தமிழர்களின் மாற்று அணிக் கனவை அழித்தவர் சி.வி | தினகரன் வாரமஞ்சரி

தமிழர்களின் மாற்று அணிக் கனவை அழித்தவர் சி.வி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனின் தரப்பும் ஒன்று சேர்வதைத்தான் மக்கள் விரும்புகின்றனர். ஆனால் முன்னாள் முதலமைச்சரின் செயற்பாடுகளே அதனைச் சாத்திய மற்றதாக்குகின்றதென்கின்றார்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அதனாலேயே மக்கள் விரும்பும் மாற்று அணியொன்று இன்றுவரை சாத்தியப்படவில்லை என்றும் அவர் சொல்கின்றார். தினகரன் வார மஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். நேர்காணலின் முழு விபரம்.....   

கேள்வி : சமகால அரசியல் நிலைமைகளை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

பதில் : - இலங்கைத் தீவை மையப்படுத்திய அரசியல் என்பது சர்வதேச கண்காணிப்பிற்கு மிகத் தீவிரமாக உள்ளாக்கப்பட்டிருக்கின்ற நிலைமையைக் காண்கிறோம். பூகோள, சர்வதேச அரசியலின் பிரகாரம் இந்த நாட்டுக்குள் பல வல்லரசுகள் தங்கள் நலன்களைப் பேணுவதற்கு விரும்புகின்றன என்று நாங்கள் கடந்த பத்து வருடத்திற்கு மேலாக சொல்லிக் கொண்டு வருகின்றோம். அது இன்றைக்கு வெளிப்படையாகத் தெரிகிறது.  

இன்றைக்கு சோபா என்ற இராணுவ ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா இலங்கையுடன் கைச்சாத்திட்டு திருகோணமலை துறைமுகத்தைப் பாவிக்க பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்றப் பக்கத்தில் சீனா கப்பல்களை இலங்கைக்கு கொடுத்து கொண்டிருக்கிறது. அம்பாந்தோட்டையை கேட்டிருக்கிறது. அதைப்போல எத்தனையோ ஒப்பந்தங்களையும் சீனா கைச்சாத்திட்டுள்ளது.  

உள்நாட்டு அரசியலைப் பார்த்தால் எங்கள் கண்ணுக்குத் தெரிகிற எதிர்காலத்தில் தென்னிலங்கையின் சிங்களப் பேரினவாதக் கட்சிகள் எந்தவொரு தேர்தலிலும் சிங்கள மக்களின் அறுதிப் பெரும்பான்மை வாக்கு கிடைக்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் தமிழ் மக்கள் மிக முக்கிய தீர்மானிக்கிற சக்தியாக இருக்கின்றனர்.  

கேள்வி : - இப்படியான நிலையில் தமிழ் மக்கள் எதைச் செய்ய வேண்டும். அதே நேரம் வல்லரசுகள் எதனை விரும்புகின்றன எனக் கருதுகின்றீர்கள்?  

பதில் :- தமிழ், முஸ்லிம் சிறுபான்மைகள்தான் மிக முக்கியமான தீர்மானிக்கிற சக்தியாக அமையப் போகின்றது. அதிலும் தமிழ் மக்களுடைய அரசியல் இதில் மிக முக்கியம் என்று நான் சொல்வதற்கான காரணம் என்னவென்றால் தமிழ் மக்கள் ஒரு கொள்கையோடு பயணிக்கின்றவர்கள். தமிழ்த் தேசிய உணர்வோடு இருக்கிறவர்கள். ஆகவே தேசியத்திற்கு நேர்மையாக யார் செயற்படுவார்கள் என்று நினைக்கின்றார்களோ எந்தத் தரப்பில் விசுவாசம் கொள்கிறார்களோ எந்த தரப்பிற்கு ஒற்றுமையாக வாக்களிப்பதற்கு முடிவெடுக்கிறார்களோ அந்த தரப்பிற்கு பல மடங்காக தமிழ் மக்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.  

தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிற்பாடு புலிகள் அமைப்பின் தலைமைத்துவத்தில் இருந்த விசுவாசத்தால் பேராட்டம் மெளனிக்கப்பட்ட பிற்பாடும் கூட அந்தத் தலைமைத்துவம் காட்டிச் சென்ற கூட்டமைப்பு என்று கண்ணை மூடிக் கொண்டு வாக்களித்தார்கள். ஆனால் அது தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பு இது இல்லை. அது அந்த தலைவரின் கொள்கைக்கு நேர் எதிராக செயற்படுவதாக இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கின்றனர்.  

ஆகவே எதிர்காலத்தில் அந்த நேர்மையான தமிழ்த் தேசியத்தை யார் முன்னெடுக்கின்றார்களோ அவர்கள் ஒட்டு மொத்த இலங்கை அரசியலை தீர்மானிக்கக்கூடிய பலம் வாய்ந்த ஒரு சக்தியாக நிலைநாட்டப்படுவதற்கான வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றது. இந்த நிலைமையில் சர்வதேச அரசியலில் வல்லரசுகள் தங்களுடைய விருப்பத்திற்கு இணங்கி செயற்படக் கூடிய தரப்பாக இந்தத் தரப்புக்கள் இருக்க வேண்டுமென்பதில் வலு அக்கறையாக இருக்கின்றன.  

கேள்வி : வல்லரசுகள் ஏன் உங்களை எதிர்ப்பதாக கூறுகின்றீர்கள் ? 

பதில் : - தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறுகிற மக்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியான எங்களைத் தெரிவு செய்வதை ஏதோவொரு வகையில் தடுக்க வேண்டுமென்பதில்  இந்த வல்லரசுகள் தெளிவாக இருக்கின்றன என்பது எங்களுக்குத் தெளிவாகத் விளங்குகின்றது. ஏனெனில் நேர்மையாக தமிழ் மக்களுடைய நலன்களை மையப்படுத்திய தமிழ் மக்களுடைய அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் இந்த மக்களுக்கு உழைக்கத் தயாராக இருக்கிற எங்கட தரப்பை பலவீனப்படுத்துவதற்கும் எங்களை அந்த மாற்றுத் தெரிவாக மக்கள் அடையாளப்படுத்தாமல் திசை திருப்புவதற்கும் நடவடிக்கைகள் பலவற்றை முன்னெடுத்து வருகின்றனர்.  

இதனடிப்படையில் இன்னொரு அணியை அதாவது கூட்டமைப்பு கொண்ட அதே கொள்கையை, அதே நபர்களைக் கொண்ட ஆனால் முகமூடியை மாட்டி வேறு பெயர்களில் இயங்குவதற்கான முயற்சியொன்று நடந்து கொண்டிருக்கிறது.

இது தான் வல்லரசுகளின் இப்போதைய அரசியலாக உள்ளது. தமிழ் அரசியல் என்பது என்னைப் பொறுத்தவரையில் வரக் கூடிய பத்து இருபது வருசத்திற்கு ஒரு மிக முக்கியமான பேரம் பேசக் கூடிய பலம்வாய்ந்த இடத்தில் இருக்கப் போகின்றது.  

ஆக இங்கு கேள்வி  என்னவென்றால் எங்கள் மக்கள் யாரைத் தெரிவு செய்யப் போகின்றனர் என்பது தான்.  கடந்த பத்து வருசமாக நாங்கள் சொன்ன விசயங்களை, மக்கள் அன்றைக்கு விளங்கிக் கொள்ளாவிட்டாலும் அன்று நாங்கள் முன்கூட்டியே சொன்ன விடயங்கள் அனைத்தும் இன்றைக்கு நிருபிக்கப்பட்டுள்ளன.  

