அமெரிக்க – ரஷ்ய பனிப்போரே மனிதனை நிலவுக்கு இட்டுச் சென்றது | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்க – ரஷ்ய பனிப்போரே மனிதனை நிலவுக்கு இட்டுச் சென்றது

எழுபதற்கு பிற்பட்ட காலத்தை எடுத்துக்கொண்டு அறுபது எழுபதுகளுடன் ஒப்பிடுவோமானால் அறுபதுகள் மிகச் சிறந்த காலப்பகுதி என்பதையும் அது அமைதிப் பூங்கா என்பதையும் பலரும் ஒத்துக் கொள்வார்கள். ஆனால் வசதிகள், தொழில்நுட்ப வளர்ச்சி என்பனவற்றை பொறுத்தவரையில் நமது நாடு அப்போது பின்தங்கியிருந்தது. வானொலி, பத்திரிகைகள் மட்டுமே ஊடகங்கள். பொழுதுபோக்கு என்றால் திரைப்படங்களும் ஆங்காங்கே நடக்கும் பைலா இசைக் கச்சேரிகளும்தான். மலிவு விலையில் அரிசி, பங்கீட்டின் கீழ் உப உணவு பொருட்களின் விநியோகம், பாண், பணிஸ், கொம்பு பணிஸ் இ.பொ.ச பஸ்கள், குறுகிய தார் வீதிகள், நான்கு லட்சம் கொள்ளையடிக்கப்பட்டால் ஆச்சரியமும் அச்சமுமாக கண்விரிக்கும் சாதாரண மக்கள்... இப்படித்தான் அறுபதுகள் நம்மைக் கடந்து போனது. 

எங்கள் வீட்டுக்கு சிலர் வாடிக்கையாக வந்து போவார்கள். அவர்களில் மெலிந்த, உயரமான அந்த மீசைக்கார போத்தல்காரரும் ஒருவர். எங்கள் வீட்டில் சேரும் பேப்பர், சஞ்சிகைகள், போத்தல்களை வாங்கிச் செல்பவர். ஆனால் இரண்டு மணித்தியாலம் வரை வாசல்படியில் அமர்ந்து வாய் கொப்பளித்து தேனீர் அருந்தியபடி கதைத்துக் கொண்டிருப்பார். வெள்ளத்தியான மனிதர். 

1969ஜுலை 20ம் திகதி அந்த அதிசயம் நடந்தது. பூமியில் இருந்து 238854.5 மைல் (384399.1 கி.மீ) தொலைவில் அமைந்திருக்கும் நிலவில் கால் பதித்த நாள் அது. நாம் லொடலொட இ.போ.ச வண்டியில் பாணும் தேங்காய் சம்பலும் தின்றுவிட்டு மிதிபலகையில் தொங்கியபடி பயணம் செய்து கொண்டிருந்த அக் காலத்தில் மூன்றுலட்சம் கி.மீட்டருக்கும் அப்பால் பயணம் செய்து இரு அமரிக்கர்கள் நிலவில் இறங்கித் திரிந்து விட்டு மீண்டும் பூமிக்கு திரும்பி இருக்கிறார்கள் என்பதை எப்படி நம்பமுடியும்? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டியிருந்தது. 

அடுத்த முறை அந்தப் போத்தல்காரர் வந்தபோது “அமெரிக்கக்காரன் நிலவிலே இறங்கி கொடி ஏற்றி வந்திருக்கானே தெரியுமா?” என்று உசுப்பிவிட்டேன். 

“அந்த விஷயமா? நானும் பேப்பர்ல பார்த்தேன். ஐய, அதையெல்லாம் நம்பிடாந்தீங்க. வெள்ளைக்காரன் பொய் சொல்றான். நிலாவுக்கு எப்படீங்க போக முடியும்? சிவபெருமானின் சடாமுடியில் இருக்கு நிலா. அங்கே போறதுண்ணா சிவபெருமான் தலையில் கால் வச்ச மாதிரி. அது முடியுமா? அப்படியே கால் வைச்சாலும் பெருமான் சும்மா பாத்துக் கிட்டிருப்பாரா? சும்மா புரட்டுக்காரப் பயல்கள்!” என்று அவர் ஒரே போடாகப் போட்டார் போத்தல்காரர்! 

