கிளிநொச்சி அபிவிருத்தி புண்ணுக்கு புனுகு பூசுவதாக அமையக் கூடாது | தினகரன் வாரமஞ்சரி

கிளிநொச்சி அபிவிருத்தி புண்ணுக்கு புனுகு பூசுவதாக அமையக் கூடாது

கல்லானேயானாலும்

கைப்பொருள் ஒன்றுண்டாயின் 

 எல்லோரும் சென்று அங்கு

எதிர் கொள்வர்- இல்லா(தவ)னை 

 இல்லாளும் வேண்டாள்

ஈன்றெடுத்த தாய் வேண்டாள் 

 செல்லாது அவன் வாயிற் சொல் 

என்றைக்கோ ஒளவையார் பாடிய பாட்டிது. இன்றுவரை நிலைத்து நின்று பயனளிக்கிறது. மிதமிஞ்சிய பணமுடையவரை சட்டமும்கூட எதுவும் செய்துவிடமுடியாது. தேசத்திலுள்ள கட்டுப்பாடுகள் விதிமுறைகள் எதுவும் அவர்களை அசைத்துவிட முடியாது. அவர்களுடைய சுய லாபங்களுக்காக பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றாலும், அதை அரச அதிகாரிகள் கண்டுகொள்ள மாட்டார்கள். அரச அதிகாரிகள் என்ன தூசு. அரசியல்வாதிகளின் கையில்தான் அனைத்தும் உள்ளது. அடுத்துவரும் தேர்தலில் தமக்கு கிடைக்கப்போகும் வாக்குகளுக்காகவும், தேர்தலில் செலவை பங்கேற்க கூடியவர்களுக்காகவும், இவர்கள் ஒட்டுமொத்த ஊரையே மொட்டையடிக்க தயங்க மாட்டார்கள். 

என்ன இந்த காலையிலேயே எனக்கு ஞானம் பிறந்து விட்டது என்று சிந்திக்கிறீர்களா? ஒருகாலத்தில் வேறொரு அரசாங்கத்தின் ஆட்சிக்குள் இருந்தவர்கள் நாம். யுத்தம் நடந்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். திடீர் திடீரென வந்து குவியும் மக்களுக்கு அந்தந்த பிரதேச போராளிகளே குடியிருப்பதற்கான இடங்களை காட்டினார்கள். மக்கள் தாமாகவே கற்கால மனிதர்களைப்போல காடுகளிலும் ஆற்றங்கரைகளையும் குளங்களையும் அண்டியே குடியேறினார்கள். நீரின் தேவையே முதன்மையாக கொண்டிருந்தது இந்தக்குடியேற்றங்கள். காடுளில் மக்கள் வாழ்ந்தாலும், பெரு மரங்களை அழிக்க அனுமதி இல்லை. அதுபற்றி நான் முன்னரே குறிப்பிட்டேன். காடுகளின் கீழ் சிறு பற்றைகளை அகற்றி காடுகளைக் குடைந்தே அவர்கள் குடிலமைத்தனர்.  

ஒருதடவை காட்டு வீதியில் போகும்போது அந்த காட்டருகே இரண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். என்ன இந்த வனத்தில் என வியந்த நான் எனது உந்துருளியை நிறுத்தி அவர்களை நோக்கி, 

பிள்ளையள் ஆர் நீங்கள் இதில என்ன செய்யிறீங்க என்று கேட்க அவர்கள் அங்கு தெரிந்த சிறு குடைவு வழியாக காட்டுக்குள் ஓடிவிட்டனர். நான் அவர்களை, 

நில்லுங்க என்று ருட்ட, அந்த குடைவுக்குள்ளிருந்து ஒரு பெண் வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து மேலும் சிலர் வெளியே வந்தனர். அப்போதுதான் நான் பார்த்தேன், அதற்குள் மேலும் சிலர் காட்டைக்குடைந்து அதற்குள் வாழ்ந்துகொண்டிருப்பதை, அதற்குள் வந்த பெண் என்னை அடையாளங் கண்டுகொண்டாள்.  

