நவீன தமிழ் இலக்கியத்துக்கு விமர்சன ஆளுமையால் வளமூட்டிய பேராசிரியர் க. கைலாசபதி | தினகரன் வாரமஞ்சரி

நவீன தமிழ் இலக்கியத்துக்கு விமர்சன ஆளுமையால் வளமூட்டிய பேராசிரியர் க. கைலாசபதி

20ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாற்றில் பொதுவாகவும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பாகவும் அமரர் கைலாசபதிக்கு ஒரு நிரந்தமான முக்கியத்துவம் மிக்க சிறப்பிடம் உண்டு. 

இளையதம்பி கனகசபாபதி, கைலாசபதியின் தந்தை, தில்லைநாயகி நாகமுத்து அவரது தாயார். தந்தையார் உத்தியோக நிமித்தம் மலேசியாவில் மனைவியுடன் வாழ்ந்த காலங்களில் 05.04.1933ல் மலேசியத் தலை நகர் கோலாலம்பூரில் பிறந்தவர் கைலாசபதி. 

ஆரம்பக் கல்வியை மலேசியாவில் தொடங்கிய இவர் 1945ல் இலங்கை வந்து யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விடுதிச்சாலையில் தங்கியிருந்து தனது கல்வியைத் தொடர்ந்தார். அதே நாட்களில் அதே இந்துக்கல்லூரியில் அதே விடுதிச்சாலையில் தங்கி அவருடன் கல்வி பயின்றதாகக் கவிஞர் முருகையன் குறித்திருக்கின்றார். 

கைலாசபதியின் தமிழார்வத்தைத் தூண்டியவர்களாக இந்துக் கல்லூரியின் ஆசிரியர்களான வித்துவான் க. கார்த்திகே, பண்டிதர் க. செல்லத்துரை போன்றோரும் அவருடைய பொதுவுடமைக் கருத்துக்கள் வளம் பெறத்தூண்டியவர்களாக கம்யூனிஸ்ட் மு.கார்த்திகேயன், ஏ.எஸ். கனகரத்தினம், அற்புதரத்தினம் போன்ற ஆசிரியர்களும் பெரிதும் துணையாக நின்றவர்கள். 

இந்துக் கல்லூரிக்காலமே கைலாசபதியின் எழுத்தார்வம் மூளை கொண்ட காலம் எனலாம். தி.மு.க எழுத்தாளர்களின் நூல்கள், டாக்டர். மூ.வ பாரதிதாசன், புதுமைப் பித்தன், ரகுநாதன் போன்றோரின் நூல்கள் என வாசிப்பும் தானுமாக அவர் இருந்த காலமும், கல்லூரி இலக்கியமன்ற ஏடுகள் மற்றும் ஒரு சில இதழ்களிலும் அவருடைய எழுத்துக்கள் இடம் பெற்றகாலமும் அந்த இந்துக் கல்லூரிக்காலமே. 

இந்துக் கல்லூரிக்குப் பிறகு கொழும்பு றோயல் கல்லூரி மாணவரானார். கவிஞர் க. செ. நடராசா (நாவற்குழியூர் நடராசன்) மற்றும் கி. லக்ஷ்மண அய்யர் ஆகியோரின் மாணவராகின்றார். சிறுகதை, கவிதை, வானொலி, நாடகம், மொழிபெயர்ப்பு என்று எழுத்தும் ஆங்கில இலக்கியங்கள், ஆங்கில விமர்சன நூல்கள் என ஆழ அகல வாசிப்புமாக அவருடைய திறனாய்வுப் புலமை செழுமையும் விரிவும் பெற்ற காலம் அவருடைய றோயல் கல்லூரிக்காலம். 

வானொலிக்கு நாடகங்கள் எழுதியதன் மூலம் சானாவுக்கும் கைலாசுக்கும் நெருக்கமான உறவிருந்தது, புதுமைப்பித்தன் படைப்புக்கள், ஷேக்ஸ்பியரின் நாடக மொழிபெயர்ப்பு என்று வானொலிக்காக நாடகங்கள் எழுதியதுடன் சில நாடகங்களில் நடிக்கவும் செய்துள்ளார். 

