துறைமுக நகரத்தின் ரூ.500 மில்.நிதியில் மீனவ வாழ்வாதாரத்திற்கு உதவி | தினகரன் வாரமஞ்சரி

துறைமுக நகரத்தின் ரூ.500 மில்.நிதியில் மீனவ வாழ்வாதாரத்திற்கு உதவி

கொழும்பு காலி முகத்திடலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் துறைமுக நகர நிர்மாணம், பல்வேறு சவால்களைக் கடந்து தற்போது நகர்ந்துசெல்கின்றது. 

இந்தப் புதிய துறைமுக நகரத்தை நிர்மாணித்து முடிக்கும்போது எண்ணிலடங்கா நன்மைகள் இலங்கையர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கானோருக்குத் தொழில் வாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும். ஆனால், இந்த நகரத் திட்டத்தினால், மேலும் பல ஆயிரக்கணக்கானோரின் தொழில் இழக்கப்பட்டு வாழ்வாதாரம் இழக்கப்பட்டுவிடும் என்றும் தொடர்ச்சியாக அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக மீனவ சமூகத்தினர் பற்றிய கரிசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது. 

அதற்குக் காரணம் கடலை நிரப்பி நிலமாக்குவதற்காக மற்றொரு கடல் பகுதியை அகழ்ந்தெடுத்து அந்த மண்ணைக்ெகாண்டு புதிய நிலப்பரப்பை நிரப்புவதாகும். காலி முகத்திடல் கடல் பகுதியிலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத்திலிருந்து மண்ணை அகழ்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பிருந்தும், இந்தத் துறைமுக நகர நிர்மாணிப்பாளர்கள் ஏழு கிலோ மீற்றர் தூரத்தில், நீர்கொழும்பு பகுதியிலிருந்து மண்ணை அகழ்ந்து கொண்டு வருகின்றனர். இதனால், அந்தக் கடல் பகுதியின் வளம் அழிந்துவிடும். மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுவிடும். இதனால், ஆயிரக்கணக்கான மீனவக்குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டைக் கருத்திற்கொண்டு  கொழும்பு வடக்கு பகுதியில் மண்ணகழ்வால் பாதிக்கப்படும் வசதி குறைந்து மீன்பிடி  சமூகங்களின் வாழ்வாதாரத்துக்கான மூன்று வருட கால திட்டத்தை  நடைமுறைப்படுத்தும் நோக்கில் துறைமுக நகரம் இப்போது மீன்பிடி மற்றும்  நீர்வளத்துறை அமைச்சு மற்றும் பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி  ஆகிய அமைச்சுக்களுடன் கைகோர்த்து பல செயற்றிட்டங்களை  முன்னெடுத்து வருகிறது. ​வத்தளை முதல் நீர்கொழும்பு வரையான பிரதேசங்களை அண்டி வாழும்  மீன்பிடித்தொழிலிலை தங்களது ஜீவனோபாயமாக் கொண்டோருக்கு உதவும் வண்ணம், போர்ட் சிட்டி தனது நலன்புரி நிதியிலிருந்து ஐநூறு மில்லியன் ரூபாவினை  வழங்க முன்வந்துள்ளது. இந்நிதியுதவி மூன்று வருடத் திட்ட அடிப்படையிலேயே வழங்கப்படும் வகையில்   2016ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது. 

இந்த திட்டமானது மீனவ சமூகங்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் அதேநேரம் துறைமுக நகர் நிர்மாணப்பணிகளால் மீனவ  சமூகத்துக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளை வெளிக்கொணரவும் வழிசெய்கிறது. மீனவ சங்க  பிரதிநிதிகளுடன் அடிக்கடி நடத்தப்பட்ட கலந்துரையாடப்படல் மூலம் இது  சாத்தியமாகியுள்ளது.

பரந்த கடலில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு தமது வாழ்வாதாரத்துக்கு  பாதகமாக இருக்குமென்ற அச்சம் மீனவர்களுக்கு இருந்தது.  கடலின் அடியில் மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என்று மீனவர்கள் அஞ்சுகின்றார்கள்.  எனினும் மணல் அகழ்வு  இடம்பெறுவதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் நேரில் கண்டறிய 24மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மணல் அகழப்படுவதாகச் சொல்லப்படும் பகுதிகளுக்கு அழைத்துச்  செல்லப்பட்டதையடுத்து மீனவர்கள் உண்மை நிலையை தெரிந்துக் கொள்ள முடிந்தது.    

