மகசீன் சிறையில் உண்ணாவிரதம் கைதியின் நிலைமை மோசம் | தினகரன் வாரமஞ்சரி

மகசீன் சிறையில் உண்ணாவிரதம் கைதியின் நிலைமை மோசம்

மகசீன் சிறைச்சாலையிலுள்ள கைதியொருவர் கடந்த 16ஆம் திகதி முதல் நீரின்றி உண்ணாவிரதமிருந்து வருகின்றார். இவரது உடல் நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

முன்னாள் திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவரான 62வயதுடைய கனகசபை தேவதாசன் என்பவரே இவ்வாறு நீர் கூட அருந்தாது உண்ணாவிரதமிருந்து வருகின்றார்.  

கோட்டை புகையிரத நிலைய குண்டுவெடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும், மற்றொரு வழக்கில் 20வருடங்கள் கடுழீய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இவ்விரு வழக்குகளிலும் இவரே தனக்காக வாதாடியிருந்தார்.

தனது வழக்கில் சாட்சியங்களையும், ஆதாரங்களையும் முன்வைப்பதற்காக தனக்குப் பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில், அவர் தனது கோரிக்​கைகளை எழுத்து மூலம் அதிகாரிகளுக்கு அறிவித்தும் அதற்கான பதில்கள் இதுவரை கிடைக்காத நிலையில் தான் நீதி அமைச்சுக்கு அனுப்பிய கடிதங்கள் சிறை அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டதா? என்பது தொடர்பிலும் தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்து உண்ணாவிரதமிருக்கும் கைதியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதுவரை அவரை வைத்தியர் மட்டுமே சென்று பார்வையிட்டுள்ளார். அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ சென்று பார்வையிடவில்லை.

எனவே அவர் சார்பில் மகசீன் சிறையிலுள்ள ஏனைய அரசியல் கைதிகள் அமைச்சர் மனோ கணேசனிடம் தங்களது விடயத்தில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உண்ணாவிரதம் தொடர்பில் முகநூலினூடாக அறிந்துகொண்ட அமைச்சர் மனோ கணேசன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மகசின் சிறைச்சாலைக்குச் சென்று உண்ணாவிரதமிருக்கும் தேவதாசனைப் பார்க்கவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசனும் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்

"தேவதாசன் குடுப்பத்தினர் மூலம் அவருக்குத் தகவல் சொல்லுங்கள். செவ்வாய்கிழமை அவரை காண சிறைச்சாலை வருகிறேன் என்று சொல்லுங்கள்.

தற்போது நீராகாரம் அருந்தச் சொல்லுங்கள். ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, "நாளை மற்றும் நாளை மறுநாள்" நிகழ்சிகளுக்காக தற்போது மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றேன்". என அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Comments