எங்களைப்  போன்ற தரப்பை பலப்படுத்தவதா அல்லது கூட்டமைப்பை போன்ற இன்னொரு பெயரில் மாற்று என்ற போர்வையில் இயங்கப் போகிற கூட்டமைப்பை பலப்படுத்தப் போகின்றனரா என்பதே கேள்வியாக இருக்கப் போகிறது. அதாவது கூட்டமைப்பு ​ேபான்று இன்னொரு பெயரில் இயங்கும் அமைப்பை மக்கள் தெரிவு செய்யப் போகின்றனர் என்றால் இந்த பத்து வருசத்தில் எப்படி மக்கள் ஏமாற்றப்பட்டு இன்றைக்கு நடுத்தெருவில் இருக்கின்றனரோ அது தொடரும். ஆகவே மக்கள் முடிவெடுக்க வேண்டும்.  

கேள்வி : - கூட்டமைப்பிற்கு மாற்றான அணி ஒன்றை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும் நிலையில் அதில் நீங்களும் இணைவதாக இருந்தும் தற்போது அந்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்திருப்பதாக சொல்லப்படுகின்றதே?   

பதில் : - தமிழ் மக்கள் இன்றைக்கு புதிய ஒரு மாற்று அணி என்று விரும்புகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் நீதியரசர் விக்கினேஸ்வரனின் தரப்பு அணியும் ஒன்று சேர்வதைத் தான். அதனைத் தான் எங்கு சென்றாலும் தமிழ் மக்கள் சொல்கின்றனர்.  இணைந்து வேலை செய்வதற்கு நாங்கள் தயார். அதனை கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்தே சொல்லிக் கொண்டு வருகிறோம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. அதிலும் எங்கள் பக்கத்தில் இருந்து ஒரு தடையும் இல்லை.  

ஆனால் நீதியரசர் விக்கினேஸ்வரன் அதைச் செய்யாமல் இந்தக் கூட்டமைப்பு என்னென்ன பிழைகளைச் செய்ததோ அல்லது செய்கிறதோ அந்தப் பிழைகளைச் செய்த ஈபிஆர்எல்எப் அணியைச் சேர்க்காமல் தான் எங்களுடன் வரத் தயார் இல்லை என்று நிபந்தனையைப் போடுகின்றார். இங்கு நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிழை என்று சொல்வது அவர்கள் கொள்கை ரீதியான பிழைவிடுவதற்காகவே தான்.

அந்தக் கொள்கையோடு எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் அதே பிழைகளைச் செய்கிற ஈபீஆர்எல்எப் அமைப்பை சேர்க்காமல் தான் இந்தக் கூட்டிற்கு வரத் தயார் இல்லை என்று ஒரு நிபந்தனையைப் போடுவதால் இந்தக் கூட்டு சேர்வதற்கான வாய்ப்புக்களை விக்கினேஸ்வரன் ஐயா இல்லாமல் செய்கின்றார்.  

எனவே கொள்கையின் அடிப்படையில் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் நேர்மையாக இந்த மக்களுக்கு உழைக்கத்  தயாராக இருக்கக் கூடிய தரப்புக்களை விக்கினேஸ்வரன் ஐயா கூட்டுச் சேர்ப்பதற்கு எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அதைச் செய்யாமல் பிழையான தரப்புக்களை அதாவது கொள்கையில்லாத தரப்புக்களைச் சேர்த்து வெறுமனே எண்ணிக்கையைக் காட்டுவதற்காகவோ தேர்தல் அரசியலில் பதவிகளை எடுப்பதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ அவர் அப்படி யோசிக்கின்றார் அல்லது வெறுமனே கூட்டமைப்பை தோற்கடிப்பதற்காக என்று சொல்வதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து அல்ல. ஆகையினால் மக்கள் முடிவெடுக்கட்டும்.  

