2ஆம் உலக யுத்தத்துக்கு வித்திட்ட முதலாவது மகா யுத்தம் | தினகரன் வாரமஞ்சரி

2ஆம் உலக யுத்தத்துக்கு வித்திட்ட முதலாவது மகா யுத்தம்

முதலாவது உலக மகா யுத்தத்தின் போது பிரிட்டன் மற்றும் ஜேர்மனிக்கிடையில் கடல் யுத்தங்கள் நிகழ்ந்தன. அதில் கொடூரமான யுத்தம் இடம்பெற்றது டென்மார்க்கிலிருந்து 60மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள கடல் பிரதேசத்திலாகும்.

1916.05.31ம் திகதி இடம்பெற்ற இந்த கடல் போரில் இரு தரப்பினருக்கும் சொந்தமான சுமார் 250கும் அதிகமான சிறிய, பெரிய யுத்த கப்பல்கள் பங்கேற்றன. அந்த யுத்த கப்பல்களில் பணியாற்றிய கடல்படையினரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்ததாகும். இந்தப் போர் நிறைவடைந்த போது ஜேர்மனி 11யுத்த கப்பல்களை இழந்தது. மனித உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3058ஆகும்.  

பிரிட்டன் 14யுத்த கப்பல்களை இழந்தது. 6784கடற்படையினர் மரணமடைந்தனர்.  

பிரிட்டன் பேரரசு, பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, ஜப்பான், ரூமேனியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த யுத்தத்தில் நட்பு நாடுகள் அணியில் இருந்தன. ஒஸ்ட்ரிய, ஹங்கேரிய பேரரசுக்கு ஒத்துழைப்பை வழங்கிய ஜேர்மன், பல்கேரியா மற்றும் ஒட்டோமான் பேரரசு மத்திய சக்தியாக திகழ்ந்தன. சீனா, இத்தாலி, போல்கன் தீபகற்பம், நிவ்கினியா, மத்திய கிழக்கு, ரஷ்யா, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் படைகள் இந்தப் போரில் கலந்து கொண்டதால் இது உலக யுத்தமாக அறியப்பட்டது.

நேரடி யுத்தத்தில் தொடர்புபடாவிட்டாலும் உலகின் அனேக நாடுகள் இந்த போராட்டத்திற்கு பல்வேறு வழிகளில் தொடர்புபட்டிருந்தன. ஐரேப்பா, ஆசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, பசுபிக் சமுத்திரம் மற்றும் பசுபிக் தீவுகளுக்கு உரிய நிலப்பரப்பு மற்றும் சமுத்திர பிரதேசங்களில் உலகப் போர் நிகழ்ந்தது.  

சுவீடன், டென்மர்க், பின்லாந்து, ஸ்விட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் இந்த யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது ஒரு நம்பிக்கை மட்டுமே. எனினும் இந்த நாடுகள் எந்த வகையிலாவது இந்தப் போரில் ஈடுபட்ட எந்த ஒரு தரப்பினருக்கும் சிறியளவிலாவது உதவி செய்தார்களா என்பது இன்று வரையில் விவாதத்திற்குரியதாம். 

தொழில்நுட்ப புரட்சி 

புகையிரம், டெலிகிராப், டெலிபோன் மற்றும் வானொலி தொழில்நுட்பங்கள் வழக்கத்துக்கு வந்த காலத்திலேயே இப் போர் நிகழ்ந்தது. இத் தொழில் நுட்பங்கள் இந்தப் போரின் கொடூரங்களை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தது. ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இடம்பெற்ற கண்டிப்பான இராணுவ சேவையின் காரணமாக போரில் ஈடுபடுவதற்கு முன்னர் தமது இராணுவத்தின் பலத்தைப் பற்றி ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பதற்கு ஆட்சியாளர்களுக்கு தேவை ஏற்படவில்லை. பீரங்கிகளை அனைத்து ஐரோப்பிய நாட்டு இராணுவங்களும் பயன்படுத்தியதோடு, யுத்தத்தின் பின்னர் கடும் வலிமையுடனான புதிய பீரங்கி வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டன.  

இயந்திரத் துப்பாக்கிகள் அனைத்து இராணுவத்தின் கைகளிலும் இருந்ததோடு, இந்த ஆயுதத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளக்கூடிய தாக்குதலினால் முன்னரைப் போன்று குதிரைப் படைகளால் யுத்தகளத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது. முதல் தடவையாக விமானங்கள் போருக்காகப் பயன்படுத்தப்பட்டதும் இந்த போரிலாகும்.  

இதனால் முதலாவது உலகப் போரின் தீப்பிழம்புகள் நிலத்திலும், கடலிலும் வானிலும் பரவத் தொடங்கியது. குதிரைப் படைக்கு பதிலாக யுத்தத் தாங்கிகளை தயாரிப்பதற்கு பெரிய பிரிட்டன் முயற்சித்தது. எந்த வகையான நிலத்திலும் பயணிக்கக் கூடிய ஆற்றல் கொண்ட தாங்கிகளின் வருகையால் அனைத்து நாடுகளும் யுத்த தாங்கிகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டன. 

