ஊவா கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் திணறிப்போன ஆங்கிலேய படைகள் | தினகரன் வாரமஞ்சரி

ஊவா கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் திணறிப்போன ஆங்கிலேய படைகள்

1818மார்ச் மாதம் 02ம் திகதி ஆளுநரின் ஆணையின் பிரகாரம் முன்னாள் முதலமைச்சர் எஹலபொல கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதே தினத்தில் பிறிதொரு ஆணையையும் பிறப்பித்தான் ஆளுநர் பிரவுன்றிக். 

மத்திய மலைநாட்டில் வசிக்கும் முஸ்லிம்கள் அனைவரையும் மலைநாட்டு பிரபுக்களின் அதிகாரங்களிலிருந்தும் நீதிமன்ற அதிகாரங்களிலிருந்தும் விடுவிக்கும் வண்ணம் ஆளுநரின் ஆணை அமைந்திருந்தது. விசாரணை மன்றங்களில் முஸ்லிம்கள் ஒரு கட்சியினராகக் குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் ஆங்கிலேயர்களினால் மாத்திரமே விசாரிக்கப்பட்ட வேண்டுமென ஆளுநரின் கட்டளையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் கிராமத் தலைமைக்காரன் முதலான பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கும் அதிகாரம் பிரித்தானியாவின் பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆங்கிலேயருக்குச் சார்பான போக்கினைக் கடைப்பிடித்தமையினால் தாக்குதல்களுக்குள்ளாகி உடல் உபாதைகளுக்குள்ளானவர்களுக்கும், சொத்து சுகங்களை இழந்தவர்களுக்கும் அரசு நட்டஈடு வழங்குமென தீர்மானிக்கப்பட்டது. 

தான்தோன்றித் தனமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிளர்ச்சியை தணிப்பதற்கு அக்கறையுடன் செயல்படுமாறும், உதவி ஒத்தாசைகளை வழங்குமாறும் முஸ்லிம்களிடம் கோரப்பட்டது. 

நாளுக்கு நாள் வலுவடைந்த கிளர்ச்சியின் காரணமாக ஏப்ரல், மே மாதமளவில் மத்திய மலைநாட்டில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் தேய்ந்து கட்டெறும்பாகும் நிலையை அடைந்திருந்தது. ஐரோப்பியர்களும், சுதேசிகளுமாக 3788வீரர்களைக் கொண்ட சிறிய அரச படையினரால் மறைந்திருந்து தாக்குதல் கிளர்ச்சியாளர்களுடன் பொருதுவது மிகக் கடினமானதாக தென்பட்டது. இது பற்றி ஆளுநர் பிரவுன்றிக்; 

“நாட்டுமக்களின் திருப்திகரமான ஒத்துழைப்புகிட்டாத நிலையில் கிளர்ச்சி நடைபெற்றுவரும் பிரதேசங்களில் எமது அதிகாரங்களை பிரயோகிப்பது இயலாத காரியம்” என பகிரங்கமாக அறிவித்தான். 

அடர்வனங்களுக்குள் பிரவேசித்தும், சீரற்ற காலநிலை, உணவுத் தட்டுப்பாடு வியாதிகள் என்பன காரணமாகவும் இராணுவம் பின்வாங்கத் தொடங்கியது. இத்தருணத்தை பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டனர் கிளர்ச்சியாளர்கள். அவர்கள் மறைந்திருக்கும் வனப்பிரதேசங்களில் புகுந்து தேடிக் கண்டுபிடிப்பதற்கும், தாக்குதல் மேற்கொள்வதற்கும், காடுகளிலிருந்து அவர்களை விரட்டியடிப்பதற்கும் சுதேசிகளின் உதவி மிக அவசியமாக இருந்தது. 

