என்மீது குற்றங்காணும் தரப்புக்கு ஆதரவளிப்பது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கும் துரோகம் | தினகரன் வாரமஞ்சரி

என்மீது குற்றங்காணும் தரப்புக்கு ஆதரவளிப்பது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கும் துரோகம்

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபடுத்தி தன்னை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் முயற்சியையே பேரினவாதச் சக்திகள் முன்னெடுத்துள்ளதாகவும், தன் மீது சுமத்தப்படும் அபாண்டபழிகளை அந்தச் சதி முயற்சிகளை திரிபுபடுத்தி அதன் மூலம் அரசியல் இலாபம் தேடும் கைங்கரியத்தையே சில அரசியல் சக்திகள் கையாண்டுவருவதாக முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த சிறப்புப் பேட்டியின் போது தெரிவித்தார். 

அவர் வழங்கிய நேர்காணல் விபரம் வருமாறு:- 

கேள்வி:– மக்கள் விடுதலை முன்னணியினால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் உங்களை இலக்கு வைத்து ஈட்டிகள் எய்யப்பட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இவற்றை எவ்வாறு எதிர் கொள்ளப்போகின்றீர்கள்? 

பதில்:-– இன்று என்னையும் முஸ்லிம் சமூகத்தையும் இலக்கு வைத்தே இனவாதச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனது சமூகத்துக்காக குரல் கொடுக்கின்றபோது என்மீது அபாண்டங்கள் சுமத்தப்படுகின்றன. முதலில் எனக் கெதிராகவே நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டது. ஆனால் அது கை கூடாமல்போனதையடுத்து ஜேவிபி தரப்பு அரசுக்கு எதிராக பிரேரணை கொண்டு வந்ததும் அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள எதிரணிச் சக்திகள் வரிந்து கட்டிக்கொண்டு செயற்பட்டன. 

அவற்றின் கனவு மாயமானாகிப் போன நிலையில் எனக்கெதிரான செயற்பாடுகள் மற்றொரு பக்கம் திசை திருப்பப்பட்டுள்ளது. உண்மையை, யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாத நிலைக்கு நாடடின் சிங்கள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

என்னை பழி வாங்குவதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தை பலவீனப்படுத்த முடியும் என்பதே இனவாதச் சக்திகளின் கணிப்பீடாக உள்ளது.  

சஹ்ரான் கும்பலின் உயிர்த்த ஞாயிறு குரூர தாக்குதலுக்கு பின்னர் என் மீதும், எம் சமூகத்தின் மீதும் சுமத்தப்பட்ட வீணான அபாண்டங்களையும், பழிகளையும் நான் நினைத்துப் பார்க்கின்றேன். எமது சமூகத்தின் மீது கண்டியில் கட்டவிழ்த்தப்பட்டிருந்த வன்முறைகளை தடுக்கும் வகையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஒட்டு மொத்தமாக பதவி விலகிய சந்தர்ப்பத்தில், சகோதரர் ரவூப் ஹக்கீம் நாங்கள் பதவி விலகினாலும் அரசாங்கத்தை வீழ்த்த விடமாட்டோம் என கொடுத்த வாக்குறுதியை மீற முடியாத நினையில் இருக்கின்றோம். 

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்ட 10 குற்றச்சாட்டுக்களை என் மீது சோடித்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் கொண்டு வந்தனர். நாட்டுக்கு நான் கேடு விளைவித்ததாகவே அந்த குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருந்தன. இதன் மூலம் என்னை தோற்கடித்து அதன் மூலம் தமது நோக்கத்தை நிறைவேற்றுவதே எதிர்க்கட்சியினரின் முனைப்பாக இருந்தது. இந்த எதிர்க்கட்சி காரர்களுடன் நீண்ட காலம் நான் அரசியலில் பயணித்தவன். அவர்களில் சிலர் எனது நல்ல நண்பர்கள் எனினும், விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் கையொப்பம் இட்டிருக்கலாம். என் மீதான குற்றச்சாட்டுக்களை முறையிடுமாறு ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் மௌனமாகி விட்டனர். அமைச்சர் ஒருவரின் பெயரை சொல்லி அவருக்கு எதிரான குற்றாச்சாட்டுக்களை பதியுமாறு சொல்லப்பட்டமை வரலாற்றில் முதற்தடவையாக நடைபெற்றது.  

