மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் தேசிய செயற்திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் தேசிய செயற்திட்டம்

உணவுப் பழக்க வழக்கம் என்பது, ஒரு நாட்டின் முதுகெலும்பு என அழைக்கப்படும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் மிக முக்கியமானதொரு விடயமாகும். குழந்தைப்பருவம் முதல் கிடைக்கப்பெற்று வருகின்ற உணவே ஒரு குழந்தையின் புத்திக்கூர்மை, அறிவு, ஆற்றல் மற்றும் உடல், உள ஆரோக்கியம் மீது பாரிய செல்வாக்கினை செலுத்துகின்றது. இதனை நன்கு அறிந்திருந்த எமது மூதாதையர் குழந்தைகளின் உணவில் தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக பசும்பாலுக்கே மிகுந்த முக்கியத்துவத்தைக் கொடுத்து வந்தார்கள். 

ஆயினும் திறந்த பொருளாதார செயற்பாட்டின் அதீத தாக்கம் காரணமாக தாய்ப்பாலுக்கும் பசும்பாலுக்கும் இருந்த முக்கியத்துவம் இறக்குமதி செய்யப்படும் பால்மா கைப்பற்றப்பட்டதனால் காலப்போக்கில் தாய்ப்பாலிலும் பசும்பாலிலும் இருந்து விலகிச் சென்ற சமூகம் தற்போது பால்மாவிற்கு அடிமையாகி இருக்கின்றது. தாய்ப்பாலுக்கும் பசுப்பாலுக்கும் பதிலாக பால்மாக்களை பெருமளவில் நுகரத் தொடங்கியமையினாலேயே பெருமளவு சிறார்கள் போஷாக்கின்மையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது மிகத் தெளிவாக தெரிய வந்திருக்கின்றது. வீட்டுக்கு வீடு ஒரு பசு மாடு என்ற கலாசாரமும் வீட்டுத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வந்த பசும்பால் உற்பத்தியும் இன்று கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. இவ்விரண்டு சமூக பிரச்சினைகளுக்கும் ஒரு செயற்திட்டத்தின் மூலம் பரிகாரம் காண வேண்டும் என்ற எண்ணக்கருவின் அடிப்படையிலேயே பாடசாலை மாணவர்களுக்கான இலவச பசும்பால் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.  

இதன்மூலம் முக்கிய மூன்று குறிக்கோள்களை அடைய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். தகுந்த போஷாக்கு கிடைக்கப் பெறாமையினால் அநேகமான பாடசாலை மாணவர்கள் மத்தியில் காணப்படும் முதலாம், இரண்டாம் நிலை போஷாக்கின்மைக்கு பரிகாரம் காணுதல், நிரந்தரமான, அதேநேரத்தில் தகுந்த விலை கிடைக்கப் பெறாத உள்நாட்டு பசும்பால் உற்பத்தியாளர்களுக்கு சிறந்த விலையினைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் உள்நாட்டு பசும்பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, 2025ஆம் ஆண்டளவில் இலங்கையை பசும்பால் உற்பத்தியில் தன்னிறைவடையச் செய்தல் மற்றும் வருடாந்தம், பால்மா கொள்வனவிற்காக விரயமாகும் 400மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதியை நாட்டுக்குள் தக்கவைத்துக் கொள்ளுதல் ஆகியனவே இச்செயற்திட்டத்தின் முக்கிய எதிர்பார்ப்புகளாகும்.  

இத் திட்டத்தின் ஒரு அங்கமாக கால்நடை அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து கிராமங்களில் பசும்பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான செயற்பாடாக பூரண அரச அனுசரணையுடன் முன்னெடுக்கப்படவிருக்கும் ‘பால் கிராமம்’ எனும் செயற்திட்டத்தின் கீழ் ஒரு புறத்தில் உள்நாட்டு பசும்பால் உற்பத்தியை பெருமளவு அதிகரிக்கச் செய்யும் அதேவேளை, அப்பசும்பால் உற்பத்தியினை அரச மற்றும் தனியார் நிறுவனங்களாகிய மில்கோ மற்றும் காகில்ஸ் நிறுவனங்களின் ஊடாக லீற்றர் ஒன்றிற்கு 70ரூபாய் என்ற அடிப்படையில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து அப்பசும்பாலை 150மில்லிலீற்றர் பால் பைக்கற்றுக்களாக மாற்றி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பெற்றுக்கொடுக்கும் போஷாக்குத் திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி செயலகம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றன. இதற்கமைய எமது நாட்டிலுள்ள ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் பெற்றுக்கொடுக்கும் தேசிய செயற்திட்டம் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஜூலை 23ஆம் திகதி முற்பகல் 10.00மணிக்கு இரத்தினபுரி கஜுகஸ்வத்தை சாஸ்திரோதய வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.  

நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்படவிருக்கின்ற பாடசாலை மாணவர்களுக்கு பசும்பாலை பெற்றுக்கொடுக்கும் இத்தேசிய செயற்திட்டத்திற்காக ஒரு பில்லியன் ரூபாவினை முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ள அதேவேளை, அதில் பெருமளவு நிதி பசும்பாலை பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்காகவே செலவிடப்படவுள்ளது. இச்செயற்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக உள்நாட்டு பால் உற்பத்தி மூலம் 10இலட்சத்திற்கும் சற்று அதிகமான ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பாலுணவு பெற்றுக் கொடுக்கப்படவிருக்கின்றது. இதன்மூலம் தற்போது சந்தைவாய்ப்பின்றி தவிக்கின்ற பெருமளவு உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு தமது உற்பத்திக்கான நியாயமான விலையைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது. அத்துடன் பசும்பால் உற்பத்திக்கு தேவையான உள்நாட்டு வெளிநாட்டு பசுக்களை விருத்தியடையச் செய்தல், பசுக்களுக்கு தேவையான உணவு உற்பத்தி மற்றும் தொழிநுட்ப தேவைகளைப் பூரத்தி செய்தல் என பல திட்டங்களும் வகுக்கப்பட்டிருக்கின்றன.  

பாடசாலை மாணவர்கள் மத்தியில் இருந்துவரும் போஷாக்கு குறைபாட்டை நிவர்த்தி செய்வதை இலக்காகக் கொண்டிருக்கும் இச்செயற்திட்டத்தின் மூலம் குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களாகக் கருதப்படும் பெருந்தோட்டப்புற பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது முக்கிய கவனம் செலுத்தப்படவிருக்கின்றது. இத் தேசிய செயற்திட்டத்தில் ஏற்படக்கூடிய குறைநிறைகளை நிவர்த்தி செய்து இதன் பெறுபேறுகள் சிறந்த முறையில் மாணவ சமூகத்திற்கு சென்றடைவதற்கான பூரண ஒத்துழைப்பு பாடசாலை நிர்வாகத்திடமிருந்தும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்தும் கிடைக்கப் பெறும் பட்சத்தில் பாடசாலை மாணவர்களுக்கான பசும்பால் வழங்கும் இச்செயற்திட்டத்தினை பயன்மிக்கதோர் திட்டமாக மாற்றிக் கொள்ளலாம்.  

வறுமை காரணமாக தமது காலை உணவை தவிர்த்துக் கொள்ள நேரிடுகின்ற பெருமளவு மாணவர்களுக்கு இப் போஷாக்குத் திட்டம் உதவியாக அமைவதால் மாணவர்களின் பாடசாலை வருகையிலும் கல்விக்கான ஆர்வத்திலும் சாதகமான மாற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வரவு, செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டிருக்கின்ற நிதியைக் கொண்டு ஒரு வருட காலத்திற்கு இப் போஷாக்குத் திட்டத்தினை உரிய முறையில் முன்னெடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்தோடு இதுவரை காலமும் அரச அபிவிருத்தி செயற்பாடுகள் வெறுமனே அரச நிறுவனங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வந்ததற்கு பதிலாக கிராமசக்தி வறுமை ஒழிப்பு செயற்திட்டத்திற்கு பரீட்சயமான அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதனால் இத் திட்டத்தில் அரச நிறுவனமாகிய மில்கோ பால் தயாரிப்பு நிறுவனமும் காகில்ஸ் உணவு உற்பத்தி நிறுவனமும் கைக்கோர்த்து கொள்வதற்கு வழிவகுத்து கொடுக்கப்பட்டிருக்கின்றது.  

இப்போஷாக்கு திட்டத்தினை செயற்படுத்தும் பொறுப்பு மாகாண, வலய மற்றும் பாடசாலை மட்ட சுகாதார ஊக்குவிப்புக் குழு, உணவுக் குழு மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு ஆகியவற்றிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து பாடசாலைகளிலும் சுகாதாரமான, போஷாக்குமிக்க முறையில் இப் பசும்பால் திட்டத்தை செயற்படுத்துதல் வேண்டும். அத்தோடு பாலுணவு பிரதான உணவு அல்லாததால் காலை 09.30க்கும் 10.30க்கும் இடையிலேயே அதனைப் பெற்றுக்கொடுத்தல் வேண்டும். இதற்காக அரசாங்கத்தினால் ஒரு லீற்றர் பசும்பாலுக்காக 70ரூபாவும் இதரப் பொருட்களுக்காக 05ரூபாவும் என 75ரூபாய் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. அத்தோடு கல்வி அமைச்சின் ஊடாக கிராமிய பொருளாதார அமைச்சிற்கும் மில்கோ நிறுவனத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் நேரடியாகவே மில்கோ நிறுவனம் அந்தந்த பாடசாலைகளுக்கான பசும்பால் பைக்கற்றுக்களை பெற்றுக்கொடுக்க இணங்கியிருக்கின்றது. 

இத்திட்டம் பற்றிய ஜனாதிபதியின் கருத்து 

“வெளிநாட்டிலிருந்து பால்மா தருவிக்கப்படுவதை இயன்றளவு குறைத்து பசும்பால் உற்பத்திக்கு தேவையான சகல உதவிகளையும் பெற்றுக்கொடுப்பதே எமது பொறுப்பாக இருக்க வேண்டும். வெளிநாட்டு பால்மா கொள்வனவைக் குறைத்து உள்நாட்டு பசும்பால் உற்பத்தியை அதிகரித்து 40இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கும் ஒருவேளை பசும்பாலை பெற்றுக்கொடுக்க முடியுமாக இருப்பின் அந்த இலக்கையே நாம் அடைய முயற்சிக்க வேண்டும்.”

ரவி ரத்னவேல்

Comments