முன்னர் நடைபெற்ற யுத்தங்களிலிருந்து பெற்றுக்கொண்ட அனுபவத்தின் மூலம் மத்திய மலைநாட்டின் ஒரு சிறு பிரதேசத்தைக் கூட ஆங்கிலேயர் மாத்திரம் கொண்ட படையணிகளினால் வெற்றிகொள்ள முடியாது என்பதை ஆங்கிலேய தரப்பு தெரிந்து வைத்திருந்தது. 

ஆங்கில படையினருக்கு கூலியாட்களும், வண்டிமாடுகளும் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. இராணுவ வீரர்கள் நோய்வாய்ப்பட்டனர். இத்தகைய இடையூறுகளினால் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக முகம்கொடுக்க இயலாத நிலை ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. 1818ம் ஆண்டில் மரணமடைந்த இராணுவ சிப்பாய்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு 236ஆக காணப்பட்டது. இவ்விகிதம் 1820வரையிலும் நீடித்தது. சுதேசிகளாகிய சிப்பாய்களின் மரணதொகை கணக்கில் கொள்ளப்படவில்லை. 1818ல் நாட்டில் உள்ளக பிராந்தியங்களில் ஐரோப்பியர்களாகவும் சுதேசிகளாகவும் விளங்கிய மரணமடைந்த படைவீரர்களின் தொகை ஆயிரத்திற்கும் அதிகம் என டேவி தனது குறிப்பில் தெரிவித்துள்ளான்.  

படையினருக்கு உணவு பொருட்களை விநியோகிப்பதிலும் சிரமம் காணப்பட்டது. பொருட்களை கொண்டு செல்பவர்களின் மீது இடைமறித்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வந்ததால் படைமுகாம்களில் பெரும் உணவுத் தட்டுப்பாடும் ஏற்படலாயிற்று. 

இராணுவத்தினர் உட்பிட்ட இறைச்சி, வேகாத சோறு, குற்றப்படாத நெல் என்பனவற்றை உட்கொள்ள நேர்ந்தது. படைமுகாம்கள் அமைக்கப்பட்டிருந்த இடங்களின் சுற்று வட்டாரங்களில் உணவுக்காக பயன்படக்கூடிய பொருட்கள் எவையும் காணப்படவில்லையாம். அதேவேளை விலை கொடுத்து வாங்குவதற்கோ, பலாத்காரமாக அபகரித்துக் கொள்வதற்கோ வாய்ப்பிருக்கவும் இல்லையாம். ஆங்கிலேயர் கடைப்பிடித்து வந்த மனிதாபிமான நடவடிக்கைகள் அவர்களுக்கே இடையூறாக அமைந்ததெனலாம். 

ஊவா – வெல்லஸ்ஸ கிளர்ச்சி இவ்வாறு உக்கிரமான கட்டத்தை எய்தியபோது பதுளைக்கு மேற்கு புறமான பிரதேசங்களில் சில பகுதிகளைத்தவிர ஏனைய பிரதேசங்களிலிருந்து இராணுவம் பின்வாங்கவேண்டிய நிலையேற்பட்டது. பதுளைக்கும் மட்டக்களப்புக்குமிடையில் தொடர்பாடல் கொள்வதற்கான முகாம்கள் தவிர்ந்த ஊவா – வெல்லஸ்ஸ பிராந்தியத்தின் அனைத்து படைமுகாம்களும் மூடப்பட்டன.  

சக்திமிக்க பாதுகாப்பு அணியொன்றுடன் ஆளுநர் பிரவுன்றிக்கின் மனைவி கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டதோடு கண்டி நகரின் நிலைமையானது. 1803ம் ஆண்டு யுத்தகால நிலைமையை ஒத்ததாக தென்பட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த இராணுவ வீரர்களுக்கும் தினசரி மாலை வேளைகளில் துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன. 

