கடும் காற்று, அடைமழை; தொடர்ந்தும் எச்சரிக்கை | தினகரன் வாரமஞ்சரி

கடும் காற்று, அடைமழை; தொடர்ந்தும் எச்சரிக்கை

மலையகம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் கடந்த சில தினங்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 7பேர் உயிரிழந்துள்ளதுடன், 5,200பேர் பாதிப்புக்குள்ளா கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.  

கடந்த திங்கட்கிழமை முதல் நுவரெலியா மாவட்டம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டிருந்த சீரற்ற காலநிலை நேற்றுடன் ஓரளவு வழமைக்குத் திரும்பியுள்ளது.  

இதுவரை 5,200பேர் சீரற்ற காலநிலையால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நுவரெலியா மாட்டத்திலேயே அதிகளவானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 7பேர் உயிரிழந்துள்ளதுடன், 300பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.  

கடும் காற்றும் மற்றும் வெள்ளப் பெருக்கின் காரணமாக 825வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 50இற்கும் குறைவான வீடுகள் பகுதியளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையும் முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெள்ளப்பெருக்கு, கடும் காற்று, மரங்கள் முறிவு, மண்சரிவு, மண்சரிவு அபாயம் உள்ளிட்ட அனர்த்தங்களால் 3,541குடும்பங்களைச் சேர்ந்த 12,323பேர் பாதிப்புக்குள்ளா கியுள்ளதுடன், கேகாலை மாவட்டத்தில் 3,581குடும்பங்களைச் சேர்ந்த 12,405பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் 320குடும்பங்களைச் சேர்ந்த 1,398பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும், ஏனைய மாவட்டங்களில் பலத்த காற்று தொடர்ந்து வீசி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் தற்சமயம் நிலவும் சீரற்ற காலநிலையினால் பல மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் பாதிப்பு இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அனர்த்த சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

இரத்தினபுரி மாவட்டத்தின் நிலை தற்சமயம் சீராகக் காணப்பட்டாலும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் இருப்பதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிவப்பு எச்சரிக்கையும் தொடர்ந்து அமுலில் இருக்கும். அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கும், பொலிசாருக்கும் அறிவிக்க முடியும். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 0112-45-45-76அல்லது 0112-58-72-29என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து பொதுமக்களுக்கு உரிய தகவல்களை வழங்குவதற்காக 20பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளில் 149பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாடு பூராகவும் அதிகரித்துள்ள காற்றின் வேகமானது அடுத்துவரும் நாட்களில் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் காற்றின் வேகமான 50-60கிலோ மீற்றல் வேகத்தில் வீசக்கூடும். மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் சிலவேளை 75கிலோ மீற்றல் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புத்தளம் முதல் பொத்துவில் வரையான கரையோர பகுதிகளில் கடலின் சீற்றம் மிக அதிகமாக காணப்படுவதுடன் மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடற்பகுதியில் சுமார் 70கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதுடன் சுமார் 2.5முதல் 3.5மீற்றல் வரையிலான உயரத்துக்கு அலைகள் வீசக்கூடுமென்றும் எச்சரிக்ைக விடுக்கப்பட்டுள்ளது.

கடலில் நீராடச் செல்வது மற்றும் கடற்கரையை கண்டுகளிக்கச் செல்வது என்பவற்றை தவிர்க்குமாறும் கேட்கப்பட்டுள்ளது. தென்பகுதியில் கடற்கரையோரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் சிவப்பு நிறக் கொடிகள் நடப்பட்டுள்ளன.

Comments