நாள், கோள் நற்பலன் | தினகரன் வாரமஞ்சரி

நாள், கோள் நற்பலன்

மேஷம் 

விரைவாகச் செயல்பட்டு வேகமாக முன்னேற்றங்களைக் காண வேண்டும் என்ற ஆவல் நிறைந்த அன்பர்களே தாம் செல்லவேண்டிய வழிகள் அவ்வளவு எளிதாக இல்லையே. சுற்றுச் சூழலை அனுசரித்தால் மட்டுமே, உலக சவால்களை எதிர்கொள்ள முடியும். நிதானத்தைத் தவறவிட்டால் பாதகமான பலன்களை அடைவீர்கள். வருமானங்கள் போதுமானதாக இருந்தாலும் புதிய முயற்சிகளுக்கு இப்போதைக்கு இடமில்லை. தேடிவரும் உறவினர்கள் ஒருபடி குறைந்தால் ஓடி விடுவார்கள் என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். சந்தோஷங்களும் விருந்துகளும், சயன சுகங்களும் தமது நிலையைப் பொறுத்ததுதான். முயற்சிகள் முடிவது பெரும்பாலும் தடங்கள்களில்தான். பதவிகள் வகிக்கும் அன்பர்கள் அவசரப்படாமல் நடந்து கொள்வதே நலம் பயக்கும்.

ரிஷபம்

பேசக் கூடாதவைகளைத் தாறுமாறாகப் பேசி முடித்துவிட்டு இப்படி நடந்துவிட்டதே என்று வீணாகக் குழம்புவதில் எவ்வித பயனும் வரப்போவது இல்லை. தலைபோகும் அளவிற்கு சங்கடங்களும் இல்லாதபோது தடுமாறுவதிலும் அர்த்தமும் இல்லை. மனஅமைதியும் போய், உடல் நலமும் சேர்ந்து குழம்பும். இல்லறத்தில் இருக்கும் மனோகரமான சூழ்நிலையையாவது அனுபவிக்காலாமே? அர்த்தமற்ற பயங்களை மனதில் சுமப்பதினால் ஆகப்போவது ஏதுமில்லை. போதுமான வருமானங்கள் வரும், உறவினர்களும் நண்பர்களும் கை கொடுப்பார்கள். அமைதியாக நடந்து கொள்வதே நலம்தரும். எதிர்காலத் திருப்பு முனைகளை இப்போதே வெளிச்சம் போட்டுக் காட்டும் நிகழ்வுகளும் மனதிற்கு விளங்கும். பொறுமையைக் கடைப் பிடித்தால் மேன்மைகள் பெருகும். பதவிகளில் அதிகாரத்தல் உள்ளவர்கள் தமது சக்தியை யார்மேலாவது பிரயோகித்துப் பார்க்க முயல வேண்டாம்.

மிதுனம்

திரும்பிய திசையெங்கும் தொல்லைகள் போல் தெரிகின்றனவே என்று திகைத்து நிற்கும் நண்பர்களே, துன்பங்கள் ஒரு பொழுதும் உங்களை வெல்ல முடியாத நிலையே தென்படுகிறது. புயல்களைச் சமாளிக்கும் விருட்சங்கள் உறுதியையே பெறும், அவை ஒரு போதும் எளிதில் சாய்வதில்லை. மத்தளம் மாதிரி இரு பக்கங்களிலும் அடியைத் தாங்கிப் பழகிவிட்டீர்கள். தொழிலும் தொந்தரவுகள், குடும்பத்திலும் குழப்பங்கள் என்றாகிவிட்ட நிலையில் வருவதற்குப் பெரிய சோதனைகள் ஏதும் இல்லைதான். எனினும் வியாபாரங்களில் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் சராசரி வெற்றிகள் உங்கள் பக்கம் வந்து கொண்டுதான் இருக்கும். நம்பிக்கையைத் தந்து கொண்டுதான் இருக்கும்.

கடகம்

ஞாயிற்றுக் கிழமையின் ஆரம்பம் பெரிய அதிர்ச்சித் தகவல்களோடுதான் ஆரம்பிக்கும். என்ன இது என்று அலுத்துச் சலித்துக் கொண்டாலும், புதன் கிழமையில் இருந்து நிலைமைகள் மாற்றம் பெற்று நன்மைகள் படிப்படியாக உருவாகத் தோன்றும். பணப் புழக்கங்கள் சீரடையும் சாத்தியங்களே இருக்கின்றன. கடன் பிரச்சினைகள் விலகும். சுடுசுடுப்பாக, எரிந்து விழும் குணம் குறையத் தொடங்கும். சாதாரண முயற்சிகள் பலிக்கும், பிறர் உதவிகள் கை கொடுக்க சற்று நிம்மதி மனதில் நிலவும். குடும்பத்தைப் பொறுத்தவரையில் சாந்தமான சூழலே இருக்கும். நெருக்கடியான மன உளைச்சல்களோடு இருப்பதை விலக்கிக் கொள்வதால் நாளடைவில் சுமுகமாக வாழ்க்கையாக மாற்றிக் கொள்ளலாம். அரச, தனியார் துறைகளில் பதவிகளில் உள்ளவர்கள் மன அமைதியற்றுக் காணப்படுவார்கள்.

