கிடப்பில் போடப்படுமா நுவரெலிய கேபிள் கார் திட்டம்? | தினகரன் வாரமஞ்சரி

கிடப்பில் போடப்படுமா நுவரெலிய கேபிள் கார் திட்டம்?

இலங்கையின் பிரசித்திபெற்ற குளிர் சூழ்ந்த சுற்றுலாத்தலமே நுவரெலியா. நாம் நுவரெலியா என்றதும் நம் கற்பனையில் தோன்றும் இடமும் உண்மையாகவே அங்கே சென்றதும் கிடைக்கும் அனுபவங்களும் வேறுவேறாக இருப்பதை நம்மில் பலர் உணர்ந்திருப்பார்கள். நுவரெலியா ஒரு முழுமையான சுற்றுலாத் தலம் அல்லதான். குடியும் குளிரும் தவிர வேறு ஒன்றுமே கிடையாது என்று அங்கலாய்ப்பவர்களும் உள்ளனர். இதனால் அவ்வப்போது நுவரெலியாவில் சில அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வார்கள். அதுவும் ஆமை வேகத்தில்தான் நடக்கும். இந்நகரின் கிறிகரி வாவி சுமார் 50 ஆண்டுகளின் பின்னரே இப்போது பொலிவுடன் திகழ்வது ஒரு சின்ன உதாரணம். 

இந்த வகையில் நுவரெலியாவில் கேபிள் கார் வசதியை ஏற்படுத்த அந்நகர சபை தீர்மானித்தது. இது எப்போதோ செய்திருக்க வேண்டிய ஒரு காரியம். முன்னர் நானுஓயாவில் இருந்து நுவரெலிய நகருக்கு மலை ரயில் சேவை இருந்தது. அது ஒரு ஒடுங்கிய தண்டவாளத்தில் ஓடும் சிறிய ரயில். அச் சேவையை எப்போதோ நிறுத்திவிட்டார்கள். அதை மீண்டும் ஆரம்பிக்கலாம். ஊட்டி மலை ரயில் போல புகழ்பெற்ற சுற்றுலா குறியீடாக திகழமுடியும். ஆனால் அதை மீண்டும் அமைப்பது பற்றி யாரும் அக்கறை கொண்ட மாதிரித் தெரியவில்லை. 

2015ம் ஆண்டு என்று நினைக்கிறேன். நுவரெலிய மா நகர சபை, நானு ஓயாவில் இருந்து பிதுருதலாகல மலை வரை கேபிள் கார் சேவையை ஆரம்பிக்கும் திட்டம் பற்றி தகவல் வெளியிட்டது. பின்னர் வெளிநாட்டு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமும் போடப்பட்டது. பின்னர் அது பற்றி எந்தத் கதையும் வெளிவரவில்லை. இது ஒரு அருமையான திட்டம். உள்ளூர், வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் ஒரு திட்டம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் ஏன் இந்தத் தாமதம்? ஏன் இழுபறி? 

இதை விசாரிக்க முனைந்தபோது இதில் உள்ள சிக்கல் வெளிப்பட்டது. 

இத் திட்டத்தின் கீழ் நானுஓயா புகையிரத நிலையத்தில் இருந்து நுவரெலியா சிங்கிள் ட்ரீ மலை உச்சி வரையிலும் பின்னர் அங்கிருந்து கிறகரி வாவி வரைக்கும் கேபிள் இழுக்கப்பட்டு கேபிள் கார்கள் சேவைக்கு விடப்படும். திட்டம் அருமையானதுதான். ஆனால் இதில் காணப்படும் சிக்கல் காரணமாக திட்டம் இன்னும் கரையேறாமல் உள்ளது. 

இத்திட்டத்தை நிறைவேற்றப்போவது நுவரெலிய மாநகரசபை. எனவே இதில் இருந்து கிடைக்கும் முழு வருமானமும் மாநகரசபையையே சென்றடையும். ஆனால் திட்டத்தின் ஆரம்பப் புள்ளியான நானு ஓயா பகுதி நுவரெலிய பிரதேச சபையின் கீழ் வருகிறது. 