எங்களைப் பொறுத்தவரையில் தெரிந்து கொண்டும் அதாவது இது ஒரு நாளும் எங்கள் மக்களின் நலன்களுக்கான கூட்டாக அல்லாமல் ஈபிஆர்எல்எப் போன்ற அமைப்புக்களை சேர்த்துக் கொண்டால் நேர்மையாக மக்களுக்கு உழைக்க முடியாது என்று தெரிந்து கொண்டு நாங்கள் அந்தப் பிழையைச் செய்வதற்குத் தயாரில்லை.  

கேள்வி : கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் விக்கினேஸ்வரனுடன் இணைந்து செயற்படத் தயாரெனக் கூறியிருக்கின்றீர்கள். அதே போன்றே கடந்த 2018 ஆம் ஆண்டும் ஈபிஆர்எல்எப் அமைப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன் தரப்போடும் இணைந்து கூட்டாக செயற்பட முன் வந்திருந்தீர்கள். ஆனால் இப்போது ஈபிஆர்எல்எப் அமைப்பு கொள்கையில்லாதது விக்கினேஸ்வரனின் கூட்டில் அந்த அமைப்பு வேண்டாம் என்று ஏன் கூறுகின்றீர்கள்?  

பதில் : - இதற்கு காரணம் என்னவெனில் முதலாவதாக துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்ட உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட கடந்த 2018 இல் தான் ஈபிஆர்எல்எப் அமைப்பு முடிவெடுக்கிறது.

அதிலும் எங்களுடன் சேராமல் இந்த இனத்தைக் காட்டிக் கொடுத்த துரோகிககள் என்று சொல்லி கூட்டமைப்பால் வெளியேற்றப்பட்ட உதய சூரியனோடு சேர வேண்டுமென ஈபீஆர்எல்எப் முடிவெடுக்கிறது.

இவ்வளவு காலமும் சேர்ந்து வேலை செய்த எங்களைச் சேர்க்காமல் அல்லது எங்களோடு சேர்ந்து வேலை செய்யாமல் எங்களோடு இணையாமல் எங்களைக் கடைசி நேரத்தில் கைவிட்டுப் விட்டு உதயசூரியனோடு சேர்கின்றனர். இந்தப் போராட்டம் அதிலும் இயக்கத்தைப் பற்றி இப்போது தம்பி பிரபாகரன் என்று நிறையப் பேர் கதைக்கின்றனர் தானே . அந்த தம்பி பிரபாகரன் யாரைத் துரோகியாக  அடையாளப்படுத்தி கூட்டமைப்பில் இருந்த வெளியேற்றினாரோ அந்தத் தரப்போடு சேர்ந்தது சரியானதா? . 

இரண்டாவதாக மகிந்த ராஐபக்சவும் அவரது கட்சி சார்ந்தவர்களும் இனப்படுகொலையாளிகள் என்று நாங்கள் சுட்டிக்காட்டகின்றோமோ அந்த இனப்படுகொலையாளிகளோடு இந்தத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டுச் சேர்ந்து ஒப்பந்தம் செய்து வவுனியா வடக்கில் நெடுங்கேணி பிரதேச சபையில் ஆட்சி பிடிப்பதற்கு முடிவெடுத்தனர்.  

அதே போல யார் யாருடன் எல்லாம் கூட்டமைப்பு கூட்டுச் சேர்ந்ததால் நாங்கள் தரோகிகள் என்று சொன்னோமோ அவர்களுடன் எல்லாம் ஈபிஆர்எல்எப் அமைப்பும் கூட்டுச் சேர்ந்தது. இதற்கமைய ஆட்சியையும் பிடித்தது. அதை எப்படி நாங்கள் நியாயப்படுத்தலாம். ஆக கூட்டமைப்பு கொள்கையில் பிழை என்று சொல்லி அவர்களை நாங்கள் நிராகரிக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்று சொல்கிறோம் என்றால் அந்த விமர்சனத்தன்மைக்கு ஒரு நேர்மைத் தன்மை இருக்க வேண்டுமா இல்லையா.  

