மனிதவள அபிவிருத்தி நிதியத்துக்கு வெளிநாட்டு பணம் வருவதில்லை! | தினகரன் வாரமஞ்சரி

மனிதவள அபிவிருத்தி நிதியத்துக்கு வெளிநாட்டு பணம் வருவதில்லை!

கடந்த வார இதழ் 23ம் பக்கத்தில் நுவரெலியா திரித்துவக் கல்லூரி தேசிய கல்லூரியாக தரமுயர்த்தப்படும் என்ற தலைப்பில் வெளியான மருத்துவர் கிரிஷாந்த் நேர்காணலில் மனிதவள அபிவிருத்தி நிதியம் தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த தகவல்கள் தவறானவை என்று அதன் தலைவரான வி. புத்திரசிகாமணி தெரிவித்ததோடு தனது விளக்கத்தையும் அனுப்பி வைத்தார். அவர் அனுப்பிய விளக்கத்தை இங்கே பிரசுரிக்கிறோம்.  

மனித வள அபிவிருத்தி நிதியத்திற்கு எந்த நாட்டில் இருந்தும் ஒரு சதம்கூட வருவதில்லை. நாங்கள் வேலை செய்தே எமது வருமானத்தை ஈட்டிக் கொள்ள வேண்டும். எமது அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அமைச்சான மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சுக்கு கீழ் வருகின்ற பணிகளை செய்கின்ற பொழுது எமக்கு ஒரு சிறுதொகை பணம் அவர்களால் வழங்கப்படும். ஏனைய எங்களுடைய நிர்வாக செலவுகளுக்காக தோட்ட கம்பனிகளே கொடுப்பனவுகளை ( Levy ) கொடுக்கின்றன. இதைப்பற்றி எந்த அறிவும் இல்லாமல் அபாண்டமாக கோடிக்கணக்கில் பணம் வருவதாக கூறுவது முட்டாள்தனம்.  

தன்னை ஒரு மருத்துவர் என்று சொல்லிக் கொள்கின்ற ஒருவர் எந்த பல்கலைக்கழகத்தில் அல்லது எந்த மருத்துவ கல்லூரியில் கல்வி கற்றார் என்பதை வெளியே சொல்ல முடியாத ஒருவர் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தியின் பொறுப்பு நிதியத்தின் செயல்பாடுகளை பற்றி எதுவும் தெரியாமல் அதைப்பற்றி பேசுவது கேலிக்கூத்தாக இருக்கின்றது.  

இதேவேளை சம்பந்தப்பட்டவர் ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கி நுவரெலியா பரிசுத்த திரித்துவ கல்லூரியை தேசிய பாடசாலையாக மாற்றுவதாக வாரமஞ்சரி நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். அவரால் நுவரெலியா பரிசுத்த திரித்துவ கல்லூரியை தேசிய கல்லூரியாக தரம் உயர்த்த முடியுமா? என்று நான் கேட்க விரும்புகிறேன். நான் அந்த பாடசாலைக்கு ஒரு கேட்போர் கூடம் அமைத்து கொடுத்துள்ளேன். மலையக பாடசாலைகளில் இருக்கின்ற ஒரேயொரு கேட்போர் கூடம் பரிசுத்த திரித்துவ கல்லூரியில் மாத்திரமே உண்டு. 

மேலும் மாகாணசபைகளுக்கு கொடுத்த அதிகாரங்களுக்கு கீழுள்ள பாடசாலைகளை மத்திய அரசாங்கம் மீண்டும் 13ஆவது திருத்தச் சட்டத்தை மீறும் செயலாகும் என்பதை அவர் அறிவாரா? அமைச்சர் ராதாகிருஷ்ணன் நானுஓயாவில் ஒரு தேசிய பாடசாலையை முழுமையாக உருவாக்க எல்லா வேலைகளும் செய்து இருக்கின்றார். வெகு சீக்கிரம் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் 

தோட்ட ஆஸ்பத்திரிகளுக்கு அரசாங்கம் தெரிவு செய்த சில மருந்துகளையே எங்களுடைய நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைக்கிறது. ஒரு சில முக்கிய மருந்துகள் பெரிய ஆஸ்பத்திரிகளில் கூட கிடைப்பதில்லை.  

தற்போது தோட்டங்களில் இருக்கின்ற மருத்துவ நிலையங்கள் மற்றும் (dispensary) மருந்து சாலைகள், ஆஸ்பத்திரிகள் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்றுவருகின்றது. அதற்கான வேலைத் திட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன. பாராளுமன்றத்தில் இதற்கென்று (oversight )ஒரு மேற்பார்வை கமிட்டி பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தலைமையில் அடிக்கடி கூடி விவாதித்து வருகிறது. அதில் நானும் ஒரு உறுப்பினராக இருக்கின்றேன். 

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் ஆகியவற்றின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளாமல் வெறுமனே எங்களுடைய பிரச்சினைகளை அவர்கள் தீர்த்து வைப்பார்கள் எனக் கூறுவது அவரது அறியாத் தன்மையை காட்டுகின்றது. உண்மை என்னவென்று தெரியாமல் பொதுவெளியில் பேசக்கூடாது. இந்த இரு ஸ்தாபனங்கள், சர்வதேச பொலிஸ், சர்வதேச நீதிமன்றம் போன்ற சர்வதேச ஸ்தாபனங்களுக்கு அல்ல, நமது அரசாங்கத்திற்குத்தான் எல்லா விதமான உரிமைகளும் அதிகாரங்களும் உள்ளன. 

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால் நடாத்தப்பட்ட செயலமர்வுகளில் பல தடவைகள் இலங்கை பிரதிநிதியாக நான் கலந்து கொண்டுள்ளேன் . இலங்கையில் இருந்து பங்குபற்றிய பிரதிநிதிகளில் ஆக வயது குறைந்த தொழிலாளர் பிரதிநிதியாகவும் நானே கலந்து கொண்டு இருக்கின்றேன். அங்கு நடப்பவைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தும் எனக்கு நன்கு தெரியும். அவர்களால் அறிக்கை மாத்திரமே தாயாரிக்க முடியும். அவர்களால் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்பதை நண்பர் உணர்ந்துகொள்ள வேண்டும்.  

தகவல் : நூரளை சுப்பிரமணியம்

Comments