணியை முன்னெடுக்க வேண்டிய பாரிய கடப்பாடு அமைச்சர் பழனி திகாம்பரத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது.  அதே நேரம் இது அவரது தேர்தல் கால வாக்குறுதியும்கூட. அமைச்சர் திகாம்பரத்தினது சேவை குறித்ததான நம்பிக்கை பெருந்தோட்டத்துறை சார் மக்கள் மனதில் பலமாக பற்றிக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.    

 

பன். பாலா

Comments