கூட்டமைப்பு பிழை விடுகிறது அவர்களை நிராகரிக்க வேண்டுமென்று நாங்கள் சொன்னோமென்று சொன்னால் அதே பிழையை அல்லது அதை விட மோசமாக ஈபீஅர்எல்எப் அமைப்பு இழைத்திருக்கிறது. அதாவது கூட்டமைப்பு தாமரை மொட்டு ராஐபக்சவுடன் கூட்டு சேரவில்லை.். ஆனால் ஈபிஆர்எல்எப் அமைப்பு அந்த தாமரை மொட்டுடனும் கூட்டுச் சேர்ந்தது. அப்படியாக கூட்டமைப்பிலும் விட மோசமாகச் செயற்படும் ஒரு தரப்பை எங்கள் அணிக்குள் வைத்துக் கொண்டு கூட்டமைப்பு பிழை என்று கையை நீட்டி விரல் காட்டி பேச எப்படி எங்களுக்கு முதுகெலும்பு இருக்கும். அதில் ஒரு நியாய நேர்மைத் தன்மை இருக்க வேண்டும் தானே. ஒரு தரப்பிற்கு எதிராக விமர்சனம் முன்வைக்கிறோம் என்றால் அதில் நேர்மை தன்மை இருக்க வேண்டும். இது தான் நிலைமை.  

இதில் முக்கியமாக விளங்கிக் கொள்ள வேண்டியது என்னவெனில் ஈபிஆர்எல்எப் அமைப்பை எப்ப பிழை என்று நாங்கள் சொல்கிறோம் என்பது தான். அது எப்ப என்றால் கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை உதாசீனம் செய்து அதை முன்னிலைப்படுத்தாமல் விடுதலைப் போராட்டம் துரோகிகள் என்று அடையாளப்படுத்திய உதய சூரியனில் போட்டியிட்டு தேர்தல் முடிந்த பிறகு  மிக மோசமாக தாமரை மொட்டுடன் ஈபிஆர்எல்எப் சேர்ந்தது தான். அதுபோல ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி அகியவற்றுடன் சேர்ந்ததும் பிழை என்று சொல்கிறோம். ஆனால்  மண்டையன் குழு காலத்தில் செய்த காட்டிக் கொடுப்பு விசயங்கள் கொலைகளையும் வைத்துக் கொண்டு நாங்கள் சொல்லவில்லை. இன்றைக்கு ஈபிஆர்எல்எப் அமைப்பு நடந்து கொண்ட விடயங்களை வைத்து தான் இவர்களுடன் நாங்கள் சேர முடியாது என்று கூறுகின்றோம்.  

கேள்வி : முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான மாற்று அணியில் சுரேஸ் பிரேமச்சந்திரன் இல்லாவிட்டால் நீங்கள் இணைந்து செயற்படத் தயார் என்று கூறுகின்றீர்கள். அதே நேரம் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சுரேஸ் பிரேமச் சந்திரனையும் உங்களையும் இணைத்துக் கொண்டு செல்ல விரும்புவதாக கூறுகின்றார். ஆயினும் அதனை நீங்கள் மறுக்கின்ற நிலையில் இந்த மூன்று தரப்பினரும் தொடர்ந்தும் இணைய சாத்தியங்கள் இருக்கின்றனவா?

பதில் : - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நீதியரசர் விக்கினேஸ்வரனும் ஒன்று சேர்வதைத் தான் மக்கள் விரும்புகின்றனர். ஆனால் நீதியரசர் விக்கினேஸ்வரன் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு துரோகமளிக்கிற நிபந்தனையை அதாவது தமிழ்த் தேச விரோத நிபந்தனை அதாவது காட்டிக்கொடுக்கிற இன்றைக்கும் பிழையாக கொள்கையில்லாமல் சுயநலத்தின் அடிப்படையில் செயற்படுகிற ஈபிஆர்எல் அமைப்பையும் இணைத்துக் கூட்டுச் சேர்ப்பது என்ற தேவையில்லாத நிபந்தனையை வற்புறுத்தும் நிலைப்பாட்டை எடுக்கின்றார். இது தான் உண்மை.  