முதலாவது உலப் போரின் பல மைல் தூரமுடைய முள்வேலிகளை உடைத்துப் போடுவதற்கு யுத்த தாங்கிகள் உதவின.  

இரசாயன யுத்த ஆயுதங்களின் பயன்பாட்டை முதலாவது உலப் போரில் ஜெர்மனே முதலில் மேற்கொண்டது. இதனால் யுத்த களத்திலிருந்த தமது படையினர் மற்றும் உதவி செய்யும் விலங்குகளின் உயிரைப் பாதுகாப்பதற்கு பாதுகாப்பான முகமூடியை நட்பு நாடுகள் பயன்படுத்தின. 

ஒரு நாட்டு கொலை உலக சனத்தொகையின் இருபது மில்லியன் உயிரை காவு கொண்டது. இந்தப் போராட்டத்தின் காரணமாக ஒன்பது மில்லியன் படை வீரர்கள் உயிரிழந்தார்கள். அங்கவீனமானவர்களின் எண்ணிக்கை 21மில்லியனை விட அதிகமாகும். இந்த கொடிய யுத்ததின் ஐந்து வருடங்களின் பின்னர் மொத்த ஐரோப்பிய சமூகமும் பயங்கரமான படுகுழியினுள் வீழ்ந்திருந்தது.  

யுத்தத்தின் நிறைவு 

பிரெஞ்சு நகரமான வர்செயில்ஸ் சமாதான ஒப்பந்தத்திற்கு 1919.06.28ம் திகதி யுத்தத்தில் ஈடுபட்ட பல நாடுகள் இணங்கின. எனினும் விருப்புடன் அல்ல என்பது அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்சனின் கருத்தாக இருந்தது. எனினும் அப்போது பல ஐரோப்பிய நாடுகளுக்கு மீண்டும் யுத்தத்திற்குச் செல்வதற்கான சக்தியும் தேவையும் இருக்கவில்லை.  

நீண்ட கால யுத்தத்திற்கு முகங்கொடுத்த ஐரோப்பிய நாடுகள் தமது பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகச் சூழலை மீண்டும் உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவை அதிகமாகவே இருந்தது. அங்கவீனர்கள் மற்றும் அனாதையான குடும்பங்களின் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியேற்பட்டது. இதனால் வர்செயில்ஸ் ஒப்பந்தத்தின் எதிர்பார்க்கப்பட்ட உண்மையான நோக்கங்கள் அவ்வாறே இடம்பெறாது என்பது தெளிவாகிய போதும் தற்காலிக சமாதானம் ஏற்பட்டது சிறந்தது என பல ஐரோப்பிய நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு இணங்கின.  

இந்த ஒப்பந்தத்தின் முடிவில் இனிமேல் இடம்பெறக்கூடிய யுத்தங்களைத் தவிர்ப்பதில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது முக்கியமானதாகும். ஐ.நா சபையின் முன்னோடியான உலகமகா சபை உருவாக்கப்பட்டது. வர்செயில்ஸ் ஒப்பந்தத்தின் பிரகாரம் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இணங்கின.

உலக சமாதானத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்சன் முன்வைத்த இந்தப் பிரேரணையின் காரணத்தினால் 1919ம் ஆண்டில் சமாதானத்திற்கான நோபல் பரிசு அவருக்கு கிடைத்தது. எனினும் உண்மையான சமாதானம் ஐரோப்பாவிற்கு கிடைக்காமல் போனது உண்மையான சமாதானத்திற்காக செய்யப்பட வேண்டிய பாரிய அர்ப்பணிப்புக்களை நேர்மையோடு செய்வதற்கு அந்த நாடுகள் முன்வரவில்லை. மேலும் முதலாம் உலகப்போரின் பின்னர் ஜெர்மனி மீது விதிக்கப்பட்ட பல்வேறு தடைகளே இரண்டாம் உலகப் போருக்கான வித்துக்களாக அமைந்தன. என்பதும் இங்கே கவனிக்கப்பட்ட வேண்டும். தமது நாடு அடக்கி ஒடுக்கப்படுவதைக் கண்ட அடோல்ஃப் ஹிட்லர், இத் தளைகளில் இருந்து விடுபட்டு ஜெர்மனி உலகையே ஆளும்; ஏனெனில் நாம் ஆளப் பிறந்தவர்கள் என்ற அறைகூவலுடன் ஹிட்லர் புறப்பட்டதன் விளைவாக இரண்டாம் மகா யுத்தம் வெடித்தது.

கலாநிதி பிரசாந்த பெரேரா 
தமிழில் - எம். எஸ். முஸப்பிர் 

Comments