ஐ.தே.கட்சி தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கம் | தினகரன் வாரமஞ்சரி

ஐ.தே.கட்சி தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கம்

ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து எதிர்வரும் 5ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியை உருவாக்கும் செயற்பாடு ஆரம்பமாகவுள்ளதாகவும், ஐ.தே.க அரசின் தற்போதைய பங்காளிக் கட்சிகளுடன் அன்றையதினம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை அக்கட்சி செய்துக்கொள்ளவுள்ளதாகவும் அறிய முடிகிறது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டாலும், இல்லாவிட்டாலும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 09ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு செய்யுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய திட்டவட்டமாக கடந்த சில நாட்களாக அறிவித்துவருகிறார்.  

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் உறுதியாகியுள்ள நிலையில், பிரதானக் கட்சிகள் முதல் ஏனைய சிறுகட்சிகளும் கூட்டணிப் பேச்சுகளை நடத்திவருகின்றன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி பொதுஜன பெரமுன, அதன் ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகப்படுத்தி வைத்து ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளது.  

இதேவேளை, ஐ.தே.க. அதன் பங்காளிக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் அண்மைய நாட்களாக பேச்சுவார்தை நடத்திவருகிறது. தற்போதைய அரசாங்கத்தில் ஐ.தே.கவுடன் பங்காளிகளாகவுள்ள கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலிலும் கூட்டணி அமைப்பது உறுதியென ஐ.தே.கவின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.   

ஐ.தே.க அதன் பங்காளிக் கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் 5ஆம் திகதியே மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தகவல் வெளியிட்டுள்ளார்.  

ஐ.தே.கவுடன், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜாதிக ஹெல உருமய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக அறிய முடிகிறது.

இதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலையும், பொதுத் தேர்தலையும் இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கூட்டணி அடுத்த மாத முற்பகுதியில் அறிவிக்கப்படவுள்ளது.

அரசுடன் இணைந்திருக்கும் அரசியல் கட்சிகள் இணைந்து இந்த புதிய கூட்டணியை ஏற்படுத்த விருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரம் தெரிவித்தது.

இந்தக் கூட்டணிக்கான பெயரைத் தேர்ந்தெடுப்பதில் அனைத்துக் கட்சிகளும் உரிய கவனம் செலுத்தி வருவதாகவும் அறிய வருகின்றது. கூட்டணிக்கான பெயர் எதுவாக இருப்பினும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானைச் சின்னத்தையே பயன்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

எம்.ஏ.எம். நிலாம், சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Comments