இவரைப்போல பலருக்கும் மனிதன் சந்திரனில் இறங்கிய அற்புதம் பொய்யாகவே பட்டது. நைஜீரியாவில் ஒரு பழங்குடித் தலைவர், அந்தக் குட்டியூண்டு நிலவில் ஒரு ரொக்கட் இறங்கத்தான் முடியுமா? அப்படியே அங்கே மனிதர்கள் இறங்கினாலும் நிற்பதற்கு இடம் இல்லை என்பதால் வழுக்கி கீழே விழுந்து காணாமல் போய்விடுவார்கள் என்று கூறிச் சிரித்தாராம். சந்திரனை தெய்வீக அம்சம் கொண்ட கோளாகவும் தெய்வமாகவும் பார்க்கும் மக்களுக்கு அது சாத்தியமற்றதாகவே இருந்தது. எனினும் உலகெங்குமுள்ள மக்கள், மனிதன் சந்திரனில் காலடி பதித்ததை நம்பமுடியாத உண்மையாகவே ஆச்சரியத்துடன் ஏற்றுக் கொண்டார்கள்.  

சந்திரன் ஒரு கிரகம் அல்ல. ஒரு உப கிரகம். பூமிக்கு ஒரு சந்திரன் மட்டுமே. ஆனால் சனிக் கிரகத்துக்கு 18 சந்திரன்கள் உள்ளன. வியாழனுக்கு 16 சந்திரன்கள். யுரானஸ் கிரகத்துக்கு ஐந்து சந்திரன்கள். ஒரு கிரகம் உருவாகும்போது எஞ்சிய ஸ்தூல பொருட்கள் சிறுகோள்களாக மாறி அக்கிரகத்தை சுற்றி வருவதாக சொல்லப்படுகிறது. நமக்கு மிக அருகில் உள்ள சந்திரன் புலவர்களுக்கும், காதலர்களுக்கு மட்டுமல்ல, சிறுவர்களுக்கும் தாய்மாருக்கும் மட்டுமின்றி அனைவருக்குமே பயணத்தில் தோழனாக இருந்து வந்திருக்கிறது. அங்கே ஒரு பாட்டி வசிப்பதாகவும் முயல் ஒன்றிருப்பதாகவும் நாம் கதை கேட்டிருக்கிறோம். எனவே எல்லா வகையிலும் எம்மை ஈர்த்திருக்கக்கூடிய சந்திரனை அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் ஈர்க்காமல் இருக்குமா? அந்த ஈர்ப்புதான் மனிதனை சந்திரனுக்கு கொண்டு சென்றது. 

இந்திய விஞ்ஞானிகள் சந்திராயன் -2 பயண திட்டத்தை வகுத்தபோது, நீல ஆர்ம்ஸ்ட்ரோங் நிலவில் கால்பதித்த அந்த ஜூலை 20ம் திகதியன்றே சந்திராயன் – 2 கலமும் நிலவில் இறங்கி நான்கு சக்கர நிலவூர்தியை சந்திரத் தரையில் ஓடும்படிச் செய்ய வேண்டும் என்பதை முக்கிய இலக்காகக் கொண்டிருந்தனர். மனிதன் சந்திரனை எட்டி ஐம்பது ஆண்டுகளாவதை அர்த்த புஷ்டியுடன் இந்தியா கொண்டாடுவது மாதிரியும் அமையும் என்ற இந்திய எதிர்பார்ப்பில் மண் விழுந்தது. கடைசி தருணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு காரணமாக சந்திராயன் – 2 பயணம் வேறு வழியின்றி நிறுத்தப்பட்டது. திட்டப்படி பயணம் நிகழ்ந்திருந்தால் ஐம்பது ஆண்டு உலகளாவிய கொண்டாட்டங்களின்போது இந்தியாவும் சந்திராயனும் பேசப்பட்டிருக்கும். 