நுவரெலிய பிரதேச சபை இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிபந்தனைகள் விதித்துள்ளது. அவற்றை நிறைவேற்றாமல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விட மாட்டோம் என்கிறார் பிரதேச சபைத் தலைவர். பெருந்தொகையான சுற்றுலாப் பயணிகள் நானுஓயா வழியாகவே நுவரெலியா செல்கிறார்கள். வாகன சாரதிகள், முச்சக்கர சாரதிகள் என்போர் நானு ஓயாவுக்கு வரும் பயணிகள் மூலம் பெருந்தொகைப் பணத்தை வருமானமாகப் பெறுகின்றனர். புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால் இவர்களின் வருமானத்தில் பாதிப்பு ஏற்படும். எனவே இதற்கு மாற்றுவழி காணப்பட வேண்டும். 

இத்திட்டத்துக்கான அமைச்சரவை அனுமதி பெற்றிருந்தாலும் பிரதேச சபையின் அனுமதி பெறப்படவில்லை.

இத்திட்டம் ஆரம்பமாகும் இடம் பிரதேச சபைக்கு உரியது. கேபிள் தூண்களை பிரதேசசபைக் காணியிலேயே ஊன்றப்படவுள்ளன. எனவே மாநகர சபைக்கு கிடைக்கவிருக்கும் வருமானத்தின் ஒரு பகுதி பிரதேச சபைக்கு வழங்கப்படுவது மாநகர சபையால் உறுதி செய்யப்பட வேண்டும். எனவே பிரதேசசபையின் அனுமதி பெறப்பட்டும், ஒரு இணக்கப்பாட்டுக்கு இரு தரப்பாரும் வந்த பின்னருமே இத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது பிரதேச சபையின் நிலைப்பாடு. 

கேபிள் கார் பிரயாண திட்டத்தை நானுஓயா நகரில் இருந்து ஆரம்பிப்பதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை நானு ஓயா நகரில் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இத்திட்டத்தினூடாக நுவரெலியா பிரதேச சபையின் வருவாயிலும், பிரதேச வாழ் மக்களின் வருவாயிலும் பாதிப்புகள் ஏற்படும் என்ற குரலுக்கான உரிய தீர்வினை நுவரெலியா மாநகர சபை வழங்கவேண்டும்.  

“இத்திட்டம் தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாட்டில் பிரதேச சபையின் அனுமதி இன்றி பிரதேச சபை எல்லையில் அத்துமீறி திட்டம் ஒன்றுக்காக சிலர் பணிகளை மேற்கொள்கின்றனர். இதைத் தடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது என்று பிரதேச சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் உல்லாசப் பயணிகளை கவரக்கூடிய இந்த கேபிள் கார் திட்டத்தை எதிர்க்கவில்லை என்றும் சபையின் முன் அனுமதி பெறாததே பிரச்சினை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நுவரெலியா பிரதேச சபை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்து வருகிறது.

இவ்விடயம் குறித்து இவ்விரு கட்சிகளின் தலைவர்களான ஆறுமுகம் தொண்டமான் மற்றும் சீ.பி. ரத்னாயக்க ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இத் திட்டத்தை நுவரெலியா பிரதேசசபை எல்லைக்கு முன்னெடுக்க உள்ள தரப்பினர் முதலில் இவர்களை அழைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்தும் போது தீர்வு ஒன்று எட்டப்படமுடியும். முடிவொன்று எட்டப்படாமல் இத்திட்டத்தை நானுஓயா நகரில் ஆரம்பிக்க நுவரெலியா பிரதேச சபை அனுமதிக்கப் போவதில்லை.  

நுவரெலிய கேபிள் கார் திட்டத்துக்கு என்ன நடந்திருக்கிறது என்பதை இப்போது வாசகர்களுக்கு புரிந்திருக்கும்.

இது முக்கியமான திட்டம் என்பதால் விரைவிலேயே இரு சபைகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு முடிவு கண்டு கேபிள் கார்களை ஒட விடுவார்கள் என்று நம்புவோம் திட்டம் கிடப்பிலேயே இருந்துவிடக் கூடாது என்பதே முக்கியம். 

நூரளை சுப்பிரமணியம்

Comments