கேள்வி : தமிழீழ விடுதலைப் புலிகள் பல கட்சிகளையும் இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியிருந்தனர். அதே போல காலத்தின் தேவை கருதி சில விட்டுக் கொடுப்புக்களுடன் முரண்பாடுகளை மறந்து சேர்ந்து செயற்பட வேண்டியது அவசியமென விக்கினேஸ்வரன் கூறியிருக்கின்றாரே?  

பதில் : - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈபீஆர்எல்எப் அணிக்கும் மன்னிப்பு கொடுத்து தேசியத் தலைவர் சேர்த்தார் என்ற காரணத்தையும் சொல்கிறார். அதனால் நாங்களும் சேர்க்க வேண்டுமென்று சொல்கின்றார். அப்ப தலைவர் பிரபாகரன் சேர்க்கலாம் என்றால் நாங்கள் சேர்க்கக் கூடாதென்று கூறுவதில் நியாயம் இல்லை என்ற அடிப்படையில் தான் அந்தக் கருத்தைச் சொல்லப் பார்க்கின்றார்.  

தலைவர் பிரபாகரன் சொல்கிற எல்லாத்தையும் நாங்கள் செய்யப் போகின்றோம் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு ஏன் நீங்கள் விலகினீர்கள். தலைவர் பிரபாகரன் தான் கூட்டமைப்பை உருவாக்கினவர். அப்ப ஏன் கூட்டமைப்பு பிழை என்று வெளியில் வந்தீர்கள். புதுக்கட்சி உருவாக்கினீர்கள்.  தலைவர் பிரபாகரன் உருவாக்கிய கூட்டமைப்பு பிழை என்று சொல்லிவிட்ட நீங்கள் வெளியில் வாறது தலைவர் பிரபாகரனுக்கு துரோகமளிக்கவில்லையோ. தலைவர் பிரபாகரன் மன்னிப்பு கொடுத்து ஒரு வாய்ப்பைக் கொடுக்கிற என்று சொல்லி பாவ மன்னிப்பு கொடுத்த கூட்டுச் சேர்த்துவிட்டு அதே தலைவர் பிரபாகரனைக் காட்டிக் கொடுத்து இந்தப் போராட்டத்தை அழித்ததற்குப் பங்காற்றிய ஈபிஆர்எல்எப் அமைப்பை நாங்கள் பிழை என்று சொன்னது தான் அவருக்கு பிழை என்று படுகிறதோ.  

எந்தக் காரணத்திற்காக நாங்கள் அன்றிலிருந்த கூட்டமைப்பை பிழை என்றும் இன்றைக்கு இருப்பது செயற்படுவது தலைவர் பிரபாகரன் உருவாக்கிய கூட்டமைப்பு அல்ல. இது ஒரு கூத்தமைப்பு. என்று சொல்லி குற்றஞ்சாட்டினோமோ அதே போல ஈபீஅர்எல்எப் பற்றியும் இன்றைக்கு சொல்கிறோம். அதாவது கூட்டமைப்பை குற்றஞ்சாட்டிய அதே காரணங்களுக்காககத் தான் ஈபீஆர்எல்எப் பிழை என்றும் சொல்கிறோம்.  

