83 ஓர் அரசியல் மமதை | தினகரன் வாரமஞ்சரி

83 ஓர் அரசியல் மமதை

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான கறுப்பு ஜூலை கட்டவிழ்த்துவிடப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதியுடன் 36வருடங்கள் பூர்த்தியாகின்றன. வழமைபோலவே இந்த ஆண்டிலும் ஆடிக்கலவரத்தை நினைக்க வேண்டியிருக்கிறது. வலிந்து மறந்துவிடலாம் என்றாலும், நாட்டின் அரசியல் செல்நெறி அதற்கு இடங்கொடுப்பதாய் இல்லை.

வரலாற்றை மறந்துவிட்டு நிகழ்காலத்தை செழுமைப்படுத்த முடியாது என்பார்கள். அதற்காக கறைபடிந்த வரலாற்றைச் சதா நினைத்துக்ெகாண்டிருக்கவும் முடியாது. எப்போதும் இன்பமான முன்னேற்றத்தைப் பற்றியே கனவுகாண வேண்டும் என்கிறார் கலாநிதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம். இருப்பினும் சில வரலாறுகளை மறப்பதும் நினைப்பதும் அது கற்றுத்தந்த பாடத்தைப் பொறுத்தது!

அந்த வகையில் எண்பத்து மூன்று கறுப்பு ஜூலையைப் பொறுத்தவரை, தமிழ் மக்களால் இலகுவில் மறக்கக் கூடிய சம்பவமல்ல; அது சரித்திரம்! அந்தளவிற்குக் கறுப்பு ஜூலையின் கோர வடுக்கள் தமிழ் மக்கள் மனங்களில் படிந்துவிட்டுள்ளன. கட்டுரையாளரும் அதற்கு விதிவிலக்கன்று!

பதின் மூன்று இராணுவத்தினர் படுகொலைசெய்யப்பட்டு சிங்கள மக்களின் ஆவேசத்தைக் கிளப்பியதனால், ஏற்பட்ட ஓர் இனக்கலவரமாகச் சிலர் அதனை நோக்குகின்றனர். உண்­மை­யி­லேயே, அர­சியல் ரீதி­யாகத் திட்­ட­மிட்டு தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக அரங்­கேற்­றப்­பட்ட இன ஒடுக்­கு­மு­றையின், இன அழிப்பு நட­வ­டிக்­கையின் மிக மோச­மான ஆரம்ப நிகழ்­வாக அது வர­லாற்றில் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது என்பது தமிழ் மக்களின் கருத்தாக உள்ளது.

தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக 1956, 1958, 1977, 1981 ஆகிய ஆண்­டு­களில் பேரி­ன­வா­தி­க­ளி­னதும், பேரின ஆட்­சி­யா­ளர்­க­ளி­னதும் ஆசிர்­வா­தத்­துடன் வளர்ச்சிப் போக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்­களின் போக்கில், அடுத்த கட்­ட­மா­கவே, 1983 கறுப்பு ஜூலை வன்­மு­றைகள் அரங்­கேற்­றப்­பட்­டன என்­பதை ஊன்றிக் கவ­னிப்­ப­வர்­களால் புரிந்து கொள்ள முடியும். இந்தப் பகுப்பாய்வில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையே வித்தியாசமான கருத்தியல் நிலவுவதை மறுக்க முடியாது.

ஆனால், சிங்­கள மக்கள் மத்­தியில் அது, திடீர் ஆவே­சத்­தினால் ஏற்­பட்ட ஒரு மன எழுச்சி சார்ந்த நிகழ்­வாக மாறிப்­போ­யுள்­ளது. மறக்­கப்­பட்­டு­விட்­டது என்­று­கூடச் சொல்­லலாம். தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக காலத்­துக்குக் காலம் முன்­னெ­டுக்­கப்­பட்ட இன­வன்­முறைத் தாக்­கு­தல்­களின் உள்­நோக்­கத்தை, அவற்றில் மறைந்­துள்ள இன­வாத ஒடுக்­கு­முறை அர­சி­யலின் தாற்­ப­ரி­யத்தை தமிழ்த் தரப்­பி­னரில் சிலர் இன்னும் சரி­யாகப் புரிந்து கொள்­ள­வில்லையென்றே சொல்ல வேண்டும். அதன் கார­ண­மா­கவே, கறுப்பு ஜூலை வன்­முறைச் சம்­ப­வத்தை, திடீர் ஆவேச மன எழுச்­சிக்கு உள்­ளாகி செயற்­ப­டு­வதை இயல்­பாகக் கொண்ட சிங்­கள மக்­களின் உணர்ச்சி வசப்­பட்ட ஓர் எதிர்­வினைச் செயல் என்கிறார்கள் அவர்கள்.
அந்த வகையில், 83 கறுப்பு ஜூலை வன்­மு­றை­களை மீண்டும் மீண்டும் நினை­வு­கூர்­வதும், அது­பற்றிச் சிந்­திப்­பதும், நாட்டின் நல்­லி­ணக்­கத்­திற்கும், இன ஐக்­கி­யத்­திற்கும் பாத­க­மா­கவே அமையும் என்றும் அவர்கள் சித்­த­ரிக்­கவும் முற்­ப­டு­கின்­றார்கள். இருந்தபோதிலும், அந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டு, அது தமிழ் மக்களின் மனத்திலிருந்து முற்றாகத் துடைத்தெறியப்பட வேண்டுமானால், அதனைக் கிளறிச் சரியாக மருந்திட வேண்டும் என்பது முற்போக்காகச் சிந்திப்போரின் கருத்தாக உள்ளது.

