தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு | தினகரன் வாரமஞ்சரி

தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு

இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரும் தேசிய அரசியலில் ஒன்றுபட்டு; ஒருமித்துச் செயற்படுவதற்கான சூழல் ஏற்பட்டு வருவதாகக் கூறுகிறார் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ்.

தமிழர்கள் ஒரே அணியாக அரசியலை முன்னெடுத்தபோது, வடக்கு, கிழக்கிற்குத் தனியரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதால், மலையகத்தில் வாழும் தமிழர்கள் தனித்துச் செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆனால், தற்போதைய அரசியல் செல்நெறி மாற்றமடைந்திருப்பதால், வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு எனத் தமிழர்கள் பிரிந்து நிற்காமல், பிரச்சினைகளை இனங்கண்டு ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலின் கீழ் பயணிக்க முடியும் என்றும் திலகராஜ் எம்.பி.கூறுகிறார்.  

அண்மையில் வடக்கில் நடந்து முடிந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டின்போது, தமிழர்கள் வடக்கு, கிழக்கு, மலையகம் எனப்பிரிந்து நிற்காமல், ஒரே அணியில் ஒன்றுசேர வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வேண்டுகோளுக்குச் சாதகமாகப் பதில் அளித்த திலகராஜ் எம்.பி., தமிழர் முற்போக்கு கூட்டணி, அதற்கான முன்னெடுப்புகளை ஆரம்பித்திருப்பதாகவும் விளக்குகிறார்.  

தமிழர் முற்போக்கு முன்னணியின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் நுவரெலியா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவான மயில்வாகனம் திலகராஜ், சுகாதாரம், சமூக அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் அமைச்சுகளுக்கான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.  

இந்தக் குழுவின் மூலம் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் தேசிய ரீதியில் பணியாற்றும் வாய்ப்பு தனக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி என்கிறார் அவர்.  

"அதென்ன துறைசார் மேற்பார்வைக் குழு? இதன் மூலம் மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு எப்படி நடவடிக்ைக எடுப்பீர்கள்?"

பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் பல்வேறு குழுக்களை நியமித்து அந்தக் குழுக்களின் மூலமாகப் பிரச்சினைகளை அணுக முடியும். இப்போது பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டு, ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், துறைசார் மேற்பார்வை குழுவின் மூலம் வேறு விதமான நடவடிக்ைகயே முன்னெடுக்கப்படும்.  

அந்தந்தத் துறைகளின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். தேவை ஏற்படுமிடத்து சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு/அலுலகங்களுக்கு நேரடியாகச் சென்று நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப நடவடிக்ைக எடுப்போம். குறிப்பாக, அண்மையில் திருகோணமலை வைத்தியசாலையில் ஒரு பிரச்சினை எழுந்தபோது, அதுபற்றித் தேடிப்பார்த்து நடவடிக்ைக எடுத்திருக்கின்றோம். அதேபோன்று, சமூக அபிவிருத்தி/சமூக வலுவூட்டல் துறைகளிலும் பிரச்சினைகளை இனங்கண்டு நடவடிக்ைக எடுக்கவிருக்கின்றோம். முதற்கட்டமாக சமுர்த்தி பயனாளிகள் தெரிவு தொடர்பில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை ஆராயவிருக்கின்றோம்."  

"பொதுமக்கள் எவ்வாறு உங்கள் குழுவுக்குத் தகவலை வழங்குவது அல்லது முறைப்பாட்டைச் செய்து?"

"இந்தக் குழு, முறைப்பாட்டாளர்களை நேரடியாக அழைத்து சாட்சியம் பெறாது. பொதுமக்கள், தங்களின் பிரச்சினைகளைக் கடிதம் மூலமாகப் பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவுக்கு அனுப்பி வைக்கலாம். செயலாளர், (சம்பந்தப்பட்ட குழு), இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர , கோட்டே என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். முறைப்பாடு கிடைக்கப்பெற்றதும் எங்கள் குழு தேவையான நடவடிக்ைகயை எடுப்பதுடன், அதுபற்றி முறைப்பாட்டாளருக்கும் அறிவிக்கும்.  

"சுகாதாரம் பற்றியும் கவனம் செலுத்துவதாகச் சொல்கிறீர்கள், மட்டக்களப்பு வைத்தியசாலை நோயாளர்கள் தொடர்பில் கவனவீனமாக நடந்துகொள்வதாகச் சொல்கிறார்கள்... இவ்வாறான பொது விடயங்களில் எப்படி செயற்படுவீர்கள்?"

"பொதுவான விடயங்களை ஆராய்வதற்கும் நாங்கள் சந்திப்புகளை நடத்துவோம். அந்தந்தத் துறைகளில்/சம்பந்தப்பட்ட பிரதேசங்களின் குறை நிறைகளைக் கண்டறிவதற்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, குறைபாடுகள் களையப்படும்"  

"ஹற்றன் பகுதி வைத்தியசாலைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்தக் குழந்தை பிறந்த தகவலை வழங்குபவர் மருத்துவர் தோட்ட அதிகாரி என்று குறிப்பிடப்படுவதாகக் குறைபடுகிறார்கள்.இதுபற்றிப் பத்திரிகையிலும் தகவல் வெளியாகியிருந்தது. இதனை மாற்றுவதற்கு நடவடிக்ைக எடுப்பது எப்படி?