முதன் முதலாக விண்வெளி ஆய்வில் ஒரு மைல்கல்லை ஏற்படுத்தியது அன்றைய சோவியத் யூனியனே. ரஷ்யாவின் அந்த வித்தே இன்று செவ்வாய்க் கிரகத்தில் மனிதனை இறக்க வேண்டும் என்ற அளவுக்கு விரிவு பெற்றுள்ளது. 1957 அக்டோபர் மாதம் ஐந்தாம் திகதி ரஷ்யா ஸ்புட்னிக் என்ற விண்கோளை விண்ணில் ஏவியது. அந்த ஸ்புட்னிக் மெல்லிய ‘பீப்’ ஓசையை பூமிக்கு அனுப்பியது. விண்வெளி ஆராய்ச்சி என்ற கதவை ஸ்புட்னிக்கே திறந்து வைத்தது. இதன் அடுத்த கட்டமாக 1961 ஏப்ரல் 12ம் திகதி யூரிககாரின் என்ற ரஷ்யரை ரஷ்யா விண்ணுக்கு அனுப்பி வைத்தது. ஒரு மணி 48 நிமிடங்கள் அவர் விண்ணில் சஞ்சரித்தார். அப்போது ரஷ்ய அதிபராக விளங்கியவர். நிகிட்டா குருஷேவ். அமெரிக்காவை ஒரு படி விஞ்சி நிற்கின்றோம் என்ற மதர்ப்பில், ‘இந்த முதலாளித்துவ நாடுகள் எமது நாட்டைப் பின்பற்றி வரட்டும்’ எனக் கர்ஜனை செய்தார். உலகெங்கும் விண்வெளிக்கு முதல் மனிதனை அனுப்பிய ரஷ்யாவின் தீரமும் யூரிககாரினுமே பேசுபொருளாகினர். 

உலக முதலாளித்துவத்தின் தலைமகனான அமெரிக்காவுக்கு விண்வெளி ஆய்வில் ரஷ்யா அடுத்தடுத்து முன்னணி வகிப்பது உறுத்தலாக இருந்தது. அப்போது அமெரிக்க ஜனாதிபதியான ஜோன் கென்னடிக்கு உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என அழுத்தங்கள் ஏற்பட்டன. ஆனால் கென்னடிக்கு விண்வெளி ஆய்வில் உண்மையாகவே பெரிய ஆர்வம் இருக்கவில்லை. எனினும் கம்யூனிச ரஷ்யாவை விண்வெளி ஆய்வில் மட்டம் தட்டி அமெரிக்காவை முன்னிலைப்படுத்த வேண்டிய அரசியல் நெருக்கடிக்குள் கென்னடி சிக்கிக் கொண்டார். 

குருசேவின் பகிடியைத் தாங்க முடியாத அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள், நாம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு ரஷ்யாவுக்கு பின்னால் நின்று கொண்டிருப்பது? அவர்களை முந்திச் செல்வது சாத்தியமாகதா? எனக் கென்னடியிடம் கேட்டனர். “உங்களை விட நான் இவ் விடயத்தில் தளர்ந்து போயிருக்கிறேன்” என்று கென்னடி சோர்வுடன் பதில் சொல்லியிருக்கிறார். 

அச் சமயத்தில் உண்மையாகவே விண்பயணத்துக்கான தயார் நிலையில் அமெரிக்கா இருக்கவில்லை. ஆனாலும் ரஷ்யாவின் வளர்ச்சியோடு போட்டிபோட்டேயாக வேண்டியிருந்ததால், உயர் அதிகாரிகளளை அழைத்துப் பேசினார் கென்னடி. எந்த முடிவும் எட்டப்படவில்லை”. இதை விட வேறு முக்கிய விஷயம் கிடையாது. என்று எழுந்து கொண்டார் அமெரிக்க ஜனாதிபதி. ஏப்ரல் 20ம் திகதி உப ஜனாதிபதி லிண்டன் பீ. ஜோன்சனை  அழைத்து, என்ன செய்ய முடியும் என்பது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொண்டார். 

