கட்சிகளின் வாக்குகளோ சிறுபான்மை வாக்குகளோ ஜனாதிபதியை தீர்மானிக்காது | தினகரன் வாரமஞ்சரி

கட்சிகளின் வாக்குகளோ சிறுபான்மை வாக்குகளோ ஜனாதிபதியை தீர்மானிக்காது

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை கட்சிகளின் வாக்குகளோ சிறுபான்மை வாக்குகளோ அன்றி அவற்றில் அடங்காத 40இலட்சம் மிதக்கும் வாக்குகள் தான் தீர்மானிக்கப் போகிறது என்கிறார் மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஐ.தே.கவினால் தனியாக வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வெல்ல முடியாது என்று கூறும் அவர் சூடுபிடித்து வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் விவகாரம், சமகால அரசியல் உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து வாரமஞ்சரிக்கு கருத்து வெளியிட்டார். அவருடன் நடத்தப்பட்ட நேர்காணலின் முழு விபரம் ...

கேள்வி. அமைச்சுக்களிடையே சிறந்த அமைச்சிற்கான விருது உங்கள் அமைச்சிற்கு கிடைத்துள்ளது. ஏனைய அமைச்சுக்களினால் ஏன் சிறப்பாக செயற்பட முடியாது என்று கருதுகிறீர்கள்? 

பதில். ஒரு போதும் எனக்கு கீழுள்ள நிறுவனங்களுக்கு உறவினர்களையோ, நண்பர்களையோ நான் நியமித்தது கிடையாது. தகைமை இருந்தாலும் நியமிக்க மாட்டேன். ஆனால் சிலர் தகைமையில்லாதவர்களை நியமித்து சிறப்பாக செயற்படும் நிறுவனங்களை நாசமாக்கியுள்ளனர். சில நிறுவனங்களக்கு அளவுக்கு அதிகமாக ஊழியர்களை சேர்த்து நஷ்டத்தில் தள்ளியுள்ளனர்.கடன் பெற்றால் அதன் பலன் திரும்பிக் கிடைக்க வேண்டும். ஆனால் கண்டவாறு கடன் பெறப்பட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நான் தகுதியானவர்களை தான் நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு நியமிக்கிறேன். அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களை நியமித்தால் அவை நாசமடையும். 

தொழிற்திறமையில்லாத அமைச்சர்களை நியமிப்பதாலும் அதிகாரிகள் நியமிப்பதாலும் பாதிப்பே ஏற்படும். அதிகாரிகளுக்கும் அடிபணியக் கூடாது. இது தான் எனது அமைச்சின் வெற்றியின் ரகசியமாகும். 

கேள்வி. சகல திட்டங்களையும் அரச நிதியில் மேற்கொள்ள முடியும் என்று கருதுகிறீர்களா? 

பதில். ஆயிரத்திற்கும் அதிகமான அரச நிறுவனங்கள் உள்ளன. சில நிறுவனங்களை தனியாருடன் இணைத்து முன்னேற்றலாம். மரமுந்திரிகைக்  கூட்டுத்தாபனத்தை தனியாருக்கு வழங்குவதால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாது. மின்சார சபையை வழங்கினால் நாடு செயலிழக்கும். எமது அமைச்சு 2000பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதில் 30வீதம் மட்டுமே அரச நிதி. எஞ்சிய 70வீதம் தனியார் துறையின் உதவியுடன் முன்னெடுக்கப்படுகிறது. 

கேள்வி. அனைத்தும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்ற மனப்பாங்கு மக்களிடையே இன்னும் காணப்படுகிறதே? 

பதில். ஆம் நாட்டில் 6வீதமான வறியவர்களே  உள்ளனர். ஆனால் 40வீதமானவர்களுக்கு சமுர்த்தி நிவாரணம் கிடைக்கிறது. சமுர்த்திக்கு ஒதுக்கும் பணத்தில் 50வீதம் அதனை நிர்வகிப்பதற்கு செலவிடப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். 

கேள்வி. அரசாங்கம் எந்த அபிவிருத்தியும் செய்யவில்லை என எதிரணி குற்றஞ்சாட்டுகிறதே. 