தேசாபிமானிகள் எனக் கூறப்படுபவர்களும், தேசப்பற்றாளர்கள் என மார்தட்டுபவர்களும் பொலிஸுக்குச் செல்லாது மௌனம் காத்தது ஏன்? எனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் அப்பட்டமான பொய். பொலிஸ் மா அதிபரும் அதனை அறிவித்தார். பாராளுமன்ற தெரிவுக்குழுவிலும் நான் அதனை தெளிவுபடுத்தினேன். இந்த குற்றச்சாட்டுக்களில் ஒன்றையாவது நீங்கள் நிரூபித்தால் நான் அரசியலிலிருந்து நீங்குவதற்கு தயாராக உள்ளேன் என சவால் விடுக்கின்றேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியலுக்காக பயன்படுத்தாதீர்கள். 

அப்பாவி மக்கள் பட்ட துன்பங்களை நினைத்து இன்னும் நான் வேதனையுடம் இருக்கின்றேன். தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சஹ்ரானின் சகாக்கள் அனைவருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். அதுமாத்திரமின்று மக்கள் விடுதலை முன்னணியினர் கொண்டுவந்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூறியவாறு ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்கள் உட்பட அரசாங்கத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் இதற்கு பதில் சொல்ல வேண்டும் இறைவனிடத்திலும் பதில் சொல்லியே ஆக வேண்டும். 

சஹ்ரானின் கடந்த கால நடவடிக்கைகள் அனைத்தையும் உலமாசபை, முஸ்லிம் அமைப்புக்கள் உட்பட பொலிஸாருக்கு வழங்கிய போதும் தாக்குதல் தொடர்பில் அவர்களுக்கு முற்கூட்டி தெரிவிக்கப்பட்டிருந்த போதும் தாக்குதலை தடுக்க வக்கில்லாதவர்கள் அத்தனை பழிகளுக்கும் காரணமாக இருக்க வேண்டும், அதனை விடுத்து என் மீதும் என் சமூகத்தின் மீதும் இதனை திசை திருப்பி திணிக்க பார்க்கின்றனர். ஆனால் இந் நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இதனை கண்டித்தது மாத்திரமின்றி பயங்கரவாதிகளை காட்டிக்கொடுத்து அதனை இல்லாது ஒழிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். 

இஸ்லாத்தில் அடிப்படை வாதம் இல்லை. இஸ்லாத்தில் பயங்கரவாதமில்லை 54 முஸ்லிம் நாடுகளை அழிப்பதற்கும் அவர்களின் நிம்மதியை தொலைப்பதற்குமே இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். ஏஜண்டுகள் உருவாக்கப்பட்டனர். அதுரலிய ரத்ன தேரர் கூறுவது போல் இஸ்லாத்தில் பயங்கரவாதம் என்று ஒன்று இல்லை தாக்குதல் நடைபெற்று 20 நாட்களின் பின்னர் முஸ்லிம்களின் சொத்துக்களை காடையர்கள் சூறையாடினார்கள், உயிர்ப்பலி எடுத்தார்கள். தென்னிலங்கையில் பாடசாலை ஒன்றுக்குள் நுழைந்த தந்தை ஒருவரை சுட்டுக்கொன்ற இராணுவத்தினருக்கு, முஸ்லிம்களின் சொத்துக்கள் குருநாகலில் சூறையாடப்பட்ட போது ஒன்றுமே செய்ய முடியாமல் போனது ஏன்? அவர்களின் துப்பாக்கிகள் இயங்க மறுத்தது ஏன்? பள்ளிவாசல்களையும் கடைகளையும் தாக்கிய காடையர்களுக்கு எதிராக ஆயுதங்களை நீட்ட இராணுவம் மௌனம் சாதித்தது ஏன்? இந்த அராஜகத்துடன் தொடர்புடைய 300ற்கும் மேற்பட்டோர் இனம் காணப்பட்ட போதும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் விடுதலை செய்யப்பட்டனரே. இதுதானா நாட்டின் ஜனநாயகம்? இந்த தவறு அரசியலுக்காக செய்யப்பட்டிருக்குமேயானால் இறைவன் தண்டித்தே தீருவான்.  

