களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் மக்களிடம் கையளிப்பது எப்போது | தினகரன் வாரமஞ்சரி

களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் மக்களிடம் கையளிப்பது எப்போது

விவசாயச் செய்கைக்கு பெயர்போன களுதாவளையில் அமையப்பெற்றுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து அப்பகுதி மக்களின் விவசாய உற்பத்திகளை ஒருங்கே விற்கவும், நுகரவும் விரைவில் வழிசமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதிவாழ் மக்களும், வர்த்தகர்களும், வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இந்த பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ.ஹரிசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், மற்றும் விவசாயிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 22.07.2017அன்று அடிக்கல் நடப்பட்டது.

களுதாவளையில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையம் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம்போன்று பாரியதொரு பொருளாதார மத்திய நிலையமாக மாற்றமடைய வேண்டும். கிழக்கு மாகாணத்தில் மூவினங்களைச் சேர்ந்த பதினெட்டு இலட்சம் மக்கள் வாழ்கின்றார்கள். கிழக்கு மாகாண மக்களின் தேவைகளான கல்வி, விவசாயம், கால்நடை உற்பத்தி, மீன்பிடி, சுற்றுலாத்துறை, வீதி உட்கட்டமைப்பு போன்ற தேவைகளை நிறைவேற்றவென மத்திய அரசின் 300மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டால் இப்பொருளாதார மத்திய நிலையம் அமைந்துள்ளது. இதனால் கிழக்கு மாகாண மக்களை திருப்திப்படுத்த முடியாவிட்டாலும், இப்பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைப்பது அப்பகுதிவாழ் மக்களின் பொருளாதாரத்திற்கு ஓரளவிலேனும் செல்வாக்குச் செலுத்தும் என பொருாளதார ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பொருளாதார மத்திய நிலையம் 300மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வறுமைப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, வறுமையை இல்லாது ஒழிப்பதே பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணியாகும். கிராமங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல், உணவுப் பாதுகாப்பு, கிராமங்களின் உட்கட்டமைப்பை விருத்தி செய்தல் ஆகிய மூன்று காரணங்களுக்காக இப்பொருளாதார மத்திய நிலையம் அமையப்பெற்றுள்ளது. இப்பொருளாதார மத்திய நிலையம் ஐம்பது கடைத்தொகுதிகளைக் கொண்டதாக அமையப்பெற்றுள்ளது.

பொருளாதாரத்தை உயர்த்துதல், வறுமையை ஒழித்தல், உட்பட கல்வி, விவசாயம், மீன்பிடி, உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல் இதன் நோக்கமாகும். இதனால் கிழக்கு மாகாணம், அபிவிருத்தியில் மேலோங்கும். பிரதேச வறுமை ஒழிக்கப்பட்டு, பொருளாதாரம் மேன்மையடையும், உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தியடைந்து, மக்களின் மனதில் சமாதானம், சுபீட்சம் மேலோங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இப்பகுதியிலுள்ள விவசாயிகளின் காய்கறிகள், பழ வகைகள் போன்றவற்றை இலகுவில் விற்பனை செய்யக் கூடியவகையில்தான் இங்கு பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய விடயங்கள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளன.

அதுபோல் சிறு கைத்தொழில்களையும், விருத்தி செய்ய நாம் முன்வந்திருக்கின்றோம். கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கறவைப் பசுக்களில் பெரும் பகுதியை கிழக்கு மாகாணத்திற்கு வழங்க உத்தேசித்துள்ளோம். இதனூடாக பாலுற்பத்திய மேலும் அதிகரிக்கலாம். விவசாயிகள் மண்ணோடு போராடி விவசாயத்தை மேற்கொள்கின்றார்கள். என பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் களுதாவளையில் அமையப் பெற்றுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் நிருமாணப் பணிகள் முடிவுற்ற நிலையில் அது இன்னும் மக்கள் பாவனைக் விடப்படவில்லை என அப்பகுதிவாழ் விவசாயிகளும், பொது மக்களும், வர்த்தகர்களும், அங்கலாய்க்கின்றனர்.