பதில். ராஜபக்ஷ ஆட்சியில் அவரது குடும்ப அங்கத்தவர்களின் அமைச்சுகளுக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த நிலை கிடையாது. அதிகம் செயலாற்றும் அமைச்சுகளுக்கு அதிக நிதி வழங்கப்பட வேண்டும். இன்றும் அந்த குறைபாடு இருந்தாலும் அன்றைய நிலைமை கிடையாது. அவர்கள் நாட்டை கடனில் புதைத்தார்கள்.கடன் சுமையில் நாட்டை புதைக்காது உண்மையான அபிவிருத்தி இன்று இடம்பெறுகிறது. வெளிநாட்டு மூலோபாயங்களுக்கு ஏற்ப தான் அன்று ஆட்சி நடந்தது. நாம் முன்மாதிரியாக செயற்பட்டாலே எமக்குக் கீழ் பணிபுரிபவர்கள் சிறப்பாக செயற்படுவார்கள். நான் 2010ஆம் ஆண்டின் பின்னர் புதிதாக அமைச்சு வாகனம் எதுவும் பெறவில்லை. பழைய வாகனத்தை தான் பயன்படுத்துகிறேன். 

கேள்வி. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐ.தே.கவிற்கும் இழுபறி காணப்படுவதாக பரவலாக பேசப்படுகிறதே. 

பதில். ஜனாபதி தேர்தலில் வெற்றி பெற 50வீதம் வாக்குகள் பெற வேண்டும். இம்முறை தேர்தலில் 160இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 140இலட்சம் பேர் வாக்களித்தால், 65முதல் 70வீதம் வரை வாக்குகள் பெற வேண்டும். ஐ.தே.கவிற்கு வேட்பாளர் ஒருவரை நிறுத்தி இத்தனை வாக்குகள் பெற முடியும் என்றால் வரவேற்கிறோம். ஆனால் ஐ.தே.க வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டு இறுதியாக வென்றிருப்பது 1988ஆம் ஆண்டிலாகும். ஆர்.பிரேமதாஸ ஜனாதிபதியானார். இந்த தேர்தலும் நியாயமாக நடந்ததா என்ற சந்தேகமும் இருக்கிறது. வடக்கு கிழக்கில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்தது. அவர்களுக்கு தேவையானவாறு தான் அங்கு வாக்களிப்பு நடந்தது. தெற்கில் ஜே.வி.பி பிரச்சினை இருந்தது. 23ஆயிரம் மேலதிக வாக்குகளால் தான் அவர் வென்றார். ஆனால் 1982இல் ஜே.ஆர். ஜெயவர்தன, ஐ.தே.க சார்பில் நியாயமான சூழலில் வென்றார். அது 37வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஐ.தே.கவிற்கு 65இலட்சம் வாக்குகள் கிடையாது. ஐ.தே.க வேட்பாளரை நிறுத்தி வெல்ல முடியுமா என்பதையே ஏனையோர் வினவுகின்றனர். 

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கட்சிகளின் வாக்குகளோ சிறுபான்மை வாக்குகளோ. ஜனாதிபதியை தீர்மானிக்காது. எந்த கட்சிக்கும் 65இலட்சம் வாக்குகள் கிடைக்காது.கட்சிகளுக்கும் இனங்களுக்கும் உட்படாத பிளவுபடாத 40இலட்சம் வாக்குகள் தான் ஜனாதிபதியை முடிவு செய்யும். 40இலட்சம் வாக்காளர்களை கவரக்கூடிய வேட்பாளர் தான் 2020இல் ஜனாதிபதியாக தெரிவாவார். 

இதற்காக பரந்த கூட்டணியொன்று அவசியம். புதிய திட்டம், நிகழ்ச்சி நிரல், தலைமைத்துவ சபை என்பன அவசியம். 

கேள்வி: ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர்களாக சஜித் பிரேமதாஸ, கரு ஜெயசூரிய, ரணில் விக்கிரமசிங்க, ராஜித சேனாரத்ன மற்றும் உங்களின் பெயர் என்பன பரவலாக பேசப்படுகிறது. இதுபற்றி..... 

பதில்.இவ்வாறு ஆராயப்படுவது உகந்தது. ரணில் விக்கிரமசிங்கவின் காலை உணவு சந்திப்பில் வேட்பாளர் தெரிவானதாக செய்தி வருவதை விட இவ்வாறு வெளிப்படையாக ஆராயப்படுவது நல்லது.வேட்பாளரை தெரிவு செய்ய முன்னர் எமக்குள் சுயவிமர்சனம் செய்து கொண்டு பரந்த கூட்டணி ஒன்றை உருவாக்க வேண்டும். அவ்வாறு எந்த கூட்டணியும் உருவாகவில்லை. இதற்கு தலைமைத்துவ சபை உருவாக வேண்டும். அதன் பின்னர் தான் வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும். 

கேள்வி: எதிர்க்கட்சியில்லாத முறையொன்றே நாட்டுக்கு உகந்தது என ஏ.எச்.எம்.அஷ்ரப் கூறியிருந்தார். இது பற்றி? 