"பத்திரிகை என்கிறீர்கள், அதற்கு ந​ானே ஒரு சாட்சி. எனக்குத் தகவல் வழங்கியவர் ஒரு ரொட்றிகோ. இது வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்திலிருந்த ஒரு பழக்கம். தோட்ட வைத்தியசாலைகள் நிர்வாகத்தின் கீழிருந்தபோது அப்படி பதிவு செய்தார்கள். இப்போது தோட்ட வைத்தியசாலைகளில் EMA என்ற தோட்ட மருத்துவ உதவியாளர் கிடையாது. தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் இருக்கிறார்கள். இதனையெல்லாம் மாற்றியமைக்க வேண்டும். பிள்ளையின் தாயோ, தந்தையோ தகவல் கொடுத்தால், அவர்களின் முகவரியும் பதியப்படும். அப்போது அந்தப் பிள்ளையைப் பாடசாலையில் சேர்க்கும்போது அந்தப் பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தினை வதிவிட முகவரிக்கான சான்றாகச் சமர்ப்பிக்க முடியும். இதனையெல்லாம் முன்பு சிந்திக்காமல் விட்டுவிட்டார்கள்.  

தேசிய அடையாள அட்டையைப் பாருங்கள், வாக்குரிமை இல்லை என்பதைக் குறித்துக் காட்டுவதற்காக 'எக்ஸ்' எழுத்தைப் போட்டிருக்கிறார்கள். நான் பாராளுமன்றத்தில் அதுபற்றிப் பிரஸ்தாபித்துத் திருத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் ெகாண்டேன். அதன்படி, தற்போது 'எக்ஸ்', 'வீ என்ற' எழுத்துகளின்றி அடையாள அட்டை வழங்கப்படுகிறது. எனவே, பழைய அடையாள அட்டைக்குப் பதிலாகப் புதியதைப் பெற்றுக்ெகாள்ளுமாறு நான் அனைவரையும் கேட்டுக்ெகாள்கின்றேன்.  

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் உள்ள குறைபாட்டை நீக்குவதற்குச் சம்பந்தப்பட்ட பதிவாளருடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றிச் சிக்கல் இருந்தால், அறிவிக்கலாம்."  

"மலையகத்தில் புதிய கிராமங்களை அமைப்பதற்குத் தனியான ஓர் அமைச்சரே நியமிக்கப்பட்டிருக்கின்றார். அதன்படி தற்போது புதிய கிராமங்கள் புதுப்புது பெயர்களில் அமைக்கப்படுகின்றன. ஆனால், இன்னமும் தோட்டம் என்ற அடையாளம் தொடர்வதாகச் சொல்கிறார்களே?"

"உண்மைதான். அது பழக்க தோசம். முன்பு தோட்ட மக்களைப் பிரிவுகள் (டிவிசன்ஸ்) என்று பிரித்தாண்டார்கள். ஒரு தோட்டத்தில் பல பிரிவுகள் இருந்தால், மேற்பிரிவு, கீழ்ப்பிரிவு, நடுப்பிரிவு என்றுதான் அழைத்தார்கள். இப்போது அந்தப் பெயரை மாற்றி காந்திபுரம், ராஜலிங்கம்புரம், பகவத்சிங் புரம், வெள்ளையன்புரம் என்று பல புரங்களை உருவாக்கியிருக்கின்றோம்.

தோட்டம் தோட்டமாக இருக்கட்டும். தொழிலாளர்களின் வாழ்விடங்கள் கிராமங்களாக மாறிவிட்டன. ஆனாலும், இன்னமும் சிலர் தோட்டம் என்று பழக்க தோசத்தில் அழைக்கிறார்கள். இனியாவது அவர்களைத் தங்கள் கிராமங்களின் பெயரைச் சொல்லுமாறு கேட்டுக்ெகாள்கிறேன். முன்பு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு என்ற பெயர்கூடத் தற்போது மாற்றப்பட்டிருக்கிறது. இப்போது வெறும் உட்கட்டமைப்பு அமைச்சுதான், அதில் தோட்டம் கிடையாது."  

"தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு பற்றிய விடயம், தற்போது ஐம்பது ரூபாய் என்று வந்திருக்கிறது. ஐம்பது ரூபாய் விடயம் எந்தளவில் உள்ளது?"

"மலையகத்தின் தேவைகள் எல்லாம் தொகைகளில்தான் தங்கியிருக்கின்றன. மற்ற சமூகத்தவர்கள் உரிமைகளைப் பற்றிப் பேசுகிறார்கள்.ஆனால், மலையகம் இன்னும் தொகையில் தங்கியிருக்கின்றது. இந்த நிலைமை மாற வேண்டும். ஐம்பது ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்ெகாடுப்பதற்கான நடவடிக்ைககளை எடுத்திருக்கின்றோம். தொழிலாளர்களுக்கு அந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கான ஏற்பாட்டை முகாமைத்துவக் கம்பனிகள் அறியத்தந்ததும் கொடுப்பனவு வழங்கப்படும். இதில் சிக்கல் இல்லை. அதற்குப் பொருத்தமான பொறிமுறை பற்றிக் கலந்துரையாடப்படுகிறது. விரைவில் பிரச்சினை தீரும்" என்று நம்பிக்ைக தெரிவிக்கின்றார், இந்த மலையக நம்பிக்ைக நட்சத்திரம்!           

விசு கருணாநிதி

Comments