மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாயின் இம்மாதத்தினுள் தீர்க்கமான முடிவு | தினகரன் வாரமஞ்சரி

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாயின் இம்மாதத்தினுள் தீர்க்கமான முடிவு

மாகாண சபைத் தேர்தலை ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதாக இருந்தால், இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, இதனைத் தவறவிட்டால் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டதன் பின்னரே மாகாணசபை தேர்தலை நடத்தக் கூடியதாக இருக்குமெனச் சுட்டிக்காட்டியுள்ளது. 

மாகாண சபைகளுக்கான தேர்தலை முதலில் நடத்த வேண்டுமெனப் பல்வேறு தரப்புகளும் வலியுறுத்தி வருகின்றபோதிலும் அரசியல் கட்சிகள் இது விடயத்தில் மௌனம் சாதித்துவருவதையே காணக்கூடியதாக உள்ளது.  

மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒக்டோபர் 15க்கு முன்னர் நடத்த வேண்டுமானால், அதற்குத் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும். பழைய முறையில் நடத்துவதானால், பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். புதிய முறையில் நடத்துவதானால், எல்லை நிர்ணய அறிக்கை நிறைவு செய்யப்பட்டு ஜனாதிபதியினால் வர்த்தமானியில் அறிவிக்கப்படல் அவசியம்.

இது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஊடக பிரதானிகளுக்குத் தெளிவாக விளக்கி இருந்தார். ஆனால், இன்னமும் சாதகமாக எதுவும் கிடைக்கவில்லை.

இந் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 18ஆம் திகதி வியாழக்கிழமை சட்ட மாஅதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டறியுமாறு கோரியுள்ளார்.

எனினும், உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு முன்னர் சட்ட மா அதிபர் இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடத் தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகின்றது.

இந்த வாரத்தில் இச்சந்திப்பு நடைபெறலாம் எனவும் அதன் பின்னரே அடுத்து என்ன செய்வதெனத் தீர்மானிக்கப்படுமெனவும் அறியவருகின்றது.

தற்போது 8மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவு பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள ஊவா மாகாணசபையின் பதவிக்காலமும் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் காத்திரமான தீர்வொன்று எட்டப்படாது போனால், இவ்வருடத்தில் மாகாண சபைத்தேர்தல் சாத்தியப்படாது போகலாம்.

ஏனெனில், செப்டம்பர் மாதம் 15ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் விடுக்கவிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதான அரசியல் கட்சிகள் மாகாண சபைகளுக்கான தேர்தலை விட ஜனாதிபதி தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதையே காணக்கூடியதாகவுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாணசபை தேர்தலையோ, பாராளுமன்றத் தேர்தலையோ நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கறை காட்டி வருகின்றபோதிலும், பொதுத்தேர்தலை முன் கூட்டியே நடத்துவதாக இருந்தால், எதிர்வரும் 2020பெப்ரவரி 8ஆம் திகதிக்குப் பின்னரே அவரால் பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியும் இதற்கிடையில் ஜனாதிபதியின் தவிக்காலம் முடிவடைவதால், அதுவும் சாத்தியப்பட முடியாதநிலையே காணப்படுகின்றது.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலையே முதலில் நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரம் தெரிவித்தது.

எம்.ஏ.எம். நிலாம்

Comments