கேள்வி:– உங்களுக்கு எதிராக பொதுபலசேனாவும், பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்ன தேரோ ஆகியோர் தானே உரத்துக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதன் பின்புலம் என்ன? 

பதில்:– இந்த நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களை இலக்கு வைத்தே இனவாதம் கட்ட விழ்த்து விடப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு இந்த மண்ணின் மீது உரிமை கிடையாது எனக் கூறுவதற்கு இவர்கள் யார்? இலங்கை எமதும் தாயகம் தான். நாங்கள் வந்தேறு குடிகள் என்றால் அவர்களும் வந்தேறு குடிகள் தான். இதனை வரலாறு உறுதிப்படுத்தும். 

ஆரம்பத்தில் வில்பத்து பிரதேசத்தில் எட்டாயிரம் ஏக்கர் காணிகள் எனக்கு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனைச் செய்தவர்கள் இந்த ஹெல உறுமய அமைப்பைச் சேர்ந்தவர்களே. இந்தக் குற்றச்சாட்டை நான் மறுத்துள்ளேன். இப்போது அதே குற்றச்சாட்டை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திசாநாயக்காவும் முன்வைக்கின்றார். இந்தக் குற்றச்சாட்டை நிரூபித்துக்காட்டுமாறு நான் பல தடவைகள் வலியுறுத்திவந்துள்ளேன். ஆதாரம் இருப்பதாகக் கூறுகிறார்களே தவிர எவரும் நிரூபிக்க முன்வரவில்லை. இது என் மீதான அபாண்டப் பழி என்பதை நாடே அறியும்.  

பொதுபல சேனாவோ, அத்துரலியே தேரோவோ, எஸ். பி. திசாநாயக்காவோ வேறு எவராக இருந்தாலும் என் மீதானஇக் குற்றச்சாட்டை நிரூபித்துக்காட்டினால் அந்த நிமிடமே நான் அரசியலிலிருந்து ஒதுங்கிப் போகத்தயாராக இருக்கின்றேன். அது மட்டுமல்ல குற்றம் நிரூபனமானால் எந்தத் தண்டனையையும் ஏற்றுக் கொள்ளவும் தயாராகவே இருக்கின்றேன். 

நானொரு முஸ்லிம் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டவன். நாட்டுக்கோ, மக்களுக்கோ துரோகத்தனத்தை ஒருபோதும் இழைக்க மாட்டேன். தேசத்துரோகியாக ஒருபோதும் செயற்படமாட்டேன்.  

அத்துரலியே ரத்ன தேரோ என்பவர்யார்? அவர்தான் அன்று மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்கு வரிந்துகட்டிக் கொண்டிருந்தவர் இப்போது பிரதமராக இருக்கும் ரணிலை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கச்சை கட்டிக்கொண்டு திரிபவரும் அவரே. தேர்தல் ஒன்றில் தனித்து நின்று வெல்ல முடியாதவர்கள் தான் இவர்கள். என்னை பொறுத்த வரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலோ, ஐக்கிய தேசிய கட்சியிலோ போட்டியிட வேண்டிய தேவை இல்லை. எனது கட்சியில் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய சக்தியை இறைவன் தந்துள்ளான். அதிக பட்ச பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாங்கள் பெறுவோம். 

பௌத்த மத கோட்பாடுகளுக்கு மாறாக உண்ணாவிரதம் இருந்து இனவாதத்தை அதுரலிய கக்குகின்றார். யாழ்ப்பாணம், கல்முனைக்குச் சென்று தமிழ் முஸ்லிம் உறவை சீர் குலைக்க முயற்சிக்கின்றார். எங்கள் இரு சமூகங்களுக்கிடையிலான நியாயமான பிரச்சினைகளை நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம். 