விக்கினேஸ்வரன் தனது தேர்தல் அரசியலை மட்டும் மையப்படுத்தி இந்த மக்களுக்கு துரோகம் அளிக்கிற எண்ணிக்கையில் கூட்டுச் சேர்வதற்கு முடிவெடுக்கிறது இந்த மக்களை மிகப் பிழையாக ஒரு நெருக்கடிக்குள் தள்ளுகிற ஒரு விடயமாக நிச்சயமாக அமையும் என்பதை நாங்கள் இன்றைக்கு சுட்டிக்காட்டுகிறோம். முன்னர் எப்படி நாங்கள் 2009 இல் இருந்த கூட்டமைப்பை சுட்டிக்காட்டினோமோ அதே போல இன்றைக்கு இந்தப் பிழையையும் சுட்டிக்காட்டுகிறோம்.  

கேள்வி :- புதிய மாற்று அணி முயற்சிகள் முற்றுப் பெறாத நிலையில் எதிர்வரும் தேர்தல்களில் அது எத்தகைய தாக்கத்தைச் செலுத்தும் ? 

பதில் : - இந்த இணைவு சாத்தியமில்லை என்றில்லை. ஆனால் இந்த இணைவு எப்படிச் சாத்தியம் என்றால் விக்கினேஸ்வரன் ஐயா ஏற்றுக் கொள்ள முடியாத தமிழ்த் தேசியத்திற்குப் பாதிப்பைத் தரக் கூடிய ஈபிஆர்எல்எப் இல்லாமல் கூட்டு இல்லை என்ற நிபந்தனையை அகற்ற வேண்டும். அந்த நிபந்தனையை அகற்றினால் கூட்டுக்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. விக்கினேஸ்வரன் ஐயா ஈபீஆர்எல்எப் இல்லாமல் கூட்டு இல்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கிற வரைக்கும் விக்கினேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குமான கூட்டுக்கான வாய்ப்புக்கள் இல்லை. நாங்கள் கூட்டுச் சேரத் தயார். ஆனால் கொள்கையில் உறுதியாக இருக்கக்கூடிய தரப்புக்களோடு மட்டும் தான் கூட்டுச் சேர்வோம். ஆகையினால் கொள்கையில் எந்தவிதமான சமரசத்திற்கோ விட்டுக் கொடுப்பிற்கோ இடமில்லை.  

கேள்வி : - தமிழ் மக்களின் பல பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகின்ற நிலையிலும் தொடர்ந்தும் அரசிற்கு கூட்டமைப்பு ஆதரவை வழங்கி வருவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் : - கூட்டமைப்பு அரசிற்கு ஆதரவை வழங்கி வருவது என்னைப் பொறுத்தவரையில் ஆச்சரியப்பட வேண்டிய விசயமல்ல. இன்றைக்கு கூட்டமைப்பு வல்லரசுகளின் முகவர்கள். அந்த வல்லரசுகளின் நலன்கள் மட்டும் தான் பேணப்படுகிறது. மேற்கு இந்திய நாடுகள் விசேடமாக சீன சார்பு ராஐபக்ச தரப்பு வரக்கூடாது என்றும் தாங்கள் விரும்பிய ரணில் விக்கிரமசிங்க தரப்பை ஆட்சியில் வைத்திருக்க வேண்டுமென்ற நிலையில் இன்றைக்கு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்கு இடமில்லை.  

ஆகவே ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டுமென்று கூட்டமைப்பிற்கு கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகையினால் கண்ணை மூடிக் கொண்டு கூட்டமைப்பு அதனை செய்கிறது.இன்னுமொரு தேர்தல் வரப் போகின்ற  நிலையில் தவிர்க்க முடியாமல் தாங்களும் போட்டி போடுகிற ஒரு நிலைக்கு தள்ளப்பட வெறுங்கையோடு மக்கள் மத்தியில்போக முடியாது மக்கள் துரத்தி அடிப்பார்கள் என்பதை உணர்ந்துள்ளதால் அரசாங்கமே கம்பரெலிய போன்ற இலஞ்சங்களை கொடுத்து கூட்டமைப்பை வெல்ல வைப்பதற்கான முயற்கள் நடக்கிறது.  

எஸ்.நிதர்ஷன்- பருத்தித்துறை விசேட நிருபர் 

Comments