மத்திய மலைநாட்டு உள்பகுதிகளில் இருந்து ஆங்கிலேயர்கள் தப்பியோடி கரையோர பிரதேசங்களை அடையவேண்டிய சூழ் நிலை உருவாகியது. ஊவா – வெல்லஸ்ஸ கிளர்ச்சி இவ்வாறு உக்கிரம் பெறத் தொடங்கியது. ஆங்கிலேயர் அவ்வாறு மத்திய மலை நாட்டைத் துறந்து ஓடாமல் இருப்பதற்கு முதலமைச்சர் மொல்லிகொடையின் ஆதரவும், அவனது சொந்த ஊராகிய நான்கு கோறளை பிரதேசங்களில் பூரண அமைதி நிலவியமையுமே காரணமாகின. மேலும் மலைநாட்டை விட கரையோரங்களுக்குச் சென்றுவிட வேண்டுமென வலியுறுத்திய ஆங்கிலேயர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் தொடங்கியது. 

இதேவேளை இலங்கையில் புதிதாக கைப்பற்றப்பட்ட கண்டி இராச்சியத்தில் ஏற்பட்டுள்ள பயங்கரமானதும், கட்டுப்படுத்துவதற்குச் சிரமமானதுமான கிளர்ச்சி பற்றிய சோக மடலொன்றை இராஜாங்க செயலாளரின் லண்டன் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தான். இதை வாசித்து மனக்கலேசம் கொண்ட செயலாளர், ஜுலை மாதத்தில் கண்டியைவிட்டு பின்வாங்குமாறு இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கினான். 

கடந்த கால யுத்தங்களின்போது மத்தியமலை நாட்டுக்குள் வெள்ளையர் கண்ட தோல்வியும், சேதங்களும் அவனது நினைவில் எழுந்திருக்கக் கூடும். கடந்த காலத்தில் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட் சேதம், மீண்டும் ஏற்படலாமென்றும் எண்ணமும் கண்டி மக்கள் மீண்டும் தங்களது சுதேச ஆட்சியை விரும்புகின்றார்கள் என்ற நம்பிக்கையும் செயலாளர் பெத்தர்ஸ்டுக்கு ஏற்பட்டது. விடாப்பிடியாக கிளர்ச்சிக்கு முகம் கொடுத்து இழப்புக்களை காண்பதும் நஷ்டங்களை சுமப்பதும் உசிதமல்ல வென கருதியதால் கிளர்ச்சி பிரதேசங்களிலிரந்து ஆங்கிலேயரை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்தான் இராஜாங்க செயலாளர் பெத்தர்ஸ்ட். 

எனினும் இக்கட்டளைகள் அனைத்தும் ஆளுநர் பிரவுன்றிக்கின் கைகளுக்கு காலதாமதமாகவே வந்து சேர்ந்தன. அதேவேளை இந்தியாவிலிருந்து வந்துசேர்ந்த இராணுவ படையணியின் பிரவேசம் கிளர்ச்சியின் வேகத்தை படிப்படியாக தணித்தது. இதனால் தனது மனவேதனையிலிருந்து ஆளுநர் பிரவுன்றிக் ஓரளவுக்கு விடுதலை பெற்றான். அதுவரை காலமும் உடனடியாக இடத்துக்கு இடம் தேவைக்கேற்ப சிப்பாய்களை அனுப்பிக் கொண்டிருக்கவேண்டிய அவசியம் இருந்தது. எனினும் அதனை நிறைவேற்ற முடியாத நிலை காணப்பட்டதால் மறைந்திருந்து எதிர்த் தாக்குதல் நடத்தியும் வந்த கிளர்ச்சியாளர்களுடன் மோதுவது மிகக்கடினமாக விளங்கியது. இந்திய இராணுவ வருகையின் பின்னர் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. எனினும் அப் போர் வீரர்களுக்கு இப்பணி இலகுவான முயற்சியாக இருக்கவில்லை. பல்வேறு சிரமங்களுக்கும் எதிர்பாராத மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கும் அவர்கள் ஆளாக நேர்ந்தது. மலைநாட்டு மக்களின் போர்முறைகளும் அவற்றில் அவர்கள் கொண்டிருந்த பயிற்சிகளும் இவ்வாறு ஆங்கிலேயரை திக்குமுக்காடச் செய்தது எனலாம். 