எனது அரசியல் வரலாற்றில் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராகவோ, எஸ்.பி திஸ்ஸாநாயக்கவுக்கு எதிராகவோ, விமல் வீரவன்சவுக்கு எதிராகவோ, அல்லது எந்த ஒரு அரசியல்வாதிக்கு எதிராகவோ தனிப்பட்ட ரீதியில் குற்றச்சாட்டுக்களை சுமத்தியவன் அல்ல. அவ்வாறான வரலாறு எனக்கு கிடையாது இனியும் அவ்வாறு பேச மாட்டேன். ஆனால் என் மீது தொடர்ந்து எத்தனை எறிகணைகளை வீசுகின்றார்கள். மோசமாக தாக்குகின்றார்கள். சுனாமி, இயற்கை அழிவுகளில் முஸ்லிம் நாடுகள் வழங்கிய அத்தனை உதவிகளையும் மறந்து இப்போது அந்த நாடுகளுக்கு எதிராக பழிகளை சுமத்துகின்றார்கள்.  

நான் ஒரு முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காகவே என்மீது இந்தளவுக்கு அபாண்டப் பழிகளை சுமத்திக் கொண்டிருக்கின்றனர். கடந்த பல மாதங்களாக நான்படும் வேதனைகள், சோதனைகள் மட்டிலடங்காதவையாகும். இரவு நேரங்களில் நித்திரை கொள்ளமுடியாதுள்ளது. இக்காலப்பகுதியில் நான் அழாத இரவுகளே இல்லை. இறைவனிடம் தொழுது பிரார்த்திக்காத இரவுகளே இல்லை. என்னை மட்டுமா தாக்குகிறார்கள் எனது மனைவி, மற்றும் குடும்பத்தினர்களையும் அல்லவா குற்றக்கூண்டில் நிறுத்தப்பார்க்கின்றனர். இவ்வளவையும் பொறுத்துக் கொண்டுதான் இன்னமும் வாழ்கின்றேன். 

கேள்வி:– இவ்வளவையும் தாங்கிக் கொண்டு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகிறீர்கள். இன்று நீங்கள் குற்றமற்றவர் என்று தீர்ப்புவந்த நிலையிலும் பழி சுமத்திக் கொண்டுதானே இருக்கின்றார்கள்? 

பதில்:– நான் எந்தவிதமான குற்றமும் இழைக்கவில்லை. என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. இறைவன் என்னை நன்கறிவான். அல்லாஹ்மீதும், புனித குர்ஆன் மீதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதேசமயம் எனது மக்கள் என்னை நன்கறிவார்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எனக்காகக் குரல்கொடுத்தார்கள். அதனை எனது வாழ்நாளில் ஒருபோதும் மறக்க மாட்டேன்.  

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது, சம்பந்தன் ஐயாவை நான் சந்தித்தேன் தம்பி! உன்னுடைய சமூகம் துன்பத்தில் இருக்கின்றது. இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களோ, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களோ பயங்கரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள். இனவாதிகள் முஸ்லிம் சமுதாயத்தை நசுக்குகின்றார்கள். சமுதாயத்திற்காக பேசும் உனது குரலை நசுக்க பார்க்கின்றார்கள் உனது பாதுகாப்பு எப்படி இருக்கின்றது? பாதுகாப்பில் நீ கவனம் செலுத்து தம்பி! என அவர் மிகவும் அன்பாக என்னை ஆறுதல் படுத்தினார்.  

சிறுபான்மை மக்களின் அரசியல் தலைவரான உன்னை வீழ்த்துவதற்கான சதிக்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் எனக் கூறிய வர் தான் சம்பந்தன் ஐயா! எமக்கு இடையே அரசியல் ரீதியான வேறுபாடுகள் இருந்த போதும், அநியாயமான அபாண்டங்களுக்கு அவர் துணைபோக மாட்டேன் எனக் கூறியமை முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த கௌரவமாகவே நான் மதிக்கின்றேன். 

கேள்வி:– நீங்கள் சமீபத்தில் எமக்கு நியாயம் கேட்டு ஐ.நாவை நாடப்போவதாக தெரிவித்திருந்தீர்களே? 