 இங்ஙன ஒரு கிணறிருக்கன்ரீ அதான் இதில இருக்கிறம் என்றாள். அவர்கள் மயிலிட்டியைச் சேர்ந்தவர்கள். ஒரு போராளியாக என்னை தெரிந்தவர்கள். இது எத்தனையாவது குடியிருப்பு அவர்களுக்கு என எனக்குள் வியந்தேன். நான் அவர்களை முதலில் நவாலியிலும், பின்னர் நாவற்காடு வரணியிலும் கண்டேன் ஆயிரத்து தொளாயிரத்துஅறுபத்துநாலில் புயலோடு இடம்பெயர ஆரம்பித்தவர்கள். நான் வேதனையோடு நகர்ந்தேன்.

 மக்கள் நெறியோடு வாழ்ந்தார்கள். மலசலகூடங்களே கிடையாது. ஆனால் இந்த பெருந்தொகை மக்கள் வாழ்ந்த பகுதியில் மலத்தை காண முடியாது. எவராயினும் மலசலங்கழிக்க செல்லும் போது மண்வெட்டியுடன் செல்ல வேண்டும். சிறு குழிவெட்டி மலத்தை புதைக்க வேண்டும். இதையும் மக்கள் கவனமாக பின்பற்றினர். 

அத்தனை ஆயிரக்கணக்கான மக்களும் தாம் அண்டிய பிரதேசத்தில் குளங்களை சுத்தமாக இருப்பதற்கு பயன்படுத்திய அதேவேளை, அவற்றை சுத்தமாகவும் வைத்திருந்தனர். குளங்களும் ஆறுகளும் காடுகளும் பொக்கிசமாக போற்றப்பட்டன. வந்திருந்த மக்கள் தாம் ஒரு காலத்தில் திரும்பப் போய்விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தாலும் நாட்டை வளமாக வைத்திருந்தார்கள். 

இன்று நடப்பதென்ன? கிளிநொச்சி குளம் விரைவில் மூடப்படும் அபாயத்தில்  உள்ளது. வவுனியாவில் பல குளங்கள் குப்பை கொட்டி மூடப்படுகின்றன. பிரதான குளங்கள் தூர்வாரப்படாமலே தூர்ந்து கொண்டிருக்கின்றன.  ஆறுகளில்  திருட்டுத்தனமாக மண் அகழப்படுவதால்    அதன் எல்லைகள் மாற்றியமைக்க ப்படுகின்றன. எனது கண்களின்முன்னால் அனுமதியில்லாத குளக்குடியிருப்புகளில் நாளாந்தம் டிப்பர் வாகனங்கள் மண்ணைக் கொண்டுவந்து கொட்டிக்கொண்டிருக்கின்றன. கடந்த காலங்களில் நீரேந்து பிரதேசமாக இருந்த கிளிநொச்சி குளத்தினுள் இந்த மண் வாகனங்கள் நாளாந்தம் மண்கொட்டி நிரப்பிவருகின்றன. கட்டடங்கள் பெரு மாடிக்கட்டடங்களாக உயர்ந்து வருகின்றன. போதாக்குறைக்கு மழைநீர் குளத்துக்குள் செல்ல முடியாதவாறு மதில்கள் போடப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி பிரதேச சபை கண்களை மூடிக்கொண்டிருக்கிறது. கேட்டால் அது நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமான இடம் நாம் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள். இதையே நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளிடம் கேட்டால், எமக்கு குளத்தின் சரியான எல்லை கிடைக்கவில்லை என்கிறார்கள். வேடிக்கையாக இல்லை. பல வருடங்களாக குளம் வான்போடும்போது வெள்ளம் மிகுந்த இப்பகுதி இப்போது வீடுகளால் நிரம்பிக்கொண்டிருக்கிறது. இந்தமண் யாருடையது. 