லிண்டன் பீ. ஜோன்சன் நாஸா அதிகாரிகளை அழைத்து பேசினார். பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள். பட்ஜட் பிரிவு அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகளை அழைத்து பேசினார். ஓரளவு தெளிவு பிறந்தது. மனிதனை விண்ணுக்கு அனுப்பி திருப்பி அழைத்து வருவது மட்டுமின்றி சந்திரனுக்கும் மனிதனை அனுப்பும் திட்டத்தையும் அமெரிக்கா மேற்கொள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்தார் ஜோன்சன். ஜனாதிபதியை சந்தித்து சந்திரனுக்கு மனிதனை அனுப்புவது சாத்தியம் தான் என்பதை விளக்கமாகச் சொன்னார். கென்னடி முகத்தில் தெளிவு. 

1961மே 25ம் திகதி ஒரு விசேட அறிக்கையை விடுத்து பேசினார். இந்த அறுபதுகள் முடிவடையுமுன்னர் மனிதனை சந்திரனில் இறக்கி மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதற்காக இந்த அமெரிக்க சமுதாயம் தன்னை முற்றிலும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என நான் நம்புகிறேன் என்று அவர் பேசினார். அவரது உரை அமெரிக்காவெங்கும் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. விண்வெளி ஆய்வுகளுக்காக பெருமளவு பணம் ஒதுக்கப்பட்டது. நாஸா முடுக்கிவிடப்பட்டது. மேலும் 1961மே5ம் திகதி அமெரிக்கா தன் முதல் விண்வெளிவீரரை விண்வெளிக்கு அனுப்பியுமிருந்தது. அலன்ஷெப்பர்ட் என்ற அவ்வீரர் விண்வெளியில் 15 நிமிடம் 28 வினாடிகள் சஞ்சரித்த பின்னர் பூமிக்குத் திரும்பினார். முதல் வேலையாக ரஷ்ய சாதனையை அமெரிக்கா முறியடித்ததன் பின்னரேயே கென்னடியும் சந்திரனுக்கு மனிதனை அனுப்புவது பற்றி தைரியமாகப் பேசினார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். 

அமெரிக்கா விண்வெளித் திட்டத்தை ஆரம்பித்தபோது பிடல்கேஸ்ட்ரோ கியூபாவின் தலைவராக பதவியேற்று நிக்கிட்டா குருஷேவின் ஆதரவோடு அமெரிக்காவுக்கு சவால் விட்டுக் கொண்டிருந்தார். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுவிடுமோ என்ற உலகளாவிய அச்சத்தை ஏற்படுத்திய ஏவுகணை நெருக்கடி, கென்னடி ஜனாதிபதியாக இருந்தபோதே உருவானது. அமெரிக்காவுக்கு அண்மையில் (கியூபா) ரஷ்யா ஏவுகணைகளை நிறுத்தத் தொடங்கியதையடுத்தே இந்த நெருக்கடி ஏற்பட்டு பின்னர் சுமுக நிலை ஏற்பட்டிருந்தது. மறுபுறம் வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்கா தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தகாலம் அது. கென்னடியின் மரணத்தின் பின்னர் பதவிக்கு வந்த லிண்டன் ஜோன்சன், அமெரிக்கத் தரைப்படை, விமானப்படை மற்றும் கப்பல் படைகளை முழுமையாக வியட்நாமில் ஈடுபடுத்தியிருந்தார். அமெரிக்கா கோடிகோடியாக வியட்நாமில் பணத்தை கொட்டத் தொடங்கிய காலம் அது. 

எனினும் விண்வெளி போட்டா போட்டியில் ரஷ்யாவை வென்றே தீருவது என்ற தீர்மானத்துக்கு எந்த குந்தகமும் ஏற்படாதவாறு அமெரிக்கா நாஸாவுக்கு கோடிகளைக் கொட்டித் தந்தது. சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது. எதிர்க்கட்சி செனட்டர்களும் இதற்கு ஆதரவாக நின்றனர். 

இறுதியாக அபல்லோ திட்டம் செயலுருவம் பெற்றது. அபல்லோ என்பது கிரேக்க சூரிய கடவுளின் பெயர். இத்திட்டத்தின் கீழேயே மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதலாவது அபல்லோ கலம் பூமியை சுற்றிவர மட்டுமே அனுப்பப்பட்டது. எல்லா அபல்லோ பயணங்களிலும் குறைந்த பட்சம் மூன்று விண்வெளி வீரர்களாவது பயணித்தனர். அபல்லோ -9 பூமியைச் சுற்றி வலம் வந்தபோது (1969 மார்ச் 3) விண்வெளியில் பத்து நாட்களை வீரர்கள் கழித்ததோடு விண்வெளியில் நடந்து பார்த்தனர். சந்திரனில் இறங்குவதற்காக உருவாக்கப்பட்ட கலத்தை விண்ணில் பரிசோதித்துப் பார்த்தனர். 

அமெரிக்கா படிப்படியாக சந்திரனை நோக்கிய அபல்லோ திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது அதற்கு போட்டியாக ரஷ்யா தனது சந்திர திட்டத்தை முன்வைத்து பரிசோதனைகளில் ஈடுபடவில்லை. 1969 ஜனவரி 15ம் திகதி ஏவப்பட்ட ரஷ்ய சோயுஸ் -05 விண் கலம் மூன்று நாட்கள் விண்ணில் வலம் வந்தது. மூன்று வீரர்களில் ஒருவர் விண்ணில் நடந்தார். இதில் இருந்து சந்திரனுக்கான போட்டியில் ரஷ்யா கலந்து கொள்ளவில்லை என்பது உறுதியானது. 

1969மே 18ம் திகதி ஏவப்பட்ட அபல்லோ 10 மிக முக்கியமானது. அதில் மூவர் பயணித்தனர். அது சந்திரனை அடைந்து சந்திர பரப்பில் இருந்து ஒன்பது மைல் உயரத்தில் பறக்கவும் செய்தது. அப்போது சந்திரனில் இறங்கவிருக்கும் கலத்தை வீரர்கள் பரீட்சித்து பார்த்தார்கள். ஏனெனில் இந்த கலத்தின் மூலம் தான் இரண்டு வீரர்கள் சந்திரனில் இறங்குவார்கள். பின்னர் அக்கலத்தில் ஏறித்தான் மீண்டும் மேலே வந்து சுற்றிவந்து கொண்டிருக்கும் தாய்க் கலத்துடன் இணைந்து கொள்வார்கள். இதை பரீட்சித்துப் பார்ப்பதற்காகவே அபல்லோ 10 சந்திரனின் சுற்றுப் பாதைக்கு அனுப்பப்பட்டது.  

அடுத்தது அபல்லோ – 11. இந்தப் பயணத்தில்தான் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங்கும் எட்வின் அல்ட்ரினும் சந்திரத் தரையில் கால் பதிக்கவிருந்தார்கள். 1961 இல் கென்னடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றப்போகும், அமெரிக்காவின் கீர்த்தியை உலகெங்கும் பறை சாற்றப்போகும் மற்றும் ரஷ்யாவின் மூக்கை உடைக்கும் பயணமாக அபல்லோ-11 இருக்கப்போகிறது என்பதால் அமெரிக்காவெங்கும் தீவிர எதிர்பார்ப்பு நிலவியது. இது காரணம் தப்பினால் மரணம் என்பது மாதிரியான ஒரு பயணம். இறக்குவது பெரிதல்ல. சந்திரனில் இறங்கியவர்களை மீட்டு பூமிக்குக் கொண்டுவரவும் வேண்டும் என்பதே சிக்கலான, சவாலான விஷயமாக இருந்தது.  

1969 ஜுலை 17ம் திகதி அபல்லோ – 11 விண்ணில் ஏவப்பட்டது. நீல ஆர்மஸ்ட்ரோங், மைக்கல் கொலின்ஸ் மற்றும் எட்வின் அல்ட்ரின் ஆகியோர் இப்பயணத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அப்போது நீலின் வயது 39. எட்வினின் வயது 39. மைக்கல் கொலின்ஸ் வயது 38. இப்பயணத்தின் தலைவராக நீல் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அபல்லோ -8 முதல் தடவையாக சந்திரனை வலம் வந்தபோது அதில் இடம்பெற்று அனுபவம் பெற்றவரே மைக்கல் கொலின்ஸ். சந்திரனில் தரையிறங்கும் கலத்தின் பைலட்டாக பணியாற்றுவதே எட்வினின் பணியாக இருந்தது. கடுமையான பயற்சிகளின் பின்னரே வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இப் பயணத்துக்கு அவர்கள் தயாராகியிருந்தனர். நீல் ஆர்ம்ஸ்ட் ரோங் இரண்டயிர மணித்தியால பயிற்சியின் பின்னர் இப் பயணத்துக்குத் தயாராகியிருந்தார். 

அபல்லோ புறப்படவிருந்த புளோரிடாவின் கென்னடி முனை ஏவுதளத்தை அண்மித்ததாக இலட்சக்கணக்கான மக்கள் கூடி நின்றனர். மூன்று மைல்களுக்கு அப்பால் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடையில் அமெரிக்க உப ஜனாதிபதி அக்னு, காங்கிரஸ் உறுப்பினர்கள், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், அயல் நாட்டுத் தூதர்கள் ஆகியோர் வீற்றிருந்தனர். ஏவுதளத்தில் 36 மாடி கட்டட உயரத்துக்கு சட்டர்ன் ஏவுகணை நின்றிருந்தது. அதன் உச்சியில் அபல்லோ கலம் பொருத்தப்பட்டிருந்தது. 2,200 தொன் நிறை கொண்ட ஒக்சிசன் மற்றும் ஹைட்ரஜன் கலவையான எரிபொருள் நிரப்பும் வேலை முடிவடைந்து இறுதிக் கட்ட பரிசோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அக் கலம் எட்டு மில்லியன் பாகங்களைக் கொண்டிருந்தது. அதில் 91 என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதன் எடை 3100 தொன். இந்த அபல்லோ -11 கலத்தை உருவாக்குவதற்காக மூன்று லட்சம் பணியாளர்கள் உழைத்திருந்தனர். 26 ஆயிரம் அமெரிக்க நிறுவனங்கள் அபல்லோவை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தன. இதற்கான மொத்தச் செலவு 355 மில்லியனாகக் கணக்கிடப்பட்டிருந்தது. அபலலோ-11 வரையிலான மொத்த அபல்லோ திட்டத்துக்கான செலவு 21.2 பில்லியன் டொலர்கள்!  

சட்டர்ன் ஏவுகணையை யூஸ்ட்டர் ரொக்கட் என்பார்கள். புவியீர்ப்பு சக்தியைத் தாண்டி பூமியின் எடையற்ற மண்டலத்துக்கு ஒரு கலத்தை எடுத்துச் செல்ல வேண்டுமானால் அதிவேகத்தில் பயணிக்கக் கூடிய ஒரு ஏவுகணை அவசியம். அந்த வேலையைத்தான் பூஸ்ட்டர் ஏவுகணைகள் செய்யும். சட்டர்ன் ஏவுகணை மூன்று கட்டங்களைக் கொண்டது. முதல் கட்டம் அதன் எரிபொருள் தீர்ந்ததும் தானாக விலகி வீழ்ந்துவிடும். உடனடியாக இரண்டாவது கட்டம் இயங்கி, விண் கலத்தை அதன் பூமியைச் சுற்றும் பாதையில் விட்டு விடும். பூமியின் விசையில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு சந்திரனை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க மூன்றாவது கட்டம் பயன்படுத்தப்படும். 82அடி உயிரமான இந்தக் அபல்லோ -11 ஒரு இராட்சச ஊர்தியில் வைக்கப்பட்டு மூன்றரை மைல்தூரம் எடுத்து வரப்பட்டே ஏவு தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. 

(அடுத்தவாரம் நிலவில் இறங்கிய மனிதன்)

டொமினிக் ஸ்தனிஸ்லோஸ்  

Comments