அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு | தினகரன் வாரமஞ்சரி

அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு

ஏப்ரல் 21பயங்கரவாத குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.  

இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  அதேவேளை குண்டுத் தாக்குதலையடுத்து மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள்  தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில் நாட்டின் சில பிரதேசங்களில் மத வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் போன்றவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ மற்றும் போலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள்  மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது.  

இது மக்களிடையே மீண்டும் சந்தேகங்களை எழுப்பி வருகிறது. இத்தகையதொரு சூழ்நிலையிலேயே அண்மையில்  தென் பகுதிப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் அப்பிரதேச மக்கள் மத்தியில் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  

இந்த சம்பவமானது, இனியும் ராணுவப் பாதுகாப்பு பாடசாலைகளுக்கு அவசியமில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவையில்லாத விவகாரங்களையே தோற்றுவிக்கின்றன என்பது பலரதும் கருத்தாகும். 

பாடசாலைகளுக்கு இராணுவ பாதுகாப்பு அவசியமில்லை என்றும் அதேநேரம் எதிர்க்கட்சியினர் மக்களை திசை திருப்பும் வகையில் பாதுகாப்பு தொடர்பில் தன்னிச்சையான கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையிலேயே பாதுகாப்பு நடவடிக்கைகள் பாடசாலைகளிலிருந்து முழுமையாக நீக்கப்படாமல் உள்ளது என்ற காரணத்தை அரசாங்க தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.  

 நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று பல்வேறு கருத்துக்களை எதிர்க்கட்சியினர் தினமும் முன்வைத்து வருகின்றனர். 

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கு விஷேட செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அங்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இராணுவ ஊடகப் பேச்சாளர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலரும்  கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர். 

ஊடகவியலாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான ஆக்கபூர்வமான தர்க்கங்களும் வாக்குவாதங்களும் அதன்போது இடம்பெற்றன.  

அதில் முக்கியமாக இளம் ஊடகவியலாளர் ஒருவரினால் பள்ளிவாசல்களில் இருந்து வாள்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி சர்ச்சையை கிளப்பியிருந்தது. 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அரசாங்கத்தின் சார்பில் அதற்கான பதிலை தெரிவித்தாலும் ஊடகவியலாளர்கள் அதில் திருப்தி அடைந்ததாக தெரியவில்லை. அதனால் அந்த சர்ச்சை சில நிமிடங்கள் நீடித்தது.   சம்பந்தப்பட்ட இளம் ஊடகவியலாளர் தனது ஊடக நிறுவனத்தை அடையாளப்படுத்திக்கொண்டு கேள்வி ஒன்றை எழுப்பினார். 

நாட்டில் எத்தனை பள்ளிவாசல்களில் இருந்து வாள்கள்  கண்டெடுக்கப்பட்டன அதைப் போன்று இன்னும் பள்ளிவாசல்களில் வாள்கள் உள்ளனவா?  மக்கள் மத்தியில் அது தொடர்பில் இன்றும் உள்ள அச்சத்தை தவிர்க்கும் வகையில் அரசாங்கம் திருப்திகரமான பதில் ஒன்றை வழங்குமா என அவர் கேள்வி எழுப்பினார். 

அவரது கேள்விக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர பதிலளித்தார். 

எத்தனை பள்ளிவாசல்களில் இருந்து வாள்கள் கண்டெடுக்கப்பட்டன என்பது தொடர்பில் தம்மால் உறுதியாக கூறமுடியாது என்றும் பள்ளிவாசல்கள் பலவற்றிலிருந்து வாள்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். 

இதன்போது குறிப்பிட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் உண்மையில் இன்னும் பள்ளிவாசல்களில் வாள்கள்  உள்ளனவா?  

இந்த வாள் விவகாரங்களில் எந்தளவு உண்மைத் தன்மை உள்ளது மக்கள் மத்தியில் இப்போதும் நிலவும் அச்சம் நியாயமானதா? இந்த வினாக்களுக்கு திருப்தி அளிக்கும் பதில் வழங்கினால் மாத்திரமே வாள்  தொடர்பான அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றார். 

வாள்கள் வைத்திருப்பதற்கு நாட்டில் தடைச் சட்டங்கள்  உள்ளனவா? சில வர்த்தக நிலையங்களிலும் பாதுகாப்பு படையினரால் மீட்கப்படும் வாள்கள் போன்ற வாள்கள் காணப்படுகின்றனவே ஏன் அவற்றை அரசாங்கம் தடை செய்யவில்லை.  

இது ஊடகவியலாளர்கள் மத்தியிலும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது என்றும் அந்த ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். இந்த வாள் விவகாரம் செயலமர்வில் சர்ச்சைக்குரியதாய் மாறியது. இந்த வாள்கள் குறித்த வாதப்பிரதி வாதங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அதற்கு பதிலளித்தார். 

 நாட்டில் தற்போது அவசரகாலச் சட்டம் நடைமுறையில் உள்ளது. அந்த சட்டத்தின் கீழ் சில செயற்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே எமது நாட்டில் கத்திகள், தொடர்பான சட்டம் ஒன்று நடைமுறையில் உள்ளது. அந்த சட்டத்தின் கீழ் கத்திகள், வாள்கள் வைத்திருப்பது குற்றமாகும் எனப் பதிலளித்தார். 