பதில். இன்று பல்கட்சி முறையே காணப்படுகிறது. கட்சிபேதத்துக்கு அப்பால் செயற்படுவது குறைவாகவே இருக்கிறது.பயங்கரவாத தாக்குதல் நடந்தால், நாம் பயங்கரவாதிக்கு எதிராக அணிதிரள்வது கிடையாது. பயங்கரவாதத்தை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க முடியுமா என்று தான் சிந்திக்கிறார்கள். நாடு முகங்கொடுக்கும் பொதுவான பிரச்சினைகளின் போது ஒன்றுபட வேண்டும். 

கேள்வி: இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர சிறுபான்மை வாக்குகள் அதிகம் பங்களித்தன. அளுத்கம போன்ற சம்பவங்களுடன் சகலரையும் இணைக்கும் அரசு அவசியம் என கருதப்பட்டது.அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதா? 

பதில். சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றுடன் ஸ்திரத்தன்மை சமமாக பயணிக்க வேண்டும்.பேச்சு உரிமை என்பது கண்டதையெல்லாம் பேசுவதல்ல.பொறுப்புடன் பேச வேண்டும்.             

அரசியல்வாதிகள் கூறும் பொய்களினால் பாரிய பிரச்சினை ஏற்பட்டது. வவுணதீவில் இரு பொலிஸார் சுடப்பட்ட போது புலி மீண்டும் தலைதூக்கியதாக தெற்கிலுள்ள அரசியல்வாதிகள் குரல் கொடுத்தார்கள். நாட்டுமக்கள் நம்பினார்கள்.இவ்வாறு கூறியவர்களை தண்டிக்க வேண்டும். அரசியல்வாதிகள் கூறும் கருத்துகள் பொய்யாக இருந்தால் தண்டிக்கும் முறை இருக்க வேண்டும். சிலர் முஸ்லிங்களை விமர்சித்தார்கள். முஸ்லிங்கள் ஏனைய மதத்தவரை விமர்சித்து பேசினார்கள். தற்கொலை தாக்குதல் நடத்த வேண்டும் என்றார்கள். பேச்சு சுதந்திரத்தை பயன்படுத்தி கூறும் கருத்துகளால் பாரிய சேதம் ஏற்படுகிறது. 

கேள்வி: அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து அவசர கால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. பிரச்சினை பெருமளவு கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் அவசரகால சட்டத்தை நீடிக்கத் தேவையில்லை என ஜனாதிபதியும் கூறியுள்ளார். இது தொடர்பில் உங்கள் கருத்தென்ன? 

பதில்: சஹ்ரான் குழு அழிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பயங்கரவாதமே இருக்கிறது.இதனுடன் தொடர்புள்ளவர்கள் தனியாக கூட செயற்படலாம்.இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பு தான்மதிப்பீடு செய்து முடிவு செய்ய வேண்டும். சாதாரண சட்டத்தின் கீழ் நிலைமைகளை கட்டுப்படுத்த முடியும் என பாதுகாப்பு தரப்பு கருதினால் அவசர கால சட்டத்தை நீக்குவதில் எந்த பிரச்சினையும் கிடையாது. 

கேள்வி: இந்த பிரச்சினையுடன் சில அமைச்சர்கள் தமது அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்தார்கள். அவர்கள் மீள அமைச்சு பதவிகளை ஏற்க முடிவு செய்துள்ள நிலையில் அதற்கு ரதன தேரரும் வேறு சில தரப்பிரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.இது பற்றி என்ன கருதுகிறீர்கள்? 

பதில்: பயங்கரவாதிகளுக்கு உதவி வழங்கியதாக ரிசாத் பதியுதீன் உட்பட சிலருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் பொலிஸார் முழுமையாக விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும்.இதனை விடுத்து வெளியில் இருந்து ஒவ்வொருவர் சொல்வதும் செல்லுபடியாகாது. மக்களுக்கு இவர்கள் தொடர்பில் சந்தேகம் இருந்தால் வெளிப்படையாக விசாரணை நடத்துவது அரசின் பொறுப்பாகும். அவர்கள் தவறு செய்திருந்தால் தண்டிக்கவேண்டும். எந்த தவறும் இல்லாவிட்டால் அவற்றில் இருந்து விடுவிக்க வேண்டும். அதனை அரசாங்கம் துரிதமாக செய்யவேண்டும். 