பலாலி இரா­ணுவத் தளத்தில் இருந்து, யாழ்ப்­பாணம் நக­ரத்தை நோக்கிச் சென்ற இரா­ணுவ வாகனத் தொட­ரணி ஒன்றை திரு­நெல்­வேலி தபால் பெட்டிச் சந்­தியில் பதுங்­கி­யி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களின் அணி­யொன்று தாக்­கி­யதில், 13 இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­டனர். இதில் இலகுக் காலாட்­ப­டையைச் சேர்ந்த லெப்­டினன் தர இரா­ணுவ அதி­கா­ரி­யா­கிய வாஸ் குண­வர்­தன அவர்­களுள் முக்­கி­ய­மா­னவர்.இந்தச் சம்­பவம் 1983 ஜூலை மாதம் 23 ஆம் திகதி இரவு 11.30 அளவில் இடம்பெற்றது.
நள்­ளி­ரவு நேரத்தில் இடம்­பெற்ற இந்தச் சம்­பவம் பற்­றிய தக­வல்கள் சிங்­க­ள­வர்கள் கொல்­லப்­பட்­ட­தாகப் பெரி­து­ப­டுத்­தப்­பட்ட அளவில் நாட்டின் தென்­ப­குதி எங்கும் சிங்­கள மக்கள் மத்­தியில் பரப்­பப்­பட்­டது.

அக்­கா­லப்­ப­கு­தியில் தமிழ் இளை­ஞர்­களின் ஆயுதப் போராட்டம் அங்­கொன்றும் இங்­கொன்­று­மான தாக்­கு­தல்­களே இரா­ணு­வத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தன. ஆனால், திரு­நெல்­வேலிச் சந்­தியில் இடம்­பெற்ற தாக்­கு­த­லி­லேயே 13 இரா­ணு­வத்­தினர் ஒரே தட­வையில் கொல்­லப்­பட்­டி­ருந்­தனர். தாக்­கு­தல்­களில் கொல்­லப்­பட்ட படை­யி­ன­ரு­டைய உடல்கள் அவர்­க­ளு­டைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வதே வழக்கம். ஆனால், தேசிய பாது­காப்புச் சபையின் தீர்­மா­னத்­திற்கு அமைய அந்த நடை­முறை அப்­போது கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. இத­னை­ய­டுத்து, விடு­த­லைப்­பு­லி­களின் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­டி­ருந்த 13 இரா­ணு­வத்­தி­ன­ரது உடல்­க­ளுக்கும் வழ­மைக்கு மாறாக ஒரே இட­மாக, பொரளை மயா­னத்தில் இறு­திக்­கிரி­யைகள் செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த உடல்கள் அங்கு வந்து சேரவில்லை. இதனால், அந்த இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காக அங்கு 24 ஆம் திகதி காலை முதல் கூடத் தொடங்கி பதற்றத்திற்குள்ளான சிங்கள மக்கள் மத்தியிலேயே விடுதலைப்புலிகள் பற்றிய அச்சந்தரும் வகையிலான பொய்ப்பிரசாரம் செய்யப்பட்டிருந்தது. அந்த மக்களின் பதற்ற உணர்வும் விடுதலைப்புலிகள் தாக்க வந்துவிட்டார்கள் என்ற அச்ச உணர்வும் அவர்களை ஆத்திரமடையச் செய்ததுடன், தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்குத் தூண்டிவிட்டிருந்தது.