1953ல் பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவனாக பேராதனை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். தமிழை சிறப்பு கற்கை நெறியாக மேற்கொண்டு பட்டப்படிப்பைத் தொடங்கினார். 

‘நாங்கள் பேராதனையில் படிக்கின்ற காலத்தில் பேராசிரியர்கள் கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன் ஆகியோருடன் நெருக்கமாகப் பழகினோம். பல்கலைக்கழக நாடகங்களில் நாங்கள் இருவரும் நடித்து வந்தோம். பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் ‘துரோகிகள்’ மற்றும் ‘சுந்தரம் எங்கே’ ஆகிய நாடகங்களுக்கு அவரின் எழுத்தாளர்களாக நாங்களிருவரும் தொழிற்பட்டோம்? என்றெழுதுகின்றார் அமரர் கார்த்திகேசு சிவத்தம்பி. 

1957ல் அதி உன்னத சித்தி பெற்று பட்டதாரியாக வெளியேறினார். 

பட்டப் படிப்பின் பின் முதன் முதலாக தினகரனில் பணியாற்றத் தொடங்கினார். தினகரனில் இவர் பணியாற்றிய காலம் சிறியது. (1957- 1961) என்றாலும் தினகரன் பத்திரிகைக்கான இவரது சேவை மகத்துவம் மிக்கது. தினகரன் வாரப் பதிப்பின் பொறுப்பாசிரியராகவே முதலில் இணைந்தார். ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கான முக்கியத்துவம், மேலை நாடுகளின் சிறந்த படைப்புக்களின் மொழிபெயர்ப்புக்கள். விமர்சனக் கட்டுரைகள், கவிதைகள், தொடர்நாவல் என தினகரனை ஒரு இலக்கிய இதழாக! தமிழ்பேசும் மக்கள் பத்திரிகையாக மாற்றிக்காட்டிய பெருமை கைலாசபதியைச் சேர்ந்தது. 

தமிழ் இலக்கியம், தமிழ் மக்களின் அரசியல் என்று பத்திரிகையுலகில் முன்நின்ற தினகரன் மற்ற மற்ற பத்திரிகைகளையும் அதே முறையை பின்பற்றவும் நிர்ப்பந்தித்தது.  

1961ல் பல்கலைக்கழக விரிவுரையாளராக முதலில் பேராதனையிலும் பிறகு கொழும்பு வளாகத்திலும் பணியாற்றினார். யாழ் பல்கலைக்கழக ஆரம்பிக்கப்பட்ட போது வளாகத்தலைவராக நியமிககப்பட்டார்.  தமிழியல் துறையில் ஆர்வம் கொண்டவராக இருந்தாலும் இவருடைய எழுத்து வாழ்வு இலக்கிய விமர்சனம் என்னும் துறை சாரந்தே சிறப்புப் பெற்றது. மார்க்சியத்தையே தனது நோக்காகக் கொண்டியங்கிய பேராசிரியர் கைலாசபதி, மார்க்கிய விமர்சன முறைமையின் பிதாமகனாகக் கொள்ளக்கூடியவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்  விசையாகத் திகழ்ந்தவர். 

1964ல் மாணிக்க இடைக்காடரின் மகள் சர்வ மங்களத்தைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுமங்களா (1967) பவித்திரா (1968) ஆகிய இரண்டு புதல்விகள். பேராசிரியத் தந்தை சேர்க்கும் தவப்புதல்விகள். கைலாசபதியின் இலக்கிய இயக்கத்துக்குப் பெருந்துணையாகவும் உந்து சக்தியாகவும் திகழ்ந்தவர் திருமதி சர்வமங்களம். 

வரலாறு, திறனாய்வு, ஒப்பியல், இலக்கிய ஆய்வு, என இருபது நூல்கள் வெளிவந்துள்ளன.  தனது 49வயதில் நோயுற்ற நிலையில் 06/12/1982ல் பேராசிரியர் கைலாசபதி கொழும்பில் மரண மடைந்தார். 

இருபதாம் நூற்றாண்டின் தமிழிலக்கிய வரலாற்றில் கைலாசபதியின் பெயர் நிரந்தரமானது முக்கியமானது.   

தெளிவத்தை ஜோசப்

Comments