மறைந்துபோன மகிழ்ச்சி | தினகரன் வாரமஞ்சரி

மறைந்துபோன மகிழ்ச்சி

தென்றல் ஒலியும்
தெவிட்டாத குயிலிசையும்
புள்ளினத்தின் பேச்சொலியும்
புரியாத மொழிநடையும்
இன்றெங்கோ மறைந்து
இல்லாமல் போனதனால்
செவிப்பறையைக் கிழித்துச்
செவிடாக்கும் வண்ணம்
உயர் தொனியில் ஒலிவகைகள்
உயிர் தொனியில் ஒலிவகைகள்
உயிர் வதைத்துப் போகிறது
உயிர்வாய் வைச்சுமந்து வரும்
உயர்வான நலம் செய்யும்
சுத்தமான காற்றைச்
சுவாசித்து வெகுகாலம்
கரியமில வாயுக்கள்
கனவிகிதம் கூடியதால்
கருவறைச்சிசு கூடக்
கதிகலங்கிப் போகிறது
அருந்தும் நீர்க் கிணறும்
அசுத்தமுற்ற காரணத்தால்
பருகும் மக்களெல்லாம்
பலநோய்க்கும் ஆளானார்
செயற்கை மருந்தடித்துச்
சிவக்கவைத்த பழவகைகள்
உண்பவர்களெல்லோர்க்கும்
உபாதைகளை யேற்படுத்தும்
கலப்படப் பொருட்கள் பல
கனமலிவாய்க் கிடைப்பதனால்
கண்டறியா நோய்கள் பல
கனபேரைப் பலியெடுக்கும்
பிரதான வீதியெனப்
பெயர் பெற்ற வீதிகளில்
வெகுதூர வாகனங்கள்
விரைவாகச் செல்லுகையில்
கால்நடைகள் கூட்டம்
கச்சிதமாய்ப் படுத்திருக்கும்
மாடுகள் எழுந்து
மனம்விரும்பிப் போகும்வரை
அம்புலன்ஸ் வண்டிகூட
அசைய முடியாது
இயற்கையிலே கால்நடைகள்
இரைமீட்டி இளைப்பாறும்
இருந்தாலும் எம்மூவரில்
இரை மீட்டல் கிடையாது
இரைப்பையினுள்ளே
இருப்பவைகள் பொலித்தீன் பைகள்
மீனினங்கள் பெருகி
மிகுந்திருந்த வாவியத்தில் இன்று
வீசுவலையத் தனையும்
வெறுவலையாய்த் திரும்பிவரும்
குப்பைகளைக் கொட்டிக்
குவித்திருக்கும் காரணத்தால்
வடிகான்கள் எதிலும் நீர்
வடிதல் கிடையாது.
பொதுச்சந்தை வளாகத்துள்
புகுந்திட்டால் போதும்
துர்நாற்றம் மூக்ைகத்
துளைத்தெடுத்துக் கொன்றுவிடும்
இந்த நிலை போக்க
இருக்கின்ற நகர சபை
தக்க பணி செய்தால்
தரமுயரும் எம்மூராம்
 
கலாபூஷணம் 
ஏ.ஸீ. அப்துல் றகுமான்,
ஏறாவூர் 6.

Comments