ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 மே15 வரை | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 மே15 வரை

சபாநாயகர் ஒரு சட்டத்தில் கையெழுத்திடும் நாள் முதலே அது நடைமுறைக்கு வருமென்பதால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு மே 15ஆம் திகதியே நிறைவுக்குவருகின்றதென சிரேஷ்ட சட்டத்தரணிகள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.  

ஜனாதிபதித் தேர்தல் 2019 டிசம்பர் 9 ஆம் திகதிக்குள் நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், சட்டத் தரப்புகளில் மேற்படி கருத்தால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்று சட்டமாக்கப்பட்டாலும் - உரிய ஆவணத்தில் சபாநாயகர் கையொப்பமிட்ட தினத்திலிருந்தே அது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டமானது 2015 ஏப்ரல் 28 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் மே 15 ஆம் திகதியே சபாநாயகர் கையொப்பமிட்டு அங்கீகாரம் வழங்கினார். அன்றைய தினத்திலிருந்துதான் ஜனாதிபதியின் பதவி காலத்தை கணிப்பிட வேண்டும் என்றும் இதன்படி ஜனாதிபதியால் 2020ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதிவரை பதவியில் இருக்கமுடியும் எனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

அதேவேளை, தனது பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றத்திடம் விளக்கம்கோரவுள்ளதாக அண்மையில் கருத்துகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

Comments