வெயில், மழை, பனி என்று பாராது விளைநிலைத்தில் போராடி உற்பத்தி செய்யும் விளை பொருட்களை இதுவரை காலமும், சில்லறை வியாபாரிகளுக்கு, விற்று வருகின்றோம், சில்லைறை வியாபாரிகள்தான் எமது விவசாய உற்பத்திகளுக்கு விலையைத் தீர்மானிக்கின்றார்கள். எமது உற்பத்திகளுக்கு நாமே விலையைத் தீர்மானிக்கும் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். களுதாவளையில் அமையப் பெற்றுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையம் எமக்கு பெரும் வாய்ப்பாக அமைகின்றது. இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மிகவிரைவில் இந்நிலையத்தை திறந்து அதனை ஒரு வர்த்தக கேந்திர நிலையமாக மாற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

களுதவாளையில் அமையப்பெற்றுள்ள விசேடபொருளாதார மத்திய நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை எமது பிரதேசசபைக்குத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஆனால் எமக்கு இதுவரையில் எதுவித பதிலும் கிடைக்கவில்லை. தற்போதைய இது என்ன நிலையில் உள்ளது என்பது பற்றித் தெரியாதுள்ளது. இதுபற்றி பிரதேச செயலாளரிடம்தான் கேட்கவேண்டும் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தெரிவித்தார்.

களுதாவளையில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வேலைகள் அனைத்தும் முடிவுற்றுள்ளன. பிரதமர் எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதிக்குள் பட்டிருப்புத் தொகுதிக்கு வரஇருக்கின்றார். அப்போது இது திறந்து மக்களின் பாவனைக்கு விடப்படும். இப்பொருளாதார மத்திய நிலையத்தின் தற்போதைய கட்டமைப்பு பிரதேசெயலகத்தினுள்தான் உள்வாங்கப்பட்டுள்ளது. எனினும் இது வர்த்தக நிலையம் ஆகையால் எதிர்காலத்தில் இது பிரதேச சபைக்குத்தான் கையளிக்கப்படும் என நான் நினைக்கின்றேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

களுதவனை விசேட பொருாளாதர மத்திய நிலைய நிலையத்தின் கட்டட வேலைகள் நிறைவுற்று, அது கிராமிய பொருாளாதார அமைச்சிற்கு கையளிக்கப்பட்டு. பின்னர் கிராமிய பொருளாதார அமைச்சு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரைத் தலைவராகவும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளரை செயலாளராகவும் கொண்ட முகாமைத்துவக் குழு ஒன்றை நியமித்துள்ளது. ஆனாலும், இன்னும் இம்மத்திய நிலையம் இந்த முகாமைத்துவக்குழுவுக்கு கையளிக்கப்படவில்லை. இம்மத்திய நிலையம் திறக்கப்பட்டதும் எமது முகாமைத்துவக்குழு இதனை முகாமை செய்யும். தற்போது அம்மத்திய நிலையத்தில் அமைந்துள்ள கடைகள் அனைத்தும் வாடகைக்கு விடப்பட்டு பயனாளிகளுக்குரிய நேர்முகத்தேர்வும் இடம்பெற்று முடிவுற்றுள்ளது. அது எப்போது திறக்கப்படும் என்பது தெரியாது. ஆனால் விரைவில் திறந்து வைக்கப்படும் என நினைக்கின்றேன் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தெரிவித்தார்.

எது எவ்வாறு அமைந்தாலும் கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்திருக்கின்ற ஒரே ஒரு விசேட பொருளாதார மத்திய நிலையமாக களுதாவளையில் அமைந்துள்ள இந்நிலையத்தை வெகுவிரைவில் திறந்து மக்கள் பாவனைக்கு விட்டு அப்பகுதி மக்களின் பொருதார நிலையை மேம்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும், மிகவிரைவில் முன்வரவேண்டும் என அப்பகுதி மக்களும், வர்த்தகர்களும், வியாகாரிகளும் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

வ.சக்திவேல்

Comments