சிம்மம்

கரை புரண்டு ஓடும் செலவீனங்களைச் சமாளிப்பது நடக்கின்ற காரியமாக இல்லாத போது, இருக்கின்ற துன்பங்கள் போதாதென்று உறவினர்களும் தேடிக் கொண்டு வந்து குவிக்கும் துயரங்களே அதிகம். தவிர்க்க முடியாதவைகளும், தடுக்க இயலாதவைகளுமாக மாறி மூச்சுத் திணறும் கால கட்டமாகவே வாழ்க்கை அமைந்துவிடும். திங்கள் முதல் புதன் பகல் 01.46வரை, எட்டாம் வீட்டில் இருக்கும் சந்திரன், விலகிப் போகும் பொறுமையாகக் காத்திருங்கள். புயலோ புயலாக விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறி நடந்தேறும். கைகட்டி, வாய் புதைத்துக் காத்திருப்பதே மேல். உத்தியோகத்தர்களும், பதவிகளில் வீற்றிருப்போரும் எதையாவது சொல்லி, செய்து அகப்பட்டுக் கொள்ளாமல் இருந்து விட்டாலே அதுவே அதிர்ஸ்டமாகும்.  

கன்னி

கனவுகள் காண்பது அல்லது கனவுகள் போல் வாழ்வைக் கழிப்பது இந்த கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுபவப்பட்ட விஷயமாகும். தொழில் சார் தொல்லைகளை சமாளிக்கும் வழி வகைகளைச் சிந்தித்து முடிப்பதற்கு முன் வீட்டு விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்கும். இதை எல்லாம் தள்ளி வைத்து, உடல் நலத்தைக் கவனிக்க வேண்டுமென்றால்; எப்போதோ யாராலோ நடந்தவைகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம், வீண் அபகீர்த்திகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். பெரியவர்களின் முன் தலை குனியவும் நேரிடும். மறுத்துப் பேச நா எழாமல் திகைத்துப் போய் உறைந்து போகவும் சந்தர்ப்பங்கள் உண்டாகும். செலவுக்குப் பணம் வருவதும், யந்திரம் போர் இயங்குவதும் வாழ்வது கனவா நினைவா என்ற கேள்வியை எழுப்பவே செய்யும்.

துலாம்

நின்று நிதானித்து யோசித்து புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நடத்துபவர்கள் என்பதாகக் கணிக்கப்பட்டுள்ள துலா ராசி அன்பர்களுக்கு, கிரக சஞ்சாரங்கள் எதிர் மறையாக இருந்தால் எப்படித் தலை நிமிர்ந்து நடக்க முடியும்? எனினும் தர்மங்கள் செய்யவும், ஆன்மீக விஷயங்களுக்குப் பணம் ஒதுக்கவும் முன் வருவீர்கள். அதற்குத் தேவையான பணப் புழக்கம் வந்து சேரும். தொழில் துறைகளும், வருமானங்களும் தொடர்ந்து ஸ்திர நிலையில் இருக்கும். தேகமும் ஒரு வழியில் நினைக்க வைக்கும். மருத்துவச் செலவுகள் எல்லாம் செலவுகள் அல்ல அவைகளை முதலீடுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். விருந்து உபசாரங்களுக்கும் குறைவிருக்காது. வெள்ளிக் கிழமை இரவு 10.36முதல் சந்திரன் அட்டமத்தில் இருக்கிறார். சத்ருக்கள் தொல்லைகள் கொடுத்துக் கொண்டாடி மகிழ்வார்கள். அறிமுகமற்றவர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ளவும்.

விருச்சிகம்

சோகங்களும் சோதனைகளும் சேர்ந்து வந்தால் மனம் உறுதி அடையும், விவேகம் விருத்தியடையும் என்பார்கள். அது உங்கள் விஷயத்தில் நன்றாகவே நடக்கிறது அன்பர்களே. எதைச் சொல்வது, எங்கே விடுவது என்பதெல்லாம் விளங்காமல்தான் இருக்கிறது, நீங்கள் வாயைத் திறந்தால் வம்புகளுக்குக் குறைவில்லை, அமைதியாக இருந்தால் அடங்கிவிட்டார் என்ற ஏளனமும் வந்து சேரும். மனதில் நம்பிக்கை யின்மை ஆழப்பதியப் பார்க்கும், இடம் அளிக்காமல் எதிர்த்தே நில்லுங்கள், பிரச்சினைகள் எல்லாம் இரண்டு மூன்று நாட்களில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். உடல் நலக்குறைவும் ஓடி ஒளிந்து கொள்ளும்.