கொழும்பில் மட்டுமல்லாமல், கண்டி உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் மலையகம் உட்பட தமிழர்கள் கலந்து வாழ்ந்த தென்பகுதி மாவட்டங்களிலும் பரவலாக வன்முறைகள் வெடித்திருந்தன. தமிழர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள், வீடுகள், வாகனங்கள், என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டன. எல்லா இடங்களிலும் கொள்ளையிடப்பட்டவை போக மிஞ்சியவை பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டன. இந்த வன்முறைகளில் பெரிய அளவில் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன. பெரும் எண்ணிக்கையானவர்கள் அகதிகளாகினர்.

அதனைத் தொடர்ந்து ஜூலை 26ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் நடத்தப்பட்ட வெறியாட்டத்தில் 33கைதிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். மொத்தத்தில் இந்த வன்முறைச் சம்பவத்தைத் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பு என்றே சொல்லப்பட்டது; சொல்லப்படுகிறது.

எனினும், இதன் பின்னணியில் சமூக, பொருளாதார வளர்ச்சியின் மீதான வன்மம் குடிகொண்டிருந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

கார்ள் மார்க்ஸ் சொல்வதைப்போன்று "அரசியல் பொருளாதாரம்" என்பது பொருளாதாரம், சமூகம், அரசியல் ஆகிய மூன்றையும் தனித்தனியே பிரித்துப் பார்ப்பதில்லை. மாறாக இவை மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தே வரலாற்றில் வளர்ந்துள்ளன. முதலாளித்துவ உற்பத்தி முறையில் உழைப்பை மூலதனம் சுரண்டுவதன் விளைவான வர்க்கப் போராட்டம் குறித்த பகுப்பாய்வு இதனூடாகத் தவிர்க்க இயலாததாகிறது என்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.

இதன்படி 83கலவரத்தை ஆய்ந்து பார்த்தால், முதலாளித்துவ மூலதனச் சுரண்டலை மேற்கொள்வோர் தமிழர் என்ற கருத்தியலை நூற்றாண்டு காலமாகவே வளர்த்து வந்திருக்கிறார்கள் என்பது குமாரி ஜயவர்தனவின் எழுத்தின் மூலம் உணரக்கூடியதாகவுள்ளது.

அதாவது, 1883- 1983வரலாற்றுக் காலகட்டத்தில், வரலாற்று பணிக்காகத் தேர்ந்த மக்கள் தாமே எனவும் பண்டைய   சிறப்புக்களைக் கொண்ட இனத்தவர் எனவும் தம்மைக் கூறிக்கொண்டனர்.

சிங்களவர் இப்பிரதேசத்தில் சிறுபான்மையினர். பூகோளப் பரப்பில் இங்கு மட்டுமே வாழ்பவர். அதற்கும் ஆபத்து வந்துள்ளது எனவும் எண்ணிக் கொண்டனர்.

சிங்களவர் நீண்டகாலமாகவே கிராமியப் பொருளாதாரத்தில் தாம் சாதாரண விவசாய உற்பத்தியாளர் எனவும் பூமியின் மைந்தர் எனவும் உண்மையான மதம், ஒழுக்கம், சமாதானத்திலும் நம்பிக்கையுடையவர் எனவும் பிற இனத்தவர் பல்வேறு விதமாக ஒடுக்கவும் சுரண்டவும் இடமளித்த அப்பாவிகள் எனவும் தன்னுணர்வு கொண்டனர்.

சிங்களவர் அல்லாதவரும் பௌத்தரல்லாதவரும் எதிரிகள் என்ற பார்வை பிறர் இரத்தத்திலும் மதத்திலும் அந்நியர், தந்திரசாலிகள், பேராசையான உலோபிகள், எல்லாத் துறைகளிலும் அதர்ம முறையில் போட்டியிடுவோர், அப்பாவி சிங்கள மக்களின் வேலை வாய்ப்புக்கள், வாணிபம், கல்வி வாய்ப்புக்களைப் பறித்தெடுப்போர் என்ற பார்வை ஆகிய சில அம்சங்கள் வழமையான கூக்குரல்களே ஆயினும், இப்பொய்மையான கருத்துக்கள் பல்வேறு தவறான விளக்கங்களைப் பெற்று சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடுகிறார் திருமதி ஜயவர்தன.

