அப்பாக்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு வாழும் நிலாவரசிகள்... | தினகரன் வாரமஞ்சரி

அப்பாக்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு வாழும் நிலாவரசிகள்...

அப்பாவின் ஊர் கோவிலில் கச்சாய் அம்மன் கோவிலில் நாங்கள் நேர்த்தி வைத்திருக்கிறம் மாமா. அப்பா வந்தவுடன் நான் பாற்செம்புஎடுக்கவும், அக்கா அலகு குத்தவும் என்று. கடவுள் இருப்பது உண்மையாக இருந்தால் எங்களது நேர்த்தியை ஏற்றுக்கொள்வார் என 2009 காணாமல் ஆக்கப்பட்ட சின்னத்தம்பி சிறிலதனின் பதினொரு வயது மகள் நிலாவரசி பெருமூச்சுடன் கூறினாள். 

 2009 ஆம் ஆண்டு வட்டுவாகலில் வைத்து விசாரிக்க என ஆமிக்காரர் அப்பாவை கூட்டிக்கொண்டு போகும் போது நான் எழு மாதக் குழந்தை, என அம்மா சொன்னவ. எனக்கு அப்பாவை தெரியாது, அவரை போட்டோவில்தான் பார்த்திருக்கிறன். ஆனால் இப்ப அப்பாவை பார்க்க ஆசையாய் இருக்கிறது. என கண்கள் பனிக்க கதை சொன்னாள் நிலாவரசி. பெயருக்கு ஏற்ற முகத்தோற்றம், ஆனாலும் அந்த பெளர்ணமி முழு நிலாவை கார் மேகம் மறைப்பது போன்று அப்பாவின் ஏக்கமும் அவளது முகத்தை அவ்வப் போது மறைத்து கடந்து சென்றுக்கொண்டிருந்தது. 

அப்பா எப்படி இருப்பார்? இப்ப இருந்தால் எங்களோடு எப்படி இருப்பார்? அவரை எங்கு வைத்திருக்கின்றார்கள்? வைத்திருக்கின்றார்களா? ஏன் இந்த பத்து வருடங்களாக அப்பா பற்றி எங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை? அவருக்கு ஏதும் நடந்திருக்குமா? எங்கட அப்பா அப்படி என்ன பெரிய தவறு செய்தவர்? என பதலளிக்க முடியாத கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றாள். ஒவ்வொரு பிள்ளைக்கும் தன் தந்தை தொடர்பில் இருக்கின்ற அனைத்து ஆசைகளும், கனவுகளும் நிலாவுக்கும் இருக்கிறது. 

எதுவும் அறியாத இந்த பிஞ்சு வயதில் மிகப்பெரும் ஒரு ஏக்கத்தோடு வாழ்வதற்கு நிலா செய்த தவறு அவள் ஒரு தமிழ் குழந்தையாக இறுதி யுத்தக்காலத்தில் இந்த மண்ணில் பிறந்ததே. பாடசாலைக்கு செல்கின்ற போது தன்னுடைய சக நண்பிகள் தங்களது அப்பாக்களுடன் பாடசாலைக்கு வருவதும், அவர்களுக்கு கை காட்டி விடைபெற்று பாடசாலைக்குள் செல்வதும் நிலாவை பெரிதும் பாதித்து வருகிறது. தான் எப்போது அப்பாவுடன் பாடசாலைக்கு போவாள்? அப்பா வருவாரா? என அடிக்கடி தன்னிடம் கேள்வி கேட்பது வழக்கம் என நிலாவின் தாய் குறிப்பிட்டார். பதலளிக்க முடியாத அந்த கேள்விக்கு மெளனத்தையே தான் பதிலாக விட்டுவிடுவதாகவும் சொன்னார்.  

சிறிலதனின் மனைவி தயாநிதி(34) இரண்டு பெண் பிள்ளைகளுடன் கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் தனது தாயுடன் வசித்து வருகின்றார். 2009.05.18 ஆம் திகதி தனது கணவர், அவரது தந்தையுடன் வருகின்ற போது வட்டுவாகலில் வைத்து விசாரித்து விட்டு அனுப்புகிறோம் என இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டவர். என்ன நடந்தது என்றே தெரியவில்லை. சர்வதேச செஞ்சிலுவை சங்கம், ஜனாதிபதி ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் என பல இடங்களிலும் பதிவுகளை மேற்கொண்டும், தகவல்களை வழங்கியும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. அம்மாவின் சிறிய தொகை ஓய்வூதியத்திலும், சகோதரர்களின் உதவியுடனும் வாழ்க்கை நகர்கிறது. எனத் தெரிவித்த தயாநிதி, 