இடைக்கிடையே திடீரென பாய்ந்து வந்து தாக்குதல்களை மேற்கொள்ளும் அவர்கள் ஒருபோதும் திற்த வெளிகளில் நேருக்கு நேர் சமர்புரிய முன்வரவில்லை. எனினும் பண்டங்களை எடுத்துச் செல்வோரையும், தபால் கொண்டு போகின்றவர்களையும் வழிமறித்து பொருட்களை அபகரித்தனர். திடீர்த் தாக்குதல் தேற்கொண்டனர். மெக்டோனல்ட், பரணகம என்னுமிடத்தில் கெப்பெட்டிபொலையின் தாக்குதல்களுக்குள்ளானான் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாதாரண வீரர்கள் எண்பது பேர்களைக் கொண்ட மெக்டோனல்டின் படை; பெப்ரவரி மாதம் 26ம் திகதி முதல் மார்ச் மாதம் 7ம் திகதி வரையிலான காலப் பகுதியில் ஐயாயிரம் பேர்களைக் கொண்ட கெப்பெட்டிபொலையின் வீரர்களினால் நடத்தப்பட்ட இடையறாத தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. எனினும் ஒரு நபருக்கேனும் சேதம் ஏற்படாதவாறு மெக்டொனால்டின் அணி தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. இத்தாக்குதல் பற்றி மேஜர் டேவி, “இயற்கை பாதுகாப்புகளை பயன்படுத்தி கிளர்ச்சியாளர்கள் நடாத்திய மிகமோசமான மூர்க்கத்தனமான தாக்குதல்” எனத் தனது குறிப்பில் தெரிவித்துள்ளான். 

ஊவா – வெல்லஸ்ஸ பெருநிலப்பரப்பு போக்குவரத்து மற்றும் நடமாட்டங்களுக்கு எளிதானதாக அமைந்திருக்கவில்லை. ஆனால் அந்நிலப்பரப்பின் தன்மைகளையும், காலநிலைகளையும் அறிந்து வைத்திருந்த கிளர்ச்சியாளர்களுக்கு ஆங்கிலப் படைகள் மீது திடீர்த்தாக்குதல் நடத்துவது எளிதாக இருந்தது. அவற்றைத் தாக்குப்பிடிப்பது ஆங்கிலேய படையினருக்கு மிகக் கஷ்டமாக இருந்தது.  

மறைந்திருந்து தாக்குவது, போக்குவரத்துப் பாதைகளை வழிமறிப்பது, அம்புகளால் மறைந்திருந்து தாக்குவது, முட்களையும் கற்களையும் கொண்ட குழிகளை அமைப்பது பொறிகளில் சிக்கவைப்பது என்பதாக அவர்களின் போர் வியூகங்களாக இருந்தன. எனினும் தம்மீது தாக்குதல் உக்கிரமடையும் போது பின்வாங்கி தப்பியோடுவதும் சந்தர்ப்ப சூழ்நிலைக் கேற்ப மீண்டும் வந்து தாக்குதலில் ஈடுபடுவதுமென கெரில்லா போர்முறையை அவர்கள் கையாண்டனர்.  

கிளர்ச்சியாளர்களின் போர்முறைகள் எந்தளவுக்கு வெற்றியளித்தனவெனில், இராணுவமும் கூலியாட்களும் பயணம் செய்வதற்கும், பண்டங்களை எடுத்துச் செல்வதற்கும், நோய்வாய்ப்பட்டவர்களை சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதற்கும் இரவு வேளைகளை அரச படைகள் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.                            (தொடரும்) 

(தகவல் – கலாநிதி கொல்வின்
ஆர். டி சில்வா (பிரித்தானியரின்
கீழ் இலங்கை) 
சி.கே. முருகேசு

Comments