தபால் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் 24மணி நேர சுகவீன லீவு போராட்டம் | தினகரன் வாரமஞ்சரி

தபால் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் 24மணி நேர சுகவீன லீவு போராட்டம்

தபால் ஊழியர்கள் இன்று நள்ளிரவு 12மணிமுதல் 24மணித்தியால சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கத்தின் இயக்குனர் சிந்தக பண்டார தெரிவித்தார்.  

பதவி உயர்வு மற்றும் தபால் சேவைக்கு பற்றாக்குறையாகவுள்ள ஊழியர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்திற்கு அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும். அதுகுறித்த நடவடிக்கைகளைத் துறைசார் அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீம் முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தியே இவ்வாறு சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார். கடந்த 17ஆம், 18ஆம் திகதிகளிலும் ஒன்றிணைந்த தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இவர்களது கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காததன் காரணமாகவே இன்று மீண்டும் போராட்டத்தில் குதிப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த வருடம் ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை 16நாட்களாக தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சரவைக்கு சில பரிந்துரைகளை அரசாங்கம் முன்வைத்தது.

எனினும், அதற்கான அமைச்சரவை அனுமதி இதுவரை வழங்கவில்லை. இதனால் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுத் தமது கோரிக்கைகளுக்கான தீர்வைப் பெற்றுத்தருமாறும் வலியுறுத்தியே ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Comments