கம்பஹா மாவட்டத்திலுள்ள மீனவர்களின் வாழ்வாதார ஆதரவு  சங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களில், மீனவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதோடு,  மீனவர்கள் வாழ்விடங்களில் உட்கட்டமைப்பும் மேம்படுத்தப்படுகின்றது.  மீனவர்களுக்கான 'திவிசயர'  காப்புறுதி திட்டத்தின் மூன்று வருடகால தவணைப் பணத்தையும் மேற்படி சங்கம்  செலுத்துகிறது. இதன்படி 15,452பேருக்கு கடந்த மூன்று வருட தவணைப் பணம்  செலுத்தப்பட்டுள்ளது. இக்காப்புறுதி ஊடாக திடீர் விபத்துக்களில்  மரணமடைந்தால் ஒரு மில்லியன் ரூபா நஷ்டஈடும், இயற்கை மரணங்களுக்கு  இரண்டு இலட்சம் ரூபாவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெறும் வேளையில் நாளொன்றுக்கு 3000ரூபாய் விகிதமும் வழங்கப்பட்டு  வருகிறது. இவை தவிர அனைத்து மீன்பிடி பிரிவுகளுக்குமான 35வைத்திய  முகாம்களும் இச்சங்கத்தினால் நடத்தப்பட்டுள்ளன. இம்முகாம்களில்  கண் பரிசோதனையும், கண்ணாடி வழங்குதலும், வைத்திய பரிசோதனைகளும் மருந்து  வழங்கல்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வைத்திய முகாம் ஊடாக  இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர்.  

வத்தளை முதல் நீர்கொழும்பு கரையோரப் பகுதியில் வசிக்கும்  மீனவர்களின் வாழ்வாதாரத்தை மையப்படுத்திய மீனவர்களின் வாழ்வாதார ஆதரவு சங்கப் பணிகள்  முற்றுப்பெற்றுவருகின்றது. மீனவ  சமூகத்தின் மாறுபட்ட தேவைகளுக்கு ஏற்றவாறான பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு  வருகின்றன. இச்சங்கத்தில்  நீர்கொழும்பு பிரதேசத்தின் 77மீன்பிடி  சங்கங்களும், வத்தளை உஸ்வத்தகொய்யாவ பகுதியிலுள்ள 8சங்கங்களும்  உள்ளடக்கப்பட்டுள்ளன.

இம்மக்களின் வாழ்வாதார உதவிக்காக ஒதுக்கப்பட்ட 500மில்லியன்  ரூபா நிதி, நீர்கொழும்பிலுள்ள 77மீனவர் சங்கங்களுக்கு, ஒவ்வொரு சங்கத்துக்கும் தலா   இரண்டு மில்லியன் ரூபா விகிதம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்த சங்கத்தின் அனுசரணையுடன்  நீர்கொழும்பு மேரீஸ் தேவாலயத்தின் ஜுபிலி மண்டபம் முழுமையாக  திருத்தியமைக்கப்பட்டது. செத்தப்படுவ மீன்பிடித்துறை துறைமுகத்தின் வாவி  மீனவர்களின் படகுகளுக்கு சூரியகதிர் தடுப்புகள் போடப்பட்டது. இதேவேளையில்  மீன்பிடி துறைமுகங்களின் சில பகுதிகளில் சூரிய சக்தியால்  இயங்கும் இரவு நேர மின்னொளி வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கம்மல்தொட்டவும்  குறிப்பிடத்தக்கது. மீன்பிடித் துறைமுகங்களில் கடலரிப்பைத் தடுப்பதற்காக  சில மீன்பிடி துறைமுகப் பகுதிகளில் கற்பாறை உட்பட  மணல் திட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி, மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக  உட்கட்டமைப்பு என்ற ரீதியில் போக்குவரத்திற்கான வீதியினையும், மீனவர் சமூக  நல நிலைய கட்டடங்களையும், படகுகளின் பாதுகாப்பு கருதி அதற்கான வசதிகளையும்,  படகுகளுக்கான எண்ணெய் நிரப்பும் நிலையங்களையும்  மீளமைத்து அதற்கு எண்ணெய்  தாங்கியொன்றையும் வடிவமைத்துக் கொடுத்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.   போர்ட் சிட்டி நகரம் அமைக்கப்பட்ட பின்னர் அந்நகரத்திற்குள்  சகலரும் வரலாம். பொதுமக்கள் பாவனைக்காக குறிப்பிட்ட தூரம் வரை சென்று கடலையும் ரசிக்கலாம். இக்கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கம்  செய்வதற்கான இயற்கையான சூழலும் அமைக்கப்படும் என்று நம்பிக்ைக  தெரிவிக்கப்பட்டது. 

கொழும்புத் துறைமுக நகர நிர்மாணப் பணியின் அதிகாரிகள் நீர்கொழும்பு, கெமிலொட் ஹோட்டலில் கம்பஹா மாவட்ட மீனவர் சங்கங்களுக்காக ஏற்பாடு செய்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த போதே, மேற்கண்ட விடயங்கள் விபரிக்கப்பட்டன. 

போல் வில்சன் 

Comments