தனது கணவர் காணாமல் ஆக்கப்பட்ட வலியை விட தற்போது அப்பா தொடர்பில் பிள்ளைகளின் ஏக்கம் அதிகம் வலியை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார். மூத்த மகள் வானுஜாவுக்கு அப்போது(2009) வயது நான்கு. நிலா ஏழு மாதமாக இருந்தபோது  இறுதியாக 2009 மே மாதம் 16 திகதி அவளுக்கான பால்மாப் பெட்டியுடன் வந்தவர் அதனை தந்துவிட்டு கவனமாக இருக்குமாறு கூறிச்சென்றார். அன்றுதான் நாம் அவரை கண்டோம். 

நிலா விபரம் தெரிந்து அப்பா பற்றி விசாரிக்க தொடங்கிய போது அவர் இயக்கத்தில் இருந்தது பற்றியும் காணாமல் ஆக்கப்பட்டது பற்றியும் தெரிந்து கொண்ட பின்னர் என்னோடு சேர்ந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்களில் தவறாது கலந்துகொள்வாள். போராட்டத்தில் கலந்துகொண்டால்தான் அப்பாவை விடுவார்கள் எனக் கூறுவாள், பத்திரிகைகளில், தொலைக் காட்சிகளில் இந்த விடயம் பற்றி வரும் செய்திகளை ஆர்வதோடு கேட்பாள். ஆனால் இந்த பத்து வருடங்களில் எங்களின் இந்த விடயத்திற்கு எந்த நீதியான தீர்வும் கிடைக்கவில்லை. 

எங்களது வாழ்க்கை இரண்டு படகில் கால் வைத்தது போன்றுள்ளது. அவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை கொண்டு செல்வதா? அல்லது அவர் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டு வாழ்க்கையினை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வதா? என்ன செய்வது என்றே தெரியாது வாழ்ந்து வருகின்றோம். அப்பா வருவார் என்ற நம்பிக்கையில் நிலா இப்போதும் வாழ்ந்து வருகின்றாள் எனவே அவளது நம்பிக்கையை அப்படியே விட்டுவிடுவதா, அல்லது அந்த நம்பிக்கையை கைவிடுமாறு கோருவதா? எதைச் செய்வது என்றே புரியவில்லை என்றார் தயாநிதி. 

பாடசாலைகளில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளில் அவளுடை சக நண்பிகள் அப்பா அம்மாவுடன் கலந்துகொள்கின்ற போது தன் அப்பாவின் ஏக்கத்துடன் நிலாவின் என் மீதான பார்வை என் மனதை வாட்டியெடுக்கும். என் பிள்ளைக்கு ஏன் இப்படியொரு நிலைமை என அந்த ஆண்டவனை நொந்துகொள்வேன். பாடசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வருகின்ற போது தங்களுடைய அப்பாக்களுடன் அவளது நண்பிகள் கடற்கரைக்கும், கடைக்கும், கோவிலுக்கும், பூங்காவுக்கும் போய்வந்த கதை சொல்வாள். அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் தனது அப்பாவும் வந்துவிட்டால் நானும் இப்படி எல்லாம் சந்தோசமாக இருப்பேன் என்பதாகவே இருக்கும். 

பெண் குழந்தைகளை பொறுத்தவரை அவர்களுக்கு அப்பாக்களுடன் ஈடுபாடு அதிகம் அதில் என் குழந்தைகள் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும். என்றார் அவர். 

அவரின் பிறந்த தினம், தந்தையர் தினத்தில் சமூக வலைத்தளங்களில் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்வார்கள். அடிக்கடி அக்காவும் தங்கையும் தந்தை தொடர்பில் உரையாடுவது கேட்கும் எங்களுக்கு கண்ணீரை வரவழைக்கும்.

நாங்கள் உணர்வுகளால் கொல்லப்பட்ட உயிர்களாக வாழ்கின்றோம் என வலியோடு சொன்னார் தயாநிதி. 

இந்த நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தம், இப்படி ஏராளமான குழந்தைகளை விட்டுச் சென்றுள்ளது. நிலாவரசி போன்று பலர் அப்பாக்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் இலவு காத்த கிளிகளாக உள்ளனர்.

இவர்களின் உணர்வுகளை அப்பாக்களாக அதிகாரத்தில் இருக்கின்றவர்களும் புரிந்துகொள்வதாக இல்லை.  அப்பாக்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு மட்டுமே நிலாவரசிகளின் வாழ்க்கைகள் ஏக்கங்களோடு நகர்கின்றன.     

மு.தமிழ்ச்செல்வன்  

Comments