இதைவிட பெரிய புதினம் இந்த குளத்துக்குள் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருப்பதுதான். ஒரே தெரு வில் அனுமதியற்ற நிலத்தில் கல்வீடு கட்டியிருக்கும் ஒரு கடைக்காரருக்கு அதே தெருவில் ஒரு வீட்டுத்திட்டம் இன்னுமொரு அனுமதியற்ற நிலத்தில் வழங்கப்பட்டுள்ளது. அரச ஊழியர் ஒருவருக்கும் இதேதெருவில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருப்பதானது, எமக்கு, மேலும் பல மண்அள்ளும் வாகனங்களுக்கு மேலும் பலகாடுகளைக் காலிசெய்யவும், அந்த மண்கொண்டு குளத்தை மூடவும் அனுமதி வழங்கியாகிவிட்டது. என்றே எண்ணத் தோன்றுகிறது. இரவிரவாக வாகனங்களின் இரைச்சல் கிளிநொச்சி குளவீதிகளில் ஆர்ப்பரிக்கிறது 

கிளிநொச்சி பொது அமைப்புகளில் உள்ளவர்களுக்கும், கிராமசேவையாளருக்கும். இது தெரியாதா என்ன? வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர்கள் பார்த்தார்களா என்ற கேள்வியும் உண்டு கட்டப்பட்ட வீட்டின் முதுகு குளத்து நீரை (இந்த கோடையிலும்) தொட்டு நிற்கிறது என்பதை பார்க்கவில்லையா?  

தெருவோடு நிலங்களை குளத்துக்குள் அமைக்கும்போது ஒரு வீடுகட்ட மட்டுமே பிடித்தவர்கள் இப்போது குளத்து தண்ணீருக்குள்ளேயே கம்பு நட்டு தமது கம்பி வேலிகளை குளத்தின் நடுப்பகுதிவரை கொண்டு போயிருப்பதானது. கிளிநொச்சி மக்களை எதுவும் செய்யாதா? 

மக்கள் பேசுகிறார்கள். எமது கால்நடைகள் மேய்ச்சலுக்கும் தண்ணீர் குடிக்கவும் போய்வந்த குளம் இப்போது இல்லை. தாமரை இலைகளுக்காக அந்த குளத்துக்குள் போவோம் அது இப்போது தனியாரால் பிடித்தடைக்கப்பட்டு விட்டது. பெருமழை பெய்தால் தண்ணீர் நகரத்துக்குள் தேங்கப்போகிறது. அது வடிவதை மதில்கள் அனுமதிக்காது. எல்லாவற்றுக்கும் மேலாக குளத்தின் கீழ் விவசாயம் செய்வோருக்கு நீரின் கொள்ளளவு குறையப்போகிறது. குளத்தின் அலைகரை மூடப்படுவதால் நில ஊற்றான கிணறுகளில் உவர் வந்து சேரப்போகிறது. இப்போதே பல கிணறுகள் உவராக மாறிவிட்டது. கிளிநொச்சி மாநகராமாக மாறினால் கடைத்தெரு வீடுகளில் தேங்கும் சாக்கடைநீர் குளத்தை சென்றடைய முடியாது. முகப்பூச்சு பூசிய மோசமான தொழுநோயாளியைப்போல கிளிநொச்சி மாறிவிடும். 

தான் மட்டுமே வாழ்ந்தால் போதும் என நினைக்கிற ஒருசில பணக்காரர்களை அரசும் கண்டுகொள்ளாது. ஒரு வீட்டுப்படலைக்கு தூண் கட்டவும் அனுமதி கேட்கும் பிரதேச சபைகள் அனுமதியற்ற நிலத்தில் கட்டும் கட்டடங்களை வேடிக்கை பார்ப்பதைத்தவிர வேறென்ன செய்ய முடியும். சட்டமும் ஒழுங்கும் யாருக்கு? அன்றாடம் கூலிசெய்து அரைவயிறு நிரப்புவோருக்கு மட்டும்தான்.

தமிழ்க் கவி பேசுகின்றார்

Comments