கேள்வி: குறித்த அமைச்சர்களுக்கு பயங்கரவாதத்துடன் எந்த தொடர்பும் கிடையாது என பதில் பொலிஸ் மா அதிபர் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளாரே. பிரதமர் கூட சி.ஐ.டி அறிக்கை படி செயற்பட வேண்டும் என்று கூறியுள்ளாரே? 

பதில்:  இது தொடர்பான விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். இது பற்றி அறியும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. 

கேள்வி: ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ச்சியாக பிக்குமாரை விமர்சித்து வருகிறார். இதன் பின்னணி என்ன? 

பதில்: பிக்குமாரும் கிறிஸ்தவ மதகுருமாரும் தான் முழு நேர மதசெயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.இவர்கள் நாட்டின் பொதுவான சட்டத்திற்கு உட்பட்டவர்களாகும். சிறுவர்,பெண் துஷ்பிரயோகம், குற்றச்செயல்கள் செய்தால் நாட்டின் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாட்டின் பொதுவான சட்டத்தின் கீழ் செயற்பட முடியாது என பிக்குமார் கூறவில்லை. அரச சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுமாறே புத்தரும் கூறியுள்ளார்.பிக்குமார் சூதாட்டம் ஆடினால் மகாசங்கத்தினர் நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு தொடரலாம். சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் மேற்றிராணியார் ஒருவருக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.இவை தொடர்பில் குறித்த மதத்திற்குள் ஆராயப்பட வேண்டும். புத்தரின் காலத்திலும் சில விடயங்கள் நடந்துள்ளன. இதனை விடுத்து சகல பிக்குமாரையும் விமர்சிப்பது உகந்ததல்ல.பிரபலமாதற்காக எதனையாவது கூறுவது உகந்ததல்ல. 

கேள்வி: மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்திற்குள் இழுபறி காணப்படுகிறது.இதற்கு என்ன தீர்வு?

பதில்: சிறைச்சாலைகளுக்குள் இருந்து போதைப்பொருள் வர்த்தகம் நடைபெறுகிறது என்பதற்காக மரணதண்டனையை அமுல்படுத்துவது பிரச்சினைக்கு தீர்வாக அமையாது.எமது நாட்டின் முன்னேற்றத்திற்கு நீதிமன்றம்,பொலிஸ்,சிறைச்சாலை என்பன செயற்திறன்ற, பக்கசார்பான இடங்களாகும். நாம் நீதித்தித்துறை,பொலிஸ் சேவை என்பவற்றை சுயாதீமாக செயற்படும் இடங்களாக மாற்றினோம். சிறைச்சாலைகள் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பான இடமாக மாறியுள்ளன. கோடிக்கணக்கில் பணம் திருடுபவனுக்கு இந்த மூன்று இடங்களையும் வளைத்துப் போட முடியும்.இது தொடர்பில் பிரதம நீதியரசர் கவனம் செலுத்த வேண்டும்.இன்றேல் நாட்டுக்கு எதிர்காலம் கிடையாது. 

கேள்வி: யுத்தத்துடன் தொடர்புள்ள புலிகள் மற்றும் ராணுவ வீரர்கள் இருதரப்பிற்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று முன்னர் கூறியிருந்தீர்கள். அந்த யோசனையின் தற்போதைய நிலைமை என்ன? 

பதில்: ஒவ்வொரு வருடமும் இந்த பிரச்சினை தொடர்பாக ஜெனீவாவிற்கு சென்று பதில் வழங்குவதை நிறுத்த இது தான் சரியான தீர்வாகும். புதிதாக சில நிறுவனங்களை உருவாக்கி காலங்கடத்துவதில் பயனில்லை. உடனடியாக இறந்தகாலத்தை மறந்து எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும். புலிகள் இயக்கத்துடன் இணைந்து சுமார் 25ஆயிரம் பேர் ஆயுதம் தூக்கி போராடினார்கள். படைத் தரப்பில் இரண்டரை இலட்சம் பேர் யுத்தத்தில் ஈடுபட்டார்கள். யுத்தக் குற்றம் தொடர்பில் தண்டிப்பதானால் இருதரப்பிற்கும் தண்டனை வழங்க வேண்டும்.அது சாத்தியமில்லை. சிறையில் 66புலிஉறுப்பினர்களும் 34படைவீரர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.இதனால் என்ன பயன். எனவே அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும்.ஜே.வி.பியில் ஆயுதம் தூக்கிய அனைவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது.கடந்த கால கொலையாளிகள் எத்தனை பேர் இன்று பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள்.எனவே கடந்த காலத்தை மறப்பதே ஒரே தீர்வு. 

நேர்காணல்: ஷம்ஸ் பாஹிம் 

Comments