பள்ளிவாசல்களில் இருந்து வாள்கள் தொடர்ச்சியாக கண்டெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஊடகங்கள் அவற்றை பெரிதுபடுத்திக் காட்ட முற்படுவதால் மக்களை அச்சப்படுத்தும் அத்தகைய வாள் சம்பந்தமான படங்களை தொலைக்காட்சியில் வெளிப்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் விடுத்தார்.  

அது தொடர்பிலும் இந்த செயலமர்வின் போது பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

அவற்றுக்குப் பதிலளித்த தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அப்போது இருந்த சூழ்நிலையில் வாள்கள் தொடர்பான  காட்சிகள் அடிக்கடி தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட மையானது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.  

அரசாங்க அதிகாரி என்ற வகையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான தீர்மானத்தை நான் எடுக்க நேர்ந்தது. அதற்காகவே அத்தகைய காட்சிகளை தொலைக்காட்சிகளில் வெளியிட வேண்டாம் என்ற வேண்டுகோளை நாம் ஊடகங்க ளுக்கு வெளியிட்டோம் அந்த நேரத்தில் அது பொருத்தமான தீர்மானமே என அவர் தெரிவித்தார் 

ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பில் இங்கு கருத்துக்களை முன்வைத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், தமது தனிப்பட்ட கருத்துக்களை வெளிக் கொணர்வதற்காக சிலர் ஊடகங்களை பயன்படுத்தினர். அவ்வாறு தனிப்பட்ட கருத்துக்கள் எவ்வித விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமன்றி ஊடகங்களும் சிந்திக்க வேண்டும்.  

அத்தகைய கருத்துக்கள் மூலம் நாட்டின் நலன் தொடர்பில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் மீறப்படுகிறதா என்பதும் இதில் முக்கியமாக சிந்திக்க வேண்டியது தனிப்பட்ட கருத்துக்களை பரப்புவதற்கு சில ஊடகங்களும் துணைபோகின்றன. 

இது நாட்டின் தேசிய பாதுகாப்பு நாட்டின் சட்டங்கள் ஆகியவற்றுக்கு பாதிப்பாக அமையும். 

சமூகத்தின் மூளையை வளர்க்க வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு. பாதிப்பில் அகப்பட்டுள்ள நாட்டை மீளக் கட்டி எழுப்ப வேண்டிய  பொறுப்பு ஊடகங்களுக்கும் உள்ளது என்பதை ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சிந்தித்து செயற்பட வேண்டும். நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு, அல்லது நாட்டில் இயல்பு நிலையை தோற்றுவிப்பதற்கு ஊடகங்களால் பாரிய அளவில் உதவ முடியும். 

 இந்த நிலையில் ஏப்ரல் 21உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து ஊடகங்கள் திருப்தியளிக்கும் வகையில் செயற்பட்டதாக கூற முடியாது, எனினும்  மத்திய நிலையிலிருந்து ஊடகங்கள் பயணித்தன எனக் கூறமுடியும்.  

அதை விட பாரிய பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது, என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். 

இங்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, 

நாட்டுக்கு தேவையான சரியான தீர்மானங்களை ஒருமித்த நிலையில் எடுப்பது அவசியமாகும். முதலில் நாம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இருந்து வெளியே வரவேண்டும் சில விடயங்களை நாம் நோக்கும் போது எமது சட்டத்துறையில் மாற்றங்கள் அவசியம் என்பது புலனாகிறது. 

குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற ஒரு வார காலத்தில் நாட்டின் பாதுகாப்பு சுமூக நிலைக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் நாம் அதனை சர்வதேச ரீதியில் சரியாக அறிவிக்கத் தவறியுள்ளோம். உதாரணமாக எமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் அதன் மூலம் நாட்டில் பாதுகாப்பு நிலைமை திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பதை சர்வதேசத்துக்கு காட்டிக் கொண்டு உல்லாசப் பிரயாணிகளை நாட்டுக்கு வருமாறு எவ்வாறு அழைக்க முடியும்?  

நாட்டில் பிரச்சினை இருப்பதாக ஊடகங்கள் கூறுவது, அல்லது அப்படி ஒரு தோரணையை ஊடகங்கள் வெளிக்காட்டுவது சர்வதேசத்துக்கு செய்தியாகிறது. 

இந்த நிலையை மாற்றுவதற்கு வெளிவிவகார அமைச்சு பெரும் பொறுப்பை ஏற்க வேண்டியிருந்தது. அதில் 65வீத வெற்றியை நாம் பெற்றுக் கொண்டோம் எனக் கூற முடியும். மேலும் இரண்டு மாதங்களுக்குள் நாம் அதனை முழுமையாக சரி செய்து கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கை.  

அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்துவது நாட்டின் முன்னுள்ள பெரும் சவால்.எனினும் அதனை எம்மால் செய்ய முடியும். இதில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மிகமிக அவசியமாகும்  என்றும் அவர் தெரிவித்தார். 

இந்த ஊடக செயலமர்வு ஏப்ரல் 21குண்டு வெடிப்பிற்கு பின்னர் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமை, நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் சர்வதேசத்தின் நிலைப்பாடு, நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை  ஏற்படுத்துவதற்கும் சர்வதேச நாடுகளில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் ஊடகங்கள் செய்ய வேண்டிய பொறுப்பு மேலும் உள்ளது என்பதை சுட்டிக்காட்டியது என்றால் அது மிகையில்லை. 

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments