இன நல்லிணக்கத்துக்கு வித்திடும் வேலைத்திட்டங்கள் மட்டு. மாவட்டத்தில் | தினகரன் வாரமஞ்சரி

இன நல்லிணக்கத்துக்கு வித்திடும் வேலைத்திட்டங்கள் மட்டு. மாவட்டத்தில்

இன்று நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பது பலவீனமடைந்துள்ள நிலையில் இன நல்லிணக்கத்தையும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. 

கடந்த 30வருட காலம் நமது நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தம் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பறித்துள்ளதுடன் பல கோடிக்கணக்கு பெறுமதியான சொத்துக்களும் அழிந்து போயுள்ளன.  

இந்த கொடிய யுத்தத்தினால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் நலிவடைந்து ஒருவரையொருவர் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை காணப்பட்டது. 

2008ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து இன நல்லிணக்கம் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை  என்பன  மெது மெதுவாக கட்டியெழுப்பப்பட்டு வந்த நிலையில் முஸ்லிம்கள் மீது சில இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனங்களால் இன நல்லிணக்கம் சவாலாக மாறியிருந்தது. 

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற மிக மோசமான மிலேச்சத்தனமாக தற்கொலைத் தாக்குதல்களும் அதற்கு பின்னர் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களையுமடுத்து இந்த நாட்டில் சமூக நல்லிணக்கம் சீர்குலைந்து போயுள்ளது. 

பயங்கரவாதிகள் மேற் கொண்ட இந்த மோசமான தாக்குதல் சம்பவங்கள் இனவாதிகள் மேற் கொண்ட வன்முறைகள் இவையனைத்துமே இந்த நாட்டின் நல்லிணக்கத்தை நலிவடையச் செய்துள்ளன  என்றே குறிப்பிட வேண்டும். 

இன்று நாட்டில் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையும் சகோதரத்துவமும் மனிதாபிமானமுமம் நல்லிணக்கம் அவசியமாக உள்ளது. 

இதனை ஏற்படுத்துவதில் அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள் சமூக நிறுவனங்கள் சிவில் அமைப்புக்கள் என பலவும் பாடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில் கிழக்கு மாகாணத்திலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலும்  இந்த சமூக உறவுகளை சீரமைத்து கட்யெழுப்பும் வேலைத்திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன நல்லிணக்க வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மாவட்ட இன நல்லிணக்க குழுவினூடாக மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார். அதே போன்று சமூக சமய நிறுவனங்களும் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளன.  சமய சமுகங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புதல், புரிந்துணர்வை உருவாக்குதல் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம் பெற்று வருகின்றன. 

காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபைக்கும் அமெரிக்க மிஷன் திருச்சபை பிரதி நிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று கடந்த 24.04.201புதன்கிழமை மாலை காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ.அப்துல் கையூம், மட்டக்களப்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் உட்பட உலமா சபை பிரிதிநிதிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க மிஷன் திருச்சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

இதன் போது சமய சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புதல், புரிந்துணர்வை உருவாக்குதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. 

மட்டக்களப்ப நாவற்குடா புனித மரியாள் தேவாலயத்தில் 28.04.2019அன்று இடம்பெற்ற ஞாயிற்றுக்கிழமை ஆராத னை நிகழ்வுகளை காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல்களின் இமாம்கள் சென்று பார்வையிட்டு ஆராதனையில் கலந்து கொண்ட கிறிஸ்தவ மக்களுக்கு ஆறுதல் கூறினர். 

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நாவற்குடா சென்மேரி தேவாலயத்திற்கு காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த மௌலவி ஏ.எல்.எம்.ஹாலித் ஹசன் (பலாஹி) மௌலவி கே.எல்.எம்.அனீஸ் (பலாஹி) ஆகியோர் சென்று அந்த தேவாலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் கலந்து கொள்ள வருகை தந்த மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் இன நல்லுறவு குறித்தும் சமூகங்களிடையே ஒற்றுமை குறித்தும் கருத்துக்களை தெரிவித்தனர். 

நாவற்குடா புனித மரியாள்  தேவாலயத்தின் அருட்தந்தை ஞானராஜா மனோரூபன் காத்தான்குடியிலிருந்து சென்ற உலமாக்களை வரவேற்றதுடன் அவரின் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது. 

சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு நாவற்குடா புனித மரியாள் தேவாலயத்தில் அண்மையில்  இடம் பெற்றது. 

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நல்லிணக்க கலந்துரையாடலில் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் பொதுச் செயலாளர் அருட்தந்தை மெக்ஸ்வெல் டொஸ், குருநாகல் மாவட்ட அருட்தந்தை கீர்த்திசிறி பெர்னாண்டோ, நாவற்குடா புனித சென்மேரிஸ் தேவாலயத்தின் அருட்தந்தை மனோரூபன் உட்பட அருட்தந்தையர்கள் மட்டக்களப்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் காத்தான்குடி மௌலவி எம்.ஐ.ஆதம்லெவ்வை, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எஸ்.எம்.ஹாறூன் மௌலவி எம்.ஏ.ஹாலித் ஹசன் பள்ளிவாயல் மௌலவி எம்.ஐ.றமீஸ் உட்பட காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளன முக்கியஸ்தர்கள் ஜம் இய்யத்துல் உலமா சபையின் முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் அங்கிலிக்கன் திருச்சபையின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது தற்போதைய சூழ்நிலை, தொடர்பாக ஆராயப்பட்டதுடன் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. 

இதில் கலந்து கொண்ட சமய சமூக பிரதிநிதிகள் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். 

இன ஐக்கியத்தை கருத்திற் கொண்டு வெசாக் பண்டிகையையொட்டி காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலீம் வலியுல்லாஹ் நிறுவனத்தினால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் மே மாதம் 19ஆம் திகதியன்று  1000பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இந்த வெசாக் இன ஐக்கிய அன்னதான நிகழ்வு நடாத்தப்பட்டது. 

இன நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பிரதிபலிக்கும் வகையில்  காத்தான்குடி பிரதேச செயலகத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு. உதயசிறீதர் தலைமையில் இன நல்லிணக்க நோன்புப் பெருநாள் ஒன்று கூடல் ஒன்று நடைபெற்றது. 

இந்த ஒன்று கூடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நகுலேஸ்வரன், காத்தான்குடி உதவி பிரதேச செயலாளார் எம்.எஸ்.சில்மியா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.றியாஸ், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ரீ.எல்.ஜௌபர்கான், உட்பட சமய பிரமுகர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் பொலிஸ் அதிகாரிகள் காத்தான்குடி பிரதேச செயலக கணக்காளர் செல்வி எம்.சித்திரா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இதில் கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் துறையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ரி.எம்.றிஸ்வி மஜீதி சிறப்புரையாற்றினார். 

கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம் பெற்ற பயங்கரவாதச் சம்பவம் அனைத்து இன மத சமூகங்களை ஒன்றுபடுத்தி வைத்திருக்கின்றது.அனைத்து சமூகங்களும் ஒன்றுபட்டு வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  கடந்த ஏப்ரல் 21அன்று உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியை நிலை நாட்டுவதற்கு ஒத்துழைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி கூறுகின்றேன். 

விஷேடமாக அரசாங்க உத்தியோகத்தர்கள் பாதுகாப்புத் துறையினருக்கு நன்றி கூறுகின்றேன். 

இவ்வாறான இன நல்லுறவு வைபவங்கள் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடாத்தப்படல் வேண்டும். 

இதன் மூலம் இன நல்லிணக்கமும் சகோதரத்துவமும் கட்டியெழுப்பப்படல் வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,  தெரிவித்தார். 

இதே போன்று காத்தான்குடியில் மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று (காத்தான்குடி சம்மேளனத்தின் அஷ்ஷஹீத்  ஏ.அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.)

மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல்களை அடிக்கடி நடாத்தி சகவாழ்வை கட்டியெழுப்ப தொடர்ச்சியாக நடவடிக்கை எடுப்பதென இக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. 

சமாதானம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும் வகையிலும் இனங்களுக்கிடையிலான இன நல்லுறவு, சமாதானம், சகவாழ்வு, ஒற்றுமை மற்றும் இன ஐக்கியத்தை வளர்க்கும் நோக்கிலும் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. 

பல் சமய ஒன்றிய பிரதிநிதிகள் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் காத்தான்குடி சம்மேளனத்தின் உறுப்பினர்கள், பாதுகாப்புப் படையினர், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே இன நல்லுறவையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பும் வகையிலான வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் மேற் கொள்வதுடன் அடிக்கடி இவ்வாறான சந்திப்புக்களை நடாத்தி சக வாழ்வை கட்டியெழுப்ப முயற்சிப்பது என இதன் போது தீர்மானிக்கப்பட்டது. 

மட்டக்களப்பில் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தினை இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் ஆரம்பித்துள்ளது. 

மட்டக்களப்பில் சமயங்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்கான கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்றது. 

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கிறீன் கார்டன் ஹோட்டலில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. 

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவர் ரீ.வசந்தராசா தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் நகுலேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்திய சமய தலைவர்கள் சமூகப் பிரமுகர்கள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதில் சமூக உறவிற்கு சமயங்களின் பங்களிப்பு, சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில், திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கான சிபாரிசுகளும், முன் மொழிவுகளும் முன் வைக்கப்பட்டன. 

சமூக நல்லிணக்கத்திற்கான இந்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக, சமயங்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்கான கலந்துரையாடல்களும் இடம் பெற்றதுடன் இந்த வேலைத்திட்டத்திற்காக இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களைச் சார்ந்த பிரமுகர்களை உள்ளடக்கியதான குழுவொன்றும் அமைக்கப்பட்டது. 

இவ்வாறு பல்வேறு இன ஐக்கிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

சமய சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புதல், சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை உருவாக்குதல், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தல் போன்ற வேலைத்திட்டங்களும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பது பலரினதும் ஆலோசனைகளாகும். 

இந்த நாடு அமைதியாகவும் ஐக்கியமாகவும் சமாதானமாகவும் இருக்க வேண்டும். இன நல்லிணக்கம் பேணப்படல் வேண்டும் என்பதே இந்த நாட்டை நேசிக்கும் மக்களினது விருப்பமாகும். 

எம்.எஸ்.எம்.நூர்தீன்
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்.   

Comments