பதில்:– உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் அச்சமூகத்தின் மக்கள் பிரதிநிதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டன. சம்பவம் நடைபெற்று 21 நாட்களுக்கு பின்னர் முஸ்லிம்களின் சொத்துக்கள், வியாபார நிலையங்கள், பள்ளிவாசல்கள் என அனைத்தும் திட்டமிட்டு தாக்கப்பட்டன. அதுமட்டுமன்றி, பௌத்த தேரர்கள் நினைத்தபடியான செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.  

தேரர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தமையும் மற்றைய தேரரொருவர் காலக்கெடு விதித்ததையும் சொற்ப காலப்பகுதியில் இந்த நாடு மீண்டும் பற்றி எரிந்துவிடும் என்ற நிலைமைகளே காணப்பட்டிருந்தன. இந்த சூழல் மாற வேண்டும் என்றுதான் முயற்சிகளை எடுக்கின்றோம். அதற்காகவே முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் கூட்டாக பதவிகளிலிருந்து இராஜினாமா செய்திருந்தோம். இனவாதம் தலைவிரித்தாட வேண்டும் என்ற தேரர்களின் ஆசை நிராசையாக்கப்பட்டு இந்நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழும் அதேநேரம், நாட்டின் கீர்த்திக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனத்தினை கொள்கின்றோம். 

எனினும், முஸ்லிம் இனத்திற்கு எதிராக மிகமோசமான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பதனால் தொடர்ந்தும் பொறுமைகாக்க முடியாத காரணத்தினால் எதிர்காலத்தில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம். அதனைத்தவிர எமக்கு வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை. எமது ஜனநாயக போராட்டத்தின் ஒரு அங்கமாகவே ஐ.நாவை நாடுவதையும் கொண்டுள்ளோம்.  

கேள்வி:– முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக குறிப்பிட்ட சில பௌத்த தேரர்கள் செயற்படுவதாகவும் பெரும்பான்மை சிங்கள மக்கள் தவறாக வழி நடத்தப்படுவதாகவும் கூறுகின்றீர்கள். அதற்கான பொறுப்புக்கூறலை செய்ய வேண்டியவர் யார்? 

பதில்:– சிறையிலிருந்து ஜனாதிபதியின் மன்னிப்பில் விடுதலையான தேரருக்கு எவ்விதமான நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. அவர் விடுதலையான நாள் முதல் முஸ்லிம்களின் மனதை புண்படுத்துகின்ற வகையிலும், முஸ்லிம்களை வலிய சண்டைக்கு இழுக்கின்ற செயற்பாடுகளையும் முன்னெடுத்துவருகின்றார். ஆகவே, அவருக்கு விடுதலையளித்த ஜனாதிபதிதான் அதற்கான பதிலைத்தர வேண்டும். 

கேள்வி:– முஸ்லிம் சமூகம் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினீர்களா? 

பதில்:– ஆம் , அனைத்து விடயங்களையும் பகிரங்கப்படுத்த முடியாது விட்டாலும், ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புத்தரப்பினர் என அனைவரையும் தொடர்ச்சியாக சந்தித்து கலந்துரையாடி வருகின்றோம். குற்றங்களுடன் தொடர்பில்லாது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்பாவி சகோதரர்களின் விடுதலை தொடர்பில் இப்பேச்சுக்களின்போது அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றோம்.

குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எமக்கும் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. 

ஆனால், மதத்தலைவர்களின் பெயரால் முன்னெடுக்கப்படும் அராஜகங்களை முடிவுக்கு கொண்டுவருமாறும். ஒரு சில அரசியல்வாதிகள் தமது அடுத்த தேர்தல் வெற்றிக்காக கக்கிவரும் தீயைக் கட்டுப்படுத்துமாறும். முஸ்லிம்களுக்காகவே அவசரகாலச் சட்டம் என்ற வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிடுமாறும் விசேடமாக ஜனாதிபதியிடத்தில் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம்.   

நேர்காணல்: எம்.ஏ.எம். நிலாம்

Comments