தனுசு

தனது திறமையைத் தானே பரீட்சித்துப் பார்க்க முயற்சிகள் செய்யாமல், வருகின்ற காரியங்களை உதறித் தள்ளிவிடாமல் செய்வதே நல்லது. புதிய முயற்சிகள், அல்லது விடுபட்டுப்போன இலக்குகள் என்பன தேங்கித்தான் கிடக்கின்றன, எனினும் அதில் இறங்கி இருக்கும் பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பது அப்படியொன்றும் பெரிய புத்திசாலித்தனம் அல்ல. முடிவுகள் வேறு விதமாகவே அமையும். தலையில் உள்ள குளறுபடிகளையும், தொழில் துறைகளில் நடக்கும் குழப்பங்களையும் ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு தீர்க்கிறேன் என்பதாக புறப்படாதீர்கள். நடப்பது நடக்கட்டும், நாலாபுறமும் ஓயும் வரை காத்திருப்பதே உகந்தது ஆகும்.   

மகரம்

மனதில் தோன்றுபவைகளை யார் மறுத்துப் பேச முடியும் என்ற ரீதியில் வாதங்கள் செய்துகொண்டிருப்பீர்கள். அலட்டிக் கொள்ளாமல் வருகின்ற நஷ்ட ங்களை பொருட்படுத்தாமல் இருக்கின்ற போதிலும், வியாபாரங்களும் லாபங்களும் தேவைக்கு அதிகமாகவே கிடைக்கும். செலவுகளும் வருவாய்களோடு போட்டி போட்டுக்கொண்டு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகும். ஆனாலும் சளைக்காமல் போராடும் ஆற்றல் உள்ளவராகவே இருப்பீர்கள். சில சமயங்களில் பெண்களிடம் வகையாக மாட்டி அவதியுறும் சங்கடங்களும் நடக்கும். குடும்பம் ஒன்று இருப்பதாகவே நினைவில்லாமல் தானுண்டு தனது வேலையுண்டு இருக்கும் விசித்திர மனப்பான்மையும் மேலோங்கும்.

கும்பம்

பலவித சுமைகளை மனதில் ஏந்திக்கொண்டு ஒன்றுமே தொல்லைகள் இல்லாதவர் போல் நடமாடும் தீரமிக்க மனிதர் நீங்கள். இறக்கி வைக்க இடமும் இல்லாமலும், முடியாமலும் நிரந்தர சுமை தாங்கியாவீர்கள். பணப் புழக்கம்; இருப்பதாலும், தொழில் வகைகள் நேர்த்தியாக நடப்பது போன்ற பிரமை இருப்பதாலும் நாட்டில் கௌரவமாக உலாவி நல்ல பெயர் பெற்றுக் கொண்டு இருப்பீர்கள். குடும்பத்தினருக்குக் கூடத் தெரியாத ரகசியங்களை மறைத்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. முயற்சிகளை மேற்கொண்டால், அரச இன்னல்களில் இருந்து விடுதலை பெறலாம். மேலதிகாரிகளின் அனுசரனையைப் பெற்றுக் கொள்ள நல்ல சந்தர்ப்பம் இப்போதுதான். பதவிகளை வகிக்கும் அன்பர்கள் தங்கள் நிலைகளைத் தக்க வைத்துக் கொள்ள பிரயத்தனப்பட வேண்டும்.

மீனம்

நன்மைகளும், தகராறுகளுமாக கலப்பட நிகழ்ச்சிகள் நடக்கும். சந்தோஷமாக முகம் கொடுத்தால் மிக எளிதாக சமாளித்து நிம்மதி அடையலாம். வருமானங்களும், பணமும் பிரச்சினையாக இருக்காது. முயற்சிகளில் தோல்விகளும், வீண் விரயங்களும் தொடரத்தான் செய்யும். எடுத்ததெல்லாம் வெற்றிகளாக யாருக்குத்தான் அமைகிறது? வாழ்ந்தாலும் ஏசும் இந்த வையகத்தில் குடும்பத்தில் குழப்பங்களை உருவாக்க உறவினர்கள் மட்டும் போதுமே. மன உளச்சலால் தன்னை மறந்து பேசச் சந்தர்ப்பங்கள் வரும் போது நாவடக்கம் கட்டாயம் தேவை. முள்ளின் மேல் நடப்பது போல தொழிலைக் காப்பதும் அவசியம். சம்பளத்திற்கு தொழில் புரியும் அன்பர்கள் தங்கள் சுதந்திரங்களை மறந்து தமது நிலைகளை உறுதிப்படுத்தும் நோக்கத்தையே பிரதானமாகக் கொள்ளுதலே சிறந்தது.

Comments