சிங்களவர்கள் பலர் இவ்வினக்கலவரங்களை எதிர்பாராத நிகழ்வாகக் கண்ட போதும் சிறுபான்மையினரின் தீவிர எதிர்ப்புக்கு பெரும்பான்மை இனத்தவரின் பதில் நடவடிக்கை என சமாதானம் கூறினர் என்று சிங்களவர், முஸ்லிம்களிடையே 1915இல் இடம்பெற்ற கலவரம் பற்றி அனாகரிக தர்மபாலா கூறினார்.

அமைதியை விரும்பும் சிங்கள மக்கள் அந்நியர்களின் அவமதிப்பை இனிமேலும் பொறுக்கமுடியாது எனக் காட்டினார். நாடு முழுவதும் ஒரே நாளில் முஸ்லிம்களுக்கு எதிராக திரண்டெழுந்தது. இதற்கு மேலாக சிங்களவர்களில் ஒரு பகுதியினர் இனப்போராட்டத்தை பண்டையப் போராட்டத்தின் தொடர்ச்சியாகக் கண்டனர் என்றெல்லாம் சிங்கள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதுதான் நூற்றாண்டுகாலமாகக் கொண்டிருந்த வன்மத்திற்குப் பழிதீர்த்துக்கொள்ள பதின்மூன்று இராணுவத்தினரின் படுகொலை காரணமாகியது என்போரும் இருக்கிறார்கள்.

எஃது எவ்வாறாயினும், இன்று மக்கள் மத்தியில் மாற்றங்கள் ஏற்பட்டு, அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டவர்களாகியிருக்கிறார்கள். இந்த மாற்றத்திற்கு அரசியல்வாதிகள் இன்னமும் உள்வாங்கப்படவில்லை என்பதால்தான், மறக்கப்பட வேண்டிய ஒரு வரலாறு மீண்டும் மீண்டும் நினைவுகூரப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அந்தச் சம்பவங்களால், மக்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி, இன்னும் சரியான பாடத்தைக் கற்றுக்ெகாள்ளாதவர்களாகவே உள்ளனர்.

சிங்கள மக்களுக்கோ, தமிழ் மக்களுக்கோ ஆட்சி அதிகாரம் பற்றியோ, நிலம் பற்றியோ பிரச்சினை இருக்கவில்லை. மாறாக தமது வாழ்வாதாரத்திற்கு உழைப்பதும், வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்காகவும் தமது பிள்ளைகளுக்கான சிறந்த சூழலையும் பாடசாலையையும் உருவாக்கவும், பெற்றுக்கொள்ளவும் தொழில், கல்வி, சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்ளவும் விற்கப்படாமல் போராடவும், நாம் வாழும் காணியின் உறுதியைப் பெற்றுக்கொள்ளவும் பிரயத்தனம் கொண்டிருந்தனர். அல்லாமல் வேற்று இனத்துடன் பகை, குரோதத்தினை வைத்திருக்கவில்லை. ஆனால், மக்களிடம் போதியளவிலான அறிவின்மையால் ஆட்சியாளர்கள் இவர்களைப் பயன்படுத்தி அரசியல் சுயநலன் தேடிக்கொண்டு மக்களையும் நாட்டினையும் பிளவுபடுத்திக்ெகாண்டுள்ளனர்.

இவர்களின் இனவாதத்திற்கான சுயநல அரசியல், இன்று எத்தனை உயிர்களை, உடைமைகளை இல்லாமலாக்கியுள்ளது என்பதை நிச்சயமாக கூற முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகி, நாடு பிரதேச ரீதியாக, இனரீதியாக, மொழிரீதியாக பிளவுபட்டு, இலஞ்ச ஊழல் மலிந்த பூமியாக, மக்கள் வாழ்வதற்காக போராடவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டது. இதற்குக் காரணம் அரசியல்வாதிகளே என்பதை ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் நன்கு புலப்படுத்துகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சரி, அந்தத் தாக்குதலின் பின்னராவது நாட்டில் சகவாழ்வு ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்த்தால், மதவாதத்தின் பெயரால் மீண்டும் நாட்டில் இனங்களுக்கிடையே முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதனால், மீண்டும் ஒருவருக்கொருவர் வஞ்சத்தை வளர்த்துக்ெகாள்ள வழியேற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல்வாதிகளும் குறிப்பாகச் சிங்களப் பேரினவாதமும் தமிழ் தேசியவாதமும், முஸ்லிம் அடிப்படைவாதமும் தங்களை மாற்றித் தகவமைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் மக்களுக்கான ஒரு தூய்மையான அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும். அன்றைய நாளில், 83களும் மக்கள் மனத்திலிருந்து விடுபட்டுப்போகும்!

விசு கருணாநிதி

Comments